புதன், 5 டிசம்பர், 2012

97 வயதிலும் நாதஸ்வரம் வாசிக்கும் மூத்த கலைஞன்

97 வயதிலும் நாதஸ்வரத்தை அற்புதமாக வாசிக்கின்ற மாபெரும் கலைஞர்தான் கந்தசாமி இராமமூர்த்தி. இவரின் பூர்வீகம் யாழ்ப்பாணம். ஆனால் மட்டக்களப்பைத்தான் வாழ்விடமாக கொண்டு இருக்கின்றார்.

பரம்பரை பரம்பரையாக கோவில்களுக்கு மங்கள இசை வாசிக்கின்ற பாரம்பரியத்தில் பிறந்தவர்.

13 வயதுச் சிறுவனாக இருந்தபோது நாதஸ்வரத்தை வாசிக்க தொடங்கினார். இந்தியாவுக்கு 18 வயதில் சென்று குரு குல கல்வி முறையில் ஐந்து வருடங்கள் நாதஸ்வரத்தை முறையாக பயின்றார்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிலைய வித்துவானாக 30 வருடங்களும், மட்டக்களப்பில் உள்ள மாமாங்க பிள்ளையார் ஆலயத்தின் ஆஸ்தான வித்துவானாக 20 வருடங்களும் பணியாற்றி உள்ளார்.

80 வயது வரை இவரின் வாழ்வாதாரமாக நாதஸ்வர வாசிப்புத்தான் இருந்து வந்து உள்ளது.

கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மன்னார் உட்பட பல இடங்களிலும் கச்சேரிகள் நடத்தி உள்ளார்.


75 இற்கும் அதிகமான கச்சேரிகளிலும், 300 இற்கு மேற்பட்ட திருமணங்களிலும் நாதஸ்வரம் வாசித்து இருக்கின்றார்.

இவருக்கு கிடைக்கப் பெற்று இருக்கின்ற விருதுகள், பட்டங்கள் ஏராளம். ஆனால் இவை சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆழிப் பேரலை அனர்த்தம் அடித்துச் சென்று விட்டது. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் இவருக்கு ஜனாதிபதி விருது கிடைக்கப் பெற்று இருக்கின்றது.

இசை நாத மணி என்கிற விருது இவருக்கு அண்மைய வருடங்களில் கிடைக்கப் பெற்று இருக்கின்ற மிகப் பெரிய கௌரவம் ஆகும்.

இவருக்கு ஒன்பது பிள்ளைகள். குடும்பத்தின் குநாதஸ்வர இசைப் பாரம்பரியத்தை இவரது இரு பிள்ளைகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள். இவரது புதல்வர்களில் ஒருவரான காளிதாஸன் தற்போது மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நாதஸ்வரம் வாசித்து வருகின்றார்.

மட்டக்களப்பில் வாழ்ந்து வருகின்ற மிக மூத்த பிரஜைகளில் இராமமூர்த்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மிக வயது முதிர்ந்த நாதஸ்வர கலைஞரும் இவராகத்தான் இருக்க வேண்டும்.

இவர் எப்போதும் சப்பாணி கொட்டி நிலத்தில்தான் அமர்ந்து இருப்பார். இதனால் இவரின் கால்கள் போதிய இரத்த ஓட்டம் இன்றி செயல் இழந்து விட்டன என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆயினும் இவரால் தற்போதும் சளைக்காமல் நாதஸ்வரம் வாசிக்க முடிகின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல