‘இதயக்கனி’
படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் வாலி, நடிகைகள் லதா, ராதா சலூஜா.
நிற்பவர்களில் இடது ஓரம் நடிகர் கோபாலகிருஷ்ணன், நடிகரும் முன்னாள்
அமைச்சருமான திருச்சி சவுந்திரராஜன் (உயரமாக இருப்பவர்).
எம்ஜிஆர் 100 | 23 - மல்லிகையைப் பிய்த்து தின்ற மக்கள் திலகம்!
M.G.R. தனது படங்களில் காட்சி அமைப்பு அவருக்கு திருப்தி ஏற்படும் வரையில் விடமாட்டார். அதே நேரத்தில் மற்றவர்களின் கருத்து என்ன? குறிப்பிட்ட காட்சியை யூனிட்டில் உள்ளவர்கள் எப்படி ரசிக்கிறார்கள்? என்பதையும் அறிந்து கொள்வார். மற்றவர்களின் கருத்துக்கள் நியாயமாக இருந்தால் அதற்கேற்ப காட்சி அமைப்புகளில் மாற்றங்களை செய்வார்.
‘புரட்சிப்பித்தன்’... இந்தப் பெயரைப் பார்த் ததுமே எம்.ஜி.ஆர். படத் தலைப்பு என்பது புரியும். இந்தப் படத்தை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் என்.எஸ். திரவியமும் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ஆர்.ராமண்ணாவும் தயாரிப்பதாக இருந்து சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு கன்னடப் படத்தின் கதை. பாடல்களுடன் திரைக்கதை, வசனமும் வாலி எழுதுவதாக இருந்தது. 1975-ம் ஆண்டு ‘தீபாவளி வெளியீடு’ என்று பத்திரிகைகளில் விளம்பரமும் வந்தது. ஆனால், அரசியலில் எம்.ஜி.ஆர். ‘பிஸி’யாகி, தேர்தல் வந்து ஆட்சியைப் பிடித்து முதல்வராகிவிட்டதால் அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை. இந்த படத்தின் காட்சி படமாக்கப்பட்டபோது ஒரு சுவையான சம்பவம்.
கதைப்படி எம்.ஜி.ஆர். ஒரு விஷயத்துக்காக வேண்டுமென்றே மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல நடிப்பார். ஒரு நாள் படப்பிடிப்புக்கு முன்ன தாக இயக்குநர் ராமண்ணாவின் ஆலோசனைப் படி, அன்று எடுக்க இருக்கும் காட்சி பற்றி ஒப்பனை அறையில் இருந்த எம்.ஜி.ஆரிடம் சென்று விளக்கினார் வாலி. அதைக் கேட்டுக் கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் எம்.ஜி.ஆர்.
‘நேற்று இன்று நாளை’ பட பூஜையில் எம்.ஜி.ஆருடன் நடிகர் அசோகன், இயக்குநர் ப.நீலகண்டன்.
அன்று எடுக்க வேண்டிய காட்சியின்படி கோயிலுக்கு காரில் வந்து இறங்கும் கதாநாயகி, சாமி கும்பிடுகிறார். அவர் கண்களை மூடி வணங்கும்போது, பின்னால் வரும் மனநிலை சரியில்லாதவர் போல நடிக்கும் எம்.ஜி.ஆர். நாயகியின் தலையில் சூடி இருக்கும் மல்லிகைப் பூவை பிய்த்து தின்ன வேண்டும். அதன்படியே, எம்.ஜி.ஆர். மல்லிகைப் பூவை பிய்த்து தின்றார். எல்லோருக்கும் திருப்தி; காட்சி ஓ.கே.
ஆனால், வாலி மட்டும் முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் நின்றார். எல்லோரையும் நோட்டமிட்ட எம்.ஜி.ஆர். அதை கவனித்து விட்டார். ‘‘என்ன ஆண்டவனே... காட்சி உங்களுக்கு திருப்தி இல்லையா?’’ என்று வாலியிடம் கேட்டார்.
‘‘ஆமாண்ணே, நாயகியின் தலையில் உள்ள பூவை நீங்க இன்னும் நிறைய பிச்சு எடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கு உள்ள வேகத்தோடு தின்னுருக்கணும்’’ என்ற வாலியின் பதிலால் கோபமடைந்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அரவணைப்பில் வாலி.
‘‘அது எனக்கும் தெரியும். ஆனா எப்படிய்யா வேகமா திங்கிறது? மல்லிகைப் பூவை கடிச்சுப் பாரும். எட்டிக் காயா கசக்கும்’’ என்று வாலியைப் பார்த்து கோபமாக சொல்லிவிட்டு ஒப்பனை அறைக்கு விறுவிறுவென எம்.ஜி.ஆர்.சென்று விட்டார்.
படப்பிடிப்பு குழுவினர் வாலியை விரோதியைப் போல பார்த்தனர். எம்.ஜி.ஆரை சமாதானம் செய்வதற்காக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரின் ஒப்பனை அறைக்கு வாலியே சென்றார். வழக்கமாக ஒப்பனை அறை யின் முன் நிற்கும் எம்.ஜி.ஆரின் காரைக் காணோம். ‘ஒருவேளை வீட்டுக்கே எம்.ஜி.ஆர். புறப்பட்டு போய்விட்டாரோ?’ என்று குழம்பியபடி நின்ற வாலி யின் சிந்தனையைக் கலைத்தது எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளர் பீதாம்பரத்தின் குரல்.
‘‘என்னண்ணே, இங்கேயே நிக்கிறீங்க. சின்னவர் (எம்.ஜி.ஆர்.) உள்ளேதான் இருக் காரு... வாங்க’’ என்று வாலியின் வயிற்றில் பால் வார்த்தார் பீதாம்பரம்.
உள்ளே சென்ற வாலி, எம்.ஜி.ஆரைப் பார்த்து பவ்யமாக, ‘‘அண்ணே, என்னை மன்னிக்கணும். மனதில் பட்டதைச் சொன்னேன். நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது’’ என்றார். எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடி,
‘நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு’
என்ற திருக்குறளை சொல்லி, ‘‘நீங்கதான் உண்மையான நண்பர். உங்களை எதுக்கு மன் னிக்கணும்? அதே காட்சியை மறுபடி எடுக்கலாம். ராமண்ணாகிட்ட சொல்லுங்க’’ என்றார்.
‘புரட்சிப்பித்தன்’ பட விளம்பரம்.
இங்கே ஒரு விஷயம். நியாயமான கருத்தை சுட்டிக் காட்டி குறை சொன்ன வாலியை, உண்மையான நண்பர் என்று பாராட்டியதோடு, ஒருவரோடு நட்புகொள்வது சிரித்து மகிழ மட்டுமல்ல; தவறை இடித்துரைத்து திருத்துவதற்கும் என்று பொருள்படுகிற அதிகம் புழக்கத்தில் இல்லாத பொருத்தமான குறளையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார்.மறுபடி அதே காட்சியை எடுக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், சிறிய மாற்றம். வாலி கூறியபடி பூவை நிறைய பிய்த்து வேகமாக தின்ன வசதியாக நாயகி தலையில் இருக்க வேண்டிய மல்லிகைப் பூ, ரோஜாப் பூவாக மாறியது; அதுவும் எம்.ஜி.ஆர். செலவிலேயே. வாலி பார்த்தபோது, எம்.ஜி.ஆரின் ஒப்பனை அறைக்கு முன் வழக்கமாக நின்றிருக்கும் கார் திடீரென காணாமல் போனதன் ரகசியமும் சிறிது நேரத்தில் தெரிய வந்தது. அந்தக் காரில்தான் ஒரு கூடை ரோஜாப்பூ வந்தது.
வாலியின் கருத்துக்கும் மதிப்பளித்து அதே நேரம் காட்சி சிறப்பாக வர, சாதுர்யமாக மல்லிகைப் பூவை ரோஜாப் பூவாக மாற்றி விட்டார் எம்.ஜி.ஆர்.
மீண்டும் அந்தக் காட்சியின் படப்பிடிப்பு தொடங்கும் முன், ‘‘அண்ணே நீங்க ரோஜாப் பூவை தின்னா எப்படி இருக்கும் தெரியுமா?’’ எம்.ஜி.ஆரை பார்த்து கேட்டார் வாலி.
‘இதென்ன மறுபடியும்?’ என்று புரியாமல் எல்லோரும் பதைபதைப்புடன் பார்க்க, வாலி சொன்னார்...
‘‘ரோஜாப் பூவே ரோஜாப் பூவை திங்கிற மாதிரி இருக்கும்’’
எம்.ஜி.ஆரின் முகம் ரோஜாவாய் மலர்ந்தது.
‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘தம்பி, நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..’ என்ற பிரபலமான பாடல் இடம்பெறும். பாடலுக்கு முன் இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும் ஒரு புத்தகத்தை பார்த்தபடி ‘பாட்டை எழுதியவர் வாலி’ என்று எம்.ஜி.ஆர். சொல்வார். இது வாலியின் திறமைக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த அங்கீகாரம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது வாலியை இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியில் நியமித்தார். அதற்கு முன் கவுரவப் பதவியாக இருந்த அதன் பதவிக் காலத்தை மூன்று ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டித்து ஊதியமாக மாதம் ரூ.3,000 வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எம்.ஜி.ஆருடன் பழனி ஜி.பெரியசாமி.
எம்ஜிஆர் 100 | 24 - மென்மையான உள்ளம் கொண்டவர்!
M.G.R. தன்னால் ஒரு மனிதர் கூட வருத்தப்படக் கூடாது என்ற மென்மையான உள்ளம் கொண்டவர். தவிர்க்க இயலாத நிலையில், தன் நடவடிக்கையால் யாராவது பாதிக்கப்பட்டாலோ, மனம் புண்பட்டாலோ, உடனே அதற்கு பரிகாரம் தேடிய பிறகே அமைதி அடைவார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்டவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ம.பொ.சி. தொடர்பான சம்பவம் அதில் ஒன்று.
‘மந்திரி குமாரி, ‘மலைக்கள்ளன்', ‘குலேபகா வலி', ‘மதுரை வீரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்று 1956-ம் ஆண்டிலேயே எம்.ஜி.ஆர். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி ம.பொ.சி.யின் பொன்விழாவை முன்னிட்டு சென்னையில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் எம்.ஜி.ஆர். பேசும்போது, ம.பொ.சி.யின் தமிழறிவை பாராட்டி, ‘‘தமிழை மழை போல் பொழியும் சிவஞானம்’’ என்று கூறவும்... கூட்டம் ஆர்ப்பரித்தது.
ம.பொ.சி-யின் பிறந்த நாள் விழா ஒன்றில் அவரை கவுரவிக்கிறார் எம்.ஜி.ஆர்.
1986-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மேல்சபை இருந்து வந்தது. சட்டசபைத் தேர்தலில் தோற்றவர் களை கொல்லைப்புற வழியாக பதவிக்குக் கொண்டு வரவே மேல்சபை பயன்படுகிறது என்று பொதுவாக ஒரு விமர்சனம் இருந்தது. இந்நிலையில், 1986-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் மேல்சபை கலைக் கப்பட்டது. அதுகுறித்து பல்வேறு சர்ச்சைகளும் வருத்தங்களும் நிலவின.
1984-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது அவர் மேல்சபை உறுப்பினராக இருந் தார். அரசியல் காரணங்களுக்காக சபை கலைக்கப் பட்டதாகவும் பேச்சு உண்டு. ஆனால், அரசுக்கு தேவையில்லாத வீண் செலவு என்பதால் மேல்சபை கலைக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அரசுக்கு வீண் செலவு என்று கூறி ஆந்திராவிலும் மேல்சபை கலைக்கப்பட்டது. அங்கே அப்போது எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், தமிழகத்தில் அதுதொடர்பான வாக் கெடுப்பில் நடுநிலை வகித்தது.
எம்.ஜி.ஆருடன் ம.பொ.சி.
காங்கிரஸில் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார், ‘‘மேல்சபை கலைப்பை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை என்பதால் காங்கிரஸ் நடுநிலை வகித்தது’’ என்றார். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவதாக காங்கிரஸை திமுக குற்றம் சாட்டியது.இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, மேல்சபை கலைக்கப்பட்டதில் மிகவும் வருத்தமடைந்தவர் ம.பொ.சி! அப்போது, மேல்சபைத் தலைவராக அவர்தான் இருந்து வந்தார். அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தார். முதல்வர் எம்.ஜி.ஆரை யும் விமர்சித்தார்.
எம்.ஜி.ஆரின் நண்பரான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, ம.பொ.சி.க்கும் நெருக்கமானவர். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். அவர் ம.பொ.சி-யை சந்தித்தபோது, ‘‘மேல்சபை கலைப்பு முடிவுக்காக எதற்காக எம்.ஜி.ஆரை விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
பொதுவாழ்வில் ம.பொ.சி. தூய்மையானவர். தனக்கென்று எந்த சொத்து சுகமும் சேர்க்காதவர். ‘‘மேல்சபைத் தலைவர் பதவி போய்விட்டால் மாதம்தோறும் எனக்கு கிடைக்கும் சம்பளமும் போய்விடும். எனக்கு இப்போது அரசாங்க கார் இருக்கிறது. அந்தக் காரும் இருக்காது. வயது முதிர்ந்த காலத்தில் வெளியே செல்ல வேண்டு மானால் என் பாடு திண்டாட்டம்’’ என்று பழனி பெரியசாமியிடம் கூறி ம.பொ.சி. வருத்தப் பட்டிருக்கிறார். ம.பொ.சி. யாரிடமும் எதுவும் கேட் டுப் பழகாதவர். எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றால் அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று தனது மகள் மாதவி பாஸ்கரனிடம் சொல்லி அனுப்புவாராம்.
ம.பொ.சி. தன்னிடம் வருத்தப்பட்ட அன்று இரவே எம்.ஜி.ஆரை பழனி பெரியசாமி சந்தித் தார். விஷயத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். ‘‘அப்படியா?’’ என்று கேட்டுக் கொண்டாரே தவிர, எதுவும் சொல்லவில்லை.
ஜி.கே.மூப்பனார்
மகிழ்ச்சி பொங்க கூறுவதை எம்.ஜி.ஆர். கேட்கிறார். அருகே ஆர்.எம்.வீரப்பன்,
சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் மறைந்த வி.என்.சிதம்பரம்.
அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு ம.பொ.சி. சென்றார். அங்கு, பழனி பெரியசாமியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. போனை எடுத்த பழனி பெரியசாமியிடம் பேசிவிட்டு ம.பொ.சி-யிடம் கொடுக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.ம.பொ.சி-யிடம் நலம் விசாரித்து விட்டு, அமெரிக்காவை நன்கு சுற்றிப் பார்க்கும்படியும் ‘ஷாப்பிங்’ சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படியும் இதுகுறித்து பழனி பெரியசாமியிடம் சொல்லியிருப்பதாக வும் எம்.ஜி.ஆர். கூறினார்.
பின்னர், அமெரிக்காவில் இருந்து ம.பொ.சி. திரும்பிய பின் ஒருநாள், கோட் டையில் இருந்து வீட்டுக்கு காரில் புறப் பட்ட எம்.ஜி.ஆர்., திடீரென ம.பொ.சி-யின் வீட்டுக்குச் சென்றார். முதல்வரின் எதிர் பாராத வருகையால் ம.பொ.சி. மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் அமெரிக்க சுற்றுப் பயணம் பற்றி விசாரித்துவிட்டு புறப்படத் தயாரானார் எம்.ஜி.ஆர்.
ம.பொ.சியும் வழியனுப்ப எழுந்துகொள்ள, அவரின் கையில் ஒரு சாவியை எம்.ஜி.ஆர். திணித்தார். புரியாமல் பார்த்த ம.பொ.சி-யிடம், ‘‘இது கார் சாவி. உங்களுக்கு அரசாங்கம் கார் கொடுத்திருக்கிறது. மேல்சபை தலைவராக இருந்தபோது உங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளமான ரூ.15,000 தொடர்ந்து கிடைக்கும். அந்த பதவியில் இருந்த எல்லா சலுகைகளும் வசதி களும் உங்களுக்கு தொடரும். உங்களை தமிழ் வளர்ச்சித்துறை தலைவராக நியமித்திருக் கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்க நின்றார் ம.பொ.சி.
சிலருக்குத்தான் சில பட்டங்கள் பொருத்தமாக அமையும். அப்படி எம்.ஜி.ஆருக்கு என்றே மிகப் பொருத்தமாக அமைந்தது, திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கிய பட்டமான ‘பொன்மனச் செம்மல்.’
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது திருத்தணி ஆந்திராவுடன் சேர்க்கப்பட் டது. வடக்கு எல்லை போராட்டம் நடத்தி திருத் தணியை தமிழகத்துக்கு மீட்டார் ம.பொ.சி.
பின்னாளில் அவர் குடல்புண் நோயால் பாதிக்கப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அவருக்கு தைரியம் சொல்லி மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செலவுகளையும் செய்து குணப்படுத்தி கடும் வயிற்று வலியில் இருந்து ம.பொ.சி-யை மீட்டார் எம்.ஜி.ஆர்.
- தொடரும்...
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் கம்பீரம்.
எம்ஜிஆர் 100 | 26 - படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி!
M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி, நடித்து பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படமான ‘நாடோடி மன்னன்’.
‘மலைக்கள்ளன்', ‘அலிபாபாவும் 40 திருடர்களும்', ‘மதுரை வீரன்', ‘தாய்க்குப் பின் தாரம்' என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் ‘நாடோடி மன்னன்’ படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும் கொடுத்தார்.
‘‘நான் சொந்தத்தில் ‘நாடோடி மன்னன்’ படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், ‘நாடோடி மன்னன்’ ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
‘மலைக்கள்ளன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் பானுமதி.
‘நாடோடி மன்னன்’ படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு ‘இஃப் ஐ வேர் கிங்’ என்ற படத்தைப் பார்த்தார். இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அதன் விளைவுதான் ‘நாடோடி மன்னன்.’
படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார். சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன் வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரம் மாண்டத்துக்கு மட்டுமல்ல; படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான சம்பளமும் வழங்கப்பட்டது.
படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப் பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் ‘ஓவல்டின்’ என்ற பானம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் ‘ஓவல்டின்’ குடித்ததே அப்போதுதான்.
படம் முடிந்த பிறகு ‘‘வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி’’ என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர்.
மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது ‘நாடோடி மன்னன்’. 19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது ‘நாடோடி மன்னன்’.
மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார்.
இந்தக் கூட்டத்தில்தான், ‘‘மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்’’ என்று அண்ணா பேசினார்.
‘நாடோடி மன்னன்’ பற்றி குறிப்பிடும் போது நடிகை பானுமதி பற்றி சொல்லி யாக வேண்டும். நடிப்பு, தயாரிப்பு, இசை, இயக்கம் என்ற பன்முகத்திறமை கொண்டவர் பானுமதி. ‘மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’ என்று ஏற்கெனவே வெற்றி பெற்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கு பானுமதியே ஜோடி. ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவரையே நாயகியாக நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார்.
பானுமதி அந்தக் காலத்திலேயே சுதந்திரமாக செயல்படும் நடிகை. எம்.ஜி.ஆரும் அப்படியே. தான் விரும்பு கிறபடி காட்சிகள் வரும்வரை எம்.ஜி.ஆர். விடமாட்டார். அதனால்தான் இன்றும் அவர் படங்களை ரசிக்க முடிகிறது. எம்.ஜி.ஆர். மீண்டும் மீண்டும் காட்சி களை எடுப்பது பானுமதிக்கு பிடிக்கவில்லை. ‘‘எடுத்த காட்சிகளையே எத்தனை முறை எடுப்பீங்க?’’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டார்.
சக நடிகையின் ஒத்துழைப்பு இப்படி இருக்கும்போது கோபம் வந்தாலும், எம்.ஜி.ஆர். அமைதியாகவே பதில் சொன்னார், ‘‘படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி, இயக்குநரும் நான்தான். என் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடிங்க. இல்லைன்னா விட்டுடுங்க.’’ இதைத் தொடர்ந்து, படத்தில் இருந்து விலகிக் கொண்டார் பானுமதி. பிறகு, அவர் இறப்பது போல காட்சிகள் மாற்றப்பட்டு நடிகை சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரின் திறமையை எம்.ஜி.ஆர். மதிப்பார். படத்தில் இருந்து பாதியில் விலகினாலும் சென்னையில் நடந்த வெற்றி விழாவுக்கு பானுமதியையும் பெருந்தன்மையுடன் அழைத்து, அவருக் கும் விருது வழங்கினார் எம்.ஜி.ஆர்.
சென்னையில் நடந்த
‘நாடோடி மன்னன்’ வெற்றி விழாவில் எம்.ஜி.ஆருக்கு வாள் பரிசளிக்கிறார்
அண்ணா. அருகே என்.வி. நடராஜன் (இடமிருந்து 2-வது) கருணாநிதி, முரசொலி
மாறன் (எம்.ஜி.ஆருக்கு பின்னே), நடிகர் திருப்பதிசாமி, அன்பழகன் உள்ளனர்.
அதன் பின்னரும், எம்.ஜி.ஆர். - பானுமதி நடிப்பில் ‘ராஜா தேசிங்கு’, ‘கலை அரசி’, ‘காஞ்சித் தலைவன்’ ஆகிய படங்கள் வெளியாயின.
பன்முகத் திறமை மிக்க பானுமதிக்கு தமிழக அரசின் சார்பில் அதுவரை ‘கலைமாமணி’ பட்டம் வழங்கப்படாததை அறிந்த எம்.ஜி.ஆர், தான் முதல்வராக இருந்தபோது ‘கலைமாமணி’ விருதை பானுமதிக்கு வழங்கி கவுரவித்தார்.
எம்.ஜி.ஆர். நல்ல இசை ஞானம் உடை யவர். ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பின் போது ஒருநாள், இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுடன் பாடல் களுக்கான இசையமைப்பு பற்றி எம்.ஜி.ஆர். ஆலோசித்துக் கொண்டிருந் தார். அப்போது, ‘‘நீங்கள் இசையமைப் பில் எல்லாம் தலையிட வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார் பானுமதி. இசை பற்றி எம்.ஜி.ஆருக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்காது என்ற எண்ணம் பானுமதிக்கு.
எம்.ஜி.ஆருக்கு நினைவாற்றல் அபா ரம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எதை யும் மறக்க மாட்டார். பானுமதி கேட்ட கேள்விக்கு, 27 ஆண்டுகளுக்குப் பின் முதல்வராக இருந்தபோது செயல்வடி வில் அவருக்கு பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.
தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பானுமதியை எம்.ஜி.ஆர். நியமித்தார். பின்னர், அந்த பதவியின் அந்தஸ்து மேம்படுத்தப்பட்டு இயக்குநர் மற்றும் முதல்வராக பானுமதி பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு பானுமதி மறைந்த தினம், எம்.ஜி.ஆர். நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி.
எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’
- தொடரும்...
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக