வெள்ளி, 26 ஜூலை, 2013

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்-47

புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பாப்பாவை வன்னியில் சந்தித்ததும் பாப்பாவிடம் உமக்கு தலைவரிடம் சொல்லி இன்னொரு பெண் பார்க்கச் சொல்கிறேன். ஏனென்றால் இப்பொழுதும் மாப்பிள்ளை போன்று இருக்கின்றீர் என்று கூற அயலில் இருந்த தளபதிகள் பாப்பா எப்பொழுதும் மாப்பிள்ளை தான் என்று கூறி கிண்டலடித்தனர். இதற்கு அன்ரன் பாலசிங்கம் பாப்பா எல்லோருக்கும் விளையாட்டுக் காட்டி இப்பொழுது விளையாட்டுத்துறை பொறுப்பாளராக பதவியை எடுத்துக் கொண்டு இனி தலைவருக்கும் விளையாட்டுக் காட்டி விடுவார். பாவம் தலைவர். தமிழ்ச் செல்வன் பாப்பாவின் விளையாட்டு தெரியாமல் பொறுப்பாளராக நியமித்து விட்டாரோ தெரியாது.

பாப்பா பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தில் போய் இறங்கினால் ஒரே பெண்கள் குழாம் தானாம் பாப்பாவை சூழ்ந்து கொள்கின்றனர். ஆனால் வன்னிக்கு வந்தால் பாப்பாவுக்கு பெண் வாடை அறவே பிடிக்காதாம் என்று பாலசிங்கம் கிண்டலடிக்க பாப்பா நைசாக நழுவிச் செல்ல முற்படுகிறார். அதைத் தடுக்கும் அன்ரன் பாலசிங்கம் பாப்பாவை ஐசே ஒருக்கா வந்திட்டுப் போம். எங்கட தளபதிகள் போராளிகள் ஏன் அடேல் அன்ரி கூட (அவரது மனைவி) இவ்வளவு நேர்த்தியாக உடுப்புகளை அயன் பண்ணி போட மாட்டினம். நீர் எங்கே ஐசே உம்மட உடுப்புகள அயன் பண்றனீர். எப்பவுமே மடிப்பு குலையாமல் எனக்கு உம்மட உடுப்புகள பார்க்க பொறாமையாகவே இருக்கிறது. அது சரி ஐசே தலைவர் கே.பி ஆக்களிட்டயும் சூசையிட்டயும் ஆயுத கொள்வனவு செய்யும் பொழுது விளையாட்டுத்துறைக்கு என்று புறம்பாக கொலோன் போத்தல் (சென்ற்) எதையாவது இறக்குமதி செய்து தாறவரோ? நானும் எத்தனையோ நாடுகளின்ர சென்ற் அடிச்சிருக்கிறன். இதை விட எத்தனையோ நாடுகளின்ர தூதுவர்களோட இருந்து கதைக்கேக்க அவர்கள் அடிச்சு வாற சென்ற்களின் வாசனையை மணந்திருக்கிறன் ஆனால் நீர் அடிச்சு வாற சென்ரின்ர வாசனையை நான் ஒரு இடமுமே சுவாசிச்சதில்ல. ஐசே இது உமக்கு என்று பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது... என்று கிண்டலடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த இடத்திற்கு சரியாக தமிழ்ச் செல்வனும் வந்து சேர்ந்தார்.

தமிழ்ச் செல்வனிடம் அன்ரன் பாலசிங்கம் உம்மைத் தலைவர் அரசியல் துறைக்கு பொறுப்பாக விட்டவரோ அல்லது பாப்பாவிற்கு பெண் பார்க்க விட்டவரோ என்று கிண்டலாக கேட்க தமிழ்ச் செல்வனுக்கு விளங்கி
விட்டது. பாப்பாவைத் தான் மனுசன் துவைச்சு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று. உடனேயே பதிலுக்கு பாலசிங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக ஓம் அண்ணை பாப்பாவும் ரெடியாதான் நிற்கிறார். தலைவரிட்டச் சொல்லிப்போட்டு இன்னொரு பெண்ணைப் பார்த்து கட்டி வைத்து விடுவோம் என்று தமிழ்ச் செல்வனும் நக்கலில் விளையாட, பாப்பா அவசரமான நிகழ்ச்சி ஒன்று இருக்கிறது நான் அவசரமாக செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து நைசாக நழுவிச் செல்கிறார்.

இதன் பின்னர் பாலசிங்கம் தமிழ்ச் செல்வனுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது மீண்டும் ஒரு 4 மணித்தியால இடைவெளி கழித்து பாப்பா அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார். அப்பொழுது பாலசிங்கம் நைசாக தமிழ்ச் செல்வனிடம் கேட்கிறார். பாப்பா இப்பொழுது தனது குடும்பத்துடன் ஒற்றுமையாக இருக்கிறாரா என்று. இதற்கு தமிழ்ச் செல்வன் இல்லை அண்ணை குடும்பம் தொடர்ந்தும் இழுபறியில் தான் இருக்கிறது. பாப்பாவின்ர குடும்ப பிரச்சினையை தீர்க்கிறதுக்கு என்று தலைவர் புறம்பாக இன்னொரு விசாரணைப் பிரிவையே அமைக்க வேண்டும் போல இருக்கு ஏனென்றால் இவர்களுடைய பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினையாக நீடித்து வருகிறது. நானும் முயற்சி செய்து வருகிறேன். இருவரும் ஒத்து வருகிறார்களில்லை. ஆனால் இந்த நிலையில் தான் பாப்பாவின் மனைவிக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அதாவது வெளி நாட்டு நிறுவனங்கள் வழங்குகின்ற நிதியை கொண்டு மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கத்துடன் மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் தற்காலிக மலசல கூடங்களை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களை ஒப்படைத்திருக்கிறேன்.

இதன் பின்னர் இருவருக்கும் இடையில் குழப்பங்கள் ஓரளவில் குறையும் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் குறையும் மாதிரித் தெரியவில்லை... என தமிழ்ச் செல்வன் கூறிய பொழுது உடனடியாகவே பாலசிங்கம் சொன்னார். நீர் விட்ட இரண்டாவது பிழை பாப்பாவின் மனைவிக்கு அந்த பொறுப்பை கொடுத்தது. முதலாவது பிழை பாப்பாவிற்கு விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பதவியை கொடுத்தது. இரண்டுமே நீர் செய்த பிழைகள் ஐசே. நான் நினைக்கிறேன் நீர் பாப்பாவின்ர குடும்பத்தை குழப்ப வேண்டும் என்ற திட்டம் போட்டுத் தான் இதை செய்கின்றீரோ தெரியாது. பாப்பாவை விளையாட்டுத் துறைக்கு நீர் பொறுப்பாக போட்டதால் பாப்பா அங்கே கனக்க விளையாட்டு காட்டுவார் என்பதை நீர் புரியாமல் இருந்தது முதலாவது தவறு. இரண்டாவது பாப்பா எல்லா விளையாட்டும் காட்டக் கூடிய ஒருவர். இதனால் குடும்பத்தில் குழப்பம் வரும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அடுத்தது பாப்பாவின் மனைவிக்கு நீர் இந்த பொறுப்பை வழங்கி இருக்கிறீர். பாப்பாவின மனைவி ஏனைய குடும்பங்களை அவர்கள் சந்தோசமாக இருப்பதை சென்று பார்க்கின்ற பொழுது பாப்பா மீது இயற்கையாக கோபம் வரும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது அவர் செல்லும் பொழுது அந்தக் குடும்பங்கள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் அதைப் பார்த்து அவவும் சண்டை பிடிக்கத் தொடங்கி விடுவார். எனவே பாப்பாவிலும் அவர் மனைவியிலும் பிழை சொல்ல மாட்டேன் ஐசே. முழுப் பிழையும் உன்னில் தான். நீர் இருவரையும் சண்டைக்கு அனுப்பி இருந்தால் அல்லது கள முனையில் காவலரணில் நிற்க வைத்திருந்தால் இவர்கள் இருவரும் ஒருபோதும் சண்டை பிடிக்க நினைக்க மாட்டார்கள். விடுமுறையில் வருகின்ற ஒன்றிரண்டு நாட்களை நல்ல முறையில் கழித்து விட்டு மீண்டும் கள முனைக்கு அல்லது காவல் அரணுக்கு செல்ல வேண்டும் என்று தான் எண்ணி இருப்பார்கள்...

எனவே இவர்களுடைய பிரச்சினைக்கு முழுப் பொறுப்பும் நீர் தான் என்று அன்ரன் பாலசிங்கம் கூற தமிழ்ச்
செல்வன் தனது வழமையான நமட்டுச் சிரிப்புடன் சமாளித்துக் கொள்கிறார். உண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் போராளிகள் திருமணம் செய்வதற்கு பல கட்டுப்பாடுகளும் பல சட்ட முறைகளும் உருவாக்கப் பட்டிருந்தன. ஆனால் காலப் போக்கில் இந்த சட்ட உருவாக்கத்திற்கு மாறாக போராளிகள் திருமணம் செய்வதற்கு உரிய அங்கீகாரத்தை இயக்கத் தலைவர் பிரபாகரன் வழங்கியதை அடுத்து பல போராளிகளும் திருமணம் செய்வதை முதன்மையான விடயமாக கருதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இவ்வாறு திருமண பந்தத்தில் இணைகின்றவர்கள் பவுண் தாலி கட்டவும் பதிவுத் திருமணம் செய்யவும் இயக்கத்தில் தடை விதிக்கப் பட்டதுடன் ஏனைய விடயங்கள் அனைத்தும் மரபு ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் குறிப்பாக போராளிகளின் திருமணத்திற்கு உரிய தாலியாக மஞ்சள் கயிறு திகழ்ந்து வந்தது. இந்த மஞ்சள் கயிற்றை விடுதலைப் புலிகளின் தமிழீழ காவல் துறைக்கு பொறுப்பாக இருந்த நடேசன் திருமண மண்டபத்தில் வைத்து மணமகனின் கையில் உத்தியோக பூர்வமாக வழங்கி வருவார். இதனை மணமகன் வாங்கி
மணமகளின் கழுத்தில் கட்டியபின் இயக்கத்தின் சான்றிதழ் பத்திரம் ஒன்றில் இவர்களது திருமணம் பதிவு
செய்யப்படும். சில வேளைகளில் இவர்களது திருமணத்தை புலிகளின் தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளராக இருந்த வே.இளங்குமரனும் நடத்தி வைப்பதுண்டு. இதை விட முக்கியமான தளபதிகள் ஒரு சிலருக்கு விசேடமாக பிரபாகரன் மஞ்சள் கயிற்றை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்ததும் உண்டு. இவ்வாறு நடத்தப்படும் திருமணங்கள் தொடர்பில் தமிழ் ஊடகங்கள் அறிந்து கொண்டனவா? அல்லது அறிந்தும் அறியாதவை போன்று விடுதலைப் புலிகளை அழிக்கும் செயற் திட்டத்தில் ஈடுபட்டனவா? என்பதை தொடர்ந்து பார்ப்போம்....
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல