ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

எம்ஜிஆர் 100 | 32 - 34

‘தெய்வத்தாய்’ பட பூஜைக்கு வரும் எம்.ஜி.ஆரை வரவேற்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.

எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!

எம்.ஜி.ஆர். எதிலும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர். நெருக்கடியான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு அதை எளிதாகக் கடந்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் அவருக்கு தோள்கொடுக்க ராஜவிசுவாசிகள் இருப்பார்கள் என்று வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ராஜவிசுவாசிகளில் முக்கியமானவர் ஆர்.எம். வீரப்பன்.



1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் நிர்வாகியாக ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார். விரைவிலேயே அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் முதல் நாடகம் ‘இடிந்த கோயில்’. திமுக சார்பில் நடந்த கல்லக்குடி போராட்ட நிதிக்காக, 1953-ம் ஆண்டு அக்டோபர் முதல் வாரம் இடிந்த கோயில் நாடகம் திருச்சியில் அரங்கேறி மக்களின் வரவேற்பை பெற்றது.


எம்.ஜி.ஆருடன் ஆர்.எம். வீரப்பன்.

அப்போதைய சூழலில் திமுக மீது நாத்திகக் கட்சி என்ற முத்திரை பலமாக விழுந்திருந்தது. அந்த நேரத்தில் ‘இடிந்த கோயில்’ என்ற பெயரில் நாடகம் போட்டால் கடவுள் மறுப்பு நாடகம் என்று மக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் என்றும் நாடகத்தின் கருத்துக்கள் இன்னும் அதிக மக்களை அடைய நாடகத்தின் பெயரை ‘இன்பக் கனவு’ என மாற்றலாம் என்றும் எம்.ஜி.ஆருக்கு யோசனை சொன்னார் வீரப்பன். அது நியாயமாக இருக்கவே, ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

அந்தக் காலத்திலேயே மேடை நாடகத்தில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். கையாண்டார். நாடகத்தில் கனவுக் காட்சி வரும். சாட்டின் படுதா ஒன்றின் மீது சிவப்பு, பச்சை வண்ணங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சி அந்தப் படுதாவை லேசாக ஆட்டும்போது அலை அலையாக வண்ணக் கலவையில் தோன்றும் கனவுக் காட்சி கைதட்டல் பெறும்.

அந்தச் சமயத்தில் ‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் ஆனார். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுத கருணாநிதியை ஏற்பாடு செய்தார். படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். நாடக மன்ற நிர்வாகியாக இருந்த வீரப்பன், அவரது படங்கள் தொடர்பான வேலைகளையும் கவனித்துக் கொண்டார்.

குலேபகாவலி, மதுரைவீரன் போன்ற வெற்றிப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். திரையுலகில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக்க முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் பங்குதாரர்கள். பின்னர், சிறிது காலம் கழித்து அந்நிறுவனம் ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமாக மாற்றப்பட்டது. அதில் ஆர்.எம்.வீரப்பனையும் பங்குதாரராக சேர்த்ததுடன் அவரை நிர்வாக இயக்குநராகவும் நியமித்தார் எம்.ஜி.ஆர்.!

விழா ஒன்றில் எம்.ஜி.ஆருடன் சின்னப்பா தேவர், ஆர்.எம்.வீரப்பன் மற்றும் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள பாடகி பி.சுசீலா.

‘நாடோடி மன்னன்’ படம் வளர்ந்தது. படத்துக்கான தயாரிப்பு செலவுகள் எகிறிக் கொண்டே இருந்தன. செலவு களை சமாளிக்க ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க முடிவு செய் தார் வீரப்பன். அப்போது, ஏவி.எம். நிறுவனத்தின் ஆடிட்டர் சீனிவாசன், ‘‘கடன் தருவோம். ஆனால், எம்.ஜி.ஆர். கையெழுத்து போட வேண்டும்’’ என்று கூறிவிட்டார். கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடக் கூடாது, ஏதும் சிக்கல்கள் வந்தால் அவர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வீரப்பன்.

கடன் பெறுவதற்காக, படத்தின் இலங்கை ஏரியா விநியோக ஒப்பந்தத்தை ஈடாக காண்பித்திருந்தனர். அதில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருந்தார். ‘‘விநியோக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும்போது கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடவேண்டும்’’ என்று ஆடிட்டரும் பிடிவாதமாக இருந்தார். நாட்கள் ஓடின. பணம் இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்த ஃபிலிம் வாங்க முடியாத நிலை.

திடீரென யோசனை தோன்ற மீண்டும் சீனிவாசனிடம் சென்றார் வீரப்பன். ‘‘இலங்கை விநியோக ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் போடப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பிறகு ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஆனபிறகு, அதன் நிர்வாக இயக்குநர் நான்தான். என் பெயரில்தான் கடிதத் தொடர்புகள் நடக்கிறது. எனவே கடன் பத்திரத்தில் நான் கையெழுத்திட்டால் போதும்.’’ என்று கூறி ஆதாரங்களை காட்டினார் வீரப்பன்.

சட்டபூர்வமாக அவரது வாதத்தை மறுக்க முடியாத நிலையில், கடன் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரை கையெழுத்து போடவிடாமல் கடன் பெற்றுவிட்டார் வீரப்பன்.

‘எம்.ஜி.ஆர். படங்கள் நகரங்களில் ஓடாது. கிராமங்களில்தான் ஓடும்’ என்ற தவறான கருத்து இருந்தது. இதை மாற்ற வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1961-ல் எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’ படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அந்நிறுவனம் பெற்றது. அப்போதெல்லாம், சென்னையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கு முதல்தர திரையரங்குகள் கிடைக்காது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகியாக இருந்த வீரப்பன் துணிந்து முடிவு எடுத்தார். அண்ணா சாலையில் பழைய படங்களை வெளியிட்டு வந்த பிளாசா, மற்றும் பாரத், மகாலட்சுமி ஆகிய பழைய திரையரங்குகளில் ‘திருடாதே’ படம் திரையிடப்பட்டது. புதிய விளம்பர உத்திகளையும் வீரப்பன் வகுத்தார். மூன்று தியேட்டர்களிலும் படம் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களை திரையிடுவதில் சென்னையின் முக்கிய தியேட்டர் அதிபர்கள் ஆர்வம் காட்டினர். ‘திருடாதே’ படம் பட்டி தொட்டிகளிலும் ஓடி வசூலை வாரிக்குவித்தது. ராஜா ராணிக் கதைகளுக்குத்தான் எம்.ஜி.ஆர். பொருத்தமானவர் என்ற கருத்தையும் ‘திருடாதே’ தகர்த்தது.

எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.

முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.

‘இதயக்கனி’ படத்துக்கு மற்ற எம்.ஜி.ஆர். படங்களுக்கு இல்லாத சிறப்பு உண்டு. ரஷ்யாவில் நடைபெற்ற தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘இதயக்கனி’ தேர்வு செய்யப்பட்டது. வெளிநாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்.படம் என்ற பெருமையைப் பெற்றது ‘இதயக்கனி’.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 33 - குண்டு பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட குரல்வளம்!

‘மீனவ நண்பன்’ படத்தில் குமரனாக எம்.ஜி.ஆர்.! படத்திலும் எம்.ஜி.ஆர். பெயர் குமரன்தான்.

M.G.R. உழைப்புக்கு அஞ்சாதவர். எடுத்துக் கொண்ட காரியத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும் தயங்காதவர். சினிமா ஆனாலும் சரி, அரசியல் என்றாலும் சரி, தன் முழு உழைப்பையும் திறனையும் அவர் வெளிப்படுத்துவார்.

1967-ம் ஆண்டுக்கு முன் வந்த படங் களில் எம்.ஜி.ஆரின் குரல் கணீ ரென வெண்கல மணி போல ஒலிக் கும். துப்பாக்கிச் சூடு சம்பவத் துக்கு பின் தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. படங்களில் வேறு யாரையா வது ‘டப்பிங்’ கொடுக்கச் செய்யலாம் என்ற யோசனை களை எம்.ஜி.ஆர். நிராகரித்து விட்டார். சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.

‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இரண்டு, மூன்று முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங் களை எம்.ஜி.ஆர். மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களை எடிட்டிங்கின்போது காட்சிகளோடு ஒருங்கிணைப்பது மிகவும் கடினம். எம்.ஜி.ஆர். தனக்கே உரிய தொழில் நுட்ப சாதுர்யத்தோடு பலமுறை பதிவு செய்யப்பட்ட வசனங்களில் எந் தெந்த வார்த்தைகள் சரியாக ஒலிக் கிறதோ அவற்றை அங்கிருந்து ஒரு வார்த்தை, இங்கிருந்து ஒரு வார்த்தை என்று எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங் கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆருக்கு பூரண கும்ப மரியாதை. எம்.ஜி.ஆருக்கு வலப்புறம் தர்மலிங்கம். இடப்புறம் கே.பி.ராமகிருஷ்ணன். பின்னால் எஸ்.டி.சோமசுந்தரம்.

பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற எம்.ஜி.ஆர். விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ எனப்படும் பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணர்களை வரவழைத்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின்படி, நள் ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரை சென்று தண்ணீர் படும்படி அமர்ந்து உரக்கப் பேசி பயிற்சி மேற்கொண்டார்.

‘‘நானும் சாமி என்பவரும் எம்.ஜி.ஆரு டன் நள்ளிரவில் கடற்கரைக்குச் செல் வோம். அலை வந்து மோதும் இடத்தில் அவர் அமர்ந்துகொள்ள நாங்கள் அவரை பிடித்துக் கொள்வோம். அவர் உரக்க பேசி பயிற்சி மேற்கொள்வார்’’ என்று நெகிழ்கிறார் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலர் கே.பி.ராமகிருஷ்ணன். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட பயிற்சி களால் பெரும் அளவில் பேச்சுத் திறனை எம்.ஜி.ஆர். மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் கட்டைத் தொண்டையில் ஒலித்த எம்.ஜி.ஆரின் குரலும் கம்பீரமாகவே இருந்தது.

‘உரிமைக்குரல்’ படத்தின் வெற்றிக் குப் பின் எம்.ஜி.ஆரும்ஸ்ரீதரும் இணைந்த மற்றொரு வெற்றிப் படம் ‘மீனவ நண்பன்.’ இந்தப் படத்தை கரு.சடையப்ப செட்டியார் தயாரித்தார். இயக்கம்ஸ்ரீதர். படத்தில் கிளை மாக்ஸ் காட்சி எடுக்கப்படாத நிலையில், பெங்களூரில் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தபோது தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சென்னை திரும்பிவிட்டார். தேர்தல் வியூகங்கள் வகுப்பதிலும் பிரச்சாரத் திலும் அவர் தீவிரமாகிவிட்டதால் ‘மீனவ நண்பன்’ கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்படவில்லை. தேர்தலில் ஆட்சி யைப் பிடித்து எம்.ஜி.ஆர். முதல்வராகி விட்டால், படத்தின் கதி என்ன? என்றுஸ்ரீதரும் படக் குழுவினரும் கவலையோடு இருந்தனர்.

1977-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தமிழகம் முழு வதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்பதற்கான நாளும் குறிக் கப்பட்டு விட்டது. அதற்கு பத்து நாட்களுக்கு முன் இயக்குநர்ஸ்ரீதரை எம்.ஜி.ஆர். அழைத்தார்.
‘உரிமைக் குரல்’ படத்தில் நடிகை லதாவை கலாய்க்கிறார் தேக்குமர தேகம் கொண்ட எம்.ஜி.ஆர்.
‘‘மீனவ நண்பன் படத்தை முடிக்க இன்னும் எத்தனை நாள் தேவைப்படும்?’’ என்றுஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரண்டு நாட்கள் ஒதுக்கினால் போதும். முடித்து விடலாம்’’ என்றுஸ்ரீதர் பதிலளித்ததும் உடனே, படப்பிடிப்புக்கு தேதி கொடுத்து ஏற்பாடு செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

சொன்னபடி, குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். எடுக்க வேண்டிய காட்சி குறித்துஸ்ரீதருடன் ஆலோசித்தார்.

கிளைமாக்ஸில் புயல் வீசும் கொந்தளிக்கும் கடலில் மோட்டார் படகில் வில்லன் நம்பியாரை விரட்டிச் சென்று பிடித்து, படகில் கொட்டும் மழையில் அவருடன் எம்.ஜி.ஆர். சண்டையிட வேண்டும். அவர் நடிக்கத் தயாரானபோது,ஸ்ரீதர் குறுக்கிட்டு, ‘‘அண்ணே, மழை மட்டும் இப்ப வேண்டாம். படகு சேஸ், சண்டை மட்டும் எடுக்கலாம். தேவைப்பட்டால் புயல், இடி, மின்னலுடன் நிறுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.

‘‘ஏன்?’’, காட்சியில் திடீர் மாற்றம் குறித்து புரியாமல் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘இன்னும் ஒரு வாரத்தில் முதல்வ ராக பதவியேற்கப் போகிறீர்கள். இந்த நேரத்தில் தண்ணீரில் நீண்ட நேரம் நனைந்து சளி, காய்ச்சல் வந்து விட்டால் என்னாவது?’’ என்று தனது கவலையை பதிலாக்கினார்ஸ்ரீதர்.

எதையும் முழு அர்ப்பணிப்போடு செய்யும் எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘எனக்கு ஒன்றும் ஆகாது. மழையும் இருக்கட்டும். அப்போதுதான் இயல்பாக இருக்கும். காட்சிக்கு எஃபெக்ட்டும் கூடும்’’ என்று சொல்லிவிட்டு, மழையில் நனைந்தபடியே நம்பியாருடன் சண்டை போடும் காட்சியில் நடித்து முடித் தார்.

சில நாட்களில் தமிழகத்தின் முதல் வராக பொறுப்பேற்கப் போகிறவர், எனக்கு பதிலாக ‘டூப்’ போட்டு எடுத் துக் கொள்ளுங்கள் என்று சொல்லி யிருக்கலாம். இயக்குநரே வேண்டாம் என்று சொல்லியும் மழையில் நனைந்த படி நடித்துக் கொடுத்துவிட்டுச் சென் றார் என்றால், எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வெற்றியின் விளைச்சலுக்கு அவர் பாய்ச்சிய உழைப்பின் வியர்வை பிரமிக்கச் செய்யும்.

தோட்டாவுக்கு டாட்டா காட்டிய தேக்குமர தேகம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு அவர் சொன்னது போலவே, மழையில் நனைந்ததால் சளியோ, காய்ச்சலோ வரவில்லை.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் 1959-ம் ஆண்டு திருவண்ணாமலை கிருஷ்ணா திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்டது. டிஜிட்டல், சினிமாஸ்கோப் போன்ற நவீன உத்திகள் இல்லாமல் தினசரி மூன்று காட்சிகளாக மறுவெளியீட்டில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘நாடோடி மன்னன்.’

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நேற்று இன்று நாளை’ படத்தில் எம்.ஜி.ஆர், மஞ்சுளா.

எம்ஜிஆர் 100 | 34 - இரக்க சுபாவம் கொண்டவர்!

M.G.R. பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்டவர். அதிலும் மாற்றுத் திறனாளிகள் என்றால் அவரது கருணை மனம் கங்கையாக பொங்கும். அதனால்தான், தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட வீட்டில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பப்படியே பள்ளி செயல்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது. அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.

விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித் ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக் காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.
கால் முறிந்து எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.

உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது.

நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி.

மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.

சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.

‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.

‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.
எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வாழ்த்துகிறார் நடிகர் ராஜ்குமார்.

‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம். பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்... ‘‘இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது. கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’

எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது.

‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘பாடும் போது நான் தென்றல் காற்று...’ என்ற சூப்பர் ஹிட் பாடல், படத்தில் இரண்டு முறை இடம் பெறும். படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சியில் மஞ்சள் வண்ண உடையில் கூலிங் கிளாஸ், தொப்பி அணிந்து எம்.ஜி.ஆர். மிகவும் இளமையாகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருப்பார்.

காட்சி படமாக்கப்பட்ட இடம் மைசூரில் உள்ள மலைப் பகுதி. ஒரு காட்சியில் மலை யின் உச்சியில் எம்.ஜி.ஆர். நிற்பார். கேமரா கோணம் கீழே இருந்து எடுக்கப் பட்டிருக்கும். அவருக்கு பின்னே வெண்மேகத்தை சுமந்தபடி விரிந்து பரந்த நீலவானம். ரம்மியமான காட்சி அது.

ஒரு இடத்தில் இடுப்பில் ஒரு கையை வைத்து மறுகையால் உலகம் எல்லையற் றது என்பது போல தலைக்குமேல் சுழற்றி அபிநயம் செய்வார். குறிப்பிட்ட வரிகளை பாடிவிட்டு இரண்டு கைகளையும் பக்க வாட்டில் உயர்த்தி ‘T ’ வடிவில் விநாடி நேரம் நின்று, இடதுபுறம் அரை வட்டமாக எம்.ஜி.ஆர். திரும்பும் ஸ்டைலே தனி. அது அவருக்குத்தான் வரும். இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். பாடும் வரிகள்....

‘‘எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அதுபோல் நிலவும்....’’


‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு பின் எம்.ஜி.ஆர். நடித்த ‘நேற்று இன்று நாளை’ படமும் அப்போதைய அரசியல் சூழலில் எதிர்ப்புகளை சந்தித்தது. படம் வரும் முன்பே ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...’ என்ற பாடல் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தியது. இந்தப் பாடல் காட்சி யில் ‘திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி’ என்று ஓட்டு நிலவரத்துடன் பேனர் காட்டப்படும்போது தியேட்டர் அதகளப்படும். தடைகளை தாண்டி படம் வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடி அமோக வெற்றி பெற்றது.

படங்கள் உதவி : ஞானம்
 தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

- தொடரும்...

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல