வெள்ளி, 24 செப்டம்பர், 2010

கணவரை கொன்ற பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது

அமெரிக்காவில் கணவர் மற்றும் கணவருடைய மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 14 சிறை அதிகாரிகள் முன்னிலையில் அவருக்கு விஷ ஊசி போடப்பட்டது.


பாலிசி பணத்துக்கு கொலை

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பிட்சில்வேனியா கவுண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர், தெரசா லெவிஸ். (வயது 41). இவருடைய கணவர் ஜுலியன் லெவிஸ். அவருக்கு சார்லஸ் என்ற 25 வயது மகன் இருந்தான். அவனுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்திருந்ததால், ஒன்றே கால் கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தார். அதில் ஜுலியன் பெயரும் இருந்தது.

இந்த நிலையில், இன்சூரன்ஸ் பணத்தை அடைவதற்காக ஜுலியன், அவரது மகன் சார்லஸ் இருவரையும் கூலிப்படை வைத்து தெரசா லெவிஸ் கொலை செய்தார். அதற்காக, செலன் பெர்ஜர், புல்லர் ஆகிய இரண்டு இளைஞர்களை அமர்த்தினார். செலன் பெர்ஜர், புல்லர் இருவருடனும் அவர் உடலுறவு வைத்துக் கொண்டதோடு தனது 16 வயது மகளையும் புல்லருக்கு விருந்தாக்கினாள். அதன்பிறகு, திட்டமிட்டபடி, 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜுலியன், சார்லஸ் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கருணை மனு நிராகரிப்பு

இந்த வழக்கில், தெரசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்த நிலையில், விர்ஜினியா மாகாண கவர்னரும் கருணை மனுவை பரிசீலிக்க மறுத்து விட்டார். இதனால், தெரசா லெவிசுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்து நாள் குறிக்கப்பட்டது.

அதன்படி, கிரீன்ஸ்வில்லி சிறையில் உள்ள மரண தண்டனை வளாகத்தில் லெவிஸ் நேற்று விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டார். சிறை அதிகாரிகள் 14 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஊசி போடும் போது, அவருடைய முகத்தில் பீதி காணப்பட்டது. மேலும், அவரது பற்களை கடித்துக் கொண்டு தாடையை இறுக்கியபடி இருந்தார்.

ஆயிரமாவது விஷ ஊசி தண்டனை

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், 98 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை 2005-ம் ஆண்டுக்கு பிறகு, முதன் முறையாக ஒரு பெண்ணுக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் விஷ ஊசி மூலமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆயிரமாவது நபர் லெவிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தண்டனை நிறைவேற்றுவதற்கு முன் கடைசியாக, வறுத்த சிக்கன் துண்டு, இனிப்பு பயறு, வெண்ணெய், சாக்லேட் கேக், ஆப்பிள் துண்டு போன்றவற்றை லெவிஸ் சாப்பிட்டதாக டாக்டர் தெரிவித்தார். மேலும், இறக்கும் தருவாயில் தனது இறந்து போன கணவரின் மகள் கேதி கிளிப்டனை பார்க்க விரும்பினார். அதன்படி, தண்டனை நிறைவேற்றப்பட்ட அறையில் இருந்து இரண்டு கண்ணாடி சட்டங்களுக்கு வெளியே கேதி நிறுத்தப்பட்டார்.

அப்போது, `நான் கேதியை மிகவும் நேசிக்கிறேன். நான் மிகவும் வருந்துகிறேன்' என தெரசா லெவிஸ் முணுமுணுத்ததாக சிறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். தண்டனை நிறை வேற்றும்போது சிறைக்கு வெளியே, மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல