சனி, 6 அக்டோபர், 2012

சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டிற்கு பதில் பழிவாங்கும் உணர்வே மேலோங்கி உள்ளது – பிபிசி முன்னாள் செய்தியாளர்

தாம் பல்வேறு யுத்தங்களைப் பார்த்ததாகவும், ஆனால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது போன்ற சம்பவங்களை பார்த்தது மிக அரிதாகும் என யுத்தம் நிறைவுற்ற பின்னர் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறு பிபிசி முன்னாள் செய்தியாளர் FRANCES HARRISON , 4 October 2012 openDemocracy இணையத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நி்தியபாரதி.

சிறிலங்கா இராணுவத்தினர் 2009ல் மேற்கொண்ட தீவிர யுத்தத்தின் போது வைத்தியசாலைகளை குறிவைத்து தாக்குதல்களை நடாத்தியிருந்ததை வைத்திய கலாநிதி நிரோன் நன்கறிவார். வைத்தியசாலையை மாற்றுவது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக சிறிலங்கா இராணுவத்திடம் அறிவித்த ஒவ்வொரு தடவைகளிலும் குறிப்பிட்ட சில நாட்களில் வைத்தியசாலையை புதிதாக மாற்றிய இடங்களை வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதாக நிரோன் கூறுகிறார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்திற்குள் அகப்பட்டு காயமடைந்த மக்களை குணமாக்கிய வைத்திய கலாநிதி நிரோன் தற்போது அரசியல் தஞ்சம் கோரி அத்திலாந்திக் கரையோரத்திலுள்ள நாடொன்றில் வாழ்கிறார். தற்போது இவருடன் வாழும் ஏனைய அரசியல் அகதிகளுக்கு நிரோனின் கடந்த காலம் தெரியாது. ஆனால் வைத்திய கலாநிதி நிரோனால் குணப்படுத்தப்பட்டு தற்போது உயிருடன் வாழும் சிறிலங்காவில் உள்ள மக்கள் பலர் இவரது உறவுகளைச் சந்தித்து தமது உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர். சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காயமடைந்து தற்போது உயிருடன் உள்ளவர்களின் மனங்களில் நிரோன் முதன்மை இடம்பிடித்துள்ளார்.

தான் எங்கே தப்பிச் சென்றதாக சிறிலங்காவிலுள்ள தனது நண்பர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக நிரோன் குறிப்பிட்டார். “அவர்கள் என்னைத் தேடுகிறார்கள். எமது சாட்சியங்கள் எவ்வளவு மிக முக்கியதானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்” என நிரோன் மேலும் விளக்கினார்.

சிறுவர்களை போரில் ஈடுபடுத்தியதுடன், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் மேற்கொண்ட தமிழ்ப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா இராணுவத்தால் 2009ல் மேற்கொள்ளப்பட்ட மிகக் கொடிய யுத்தத்தின் போது, யுத்தம் இடம்பெற்ற சிறிலங்காவின் வடக்கில் வைத்தியரான கலாநிதி நிரோனும் [உண்மையான பெயரல்ல] சேவையில் ஈடுபட்டிருந்தார். இவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பணியாற்றிய போதிலும் கூட சிறிலங்கா மத்திய அரசாங்கத்தால் பணிக்கமர்த்தப்பட்ட அரசாங்க வைத்தியராவார்.

சிறிலங்கா இராணுவத்தினர் தமது முன்னேற்ற நடவடிக்கைகள் மூலம் புலிகளை சிறிலங்காவின் கிழக்கு கரையோரப் பகுதி நோக்கி விரட்டியடித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட யுத்தம் மூலம் இறுதியில் புலிகள் மிக ஒடுங்கிய நிலப் பகுதியை மட்டும் தம்வசம் கொண்டிருந்தனர்.

இரு தரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட இறுதி ஐந்து மாத யுத்தத்தில் 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகின்றது. யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததற்கான சாட்சியங்கள் உள்ளபோதிலும், சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சட்டத்தை மீறி இவ்வாறான பாரிய குற்றங்களை மேற்கொண்டதாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் சட்ட வல்லுனர்கள் சிறிலங்காவை எச்சரித்திருந்தனர்.

நிரோன் யுத்த வலயத்தை விட்டு வெளியேறுவதற்கான பல சந்தர்ப்பங்களைக் கொண்டிருந்த போதிலும், தான் தனது நோயாளிகளை குணப்படுத்த வேண்டும் என்கின்ற கடமையுணர்வுடன் தொடர்ந்தும் அங்கிருந்ததாக கூறுகிறார். யுத்த வலயத்தை விட்டு வெளியேறாவிட்டால் மாதாந்த கொடுப்பனவு நிறுத்தப்படும் என சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்த போதிலும் கூட, அதனைப் பொருட்படுத்தாது தனது நோயாளிகளின் நலனுக்காக வைத்திய கலாநிதி நிரோன் தொடர்ந்தும் யுத்த வலயத்தில் சேவையாற்றினார்.

யுத்த முன்னரங்குகள் மேலும் முன்னோக்கி வந்து கொண்டிருந்த போது, தனது வைத்தியசாலையை தொடர்ந்தும் அதே இடத்தில் இயக்க முடியாத நிலையில் வைத்திய கலாநிதி நிரோன், பொதுக் கட்டடங்கள், வீடுகள், கூடாரங்கள் போன்றவற்றில் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டார். இறுதியில் மிக ஒடுங்கிய நிலப்பரப்புக்குள் பல பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்ட போது, நிரோன் தனது வைத்திய சேவையை மரங்களுக்கு கீழ் வைத்து நடாத்தினார்.

ஜனவரி 2009ல் உடையார்கட்டு வைத்தியசாலையில் தன்னுடன் கூடப் பணியாற்றிய மருத்துவ தாதி ஒருவர் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டதாக நிரோன் மனவேதனையுடன் நினைவுகூருகிறார். இதேபோன்று தன்னுடன் பணியாற்றிய மேலும் பலர் கொல்லப்பட்டதாகவும், சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட ஜனவரியின் இறுதி பத்து நாட்களில் மட்டும் 2000 எறிகணைகள் வீசப்பட்டதாகவும் நிரோன் கூறுகிறார்.

யுத்த வலயத்தில் பெருமளவான நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் முக்கிய மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தன. பொதுவாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பொது வைத்தியசாலைகளுக்கு சிறிலங்கா அரசாங்கமே மருந்துப் பொருட்களை வழங்கி வந்தது. ஆனால் யுத்தம் தீவிரமடைந்த போது, தனது எதிரியிடம் மக்கள் அனுதாபம் காட்டலாம் என்ற நோக்கத்தில் பொதுமக்களுக்கான மருந்துப் பொருட்களை அனுப்புவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காட்டவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் பனடோல், விற்றமின் போன்ற சில பொதுவான மருந்துப் பொருட்களை மட்டுமே அனுப்பியது. வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்த போதிலும் கூட, யுத்தத்தில் காயமடைந்த மக்களுக்குத் தேவையான மருந்துகளை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பவில்லை. காயமடைந்த பொதுமக்களுக்கு தேவையான மருந்து வழங்கலை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதானது நீதிக்குப் புறம்பான செயலாகும் என இராஜதந்திரிகள் எச்சரிக்கை விடுத்திருந்ததை மார்ச் 2009ல் விக்கிலீக்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிலங்கா அரசாங்கத்தை குழப்பும் நடவடிக்கையில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு தமக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யுத்த வலயத்தில் கடமையாற்றிய வைத்தியர்கள் வெளிப்படையாக முறையிட்டனர்.

யுத்த வலய வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகள் வெறுமையாகின. சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியிருந்த 16 வயதுச் சிறுமி ஒருவருக்கு உடனடியாக இரத்தம் பாய்ச்சப்பட வேண்டியிருந்ததாகவும், ஆனால் வைத்தியசாலையில் இரத்தம் இல்லாததால் தான் தனது இரத்தத்தை ஏற்றி அச்சிறுமிக்கு சத்திர சிகிச்சை செய்ததாகவும் வைத்திய கலாநிதி நிரோன் கூறுகிறார்.

ஏப்ரல் 2009ன் ஒரு நாள் தமது குழந்தைகளுக்கு பால்மா வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள் மீது சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தமை தன்னால் மறக்க முடியாத மிக மோசமான நினைவுகளில் ஒன்றாகப் பதிந்துள்ளதாக நிரோன் குறிப்பிடுகிறார். காயமடைந்த சிறார்களுக்கு ஊசி மருந்து ஏற்றுவதற்கு தாம் சிரமப்பட்டதாகவும், அவர்களின் இரத்த நாளங்கள் மிகச் சிறியதாக காணப்பட்டதால் அவர்களின் உடலங்களில் சிறிதாக வெட்டி பின்னர் அதன் ஊடாக ஊசி மருந்துகளை ஏற்றியதாகவும் அப்போது அந்தச் சிறார்கள் அழும் காட்சி தனது மனதை உருகவைத்ததாகவும் நிரோன் கூறுகிறார்.

கட்டடம் ஒன்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழி ஒன்றில் இருந்தவாறு சத்திர சிகிச்சை மேற்கொண்ட போது, அந்தக் கட்டடத்தின் கூரையில் குண்டொன்று வெடித்த சத்தம் கேட்டதாகவும், அது கொத்துக் குண்டு எனத் தான் நம்புவதாகவும் நிரோன் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தால் பொது மக்கள் வாழிடங்கள் நோக்கி கொத்துக் குண்டுகள் வீசப்பட்டபோதும் கூட தாம் அவ்வாறான எந்தவொரு குண்டுகளையும் பயன்படுத்தவில்லை என சிறிலங்கா அரசாங்கம் பரப்புரை செய்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கதே. பிறிதொரு சம்பவத்தில் வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டொன்றின் சிதறலால் தான் காயமடைந்ததாகவும், இதன் தாக்கமானது தான் பல ஆண்டுகாலமாக சிகிச்சையளித்த காயங்களை விட வேறுபட்ட தாக்கத்தை கொடுத்திருந்ததாகவும் நிரோன் நினைவுகூருகிறார்.

தான் தனது தற்காலிக வைத்தியசாலைகளின் கூரைகளில் செஞ்சிலுவைக் குறியை தெளிவாக வரைந்த போதிலும் கூட, இவற்றைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வைத்திய கலாநிதி நிரோன் கூறுகிறார். அத்துடன் தனது வைத்தியசாலைகளை புதிதாக செயற்படுத்தும் இடங்களின் தரவுகளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா இராணுவத்திற்கு தெரியப்படுத்தியதாகவும், ஆனால் வைத்தியசாலையை இடம்மாற்றும் ஒவ்வொரு தடவையிலும் அதன் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நிரோன் கூறுகிறார். ஆனால் அதேநேரத்தில் செஞ்சிலுவை அடையாளம் போடாது அவற்றின் இருப்பிடங்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திடம் எந்தவொரு தகவலும் வெளியிடாத ஐந்து சிறிய வைத்தியசாலைகள் செயற்பட்டதாகவும், ஆனால் இவற்றில் எந்தவொன்றின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லலை எனவும் நிரோன் கூறுகிறார். சிறிலங்கா இராணுவம் திட்டமிட்ட வகையில் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தியிருந்தது என நிரோன் உறுதிபடக் கூறுகிறார். “அவர்கள் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குவதன் மூலம் பலரைக் கொல்ல விரும்பினார்கள்” எனவும் நிரோன் மேலும் தெரிவித்தார்.

நிரோனால் கூறப்பட்ட அதேவிடயத்தை ஐ.நா அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது யுத்த வலயத்தில் செயற்பட்ட பொதுமக்களின் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடாத்தியுள்ளதாக ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது சிறிலங்கா அரசாங்கம் வைத்தியசாலைகள் செயற்படுமிடங்களை நன்கறிந்திருந்த போதிலும் கூட தொடர்ச்சியாக வைத்தியசாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை பாரிய யுத்த மீறல் என ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 பெப்ரவரி ஆரம்பத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருந்த இரு வைத்தியசாலைகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் பல்குழல் எறிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து மேற்கொண்டதாகவும், அப்பொது 800 நோயாளிகள் அங்கிருந்ததாகவும் ஐ.நா வல்லுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற மாதங்களில் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து 30ற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்றதாக மனித உரிமைகள் கண்காணிப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை நோக்கி எறிகணை ஒன்று ஏவப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சி ஆவணமாக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது பிரசன்னமாகியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுப்பதற்காக சிறிலங்கா இராணுவத்தை ஆறு தடவைகள் தொடர்பு கொண்டபோதும் இது தொடர்பில் இராணுவத்தரப்பு பொருத்தமான நகர்வுகளை மேற்கொள்ளவில்லை. பதிலாக தொடர்ந்தும் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வைத்தியசாலைகளை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டது. தாம் பல்வேறு யுத்தங்களைப் பார்த்ததாகவும், ஆனால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது போன்ற சம்பவங்களை பார்த்தது மிக அரிதாகும் என யுத்தம் நிறைவுற்ற பின்னர் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர். இது ‘கற்பனை செய்து பார்க்க முடியாத மனிதப் பேரழிவு’ என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.

யுத்தத்தின் இறுதி நாளன்று ஒரு மரம் ஒன்றின் கீழ் இருந்த காயமடைந்த 150 நோயாளிகளைக் கைவிட்டு விட்டு வரவேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டதை நினைத்து நிரோன் வேதனையடைகிறார். தான் தொடர்ந்தும் வைத்தியனாக இருக்கவிரும்பவில்லை எனவும் இவர் கூறுகிறார். தனது நோயாளிகளைக் காப்பாற்ற முடியாது போனதால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பல சந்தர்ப்பங்களும் உண்டு.

வைத்திய கலாநிதி நிரோன் கூறும் விடயங்களுக்கு சாட்சியமாக யுத்த வலயத்தில் பணியாற்றிய ஏனைய வைத்தியர்களும் தொண்டர்களும் உள்ளனர். அத்துடன் இவரது சாட்சியத்தை மனித உரிமை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் தென் சிறிலங்காவில் வாழுவோரும் சிறிலங்கா அரசாங்கமும் இவ்வாறான எந்தவொரு மீறல்களும், சம்பவங்களும் இடம்பெறவில்லை என அடித்துக் கூறுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் தமிழ்ப் புலிகளே பொறுப்பாளிகள் என குற்றம் சாட்டுகின்றனர். வேறுபட்ட இனக் குழுமங்களுக்கிடையில் மீளிணக்கப்பாடு, புரிந்துணர்வு என எதனையும் மேற்கொள்வதில் இவை தடையாக காணப்படுகின்றன.

கலாநிதி நிரோன் போன்று யுத்தத்திலிருந்து மீண்டவர்களின் மனவடுக்கள் ஆழமானவை. இவற்றை இலகுவில் மறப்பதென்பதும் மன்னிப்பதென்பதும் முடியாத காரியமாகும். இரத்தம் தோய்ந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை புரிந்துகொள்வதென்பது முக்கிய தேவைப்பாடாக உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல