போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான கிளிநொச்சி மாவட் டத்திற்குப் பொறுப்பாகவும் அராசங்கத்தின் பிரதிநிதியாகவும் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி வருகிறார். பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இருந்த அவரை நாம் தொடர்பு கொண்டபோது மிகவும் கனிவான குரலில் மாலை வேளையில் தொடர்பு கொள்ளுங்கள் என்றார். குறிப்பிட்ட நேரத்தில் தொடர்பு கொண்ட போது எதுவித மறுதலிப்பும் இல்லாமல் தினகரன் வாரமஞ்சரிக்கு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றம், வீடமைப்பு, வீதி அபிவிருத்தி, மின்சாரம், போக்குவரத்து, நீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து அவரிடம் கேட்டபோது அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகிறது.
கண்டாவளை, கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த பிரதேசம் கிளிநொச்சி மாவட்டமாகும். இம் மாவட்டத்தில் கடந்தாண்டு நவம்பர் 6ஆம் திகதி ஆரம்பமான மீள்குடியேற்றப் பணிகள் ஓரளவுக்கு முற்றுப்பெற்றுள்ளது என்றே கூறவேண்டும்.
இதுவரை 31553 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 195 பேர் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கண்டாவளை, கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு குறைந்தளவு தொகுதி மக்களே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பளைப் பகுதி யுத்தத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இன்னும் முழுமையடையாததால் மக்களை மீளக்குடியமர்த்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த மாத இறுதிக்குள் அப்பணிகள் முழுமையடையும்.
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தமது உறவினர் வீடுகளிலும், பெரும் எண்ணிக்கையானோர் நிவாரணக் கிராமங்களிலும் தங்கியிருந்தனர். அவர்களில் உறவினர் வீடுகளில் தங்கியிருப்போரில் பலர் தொடர்ந்து உறவினர் வீடுகளிலேயே தங்கியிருக்கின்றனர். நிவாரணக் கிராமங்களிலும் முகாம்களிலும் வாழ்ந்து வந்தவர்கள் தற்போது அவர்களது சொந்த கிராமங்களில் மீளக்குடியமர்ந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இவ்வாறு மீளக் குடியமரும் குடும்பத்திற்கு உடனடி உதவியாக 5000 ரூபா வீதம் வழங்கப்படுகிறது. உலர் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தேவையான உதவிகளும் ஆறு மாத காலத்திற்கு தேவையான உணவுப் பொதியும் வழங்கப்படுகிறது.
த்தம் காரணமாக ஒரு பகுதி சேதமடைந்த வீடுகளை புனர் நிர்மாணம் செய்யவும் முழுமையாக வீடுகள் சேதமடைந்திருப்பின் அவசரத் தேவையாக அரசாங்கத்தினால் 20 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. அரசாங்கத்தின் விசேட நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மேலும் 25 ஆயிரம் ரூபாவை அந்த மக்கள் பெறக்கூடியதாக இருக்கிறது.
கடந்த நவம்பரில் வந்தவர்களில் பலர் தமது குடும்பப் பொருளாதாரத்திற்காக விவசாயத்தை மேற்கொண்டனர். மேட்டு நிலப் பயிர்ச்செய்கை காலபோகத்திற்கு பிந்திய பயிராக நெல் பயிரிடப்பட்டது. பூநகரியில் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டு நெல் அறுவடை செய்து மக்கள் பயனடைந்திருக்கின்றனர். கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைமடுக் குளத்திலிருந்து 4500 ஏக்கர் நிலத்திற்கு தேவையான நீர் பாய்ச்சப்பட்டது. மேலும் அக்கராயன் குளத்திலிருந்து 1200 ஏக்கருக்குத் தேவையான நீர் பாய்ச்சப்பட்டது. ஒரு பகுதியில் நெல் அறுவடை செய்யும் அதேவேளை இன்னொரு பகுதியில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அரசாங்கத்தால் வேறு பல உதவிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஏக்கர் நிலத்தை பண்படுத்த 4 ஆயிரம் ரூபா நிதி உதவியும், உர மானியமும், விதைகள், இலவசமாகவும், உழவு இயந்திரம், மருந்து, மற்றும் தெளிகருவிகள் விவசாய அமைப்புகளுக்கூடாக வழங்கப்பட்டன.
மேட்டு நிலப் பயிர்களாக வெங்காயம், காய்கறி மற்றும் தானிய வகைகள் பயரிடப்பட்டன. அவை அனைத்தும் அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனாதிபதியின் விசேட செயலணியின் அனுமதியைப் பெற்றுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன. மக்கள் சுயதொழிலின் மூலம் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் சுயதொழில் முயற்சிகளுக்கான பயிற்சிகள், மற்றும் வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பசுமாடு, ஆடு, கோழி, முயல் போன்ற கால்நடை வளர்ப்புக்கள், மேசன், வாகனம் பழுது பார்த்தல், தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் பெண்களுக்கு தையல், கைப்பணிப் பொருட்களைத் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை தொழிற் பயிற்சி அதிகார சபை மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்களின் தொழில் தன்மைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற விதத்தில் பத்தாயிரம் ரூபா முதல் 50 ஆயிரம் ருபா வரையிலான கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இக் கடனுதவிகள் அரச வங்கிகள் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படுகிறது. பெரியளவில் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு தேவையான கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்திறகு தேவையான பல கருத்திட்டங்களை அராசங்கம் முன்னெடுத்து வருகிறது.
வீடமைப்பைப் பொறுத்தவரையில் போரினால் சேதமடைந்த குடியிருப்புக்களை இரண்டு விதமாக வகைப்படுத்தி அவற்றுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. முழுமையாக சேதமடைந்த நிலையில் 30 ஆயிரம் வீடுகள் இருப்பது மதிப்பீடுகளின் மூலம் தெரிய வருகிறது. இதில் 4 ஆயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார அமைச்சின் ஊடாக இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் 600 வீடுகளையும் ஐக்கிய நாடுகளின் கபிடான் நிறுவனம் ஆயிரம் வீடுகளையும் நிர்மாணித்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வீதிகளின் புனரமைப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை காலமும் மின்சாரத்தை காணாத பல கிராமங்களுக்கு புதிதாக மின் இணைப்புக்கள் வழங்கப்படுகின்றன.
அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக மின் இணைப்பு கிடைக்கவில்லை. எனினும் காலக் கிரமத்தில் அப்பகுதி மக்கள் அனைவரும் பயனடையும் விதத்தில் மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டு விடும்.
போரினால் தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகி சிறந்த முறையில் இயங்கி வருகிறது. மாவட்டத்தில் உள்ள 101 பாடசாலைகளில் 90க்கு மேற்பட்ட பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பாடசாலைகளுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக