வெள்ளி, 14 ஜனவரி, 2011

அதிக பணமோ, உயர்ரகமோ பாஸ்போட் அல்ல!

அறுபது வயதைத் தாண்டிய முது இளைஞர் அவர். ‘சலம் போகும் போது எரிகிறது. சலவாயிலிருந்து சற்றுக் கசிவும் இருக்கிறது’ என்று பயந்து கொண்டே கூறினார். கையுறை அணிந்து அவரது உறுப்பைப் பரிசோதித்த போது எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ‘கறந்து’ பார்த்தபோது கசிவு இருந்தது. ஆய்வுகூடப் பரிசோதனையில் அது கொனரியா என்ற பாலியல் நோய் என்பது தெளிவாகியது.

நல்ல காலம் எயிட்ஸ் இல்லை என்று கூறியதும் மலர்ந்தார். நான் கேட்காமலே அவர் நீண்ட வியாக்கியானம் தந்தார். தனது மனைவி சுகவீனமாக இருப்பதாகவும், அதனால் அவருடன் உடலுறவு கொள்ள முடிவதில்லை எனவும் இதனால் தான் வேறு இடங்களில்தான் பாலுறவு வைத்துக் கொள்வதாகவும் … இன்னும் பல பல. தான் அவ்வாறு செய்ததற்கான சாட்டுகள் தாம் அவை. வைத்தியர்களுக்கு அதற்கான காரணம் முக்கியமல்ல. ஆணுறைப் பாதுகாப்பு இல்லாமல் உறவு வைத்த தவறை எடுத்துக் கூறி ஆன சிகிச்சை அளித்தேன்.

இன்னொருவர் வெளிநாட்டவர். எது வித தயக்கமுமின்றித் தான் வெளியிடத்தில் உறவு வைத்த பின் சலவாயிலிருற்து கசிவும் கடுமையாக எரிவும் இருப்பதாகக் கூறினார். பார்த்தபோது கொனரியா என்பது தெரிந்தது. சொன்னனேன். ‘அப்படித்தான் தெரிகிறது. எதற்கும் முழமையாகப் பரிசோதித்து வேறு நோய்கள் இல்லை என்பதையும் நிச்சயப்படுத்துங்கள்’ என்று நீண்ட அனுபவப்பட்டவர் போலக் கேட்டுக் கொண்டார்.

இருவருமே ஆணுறை அணிந்தே உறவு வைத்ததாகக் கூறியபோதும் அவர்களின் கூற்றில் உறுதியிருக்கவில்லை. ‘கண்ட கண்டவர்களுடன் போகவில்லை.’ என்ற அர்த்தம் தொனிக்கப் பேசினார்கள். முதலாமவர் ‘பச்சை நோட்டுக்கள் பல கொடுத்த’ நல்ல இடம் என்றார். இரண்டாமவர் கீழைத்தேய நாடு ஒன்றின் பெயரைக் கூறி அந்நாட்டின் அழகான உயர் ரகப் பெண் என்றார்.அதிக பணம் கொடுத்தாலோ, உயர் ரகப் பெண் என எண்ணிப் போவதோ பாதுகாப்பு என எண்ணுவது தவறானது.

வெளி உறவுகள் எப்பொழுதுமே ஆபத்தானவை என்பதே உண்மை. அத்துடன் பெண்களுக்கு பெரும்பாலும் பாலியல் நோய்களின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் தங்களுக்கு நோய் இருப்பது தெரியாமலே தன்னோடு கூடுபவருக்குப் பரப்பிவிடுவார்கள். சில ஆண்களுக்கும் கூட கடுமையான அறிகுறிகள் இருப்பதில்லை. அவர்களும் பரப்புவார்கள். எனவே பாதுகாப்பற்ற உறவு என்பது ஆண் பெண் என எவருக்குமே ஆபத்தானது என்பதே உண்மை.

சிகிச்சை என்பது நோயுற்றவருக்கு மட்டுமல்ல, உறவு கொண்ட பங்காளிக்கும் சேர்த்தேயாகும். அவ்வாறு அளிக்கும்போதே மீண்டும் தொற்றுவதைத் தடுக்கலாம். அத்துடன் மற்றவர்களுக்கும் பரவக்கூடாது என்ற சமூக நோக்கும் இதில் அடங்குகிறது.

மேலே குறிப்பிட்டவர்களுக்கு வந்த நோயான கொனரியா சுலபமாகக் குணப்படுத்தக் கூடியது. ஆனால் எயிட்ஸ், சிபிலிஸ், கிளமிடியா, ஜெனிடல் வோரட்ஸ் என பலவகையான பாலியல் நோய்கள் உண்டு என்பதை மறக்க வேண்டாம். இவற்றில் சில கட்டுப்படுத்தக் கூடியவையே அன்றி முழுமையாகக் குணப்படுத்த முடியாதவை.

இவை எதுவுமே இன்று உயிர் கொல்லி நோய்கள் அல்ல, எயிட்ஸ் உட்பட. ஏனெனில் எயிட்சை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது என்பது உண்மையான போதும் அதன் தாக்கத்தை இன்று கட்டுப்படுத்த முடியும். கோடிக்கணக்கில் பணம் இருந்தால் எயிட்ஸ் நோயுடன் கூட நீண்ட காலம் வாழ முடிகிறது. இவ்வாறு சொல்வது தகாத உறவுகளுக்கான பாஸ்போட் அல்ல.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல