கடந்த மே மாதம் 29ஆம் திகதி புறக்கோட்டை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்தது. அப்போது நேரம் சுமார் காலை 8.10 ஆகும். அவ்வேளையில் பொலிஸார் மிகவும் சுறுசுறுப்பாக கடமையில் இருந்த வேளை தொலைபேசி மூலமாக கிடைக்கப்பெற்ற தகவலை பொலிஸ் உத்தியோகத்தர் உயர் பொலிஸ் அதிகாரியிடம் சென்று ‘சேர் செட்டியார் தெருவில் (கடை இலக்கத்தையும், கடையின் பெயரையும் தெரிவித்து) நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாம். கொள்ளையன் பணம், நகைகளுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டானாம் என்ற தகவலை வழங்க பொலிஸ் அதிகாரி விறுவிறுப்பாக செயல்பட துவங்கினார்.
கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் புறக்கோட்டை குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஜீ. பாலசூரிய தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் பியந்த, உபுல், மற்றும் கான்ஸ்டபிள்கள் ஜயரத்ன, கத்ரி ஆராச்சி ஆகியோர் செட்டியார் தெருவின் சம்பவ இடத்துக்குச் சென்றனர். சம்பவ கடையின் கதவுகள் மூடப்பட்ட இருந்தமையால் பொலிஸார் கதவைத் தட்டி கதவைத் திறக்க வைத்தனர்.
சீலிங் கூரைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட பணத்தை படத்தில் காண்க.
பொலிஸார் கடைக்குள் நுழைந்ததும் கடையினுள் இருந்த கடையின் விற்பனையாளர் தடுமாற்றம் அடைந்த நிலையில் இருந்துள்ளான். இவன் மட்டுமே கடையில் சம்பவம் இடம்பெற்ற வேளையில் இருந்துள்ளான். சம்பவம் இடம்பெற்ற இடத்தையும், பணம் நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தையும் பொலிஸார் பார்வையிட்டுள்ளனர்.
பின்னர் பொலிஸார் கடையின் விற்பனையாளரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். தன்னிடமே இன்றைய தினம் கடையின் சாவிகள் இருந்ததாகவும் தான் கடையைத்திறந்ததும் கடைக்குள் தலைக்கவசத்துடன் பிரவேசித்த ஒருவன் தன்னை கைக்குட்டையால் தனது கைகளை இறுகக்கட்டி வாயையும் கட்டி, கைத்துப்பாக்கியை காட்டிப் பயமுறுத்தி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளான். இவன் மீது பொலிஸாருக்கு சந்தேகம் வரவே கொஞ்சம் தீவிரமானவகையிலான விசாரணையை மேற்கொண்டனர். அவனது பேச்சும் பொலிஸாரை சந்தேகப்படவைத்தது.
கொள்ளையன் தனது கைக்குட்டையால் தன் கைகளை கட்டியதாகவும், தான் காலையில் கடைக்கு வேலைக்கு வந்தது தலைக்கவசம் அணிந்த அவரின் மோட்டார் சைக்கிளில் தான் என்று விசாரணையின் போது விற்பனையாளனான இளைஞன் தெரிவிக்க பொலிஸாருக்கு இவன் மீதான சந்தேகம் மேலும் நீடித்தது.
அவனைத் தெரியுமா என கேள்வி கேட்க அவர் இறக்குவானையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்தான். இதன் பின்னர் புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் டீ. கே. பியந்த தலைமையில் மீண்டும் பொலிஸார் கூடினர். அவரின் ஆலோசனையின் கீழ் சந்தேகநபருடன் பொலிஸார் இறக்குவானை நோக்கி பயணமாகினர்.
இறக்குவானையைச் சென்றடைந்த பொலிஸார் முதலாவது சந்தேக நபரை கைது செய்வதற்காக அவன் பற்றிய தகவல்களை முதலில் சேகரித்துக் கொண்டனர். சந்தேகநபரின் சகோதரனை விசாரணை செய்வதற்காக இறக்குவானை வீட்டுக்குச் சென்றபோது சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் (அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை) பொலிஸார் இனங்கண்டு கொண்டனர். அவ்வீட்டிலிருந்த பயண தோல் பேக் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு சோதனையிடப்பட்ட போது அதற்குள் (சம்பவத்தின் போது பாவித்ததாகத் தெரிவித்த) விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றும், கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பேக் மூலமாகவே 98 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், பணமும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தமையும் தெரிய வந்துள்ளது. சந்தேக நபரின் சகோதரனை விசாரணை செய்யும் போது தனது சகோதரன் சனிக்கிழமை நகைகளை விற்பனை செய்வதற்காக பொலநறுவை சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளான். சந்தேக நபரின் சகோதரன் இறக்குவானை நகரில் நகை வர்த்தகராவார்.
பொலன்னறுவைக்கு சந்தேக நபர் சென்ற தகவல் கசிந்ததும் பொலிஸார் மீண்டும் தீவிரமாக செயல்படத் தொடங்கினர். மேலும் ஒரு பொலிஸ் குழு பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு வரும் பஸ் வண்டிகளை கண்காணிப்பதில் மிகவும் அவதானத்துடன் இருந்தது. இதே நேரம் இறக்குவானையில் தன்னைத் தேடுவதை ஏதோ ஒருவகையில் தெரிந்து கொண்ட சந்தேகநபர் பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு மீண்டும் திரும்ப பயணத்தை தொடர்ந்தார். பொலன்னறுவையில் ஒரு நகைக் கடையில் நகைகளை விற்க முயன்ற போது அவர்களும் நகைகளை சந்தேக நபரிடமிருந்து கொள்முதல் செய்யவில்லை என பின்னர் பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்தது.
புறக்கோட்டை பொலிஸார் இரு முனையில் இக் கொள்ளை சம்பந்தமாக விசாரணையை கையாளுகையில் பொலன்னறுவையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் வண்டி ஒன்றை ஐந்துலாம்புச் சந்தியில் பொலிஸார் நிறுத்தினர். பஸ் வண்டியின் உள்ளே சென்ற பொலிஸார் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்து விசாரித்தனர்.
பொலிஸார் 30 ஆம் திகதி சந்தேகநபருடன் மீண்டும் இறக்குவானை சென்று இவரின் சகோதரரின் வீட்டு சீலிங் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணமும், சகோதரரின் வீட்டு வளவுக்குள் குப்பை போடும் கழிவுக் குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
இக்கொள்ளைச்சம்பவத்தில் பதினெட்டு இலட்சம் ரூபாய் பணமும் எண்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இக் கொள்ளைச் சம்பவம் மிகவும் நுட்பமானமுறையில் சினிமாப் பாணியில் இடம்பெற்று உள்ளமையை அனைவரும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
அத்துடன் இக்கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மூவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செட்டித் தெருவையே 29ஆம் திகதி கலக்கி வைத்த இச்சம்பவத்தை புறக்கோட்டை பொலிஸார் மிகவும் நுட்பமானவகையில் செயல்பட்டு 30ஆம் திகதி மாலை இரண்டு மணியளவில் 98 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொள்ளையை முடிவுக்கு கொண்டு வந்தனர். பணமும் நகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமை பாராட்டுக்குரியதாகும்.
சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மீண்டும் இம்மாதம் 16ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இக்கொள்ளைச் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு பொலிஸ் மா அதிபர் கே. பி. பி. பத்திரன, கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச். எம். டீ. ஹேரத் ஆகியோரின் பணிப்புரைகளுக்கமைய கொழும்பு மத்திய பொலிஸ் வட்டார சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெகாதி பெரேரா, மேலதிக பொலிஸ் அத்தியட்சகர் (1) ஜயரத்ன மனம்பேரி ஆகியோர் வழங்கிய ஆலோசனைகளின் கீழ் புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் டீ. கே. பியந்தவின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீ பாலசூரிய தலைமையில் பொலிஸ் குழு இயங்கியது. இக்குழுவில் சப்இன்ஸ்பெக்டர் செனவிரத்ன சார்ஜன்ட் பியந்த (21601) உபுல் (49729) கான்ஸ்டபிள்களான ஜயரத்ன (29072), கத்ரி ஆராச்சி (77750) ஆகியோரும் சந்தேக நபர்களை கைது செய்யும் குழுவில் இணைந்திருந்தனர்.
கே. பி. பி. புஷ்பராஜா



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக