செவ்வாய், 12 அக்டோபர், 2010

ஒரு கைதியைச் சுற்றிச்சுழலும் அரசியல் விளையாட்டுக்கள்

இலங்கையின் இன்றைய அரசியல் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் கைதியொருவரின் கதியுடன் தொடர்புடைய நிகழ்வுப்போக்குகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 16 மாதங்களுக்கு முன்னர் "உலகின் தலைசிறந்த இராணுவத் தளபதி%27 என்று புகழ்ந்துரைக்கப்பட்ட சரத்பொன்சேகா என்ற அந்தக் கைதி இன்று 0/22023 என்ற இலக்கத்தை மாத்திரம் அடையாளக் குறியாகக்கொண்டு கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இலங்கை இராணுவத்தின் 6 தசாப்தகால வரலாற்றில் சேவையில் இருந்தவேளையிலேயே ஜெனரலாக தரமுயர்த்தப்பட்ட முதல் இராணுவ அதிகாரியென்ற பெருமைக்குரியவராக விளங்கிய பொன்சேகா சிறைச்சாலையில் ஏனைய கைதிகளுடன் வரிசையில் காத்துநின்று தட்டை நீட்டி உணவு வாங்கிச் சாப்பிட்டு, கட்டாந்தரையில் பாயில் படுத்துறங்கும் இலங்கையின் முதல் முன்னாள் இராணுவத் தளபதி என்ற அவலநிலைக்குள்ளாகியிருக்கும் பரிதாபம்.

பொன்சேகாவை கடந்த ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நியமித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் மோதவிட்ட எதிரணிக் கட்சிகள் இன்று அவரைச் சிறையில் இருந்து விடுதலை செய்விப்பதற்காக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகா தோல்வி கண்ட கையோடு தனித்தனி வழிசென்ற இந்த எதிரணிக் கட்சிகள் முன்னெடுத்திருக்கும் போராட்டங்கள் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொன்சேகாவை விடுவிப்பதற்காக "சர்வாதிகாரத்துக்கு எதிரான மக்கள் பேரணி%27 என்ற அமைப்பையும் பொன்சேகா தலைமையில் கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் அமைக்கப்பட்ட ஜனநாயக தேசிய முன்னணி அவரின் மனைவி அனோமாவை முன்னிலைப்படுத்தி ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பையும் தோற்றுவித்திருக்கின்றன.

இராணுவக்காவலில் வைக்கப்பட்டிருந்த பொன்சேகாவுடன் அணிசேர்ந்திருக்காவிட்டால் இன்று பாராளுமன்றத்தில் ஓரிரு ஆசனங்களை மாத்திரமே பெற்றிருக்கக்கூடிய படுமோசமான நிலையில் இருந்திருக்கக்கூடிய ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) முன்னாள் இராணுவத்தளபதியின் விடுதலைக்கான கோஷத்தையே அதன் தற்போதைய பிரதான அரசியல் தொனிப்பொருளாகக் கொண்டு செயற்படுகின்றது. பொன்சேகாவுக்கு கொடுக்கப்படக்கூடிய முக்கியத்துவத்தினால் எதிரணி அரசியலில் தனது நிலைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புரிந்துகொண்டிருக்கின்றபோதிலும்கூட, பொன்சேகாவுக்கான போராட்டத்தில் இருந்து முற்றுமுழுதாக விலகியிருந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் நன்குணர்ந்தவராகவே அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

மறுபுறத்திலே அரசாங்கம் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான சர்ச்சையைத் தானாகவே மூளவைத்திருக்கிறது. அவரின் விடுதலையை வேண்டி தற்போது முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களின் விளைவாக நாளடைவில் எதிரணிக் கட்சிகளிடையே மீண்டும் ஐக்கியம் ஏற்படக்கூடிய சூழ்நிலை தோன்றுவதை அரசாங்கம் ஒருபோதுமே விரும்பப்போவதில்லை. பொன்சேகா அல்லது அவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்குமாறு கோரும் பட்சத்தில் உரிய நடைமுறைகளின் பிரகாரம் அது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இராணுவ நீதிமன்றத்தின் சட்டபூர்வத்தன்மைக்கு களங்கம் ஏற்படக்கூடியதாக பொன்சேகா விவகாரத்தில் அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப்போவதில்லை என்றும் பொன்சேகாவை அரசாங்கம் ஒருபோதுமே தானாக விடுதலை செய்யப்போவதில்லை என்றும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன், தனது கணவருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியைக் கேட்பதை விடுத்து ஊர்ஊராகச் சென்று தேங்காய்களை உடைப்பதனால் பொன்சேகாவின் மனைவியினால் எதையுமே சாதிக்க முடியாது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் தனது கணவரோ அல்லது அவரின் சார்பில் குடும்பத்தினரோ எதற்காக விண்ணப்பிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதே அனோமா பொன்சேகாவின் கேள்வியாகும். தனது சார்பில் தன் குடும்பத்தவர் எவருமே மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கக்கூடாது என்பதே பொன்சேகாவின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. மன்னிப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பிரசாரங்கள் வீம்புத்தனமாக கௌரவத்தைப் பார்க்காமல் பொன்சேகாவோ அல்லது அவரது குடும்பத்தவரோ மன்னிப்பு வழங்குமாறு கோரினால் என்ன கெட்டுப்போய்விடும் என்று நாட்டு மக்களை எண்ண வைக்கும் நோக்குடனானவை என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. நாட்டின் சட்டங்களின் பிரகாரமே முன்னாள் இராணுவத் தளபதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்று அரசாங்கத் தரப்பினர் வாதம் செய்கின்றபோதிலும், போர் வெற்றிக்கு ஜனாதிபதியுடன் ஏட்டிக்குப் போட்டியாக உரிமை கொண்டாடக்கூடிய அந்தஸ்துடையவரென்று கருதப்படும் பொன்சேகாவுக்கு நேர்ந்திருக்கின்ற கதியை சிங்கள சமூகத்தில் கணிசமான பிரிவினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையும் அரசாங்கம் அறியும். அதனால், பொன்சேகா விவகாரத்தில் அரசாங்கத்தின் உள்ளே ஒருவகையான தடுமாற்றம் இருக்கவே செய்கிறது. இதைப் புரிந்துகொண்டே எதிரணிக் கட்சிகள் நிலைவரத்தை தங்களுக்கும் சாதகமான முறையில் பயன்படுத்தும் நோக்குடன் போராட்ட இயக்கங்களை முன்னெடுக்கின்றன. பொன்சேகா விவகாரம் கிடைத்திருக்காவிட்டால் இந்த எதிரணிக் கட்சிகள் என்ன செய்திருக்கும்?

Thinakkural

Image Hosted by ImageShack.us

1 கருத்து:

  1. அப்பாவி ஈழத்தமிழரை கொன்றுகுவித்ததில் இந்த கொலைஞனுக்கும் முக்கிய பங்குண்டு. அப்படியிருக்கும் போது தமிழர்கள் தமிழ் இணைய, வலைப்பூக்கள் இந்த கொலைவெறியனின் செய்திகளுக்கு ஏன் இத்தனை மூக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள். இவன் விதைத்த விணையை அறுக்கிறான். அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

    பதிலளிநீக்கு

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல