வியாழன், 21 மார்ச், 2013

திருமணமும் பழமொழிகளும்

நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்துவரும் அனுபவ குறிப்புகளே பழமொழிகள். சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூர்மையையும் எடுத்துவிளக்குபவை அவை.

ஒரு பொருளை சுருக்கமாகவும், தெளிவாகவும், சுவையுடனும் அவை விளக்குகின்றன. முதியோர்கள் பழமொழிகளை நாட்டுப்புற வாழக்கையில் அடிக்கடி பாவிப்பதுண்டு. தமிழ் குடும்பங்களிடையே பிள்ளைகளின் திருமணம் என்றவுடன் பல விதமான பிரச்சினைகளை திருமணத்தை முற்றாக்க முன் பெற்றோர் தீர்மானிக்க வேண்டிவரும்.

ஊரென்ன? குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள்? திருமணமாகாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள்? காரணம் என்ன? குடும்பத்தில் மனநோய், சர்க்கரை வியாதி, புற்று நோய், இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகளுண்டா? செல்வம் படைத்த குடும்பமா? படித்து பட்டம் பெற்ற குடும்பமா? வாயாடிக் குடும்பமா? ஏதாவது தில்லு முல்லுகளில் சம்பந்தப்பட்ட குடும்பமா? பெற்றோர்கள் விவாகரத்து செய்தவர்களா? தகப்பன், தாய் குடிகாரர்களா? பெற்றோர் அல்லது சகோதரர்கள் சகோதரிகள் ஆகியோரின் ஒழுக்கம் எப்படி? இப்படி ஒரு கேள்விப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

சில சமயங்களில் இவையெல்லாவற்றையும் நுணுக்கமாக ஆராய்ந்து திருமணம் செய்துவைத்தபின்னரும் பிரிந்த குடும்பங்கள் பல உண்டு. அதனால்தான்  “திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்ற
ஒரு முதியோர் வாக்கு உச்சரிக்கப்படுகின்றது.

“தாரமும் குருவும் தலைவிதிப்படி” என்ற பழமொழியுமுண்டு. இவ்விரண்டு பழமொழிகளை சற்று உண்னிப்பாக பார்ப்போமாகில் முதலாவது பழமொழியில் “சுவர்க்கம்” என்பது எதைக் குறிக்கிறது? முற்பிறவிக்கும் மறுபிறவிக்கும் இடைப்பட்ட நிலையா? சுவர்க்கத்திற்கும் தலைவிதிக்கும் என்ன தொடர்பு?

இங்கு கர்மாவின் விதி செயல்படுகிறது. “அவளுக்கு அவன் புருஷனாக வந்தது
அவள் முற்பிறவியில் செய்த கர்மாவின் பலன்”என பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். இப்படியான பல நிலைகளை விளக்க பொதுவாழ்க்கையில் பழமொழிகள் பல உண்டு. ஒவ்வொன்றும் திருமணம் ஆகப்போகிறவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைகிறது. அப்பழமொழிகளில் சிலவற்றை ஆராய்வோம்.

கன்னி இருக்க காளை மணை ஏறலாமா?
இந்த பழமொழியை பல குடும்பங்கள் பின்பற்றி வருகிறதை நாம் அறிவோம். ஒரு குடும்பத்தில் ஒரு இளைஞனுக்கு இரு சகோதரிகள் இருந்தால் பெற்றோர்கள் முதலில் தம் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்தபின்னரே மகனுக்கு திருமணம் செய்வது வழக்கம். காரணம், பெரும்பாலும் குடும்பங்களில் மகன் திருமணம் செய்து பிரிந்து போய்விட்டால் பின் மருமகளாக வருபவள் கணவனை தன் மைத்துனிமார்களுடைய திருமணத்துக்கு தேவையான பணஉதவி செய்ய விடாமல் தடுக்கக் கூடும் என்பது ஒரு காரணமாகயிருக்கலாம். சில சமயங்களில் ஒரு குடும்பத்தில் ஆண் பெண் என இரு பிள்ளைகளிருந்தால் குண்டுமாற்றுக்கு கலியாணம் என்று வேறு குடும்பத்தில்உள்ள சகோதரன் சகோதரியை மாறி திருமணம் செய்வதன் மூலம் சீதனப் பிரச்சினையை தீர்ப்பது மட்டுமன்றி இரு திருமணங்களை ஒரே நாளில் வைப்பதினால் கலியாணச் செலவுகளையும் குறைக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் மாற்றுத்திருமண முறையில் நடந்த கலியாணங்கள் சில சமயங்களில் பிரச்சனையில் முடிவடைந்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியை துன்புறுத்தினால் உடனே மற்ற குடும்பத்திலும் சகோதர பாசத்தினால் பிரச்சனை பரவும்நிலை ஏற்படுகிறது. மாற்றுக் கலியாணத்தில் சாதகங்கள் பொருந்துவதும் மிக அருமை.

கலியாணம் பண்ணின வீட்டில்ஆறு மாதம் கறுப்பு

தம் சொந்தக்காரரர்களுடைய பிள்ளைகளின் திருமணத்தை விட தன் பிள்ளையின் திருமணம் பலர் பெருமையாக பேசுமளவுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி டாம்பீகமாக செலவு செய்து பின் வாழ்நாள் முழுவதும் கடனாளியாக இருப்பவர்கள் பலர்.

இந்தப் பழமொழி கலியாணத்துக்கு பின் ஆறு மாதத்துக்கு பணத்துக்கு கஷ்டம் என்பதை எடுத்துச் சொல்கிறது. பல குடும்பங்களில் நடை முறையில் இது நடப்பதை எடுத்துக்காட்டுகிறது. மகளுக்கு சீதனம் கொடுப்பதற்காக கடன் வாங்கி ஒட்டாண்டியாக போனவர்களுமுண்டு.

கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு பாத்திரம் அறிந்து பிச்சைபோடு

கோத்திரம் என்பது குலம் அல்லது சாதியைக் குறிக்கும். கலியாணத் தரகரிடம் பெற்றோர் கேட்கும் முதற்கேள்வி மணமகன் அல்லது மணமகளின் பெற்றோர் என்ன சாதி? பிராமணர்கள் தம் சாதியை விட்டு திருமணம் செய்வது மிகக் குறைவு. அவ்வாறே ஒவ்வொருசாதியினரும் தம் சாதியில்லாத இடத்தில் சம்பந்தம் வைக்கமாட்டார்கள். ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவர் இன்னோர் சாதியில் போய் திருமணம் செய்திருந்தால் அது மற்றைய பிள்ளைகளின் திருமணத்துக்கு தடையாக அமையும். பெற்றோர் திருமணத்தை முற்றாக்கமுன் சம்பந்தியின் குடும்பத்தைப்
பற்றியும் யார் யார் அவர்களுக்கு சொந்தம் என்பதைப் பற்றி தீர விசாரித்தறிவார்கள்.

சில சாதி மக்களை இன்னோர் சாதி மக்கள் புறக்கணித்து அடக்கி வாழ்ந்தமையால் அவ்வினத்தில் படித்தவர்கள் குறைவு. ஆனால் இந்த நிலை மாறிக்கொண்டு வருகிறது. சில ஊர்களில் அவர்களை கோயிலுக்குள் சென்று வணங்குவதை தடைசெய்துள்ளார்கள். இதனால் அந்த இனத்தில் திருமணமான மற்றய சாதிப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று வணங்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
பெரும்பாலும் காதல் திருமணங்கள் கோத்திரம் பார்த்து நடப்பதில்லை. இருமனங்கள் ஒத்தால் கோத்திரம் முக்கியமில்லை.

சும்மா இருந்த பெண்ணுக்கு ஆறுபணத்துக்கு தாலி போதாதா.

ஒரு பெண் திருமணமாகாமலிருப்பதற்கு பலகாரணங்களுண்டு. சீதனம் கொடுக்க போதியபணவசதியில்லாமை, அழகிருந்தும் அங்கத்தில்குறை, வயது கூடியமை, சாதி, சிறுவயதிலேயே விதவையானவள், சாதகத்தில் குற்றம போன்ற காரணங்களினால் திருமணம் தள்ளிப்போவதுண்டு. சில பெண்களின் திருமணம் நடக்காமலிருப்பதற்கு பெற்றோரும் ஒரு காரணம். நல்ல சம்பளத்துடன் உயர் பதவியிலிருக்கும் பெண்ணின் சம்பாத்தியத்தில் வாழும் பெற்றோர் மகள் திருமணம் செய்து கணவனுடன் சென்று விட்டால் தாம் வாழ வரும்படியில்லாமல் போய்விடுமே என்ற பயம் ஒரு காரணம். வேறு சில பெற்றோர் நுணுக்கமாக பெண்ணுக்கு வர வேண்டிய கணவனை தேடுவதில் பல வருடங்கள் செலவு செய்து விடுவார்கள். பெண்ணின் வயது ஏறிக் கொண்டுபோவதினால் முகத்தில் முதுமையின் தோற்றம் தெரியத் தொடங்கும்.

“பருவத்தே பயிர்செய்” என்பதற்கிணங்க பெண்ணை தகுந்த வயது வந்தவுடன் திருமணம் செய்து வைப்பது அவசியம். அல்லாவிடில் காலம் போகப் போக
‘சும்மா இருந்த பெண்ணுக்கு ஆறுபணத்துக்கு தாலி போதாதா’ என்ற நிலை ஏற்படும். இங்கு ஆறு பணம் என்ற சொல் மலிவான தரம் குறைந்த மணமகனைக் குறிக்கும்.

கிழவனுக்கு வாழ்க்கை படுகிறதை விட கிணற்றில் விழுகிறது
மேல்.

ஒமான், சவுதி அரேபியா, போன்ற மத்தியகிழக்கு நாடுகளில் கிழவர்கள் இளம் பெண்களை திருமணம் செய்வது வழக்கம். இளம் பெண்ணுடன் உடலுறவு வைத்தால்தமக்கு இளமை திரும்பும் என்பது அவர்கள் நம்பிக்கை. அதுவுமன்றி வயது வந்த காலத்தில் தம்மை பராமரிக்கவும் ஓடியாடி வேலைசெய்யவும் ஒருத்தி தேவை அவர்களுக்கு.

இதனால் ஹைதரபாத் என்ற ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நகரத்தில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் வாழும் பகுதிகளுக்கு போய் ஏழைப் பெற்றோருக்கு பெரும் பணம் கொடுத்து இளவயது பெண்களை கலியாணம்செய்து தம்நாட்டுக்கு அழைத்து செல்வர்.

தேவதாஸ் என்ற கதையில் பார்வதியை ஒரு வயதுவந்த ஜமீன்தார் திருமணம் செய்கிறார். இங்கு பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் பார்வதியின் தந்தை திருமணத்துக்கு இணங்குகிறார். முதியவரை மணம்முடிப்பது முற்காலத்தில் ஜமீன்தார், பண்ணையார் குடும்பங்களில் இருந்து வந்த நடைமுறை. கிழவனை மணம் செய்வதிலும் பார்க்க தற்கொலை செய்வது மேல் என்று தம்முயிரை மாய்த்த பெண்கள் பலர். சில பெண்கள் தம் வயதையொத்த பிள்ளைகளுக்கு தந்தையாயிருப்பவர்களை மணந்துள்ளார்கள்.

இதை அடிப்படையாக வைத்து “சித்தி” என்ற திரைப்படம் பல வருடங்களுக்கு முன் வந்துள்ளது. பிள்ளைகளை கவனிப்பதற்காக முதியவர்கள் மறுமணம் செய்வதுமுண்டு.

காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணை கொடுக்கிறது போல்

தன் மகளுக்கு கலியாணம் எப்படியும் செய்துவைக்க வேண்டும் என்பதற்காக வசதியில்லாவிட்டாலும் பெரும் தொகை சீதனம் தருவதாகச் சொல்லி திருமணம் செய்து வைத்த பெற்றோர்களுமுண்டு. கலியாணத் தரகர்மாரும்

இந்த கலியாண தில்லுமுல்லுகளில் பெரும் பங்கு வகிப்பர்.

“ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்துவை” (இது இலங்கைத்தமிழரின் பழமொழி)

என்ற பழமொழியுமுண்டு. இப்படி ஏமாற்றுத் திருமணத்தின் பேச்சு வார்த்தையின்போது நல்ல வசதி படைத்த, உயர் பதவியில் உள்ள தம் இனத்தவர்களுடன் தமக்குள்ள தொடர்பைப்பற்றியும் அவர்கள் மூலம் பல உதவிகளை செய்ய முடியுமென்ற நம்பிக்கையையும் மணமகனின் பெற்றோருக்கு ஊட்டுவார்கள்.

இவ்வாறே ஒரு காலத்தில் லண்டன் மாப்பிள்ளைமாருக்கு யாழ்ப்பாணத்தில் நல்லகிராக்கியிருந்தது. தாம் என்ஜினியர் என்றும் தமக்கு லண்டனில் இரண்டு வீடுகள் உண்டென்றும் ஏமாற்றி நடந்த திருமணங்கள் பல.

பின் லண்டன் சென்ற மணமகள் அங்கு கணவனுக்கு வேறு வெள்ளைக்கார பெண் ஏற்கனவே மனைவியாக இருப்பதை கண்டு கணவனைவிட்டு பிரிந்த கதைகளுமுண்டு.

47 நாட்கள் என்ற சிவசங்கரியின் திரைப்படக்கதை இந்த ஏமாற்றுத் திருமண அடிப்படையிலானகதையாகும்.

தாரமும் குருவும் தலைவிதிப்படி

இந்த பழமொழி பிரபல்யமானதொன்று. ஒருவன் தனது அறிவை சரிவர கற்று, பெருக்க வேண்டிய ஒரு நல்ல குருவையும், இனிமையான குடும்ப வாழ்க்கைக்கு அவசியம் தேவையான நல்ல மனைவியும் பெறுவது தலைவிதி என்கிறது இப்பழமொழி. அறிவுக்கு வாழிகாட்டுபவர் குரு. அதேபோல் நல் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவள் மனைவி. நல்ல ஒழுக்கமுள்ள மனைவி அமையாவிட்டால் அது அவன் தலைவிதி என்கிறது சமுதாயம்.


உள்ளுர் சம்பந்தம்

திருமண உறவினை,“சம்பந்தம்“ என்று குறிப்பிடுவர். சம+பந்தம்-சம்பந்தம் என்றாயிற்று. சம்மான உறவு(பந்தம்-உற) என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். இச்சம்பந்தம் என்ற திருமணத்தை உள்ளுரில் செய்து கொள்ளக் கூடாது என்று நம்முன்னோர் கூறியுள்ளனர்.

ஏன் உள்ளுரில் பெண்பார்த்துத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கூறினர்? இதற்குப் பல்வேறுவிதமான காரணஙய்கள் உள்ளன. பெண்ணை உள்ளுரில் மணம் செய்து கொண்டால் அவள் எப்போதும் தனது பிறந்தகத்துக்திற்கே சென்று அங்கேயே தங்கி விடுவாள். அதுமட்டுமல்லாது வீட்டில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் சிறு சச்சரவுகள் ஏற்பட்டால் உடனே பெண்ணானவள் அதனைத் தனது பிறந்தகத்தில் கூறி குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுவாள். இதனால் குடும்பம் சிதைவடைய வாய்ப்புள்ளது. மேலும் பெண்ணின்மீது பெற்றோர்களுக்கு அதக அளவு அன்பு இருக்கும். இதனால் அவளைப் பாதுக்க்க்கவேண்டும். அவள் கண்கலங்கக் கூடாது என்ற எண்ணத்தில் தங்களை அறியாமலும், தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்து கொள்ளாமலும் பெண்ணின் குடும்ப விவகாரங்களில் தலையிட்டுப் பிரச்சனைக்கு வழிவகுப்பர். இதனாலும் பல பெண்களின் வாழ்க்கையானது சீர்குலைந்திருக்கின்றன.  இவ்வாறெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நம்முன்னோர்கள்,

“உள்ளுரில் பெண்ணும் வெளியூரில் மண்ணும் ஆகாது“
என்றும்,

“உள்ளுருச் சம்பந்தமும் உள்ளங்கைச் சிரங்கும்
அரித்து கொண்டே இருக்கும்“

என்றும் பழமொழிகளைக் கூறியுள்ளனர் எனலாம்.உள்ளுரில் பெண் எடுத்தால் மேற் கூறிய பிரச்சனைகள் எற்படும். வெளியூரில் நிலம் வாங்கினால் அதனைப் போய் அடிக்கடி பார்க்க முடியாது போய் வேறொருவர் உரிமை கொண்டாடுவதற்கு வாய்ப்பேற்பட்டுவிடும். உள்ளுரில் பெண் எடுத்தாலும் அடிக்கடி பார்த்துப் பார்த்துப் பெண்ணின் குடும்பமும்ம், ஆணின் குடும்பமும் முன்னேற வழியில்லாது போக நேரிடும். இதனையே மேற்கூறிய பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகின்றது.

உள்ளங்கையில் சொரி சிரங்கு இருப்பின் நமநமவென்று அரித்துக் கொண்டே இருக்கும். விரைவில் ஆறாது துன்பத்தைத் தரும். இது உள்ளுரில் திருமணம் செய்து கொள்வதற்கும் பொருந்தும். தங்களின் பெண் நன்றாக வாழவேண்டும் என்று கருதி அதிக உரிமை எடுத்துக் கொண்டு பெண்வீட்டார் தங்களது மருமகன் வீட்டுப் பிரச்சனைகளில் அதிகம் தேவையின்றித் தலையிடுவர். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனாலேயே வெளியூரில் பெண் எடுக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாக்க் கூறினர்.

சிலர் வெளியூர் சென்று வர அச்சப்பட்டுக்கொண்டு உள்ளுரில் திருமணம் பேசி முடிக்கக் கருதுவர். இது தவறான ஒன்றாகும் என்று நமது முன்னோர்கள் கருதினர். உள்ளுரில் பெண் எடுக்க்க் கூடாது என்று கூறியதோடு மட்டுமல்லாது அவரை இழிவாகவும் பழித்துக் கூறினர். அவ்வாறு உள்ளுரில் பெண் எடுப்பவரை,

“நடக்கச் (நடப்பதற்கு) சங்கடப்பட்டுக் (துன்பப்பட்டு) கொண்டு சிற்றப்பன் வீட்டில் பெண் கேட்டானாம்“ (சிற்றப்பன்-சிறிய தந்தை)
என்ற பழமொழி இழிவாக இடித்துரைப்பது போன்று அமைகின்றது.
வெகுதொலைவில் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று கூறினால் அது வேண்டாம் இங்கேயே பிறிதொன்றைப் பார்த்து வாங்கிவிடலாம் என்பவரைப் பார்த்தும் இப்பழமொழியைக் கூறுவர்.

நல்ல பண்பா பெண்ணாகவும், அவளது குடும்பம் நல்ல பண்புமிக்க குடும்பமாகவும் இருந்தால் உள்ளுரில் இருப்பவர்களே அப்பெண்ணை மணம் செய்து கொடுக்குமாறு பெண்கேட்டு வருவார்கள். இஃது உலக இயல்வு. அதுபோல ஒரு ஆடவன் நல்ல பண்புள்ள, ஒழுக்கமுடையவனாகவும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனாகவும் இருப்பின் உள்ளுரில் அவனுக்குத் தங்களது பெண்ணைக் கொடுப்பதற்கு முன்வருவர்.
பெண்ணோ ஆணோ பண்பிலியாக இருப்பின் அவர்களை ஒருவரும் மதித்து அவர்களைத் திருமணம் செய்து கொள் மாட்டார்கள். இதனை,

“நல்ல மாடுன்னா (என்றால்) உள்ளுருக்குள்ளே
(உள்ளுரில்) விலைபோகும்“

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. அதனால் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒழுக்கத்துடன் பண்புடையவர்களாகப் பிறர் மதிக்கும் வண்ணம் வாழ்தல் வேண்டும் என்ற பண்பாட்டினையும் இப்பழமொழி வலியுறுத்துவதாக அமைந்துள்ளது எனலாம்.

பெண் பார்த்தல்

திருமணத்திற்குத் தற்போது போல பழங்காலத்தில் பெண்பார்க்க வில்லை. வேளாண்மையே தலாயாய தொழிலாக விளங்கியதால் அத்தொழில் சிறந்த பெண்களையே ஆண்கள் விரும்பி மணந்தனர். பெண்களைத் தற்போது பெண்வீட்டிற்குச் சென்று பார்ப்பது அரிது. விவசாய வேலை பார்க்கின்றபோதே மணமகனின் சகோதரி பெண்ணைப் பார்த்து தனது சகோதரனுக்கு ஏற்றவளா? என்று அறிந்து மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தாள். நம்முனோரின் இத்தகைய வழக்கத்தை,

“களைவெட்டினது மாதிரியும் இருக்கும்
தம்பிக்குப் பொண்ணுப் பார்த்த்து மாதிரியும் இருக்கும்“
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.

களை வெட்டும்போது பயிரை வெட்டிவிடாது களைகளை நன்கு வெட்டி எடுத்துப் போட்டுவிட்டுப் பயிருக்கு நன்கு மண்ணை அணைத்துவிட்டு வேகமாக்க் களைவெட்டிக் கொண்டே வரவேண்டும். இதனை வைத்தே ஒரு பெண்ணின் திறமையை அறிந்து கொண்டு அவளை மணமகனின் சகோதரி தனது இளைய சகோதரனுக்கு மணப்பெண்ணாகத் தேர்ந்தெடுத்தாள். இத்தகைய நமது முன்னோரின் வழக்கத்தை உள்ளீடாக இப்பழமொழி கொண்டுள்ளது எனலாம்.

திருமணத்தை முடித்தல்

திருமணம் இருமனம் மகிழ்கின்ற வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாகும். திருமணம் இருதரப்புக்கும் (மணம் செய்து கொள்வோர், கொடுப்போர்) மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நிகழும் திருமணம் இன்பமயமானதாகும். இங்ஙனம் அமையும் திருமணத்தின் சிறப்பை உணர்ந்தே நமது முன்னோர்கள்,

“திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது“
என்று கூறினர்.

இத்திருமணத்தை நடத்தி முடிப்பது எளிமையாதன்று. உற்றார் உறவினர் உள்ளிட்டோரை ஒவொன்றுக்கும் சென்று அழைத்து அவர்களை ஒருங்கிணைத்துத் திருமணத்தை நடத்துதல் வேண்டும்.
உறவுகள் ஒன்று சேரும் உன்னத விழாவாகத் திருமணம் திகழ்கின்றது எனலாம். ஒவ்வொரு உறவினரையும் ஒன்று சேர்ப்பது என்பது இயலாத ஒன்றாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணமுடையவராக இருப்பர். இவர்களை ஒன்று கூட்டி எந்தக் குறாபடுமில்லாது திருமணத்தை நடத்துதல் வேண்டும். அதனால்தான்,

“கல்யாணத்தைப் (திருமணம்) பண்ணிப் பார்
வீட்டைக் கட்டிப் பார்“

என்று நமது முன்னோர்கள் திருமணத்தைப் பற்றிக் கூறியுள்ளனர்.
வீட்டைக் கட்டும்போது ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துக் கட்ட வேண்டும். ஏனெனில் நீண்ட காலம் அது நிலைத்து நிற்க வேண்டும். அதுபோன்று திருமணம் என்பதும் வாழையடி வாழையாகத் தொடர்ந்து நிலைத்து நிறக்கக் கூடிய ஒரு உறவுப் பாலமாகும். அதனால் திருமணத்தை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தல் வேண்டும்.

“திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்“

என்ற பழமொழி திருமணத்தின் முக்கியத்துவத்தை விளக்குகின்றது. பயிர் எங்ஙனம் விதை தந்து அதிலிருந்து பயிர் வந்து மீண்டும் அதிலிருந்து விதை வந்து தொடர்ந்து சுழற்சியாக வருகிறதோ அதுபோல கணவன் மனைவி-குழந்தைகள் அவர்களது குழந்தைகள் எனத் தொடர்ந்து உறவுகள் காலங்காலமாக வந்து கொண்டே இருக்கும் ஒரு தலைமுறையின் தொடக்கமாகத் திருமணம் விளங்குவதை மேற்குறிப்பிட்ட பழமொழி விளக்குவது நோக்கத்தக்கது.

பெண் பார்த்தல், நிச்சயம் செய்தல், அழைப்புக் கொடுத்தல், மனை போடுதல், உள்ளிட்ட திருமணம் சார்ந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று கூறி அவர்களை அழைத்து வந்து திருமணத்தை முடித்தல் வேண்டும் என்பதை,

“ஆயிரம் முறை போய்ச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடிக்க வேண்டும்“
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

இப்பழமொழியை இன்று,

“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை முடிக்கணும்“ என்று தவறாக வழங்குகின்றனர்.

இதனால் இதன் பொருள் முற்றிலும் மாறுபட்டு விளங்குவத நோக்கத்தக்கது. உறவுகளை ஒன்று சேர்க்க வேண்டுமெனில் அவர்களுக்கு முக்கியத்துவம் தந்து பலமுறை அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று கூறி திருமணத்தை முடித்தல் வேண்டும் என்று இப்பழமி மூலம் சுற்றந்தழுவி வாழ வேண்டும் என்ற பண்பாட்டினை நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

பெண் கொடுப்பது – பெண் எடுப்பது

யார் யாருக்குப் பெண்ணைக் கொடுப்பது? யாரிடமிருந்து பெண் எடுப்பது? என்பதும் பழமொழிகளில் விளக்கப்பட்டிருக்கின்றது. யாருக்கு வேண்டுமானாலும் பெண் கொடுத்துவிடுவது இயலாத ஒன்றாகும். அதுபோல யார் வீட்டிலிருந்தாவது பெண்ணைத் திருமணத்திற்கு எடுத்துவிட இயலாது. தன்மானம் உள்ளவனுக்குப் பெண்ணைக் கொடுக்க வேண்டும். அவனே மணந்து கொண்ட பெண்ணை நன்கு வாழ வைப்பான். மேலும் தனது சொந்த உழைப்பில் ஈட்டிய பொருள்களை வைத்தே இல்லறம் நடத்த விரும்புவான். அதுபோன்று எவ்வளவு கோபமாகப் பேசினாலும் பொறுத்துக் கொண்டு அமைதியாக விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் இருப்பவர் வீட்டிலிருந்து பெண் எடுத்தல் வேண்டும். அவ்வாறு பெண் எடுத்தால் எந்தவித இடையூறுகளும் ஏற்பட்டாது என்பதை,

“ரோசக் காரனுக்குப் பெண்ணைக் கொடு
மழுங்கப்பயல் வீட்டிலிருந்து பெண்ணை எடு“

(ரோசக் காரன்-தன்மானம் உள்ளவன், மழுங்கப்பயல்-கோபப்படாதவன்)

என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர் விளக்கி இருப்பது நோக்கத்தக்கது. இல்லறம் வளமாக இருக்க மேற்குறித்த வகையில் பெண் எடுப்படுத் கொடுப்பதும் போன்ற நிகழ்வுகள் அமைதல் நலம் என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.
உறவினர்களுள் சிலர் திருமணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பர். ஏதேனும் சில பொய்யான காரணங்களைக் கூறித் திருமணத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவர். அவர்களின் கருத்துக்களுக்கு இடங்கொடுக்காது திருமணத்தை நடத்துதல் வேண்டும் என்பதை,

“சீப்பை(தலைவாரும் சீப்பு) ஒளித்து வைத்தால்
கல்யாணம் நின்று போய்விடுமா?“

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. தேவையற்ற காரணங்களுக்காகத் திருமணம் தடைபடுமாயின் பல்வேறுவிதமான துன்பங்களை மணமகள், மணமகன் வீட்டார் இருவரும் சந்திக்க நேரிடும். அதனால் திருமணத்தை நிறுத்தாது அதனை நடத்தி முடித்தல் வேண்டும் என்பதனையும் இப்பழமொழி உள்ளீடாக்க் கொண்டு விளங்குகின்றது. இங்கு சீப்பு என்பது சரியற்ற பொருத்தமில்லாத காரணங்களைக் குறிக்கின்ற குறியீட்டுச் சொல்லாக அமைந்துள்ளது எனலாம்.

பொன் நகை

திருமணம் என்றால் பெண் வீட்டார் பெண்ணிற்குப் பொன்னாலான நகைகளைச் செய்து போட வேண்டும் என்பது வழிவழியாகத் தொடர்ந்து சமுதாயத்தில் நிகழ்ந்து வருகின்றது. பொன் நகை இல்லை என்றால் அதற்காகப் பெண்ணை வேண்டாம் என்று கூறக் கூடாது. பொன்னைவிடப் பெண் உயர்ந்தவள் எனக் கருதிப் பெண்ணை மணந்து கொள் முன்வர வேண்டும். திருமணங்களில் பென் நகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க்க் கூடாது என்பதை,

“பொன்னை வைக்கிற எடத்துல (இடத்தில்)
பூவை வைக்கிறோம்“

என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் வலியுறுத்தினர். பொன் நகைக்கு ஆசைப்பட்டு பெண்கைளை நிராரிக்கக் கூடாது என்பதையும் மேற்குறித்த பழமொழி எடுத்துரைக்கின்றது.

பெண் – கண் போன்றவள்

பெண்ணை நமது முன்னொர்கள் உயர்வாக்க் கருதினர். அவளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒரு பெண்ணை ஒரு ஆடவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது கவனமாக இருந்து செயல்படவேண்டும். ஆடவன், பண்பும், ஒழுக்கமும் நிறைந்தவனா? அவனது குடும்ப்ப் பின்னணி என்ன, அவனது பணி என்ன? என்பன போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை எல்லாம் ஆராய்ந்து அவ்வாடவனுக்குத் தங்களது பெண்ணை மணம் முடித்துக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில் பெண்ணானவள் கண்ணைப் போன்றவள். கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படின் எதையும் பார்க்க இயலாது வாழ்வு இருண்டு விடும். அதுபோல ஒருவனைப் பற்றி நன்றாக விசாரிக்காது அவனுக்குப் பெண்ணை மணம் முடித்துக் கொடுத்தால் பெண்ணின் வாழ்க்கை இருண்டுவிடும். இதனை உணர்ந்து பெண்ணின் பெற்றோர்கள் செயல்பட வேண்டும் என்பதை,

“பெண்ணைக் கொடுத்தோமோ?
கண்ணைக் கொடுத்தோமோ?“

என்ற பழமொழி விவரிக்கின்றது. தனது மகள் புகுந்த வீட்டில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதனைப் பொறுமையாகச் செயல்பட்டு அத்தவறைக் களைதல் வேண்டும். எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிடுதல் கூடாது. அதனால் பெண்ணின் வாழ்வு பாழாகிவிட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து பெண்ணின் பெற்றோர்கள் நடந்து கொள்ளவேண்டம் என்றும் இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.

மேலும் சில பெண்ணின் தயார் தனது மகளின் புகுந்த வீட்டுப் பிரச்சனைகளில் லையிட்டு சிறிய தவறுகளைக்கூடப் பெரிதாக்கி விடுவர். பிரச்சனைக்கு இவர்களே காரணமாக ஆவதும் உண்டு. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் தங்களது மகளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து வைத்துக் கொள்வர். இது தவறான செய்கையாகும். இதனால் தாயே தனது பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்த்தைப் போன்றதாகிவிடும். இதனைத் தவிர்த்தல் வேண்டும் என்பதை,

“வாழ்கின்ற பெண்ணைத் தாயர் கெடுத்தது மாதிரி“

என்ற பழமொழி எடுத்து விளக்குகின்றது. பெண் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பவளாக இருத்தல் வேண்டும். உறவுகளை மதித்துத் திருமணத்தை நடத்துதல் இன்றியமையாத்தாகும். பொன்னிற்கு ஆசைப்பட்டுப் பெண்ணை மணக்க மறுக்கக் கூடாது. தனது மகள் வீட்டுப் பிரச்சனைகளில் பெண்ணைப் பெற்றோர்கள் தேவையின்றி தலையிடுதல் கூடாது. நல்ல பண்பான தகுதியான மணமகனுக்குத் தங்களது பெண்ணை மணம் செய்து கொடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பண்பாட்டு நெறிகளை நம்முன்னோர்கள் திருமணம் பற்றிய பழமொழிகளில் நமக்கு வழங்கியுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல