இலங்கை கடற்படை கப்பல்கள் புலிகளின் 4-வது கப்பலை நோக்கி செல்லத் தொடங்கின
அத்தியாயம் 24
இந்தோனேசிய கடல் எல்லைக்கு அருகே நின்றிருந்த விடுதலைப் புலிகளின் இரு ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதை கடந்த அத்தியாயங்களில் படித்திருப்பீர்கள். இலங்கை கடற்படை கப்பல்கள் விடுதலைப் புலிகளின் மூன்றாவது கப்பலை தாக்குவதற்கு நெருங்கியபோது, புலிகளே முதலில் தாக்க தொடங்கினார்கள்.
புலிகளின் முதல் இரு கப்பல்களும் தாக்கப்பட்ட விபரம் மூன்றாவது கப்பலில் இருந்தவர்களுக்கு தெரிந்ததை அடுத்தே, அவர்கள் முதலில் தாக்குதலை தொடங்கினார்கள்.
புலிகளின் கப்பலின் மேல்தளத்தில் இருந்து, இலங்கை கடற்படை கப்பல்களை நோக்கி ஹெவி கலிபர் மோட்டார்கள் மூலம் தாக்கினார்கள், அதில் இருந்த விடுதலைப் புலிகள். வன்னி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் உபயோகிப்பதற்காக கொண்டு செல்வதற்காக அந்த 3-வது கப்பலிலேயே அதிக ஆயுதங்கள் இருந்தன.
அதனால், அந்தக் கப்பலை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில், வன்னிக்கு கொண்டு செல்ல வைத்திருந்த ஹெவி கலிபர் மோட்டார்களையும், இதர ஆயுதங்களையும் எடுத்து, இலங்கை கடற்படை கப்பல்களை தாக்க தொடங்கினார்கள் புலிகள். இதனால், இலங்கை கடற்படை கப்பல்கள், புலிகளின் கப்பலை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது.
சற்று தொலைவில் இருந்து, இலங்கை கடற்படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல்கள், புலிகளின் கப்பலை சென்றடையாமல் கடலில் வீழ்ந்து கொண்டிருந்தது.
இதற்கிடையே, அந்தப் பகுதியில் நங்கூரமிட்டு இருந்த புலிகளின் 4-வது கப்பல், நங்கூரத்தை எடுத்து இந்தோனேசிய கடல் எல்லைக்கோட்டை நோக்கி நகரத் தொடங்கியது.
4-வது கப்பலில் இருந்தவர்கள், 3-வது கப்பலில் இருந்தவர்களுக்கும் அதேபோல செய்யும்படி கூறியிருக்கலாம் போலிருக்கிறது, 3-வது கப்பலும் தாக்குதல் நடத்தியபடியே நங்கூரத்தை எடுத்து நகரத் தொடங்கியது. சிறிது வேகமும் எடுத்தது.
இப்படியே விட்டால், 3-வது கப்பல் அடுத்த 20 நிமிடங்களில் இந்தோனேசிய கடல் எல்லைக்குள் சென்று விடும் என்ற நிலை இருந்தது. அதையடுத்து, இலங்கை கடற்படை கப்பல் சுரனிமாலாவில் இருந்தவர்கள், தம்மிடமிருந்த பெரிய ஆயுதத்தை உபயோகிக்க தொடங்கினார்கள்.
இலங்கை கடற்படை கப்பல் சுரனிமாலாவின் மேல் தளத்தில், 106 mm ஆர்.சி.எல். ரக பீரங்கி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இது. தரைப் போரில், டாங்கிகளை தாக்குவதற்காக உபயோகிக்கப்படும் சிறு பீரங்கி. சுமார் 7,000 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடியவை.
இலங்கை கடற்படையினர் அதை, தமது கப்பலில் பொருத்தியிருந்தார்கள். (இதை கடலில் பொதுவாக பயன்படுத்துவதில்லை. காரணம், கப்பல் மேல்தளத்தில் வைத்து உபயோகிக்கும்போது பின்-உதைப்பு அதிகம் ஏற்படுவதால், மேல்தளத்தில் வெடிப்புகள் ஏற்படலாம்)
இந்த106 mm ஆர்.சி.எல். ரக பீரங்கியால் விடுதலைப் புலிகளின் 3-வது கப்பலை தாக்கினார்கள் சுரனிமாலா கப்பலில் இருந்தவர்கள். இந்த பீரங்கித் தாக்குதல், கப்பலின் அடிப்பகுதியில் உடைப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கப்பலின் மேல்தளம் மீதும் தாக்குதல் நடக்கவே, கப்பல் தீப்பிடித்துக் கொண்டது.
அப்போதும் கப்பல் இந்தோனேசிய கடல் எல்லையை நோக்கி நகர்ந்து கொடிருந்தது.
இந்தக் கப்பலில் வன்னிக்கு கொண்டு செல்வதற்காக அதிகளவு ஆயுதங்களும், வெடிப் பொருட்களும் இருந்ததால், தீப்பிடித்த கப்பல் திடீரென பெரிய சததத்துடன் வெடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் அந்தக் கப்பலும் மூழ்கத் தொடங்கியது.
இதற்கிடையே, அந்தோனேசிய கடல் எல்லையை நோக்கி ஏற்கனவே நகரத் தொடங்கியிருந்த புலிகளின் 4-வது கப்பல், வேகம் எடுத்து, இலங்கை கடற்படை கப்பல்கள் இருந்த இடத்தில் இருந்து விலகி, இந்தோனேசிய கடல் எல்லைக்கு அருகே சென்று விட்டது.
3-வது கப்பல் மூழ்கியதை அடுத்து, இலங்கை கடற்படை கப்பல்கள் புலிகளின் 4-வது கப்பலை நோக்கி செல்லத் தொடங்கின. ஆனால், சிறிது நேரத்தில் அந்தக் கப்பல், சர்வதேச கடல் பகுதியில் இருந்து, இந்தோனேசிய கடல் எல்லைக்குள் சென்று விட்டது.
அதை தாக்குவதற்காக நெருங்கிச் சென்ற இலங்கை கடற்படை கப்பல்கள், இந்தோனேசிய எல்லைக்குள் செல்லாமல் வெளியே நின்று கொண்டன.
காரணம், ஒரு நாட்டின் கடற்படைக் கப்பல்கள் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைவதென்றால், பாதுகாப்பு அமைச்சின் ஊடாக முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் கப்பல் தனியார் வர்த்தக கப்பலாக பதிவு செய்யப்பட்டுள்ளதால், முதலில் உள்ளே சென்றுவிட்டு, பின்னர் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு அறிவித்துக் கொள்ளலாம்.
(தொடரும்)
விறுவிறுப்பு இணையம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக