ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

எம்ஜிஆர் 100 | 29 - 31


அரசு விழாவில் மூதாட்டிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உதவி வழங்குகிறார். அருகே எஸ்.டி.சோமசுந்தரம்.

எம்ஜிஆர் 100 | 29 - மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!

M.G.R. பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.



‘மும்பையில் மாதுங்கா, டெல்லி யில் கரோல்பாக் போல கொல் கத்தா நகரில் லேக் ஏரியா என்ற இடம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. 1982-ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிர்வாகிகள் அழைப்பின்பேரில் அங்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம் எழும்ப மூல காரணமாக இருந்தவரே எம்.ஜி.ஆர்.தான். கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார்.
1980-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வந்தபோது ராஜாஜி மண்டபத்தில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, முதல்வர் எம்.ஜி.ஆர். கூறுவதை ரசித்து கேட்கிறார் இளவரசர் சார்லஸ்.
விமானம் மூலம் கொல்கத்தா சென்ற எம்.ஜி.ஆரை திரளான தமிழர்கள் வரவேற்றனர். மாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத் திறப்பு விழா நடந்தது. இரண்டு நாட்கள் அங்கு தங்கினார். அப்போது, மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்து பேசினார்.

எம்.ஜி.ஆர். அப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேற்கு வங்க அரசின் விருந்தாளியாக வரவேற்கப்பட் டார். விமான நிலையத்தில் இருந்து அதி காரிகள் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் இரண்டு நாட்களும் எம்.ஜி.ஆர். தங்குவ தாக ஏற்பாடு. பிரம்மாண்டமும் ஆடம் பரமுமான ஆளுநர் மாளிகைக்கு அழைத் துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், தான் தங்க வேண்டிய இடத்தை சுற்றிப் பார்த்தார். 10 நிமிடங்களில் ‘‘இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது. ஓட்டலுக்குச் சென்று தங்கிவிடலாம்’’ என்று கூறி புறப்பட்டு விட்டார்.

மேற்குவங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒருபுறம்; வியப்பு மறுபுறம். ‘‘ராஜ் பவனில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இங்கேயே தங்கலாமே’’ என்று கேட்டுக் கொண்டனர்.

எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடியே, ‘‘தங் களின் அன்புக்கு நன்றி. இங்கே எனக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் உள்ளன. ஆனால், நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது. அவர்களுக்கு சவுகரியமான இடத்தில் நான் இருக்கணும்’’ என்று சொல்லிவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.
மக்களோடு மக்களாக மக்கள் திலகம்.

ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் ‘டல்ஹவுசி சதுக்கம்’ என்ற பகுதியிலேயே இருந்த ஒரு ஓட்டலில் தங்கினார். தன் னுடன் வந்த உதவியாளர்கள், தமிழக அரசு அதிகாரிகளையும் அதே ஓட்டலில் தங்க வைத்தார். அரசு சார்பில் ராஜ போகங்களுடன் இலவசமாக தங்கு வதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னைப் பார்க்க வரும் தமிழர்களின் வசதிக்காக சொந்த செலவில் ஓட்டலில் தங்கினார் எம்.ஜி.ஆர்.

அவர் வரும் தகவல் பற்றி பெரிய அளவில் கொல்கத்தாவில் விளம்பரம் செய்யப்படவில்லை. இருந்தாலும் தன் னைப் பார்க்க தமிழர்கள் வருவார்கள் என்ற எம்.ஜி.ஆரின் கணிப்பு தவற வில்லை. கொல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கு விஷயம் தெரிந்து சில மணி நேரங்களில் எம்.ஜி.ஆரைப் பார்க்க ஓட்டலுக்கு கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டனர்.

அப்படி வந்தவர்களில் பெரும் பாலோர் சாதாரண மக்கள். எம்.ஜி.ஆரை விழிகளால் விழுங்கியபடியே அவரது கையை குலுக்கியும் காலில் விழுந்து வணங்கியும் மகிழ்ச்சியையும் அன்பை யும் வெளிப்படுத்தினர்

அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சாதாரண மக்களின் கைகளில் எம்.ஜி.ஆர். ஏற்பாட்டின்படி அவரது உதவியாளர் மாணிக்கம் பணத்தை திணித்து அனுப்பினார். மக்கள் எம்.ஜி.ஆரை வாழ்த்திச் சென்றனர்.

தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்பு விழா வுக்கு மறுநாள் காலை, திடீரென தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலையில் இறங்கி எம்.ஜி.ஆர். நடக்க ஆரம்பித்து விட்டார். அங்கு வந்திருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் எம்.ஜி.ஆரோடு நடந்தனர். சாலையில் கொய்யாப் பழம் விற்றுக் கொண்டிருந்த வயதான தமிழ்ப் பெண்ணிடம் ‘‘பழம் என்ன விலை?’’ என்று ஜாலியாக கேட்டார். அந்த மூதாட்டியும் சளைக்கவில்லை. எம்.ஜி.ஆரை பார்த்த மகிழ்ச்சியில் அந்த மூதாட்டி, ‘‘உனக்குப் போய் விலை சொல்ல முடியுமாய்யா? எல்லாமே உனக் குத்தான் எடுத்துக்கோ’’ என்று கூறினார்.
நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பெண்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
அந்த மூதாட்டி நினைத்துப் பார்க்காத தொகையை அவர் கையில் திணித்த எம்.ஜி.ஆர்., கூடையில் இருந்த பழங் களை எடுத்து அருகே இருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த மூதாட்டியிடமும் பழத்தைக் கொடுத்து ‘‘நீயும் சாப்பிடு’’ என்றார். அந்த மூதாட்டிக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘நீ நல்லா இருக்கணும் ராசா’’ என்று கூறிக் கொண்டே காலில் விழ முயன்றவரை தடுத்து அணைத்து ஆறுதல் கூறினார் எம்.ஜி.ஆர்.!

‘நாடோடி மன்னன்' படத்தில் நாடோடி யாக இருந்த எம்.ஜி.ஆர், சூழ்நிலை காரணமாக மன்னனாக நடிப்பார். ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். பேசும் புகழ் பெற்ற வசனம் இது: ‘‘நீங்கள் மாளிகை யில் இருந்து கொண்டு மக்களை பார்க் கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன்.’’


எம்.ஜி.ஆரின் 100-வது படம் ‘ஒளிவிளக்கு’. 1968-ம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. மதுரையில் 21 வாரங்கள் ஓடியது. மறு வெளியீடுகளிலும் சக்கைபோடு போட்டது. 1979-ம் ஆண்டு இலங்கையில் மறு வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘ஒளிவிளக்கு’.

bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb

பரிசு’ படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். ,சாவித்திரியுடன் ரஷ்ய நாடகக் குழுவினர்.

எம்ஜிஆர் 100 | 31 - சந்திரபாபு நட்பு

M.G.R. எல்லாருக்கும் உதவும் நல்ல உள்ளம் கொண்டவர். என்றாலும், சில நேரங்களில் சிலரால் அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். தன்னைப் பற்றி வரும் தவறான செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் அவர் விளக்கம் அளிக்க மாட்டார். மக்கள் தன்னை தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டுமல்ல; விளக்கம் அளிப்பதன் மூலம் யாருடைய பெயரும் கெடக் கூடாது என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்கு.

நடிகர் சந்திரபாபு பன்முகத் திறமை வாய்ந்த கலைஞர். நடிப்பு, நடனம், இசை என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். எப்போதும் வெளிநாட்டவர்போல கோட்டும் சூட்டும் அணிந்து மிடுக்காகக் காட்சி தருவார். ‘குலேபகாவலி’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் நட்பு மலர்ந்தது. படப்பிடிப்பில் ஒருநாள் சந்திரபாபுவின் கைகளைப் பற்றிக் கொண்டு ‘‘இனி நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்’’ என்று நெகிழ்ந்துபோய் எம்.ஜி.ஆர். கூறினார்.
‘புதுமைப்பித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆர். , சந்திரபாபு.
அப்போதைய எம்.ஜி.ஆரின் படங்களில் சந்திரபாபுவும் கட்டாயம் இடம் பெறுவார். தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். அப்படத்தில் முட்டைகளை குடித்து விட்டு, பிறகு வாயிலிருந்து கோழிக் குஞ்சை அவர் வெளியே எடுக்கும் காட்சியில் சிரிக்காதவர் இருக்க முடியுமா?

கோழிக்குஞ்சு தொண்டையை பிறாண்டும் அபாயம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். தடுத்தும் கேட்காமல் அந்தக் காட்சியில் பிடிவாதமாக அர்ப்பணிப் போடு நடித்தவர் சந்திரபாபு. படத்தின் தயாரிப்பாளருமான எம்.ஜி.ஆர் கவலை அடையும் அளவுக்கு சில நேரங்களில் அவரின் வேடிக்கை விளையாட்டுக்கள் சென்றுவிடும். ‘நாடோடி மன்னன்’ படப் பிடிப்பின்போது ஒருநாள் எம்.ஜி.ஆர். எச்சரித்தும் கேட்காமல் ஒரு முரட்டுக் குதிரை மீது ஏறி கீழே விழுந்து மயக்க மடைந்துவிட்டார். நல்லவேளையாக, பெரிய காயம் எதுவும் இல்லை.

‘‘எண்ணங்கள் ஏப்பங்கள் அல்ல, அப்படியே வெளியே விடுவதற்கு’’ என்று நயமான உவமையை பேரறிஞர் அண்ணா சொல்வது உண்டு. சந்திரபாபு தனது எண்ணங்களை அப்படியே வெளியே விடக்கூடியவர். கேலியும், கிண்டலும், அலட்சியமும் அவருடைய நகைச்சுவை போலவே உடன் பிறந்தவை. எல்லாரையும் கிண்டல் செய்யும் ஜாலி பேர்வழி. எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவருடைய நடிப்பைப் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்வார் சந்திரபாபு.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி தன்னால் கிண்டல் செய்யப் படும் எம்.ஜி.ஆரை வைத்தே ஜூபிளி பிக்சர்ஸ் கோவிந்தராஜூடன் சேர்ந்து ஒரு படம் எடுக்க அவர் முடிவு செய்தது சுவாரஸ்யமான முரண். படத்தின் இயக்குநரும் சந்திரபாபுதான். கதாநாயகி அவரது தோழி சாவித்திரி. படத்தின் கதையை சந்திரபாபு சொல்ல எம்.ஜி.ஆருக்கும் பிடித்துப் போனது. ‘‘எனக்கு நிறைய படங்கள் ‘கமிட்’ ஆகியிருக்கு.கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே நடிச்சுத் தரேன்’’ என்று எம்.ஜி.ஆர். உறுதியளித்தார். ‘‘இருந்தாலும் என் பொறுமைக்கும் எல்லை இருக்கு இல்லியா?’’ என்று சந்திரபாபு துரிதப்படுத்தினார்.



பரணி ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. எம்.ஜி.ஆரை வைத்தே படம் எடுக்கும்போதும் அவரைப் பற்றிய விமர்சனங்களை சந்திரபாபு நிறுத்தவில்லை. அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் பல படங்களின் படப்பிடிப்பு. உடனடியாக, சந்திரபாபுவுக்கு கால்ஷீட் தரமுடியாத நிலை. ஒரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடமே கேட்டார் சந்திரபாபு. கால்ஷீ்ட் விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளும் தனது அண்ணன் சக்ரபாணியை பார்க்குமாறு எம்.ஜி.ஆர். சொன்னார். பொதுவாக கலைஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள். சந்திரபாபு என்ற பெரும் கலைஞனைப் பற்றி கேட்கவே வேண்டாம். எம்.ஜி.ஆரின் கால்ஷீட் தொடர்பாக சக்ரபாணியுடன் பேசும்போது இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்தன. நிலைமை ரசாபாசமானது. ‘‘நான் நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கி விட்டேன். நண்பர்கள் என்னைத் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். இல்லை…’’ என்று சந்திரபாபு பதிவு செய்திருக்கிறார்.அதோடு, படமும் நின்றுபோனது.

அதன் பிறகும் சந்திரபாபுவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த எம்.ஜி.ஆர். ‘‘என்ன பாபு சார்?’’ என்று நலம் விசாரித்தார். படத்துக்கு ‘மாடிவீட்டு ஏழை’ என்று பெயர் வைத்த ராசியோ என்னவோ, சந்திரபாபுவுக்கு கஷ்டகாலம் ஏற்பட்டது. தனது பழைய நண்பர் கஷ்டப்படுவதைப் பொறுக்காத எம்.ஜி.ஆர்., ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’, தனது சொந்தப் படமான ‘அடிமைப் பெண்’ ஆகிய படங்களில் சந்திரபாபுவுக்கு நடிக்க வாய்ப்புகள் அளித்தார். ‘அடிமைப் பெண்’ படத்தில் நடிக்க அவருக்கு கணிசமான தொகை யையும் ஊதியமாக அளித்தார்.

பி.யு.சின்னப்பா நடித்த ‘கண்ணகி’ படத்தில் கண்ணகியாக நடித்த கண்ணாம்பா பேசும் அனல்தெறிக்கும் வசனங்கள் 60-ஐக் கடந்த பலருக்கு இன்னும் காதுகளில் ரீங்காரமிடும். கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம். எம்.ஜி.ஆர். நடித்த ‘தாலிபாக்கியம்’ படத்தை தயாரித்து இயக்கினார்.
‘அரச கட்டளை’ படப்பிடிப்பில் அண்ணன் சக்ரபாணியுடன் ஆலோசிக்கிறார் எம்.ஜி.ஆர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்புக் குழுவினர் மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். திடீரென, நாகபூஷணம் பதறியபடி எம்.ஜி.ஆரை சந்தித்து, ‘‘தயாரிப்பு செலவுக்காக கொண்டு வந்திருந்த 3 லட்ச ரூபாய் தொலைந்து விட்டது. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திரும்ப வேண்டியதுதான்’’ என்று கலங்கினார். 1966-ம் ஆண்டில் ரூ.3 லட்சம் மிகப்பெரிய தொகை.

அவரைத் தேற்றி ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் சக்ரபாணியின் மைத்துனர் குஞ்சப்பன் மூலம் சென்னையில் இருந்து ரூ.3 லட்சம் கொண்டுவரச் சொல்லி உதவினார். அதோடு மட்டுமல்ல, ‘‘இந்தப் பணத்தை நீங்கள் திருப்பித் தரவேண்டாம்’’ என்றும் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆரை பார்த்து கண்களில் கண்ணீருடன் கைகூப்பி நின்றார் நாகபூஷணம்.

‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். சொல்வார்… ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.’’

தொப்பி ரகசியம்

‘அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது.

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

- தொடரும்...

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல