அமெரிக்காவில் உள்ள வெர்மான்ட் நகரை சேர்ந்தவர்கள் ரெஜினா மில்லார்ட் (54), பெர்தா ரேயான் (61). இருவருக்கும் வீடு இல்லை. எப்படியோ வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தவர்களுக்கு ஓர் இடத்தில் 2 கார்கள் துருப்பிடித்த நிலையில் கேட்பாரற்று கிடந்ததை பார்த்துள்ளனர். அவ்வளவுதான்... அன்று முதல் கார்களே அவர்களுடைய வீடுகளாக மாறிவிட்டன. அத்துடன் விட்டிருந்தால் கூட பரவாயில்லை.
அக்கம் பக்கத்தில் சுற்றித் திரியும் பூனைகளை பிடித்து கார்களில் அடைத்துள்ளனர். இப்படி 77 பூனைகளுடன் 2 பெண்களும் கார்களில் வாழ்க்கை நடத்தி வந்தனர். பூனைகளுக்கு தட்டுகளில் உணவும் வைத்துள்ளனர். பூனைகளின் சத்தம் நாளுக்கு நாள் அதிகமாகவே, அந்தப் பக்கம் சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டனர்.
உடனடியாக வெர்மான்ட் போலீசார் அங்கு சென்று 2 கார்களையும் சோதனை செய்தனர். ஒரு காரில் பூனை ஒன்று இறந்து கிடந்தது. சில பூனைகளின் குடல் கழிவுகளும் இருந்தன. ஒரே துர்நாற்றம் வீசியது. ஆங்காங்கே உணவு பொருட்கள் சிதறிக் கிடந்தன. ஆனால் ரெஜினா, பெர்தாவை காணவில்லை. அவர்களுடைய செல்போன்களை கண்டுபிடித்து போலீசார் தொடர்பு கொண்டனர். ரெஜினாவின் செல்போன் செயல்பாட்டில் இல்லை. பெர்தா செல்போனை எடுக்கவே இல்லை. இரண்டு பெண்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக