அத்தியாயம் 23
இந்தோனேசிய கடல் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்க சென்ற இலங்கை கடற்படை கப்பல்கள் முதலாவது கப்பலை மூழ்கடித்தது பற்றி கடந்த வாரம் எழுதியிருந்தோம். மேலே தொடர்வதற்குமுன் ஒரு விளக்கம். விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்ந்து மூழ்கடிக்கப்பட்ட பின்னணியில் இந்தியக் கடற்படை இருந்ததா என்று ஒரு கேள்வி வாசகர்கள் மத்தியில் உள்ளது.
நாம் அறிந்தவரை இல்லை. இது முற்றுமுழுதாக அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. மற்றும் இலங்கை கடற்படையின் ஆபரேஷன்தான். சி.ஐ.ஏ., விடுதலைப் புலிகளின் கப்பல்களை மானிட்டர் செய்து, அவை எங்கே நிற்கின்றன என்ற தகவல்களை லைவ்வாக கொடுத்துக் கொண்டிருக்க, இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு கப்பலாக தாக்கி, மூழ்கடித்தது.
யுத்தம் முடிந்தபின், இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டு பாதுகாப்பு நிபுணர்களுக்கு நடத்திய சில செமினார்களில் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. அந்த செமினார்களில், அமெரிக்க தூதரக அதிகாரிகளும், இந்திய பாதுகாப்பு அமைச்சை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எனவே, சி.ஐ.ஏ. மட்டுமே உதவி செய்தது என்பது சகல தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்ல, யுத்தத்தின் இறுதிவரை விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் அனைத்து தளபதிகளையும் ஒரே இடத்தில் (முள்ளிவாய்க்கால்) இருக்குமாறு சில ஏற்பாடுகளை செய்ததில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு இருந்தது என்பதை இந்த தொடரின் பின் பகுதியில் தருகிறோம்.
முதலாவது கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை, அமெரிக்கா, வர்ஜீனியா மாநிலம், லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ. அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ‘ஸ்ரீலங்கா ஆபரேஷன் டெஸ்க்’ மானிட்டர் செய்து கொண்டிருந்தது. அவர்களது சாட்டலைட் மூலம் அதை பார்க்க முடிந்தது.
அதையடுத்து விடுதலைப் புலிகளின் அடுத்த கப்பல், முதல் கப்பல் இருந்த இடத்தில் இருந்து சில கடல் மைல்கள் தொலைவில் நிற்கிறது என்ற விபரத்தை சி.ஐ.ஏ. தெரிவித்தது. சி.ஐ.ஏ. தெரிவித்த திசையில் இலங்கை கடற்படை கப்பல்கள் சென்றன. விடுதலைப் புலிகளின் இரண்டாவது கப்பல் அங்கே இருந்தது.
முதலாவது கப்பல் டேங்கர் ரக கப்பல் என்று எழுதியிருந்தோம். விடுதலைப் புலிகளின் இந்த 2-வது கப்பல் கார்கோ கப்பல். Bulk Carrier vessel ரகத்திலான கப்பல்.
இந்தக் கப்பலில் இருந்தவர்களுடன் ரேடியோ தொடர்பை, இலங்கை கடற்படையின் சயூரா கப்பலில் இருந்து ஏற்படுத்தினார்கள். அந்தக் கப்பல் பற்றிய விபரங்கள் கேட்கப்பட்டன. புலிகளின் கப்பலில் இருந்தவர்கள், தமது கப்பல் பல்கேரிய நாட்டு கப்பல் என்று கூறிய விபரங்கள் AIS கருவியில் செக் செய்யப்பட்டபோது, அவை போலியான தரவுகள் என்று தெரியவந்தது.
இவர்களால் கொடுக்கப்பட்ட தரவுகளையுடைய நிஜ பல்கேரியக் கப்பல் அந்த நிமிடத்தில் பனாமா கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தது என்பதை AIS கருவி காட்டியது.
இதையடுத்து, விடுதலைப் புலிகளின் கப்பலில் இருந்தவர்களை சரணடையும்படி, இலங்கை கடற்படை கூறியது. அவர்கள், ரேடியோ தொடர்பை துண்டித்துக் கொண்டார்கள்.
அதன்பின் நடுக் கடலில் தொடங்கியது சண்டை.
இலங்கை கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களை நடத்த, விடுதலைப் புலிகளின் கப்பலில் இருந்தவர்கள் சிறிய ஆயுதங்கள் மற்றும் இலகு ராக்கெட் தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஆனால், இந்த பதில் தாக்குதலால் பெரிதாக பலன் ஏதும் ஏற்படவில்லை. புலிகள் ஏவிய ராக்கெட்டுகள் கடலில்தான் அதிகம் விழுந்தன.
இதற்கு என்ன காரணம் என்றால், தரையில் துல்லியமாக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பல, கடலில் துல்லியமாக ஏவப்பட முடியாதவை. கடற்படை கப்பல்களின் மேல்தளத்தில் பொருத்தப்படும் ரக பீரங்கிகள் கடல் யுத்தத்துக்கானவை. அவை கப்பல் மேல் தளத்தில் இறுக்கமாக பொருத்தப்பட்டுள்ளன.
கப்பல் அசையும்போதும், திரும்பும்போதும் அந்த பீரங்கிகளும் அதே கோணத்தில், மற்றும் திசையில் அசையும் என்பதால், இலகுவில் குறி பார்த்து ஏவ முடியும்.
ஆனால், புலிகளின் கப்பல்கள் வர்த்தக சரக்கு கப்பல்கள். அதன் மேல்தளத்தில் ஆயுதங்களை நிரந்தரமாக பொருத்த முடியாது. அப்படி பொருத்தப்பட்டால், துறைமுகங்களில் கேள்வி எழும். கப்பலை பறிமுதல் செய்து விடுவார்கள்.
இதனால், விடுதலைப் புலிகளின் கப்பலில் மேல்தளத்தில் நிற்கும் ஆட்கள் தமது கையிலோ, தோளிலோ வைத்தே ஆயுதங்களை இயக்க முடியும். கப்பல் ஆடும்போது, அதே கோணத்தில் ஆயுதம் அசையாது. மாறாக ஆயுதத்தை வைத்திருப்பவரின் அசைவுக்கு ஏற்பவே ஆயுதம் அசையும். அந்த திசையிலே ராக்கெட் பாயும்.
இப்படி ஏவப்படும் ராக்கெட்டுகளில் பத்தில் ஒன்று கடற்படை கப்பலை சென்றடைந்தாலே பெரிய விஷயம்.
இதனால், கடற்படை கப்பல்களால், மிகச் சுலபமாக புலிகளின் இரண்டாவது கப்பலை மூழ்கடிக்க முடிந்தது.
இதற்கு மற்றொரு காரணம், புலிகளின் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது கப்பல் டேங்கர் ரக கப்பல் என்று சொன்னோமல்லவா, டேங்கர் கப்பல்களின் அடிப்பகுதி (இதை hull என்று சொல்வார்கள்) மிகவும் பலமானது. டேங்கர் கப்பல்களில் எண்ணை ஏற்றி செல்லப்படுவதால், hull நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட லேயர்களாக அமைக்கப்பட்டிருக்கும். முதலாவது லேயர் உடைந்தாலும், உள்ளே அதேயளவு பலமான மற்றொரு லேயர் இருக்கும். மூழ்கடிப்பது கடினம்.
ஆனால், இந்த இரண்டாவது கப்பல், Carrier vessel ரகத்திலான கப்பல் என்பதால் இதன் அடிப்பகுதியை பீரங்கியால் உடைப்பது, டேங்கரை விட சுலபம்.
இந்த இரண்டாவது கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின், புலிகளின் மூன்றாவது கப்பல் எங்கே உள்ளது என்ற விபரத்தை கூறியது சி.ஐ.ஏ. ஆனால், அதற்கிடையே தமது இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட விபரத்தை மூன்றாவது கப்பலில் இருந்த விடுதலைப் புலிகள் தெரிந்து கொண்டார்கள்.
அவர்களால் தமது கப்பலை விரைவாக அங்கிருந்து நகாத்த முடியவில்லை. ஆனால், திருப்பித் தாக்குவதற்கு தயாராக இருந்தார்கள். இந்த மூன்றாவது கப்பலில் இருந்த ஆயுதங்களின் ஹெவி கலிபர் மோட்டார்கள் இருந்தன. வன்னி யுத்தத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த அந்த மோட்டார்களை கடலிலேயே பயன்படுத்துவது என்று முடிவு செய்தார்கள்.
இலங்கை கடற்படை கப்பல்கள் விடுதலைப் புலிகளின் மூன்றாவது கப்பலை நெருங்கியபோது, புலிகளே முதலில் தாக்க தொடங்கினார்கள்.
விறுவிறுப்பு இணையம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக