ஞாயிறு, 24 நவம்பர், 2013

இன்டர்நெட்டில் 20 கோடி + பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் முதலிடம பிடிக்கும் இந்தியா!

இந்தியாவில் இணையதள பயன்பாட்டில் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத் தன்மை 49.5 சதவீதம், பயன்படுத்த அனுமதி 31.2 சதவீதம், இங்குள்ள புள்ளிவிபரங்கள் கிடைப்பது 22.6 சதவீதம் ஆக உள்ளது என்றும் உலக வலை இணைய நிறுவனம் தெரிவித்துள்ளது.அதே சமயம் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 37.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இது முதலிடமாகும் என இ-மார்க்கெட்டர் எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

2009ம் ஆண்டு சர் டிம் பெர்னர்ஸ் லீ யால் துவக்கப்பட்ட உலக வலை இணைய நிறுவனம் உலகம் முழுவதும் இணையதள உபயோகம் பற்றி ஆய்வு செய்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. வெப் இண்டக்ஸ் எனப்படும் ஆய்வில் உலக நாடுகளில் இணையத்தை பயன்படுத்துவது, இணைய சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, இணையம் பயன்படுத்த கட்டுபாடுகள், தேடலுக்கு பொருத்தமான புள்ளிவிபரங்கள், அரசு அனுமதி போன்ற பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 81 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் 100 புள்ளிகளுடன் சுவீடன் நாடு முதல் இடத்தை பிடித்தது. நார்வே 2ம் இடத்தையும் பிரிட்டன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. அமெரிக்கா 4ம் இடத்தில் உள்ளது. இந்தியா 56வது இடத்தில் உள்ளது.

அதே சமயம் இ-மார்க்கெட்டர் எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் வரும் 2016 ஆம் ஆண்டு பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடிப்படையில், இந்தியா முதலிடம் வகிக்கும் என ஓர் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் 37.4 சதவீதமும், இந்தோனேசியாவில் 28.7 சதவீதமும், மெக்ஸிகோவில் 21.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இந்த மூன்று நாடுகளிலும் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 100 கோடியை எட்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 14.68 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் இது முதலிடமாகும். இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. இருப்பினும் பேஸ்புக்கைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் இதே அளவில் தொடர்ந்தால் இந்தியா 2016 ஆம் ஆண்டு முதலிடத்தைப் பிடிக்கும்.சீனாவில் பேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடி. சீனா மற்றும் அமெரிக்காவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை முறையே 30 கோடி மற்றும் 20.7 கோடி. இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் 32.4 சதவீதமாகவும், சீனாவில் 31.1, பாகிஸ்தானில் 10.4 சதவீதமாகவும் உள்ளது.

அத்துடன் இந்தியாவில் இணையதள பயன்பாட்டில் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை 49.5 சதவீதம், அனுமதி 31.2 சதவீதம், புள்ளிவிபரங்கள் கிடைப்பது 22.6 சதவீதம் ஆக உள்ளது. சீனாவில் இணையதள பயன்பாட்டில் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை 5.3 சதவீதம், அனுமதி 31.2, புள்ளி விபரங்கள் கிடைப்பது 46.8 சதவீதமாக உள்ளது. பாகிஸ்தானில் நுழைவு 21.3, புள்ளிவிபரங்கள் கிடைப்பது 12.4, இணைய சுதந்திரம் 9.8 சதவீதமாக உள்ளது என்று இணையதள உபயோகம் பற்றிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஆந்தைரிப்போர்ட்டர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல