2012 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல ஜனநாயக நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அது பாராட்டுக்குரியதே என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தன. அதன் முக்கிய பலவீனமான போர்க்குற்றங்கள் பற்றி போதியளவில் கவனம் செலுத்தாதது பற்றி அந்நாடுகள் கருத்து தெரிவித்தனை ஒத்ததாக அணுகு முறையும் மென்மையாகவே இருந்தது. இந்நிலையில் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளும் நடைமுறைப்படுத்தப்படுவதில் காணப்பட்ட தாமதம் காரணமாக அந்நாடுகள் திருப்தியடையாததன் காரணமாகவே 2012ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக கொண்டு வர நேரிட்டது.
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இலங்கையின் இன முரண்பாடுகள் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இலங்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள், கலவரங்கள், சர்ச்சைகள் மற்றும் வன்முறைகள் என்பன பற்றி காலத்திற்கு காலம் வெளிநாட்டினர் அனுதாபம் கரிசனை என்பவற்றை உள்ளடக்கிய அறிக்கையினையே வெளியிட்டு வந்துள்ளனர். அவை காரணமாகப் பல உதவிகளையும் செய்து வந்துள்ளனர். அதுவரை காலம் ஐ.நா. சபை மட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே 2012 ஆம் ஆண்டு தீர்மானம் ஒரு வகையில் மிக முக்கியமான ஒன்றாகும்.
2012 ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானம்
ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் தவிசாளரது அறிக்கையும் அதன் உயர் ஆணையாளரது அறிக்கை மற்றும் செயலாளர் நாயகத்தினதும் அறிக்கையும் இரண்டாவதாக இடம்பெற்றன. ஐக்கிய அமெரிக்காவின் தீர்மான வரைவு இலங்கையில் நல்லிணக்கத்தினையும் பொறுப்புக்கூறுதலையும் ஊக்குவிப்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டல்களுக்கு உட்பட்ட வகையிலும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் படியும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மரபு ஆசாரங்கள் மற்றும் அவை தொடர்பான (சட்ட) சட்டசாசன கருவிகள் பிரகாரமும் 5/1 மற்றும் 5/2 இலக்கமிடப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் நிரூபணங்கள் தோற்றுவிக்கும் தீர்மானங்களை நினைவுபடுத்தி பின்வரும் தீர்மானத்திற்கான கலந்துரையாடல்களும் முடிவுகளும் எட்டப்பட வேண்டுமென கோரப்பட்டது.
அவை பின்வருமாறு,
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அரசுகள் சில சர்வதேச சட்டங்களை பேண வேண்டிய கடமையை கொண்டுள்ளன. குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் அகதிகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களில் எவையெவை அவ்வரசுகளுக்கு பொருந்துகின்றதோ அவற்றிற்கேற்ப அவ்வாறான கடமைகளை அவ்வரசுகள் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையானது தனது அவதானங்களையும் சிபாரிசுகளையும் கவனத்திற் கொண்டு அவை இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கான செய்முறைகளில் எவ்வகையில் பங்காற்றலாம் என்பதனைப்பற்றி கவனமாக பரிசீலனை செய்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாறும் பெருமளவில் குற்றம் கூறப்பட்டதும் சட்ட விரோதமான கொலைகள் மற்றும் பலவந்தமாக கடத்தப்பட்டு காணாமற் போனார் பற்றியும் நம்பக்கூடிய வகையில் புலனாய்வு செய்ய வேண்டும். இலங்கையின் வட பகுதியிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும். பாரபட்சமற்ற வகையில் நில உரிமை தொடர்பாக தீர்மானிப்பதற்காக பொறிமுறைகளை உருவாக்க வேண்டும், மற்றும் ஆட்களை பலவந்தமாக தடுத்து வைப்பது பற்றிய கொள்கையினை மீள் பரிசீலனைக்குட்படுத்துதல் வேண்டும். முன்னாள் சிவில் நிறுவனங்களை பலப்படுத்த வேண்டும். மாகாணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் செய்வது தொடர்பில் ஒரு அரசியல் தீர்மானத்தை ஏற்படுத்தல் அனைவரதும் கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவித்து பாதுகாத்தல் மற்றும் சட்டத்தின் வாயிலாக ஆட்சியினை உருவாக்குதல் ஆகியன உட்பட ஆக்கப்பூர்வமான சிபாரிசுகளை வரவேற்கின்றோம் என தீர்மானத்தில் (2012) கூறப்பட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மிக கவனமாக பரிசீலனை செய்த போது சர்வதேச சட்டத்தினை மீறியது பற்றிக்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போதியளவில் அதில் கவனிக்கப்படாது போனமை கண்டறியப்பட்டுள்ளது.
1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆக்கபூர்வமான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவும் அவற்றை நிறைவேற்ற தேவையான சட்டபூர்வமானதும் அவற்றுடன் தொடர்பானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவற்றின் மூலம் நம்பிக்கைக்குரிய வகையிலும் (தலையிடாத) சுதந்திரமான நடவடிக்கைகள் மூலமும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம் பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருவதுடன்,
2. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இனிமேல் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையானதும் விரிவானதுமான செயற்திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் மிகவும் விரைவாக தயார் செய்து சமர்ப்பிக்குமாறும்
3. இலங்கை அரசாங்கத்திடம் கலந்தாலோசித்தும் கூட்டாகச் செயற்பட்டும் மேற்கூறிய ஆணைக்குழு சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஆலோசனைகளையும் தெரிவினையும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரையும் இவை தொடர்பில் சிறப்பு ஆணைகொண்ட நிறுவனங்களையும் ஊக்குவிப்பதுடன் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் அவ்வாறு வழங்கப்பட்ட உதவிகள் பற்றிய அறிக்கை ஒன்றினை உயர் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை யில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் அதற்காக மனித உரிமைகள் பேரவை மற்றும் இது தொடர்பான நிறுவனங்கள் இலங்கைக்கு உதவ வேண்டும் என்பதுமே 2012ஆம் ஆண்டு ஐ.நா. ம.உ.பே. தீர்மானத்தின் முக்கிய கருத்துக்களாக இருந்தன. பின்னர் 22ஆவது ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் அக்காலப்பகுதியின் பெறுபேறுகள் பற்றிய அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இராஜ தந்திர அணுகு முறைகளை ஐ.நா. சபை பின்பற்றிய வழியில் இலங்கையும் பின்பற்றுவதே வெற்றிக்கான வழியாக இருந்திருக்க முடியும். அரசாங்க வட்டங்களில் ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு எதிராக முடிந்தமைக்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதிலும் இராஜதந்திர அணுகு முறையில் ஏற்பட்ட குறைபாடுகளே முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது. ஊர்ஜிதப்படுத்தப்படாத சில செய்திகளின்படி ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபைக்கான இலங்கை பிரதி நிதி இதன்காரணமாகவே இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. 2012 இல் ஐக்கிய அமெரிக்கா பல நூற்றுக்கணக்கான உயர் மட்ட நிபுணர்களை ஜெனிவாவுக்கு கொண்டு வந்து தனது தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. அந்நிலையிலும் இலங்கைக்கு 14 நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன. இதற்கு முக்கிய காரணம் அரசாங்க நிருவாகங்கள் சிறந்த முறையில் தமது கடமைகளை நிறைவேற்றத்தவறும் போது நாட்டில் நல்லாட்சி பாதிக்கப்படுவதும் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சிகளை மேற்கொள்வதும் இலங்கையில் மாத்திரம் ஏற்பட்ட ஒரு புதினமல்ல. சீனாவில் 1989 இல் டெனன்ஹைம் சதுக்கத்தில் மாத்திரம் ஒரே நாளில் 4000 முதல் 6000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இன்றைய பாகிஸ்தானில் அன்றாடம் படுகொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
ஐக்கிய அமெரிக்காவே அண்மையில் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது அந்நாடுகளில் சர்வதேச மனிதாபிமான மனித உரிமை சட்டங்கள் முரண்பாடுகளின் போது மீறியுள்ளதாகக்கூறப்படுகின்றது. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஒப்பந்தங்களில் மனித உரிமைகள் பற்றி பேசப்படும் போது நாடுகள் அவற்றை ஆதரிப்பதும் தமது பிரச்சினைகள் காரணமாக அவ்வொப்பந்தங்களை மீறிச்செயற்படுவதும் நவீன உலகின் யதார்த்தங்களாகி விட்டமை கவலைக்குரியதாகும்.
ஆனாலும் இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கை யிலிருந்து இலங்கையில் நியாயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட நிபுணர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்ற கருத்தினை பலப்படுத்துவதாக உள்ளது. டெல்லி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் நிதி வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த்சிங், ஆணைக்குழுவின் அறிக்கையில் தொழில் நுட்ப சிந்தனை உள்ளது என்றும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அது இலங்கைக்கு நன்மை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆயினும் யுத்தத்தின் இறுதிக்கட்ட கால மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்டமை பற்றி வேறுபட்ட கருத்துக்களும் உள்ளன என்றும் அவர் குறிப்பிடத்தவறவில்லை.
பேராசிரியர் மூக்கையா


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக