நார்வேயில் வலுவான சிறார் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ளன.
தமது ஏழ வயதுப் பிள்ளையை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக நோர்வே நீதிமன்றம் ஒன்று இந்தியப் பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மென்பொருள் பொறியாளரான சந்திரசேகர் வல்லபநேனிக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி அனுபமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இப்பெற்றோர் தமது குழந்தையை தொடர்ந்து முறைதவறி நடத்தியதாகவும், பெல்ட்டால் அடித்தல், சூடு வைத்தல் போன்ற செயல்களை செய்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள இந்தியப் பெற்றோர் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர். பள்ளிப் பேருந்தில் வரும்போது கால்ச்சடையில் சிறுநீர் கழித்துவிட்டதால் தன் குழந்தையை இந்தியாவுக்கு அனுப்பப் போவதாக வல்பநேனி மிரட்டியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் குழந்தையின் உடல் முழுவதும் சூட்டுக் காயச் சுவடுகளும் தழும்புகளும் இருந்ததாக நோர்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
இப் பெற்றோரின் குழந்தைகள் ஐதராபாத்தில் உள்ள தமது தாத்தா பாட்டியுடன் தற்போது வசித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு நோர்வேஜிய அதிகாரிகள் வேறு ஒரு இந்திய பெற்றோர் தமது குழந்தையை துன்புறுத்தியதாகக் கூறி, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டபோது இந்திய அரசு அதில் தலையிட்டது.
ஆனால் அதன் பிறகு அப்பெற்றோர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இந் நிலையில் இந்த வழக்கு ஒரு தனி நபர் சம்மந்தப்பட்டது என்றும் இது குறித்து உரிய நடவடிக்கைகளை நோர்வேயில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொள்ளும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
BBC Tamil



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக