புதன், 11 டிசம்பர், 2013

“பிரபாகரன் உயிர் தப்பியிருக்கலாம்” என்று ப.சிதம்பரம் சொல்வதன் நிஜ பின்னணி தெரிய வேண்டுமா? 02

கட்டுரையின் இந்தப் பகுதியில் உள்ள சில விபரங்களை உறுதி செய்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, வெளியிடுவதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. தற்போது தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தாமதத்துக்கு மன்னிக்கவும். நீங்கள் படிக்கப்போவது, 2-ம் பாகம். இறுதிப் பாகம் அடுத்த 24 மணிநேரத்தில் நிச்சயம் அப்டேட் செய்யப்படும்.

அமைச்சர் சிதம்பரத்தின், “இலங்கை என்ற நாட்டை பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. புலிகள் தற்போதைக்கு ஈழத்தை கைவிட தயாரா என்பதை நடேசனிடம் கேட்டு சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது” என்ற தகவல், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது.

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொன்னார் நடேசன். அப்போது, கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து விட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் கிளிநொச்சி நகரை மட்டுமன்றி, கிளிநொச்சி மாவட்டத்தையே கைவிட்டு வெளியேறி, முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் மட்டும் இருந்த நாட்கள் அவை. முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் ராணுவம் நுழைந்து புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை கைப்பற்ற நெருங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், புலிகளின் தலைவர் பிரபாகரன், பா.நடேசன், தீபன், சூசை மற்றும் சில தளபதிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்தது. அதில், இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரம் அனுப்பிய தகவல் ஆராயப்பட்டது.

ஆலோசனையில் கலந்துகொண்ட தீபன், “ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை கைப்பற்றாமல் இன்னமும் சில வாரங்களே தடுக்க முடியும். அதன்பின் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள்” என்ற நிஜ கள நிலைமையை தெரிவித்தார். ஆலோசனையில் கலந்துகொண்ட இரு தளபதிகள், அதை மறுத்தனர். முல்லைத்தீவை தக்க வைத்துக்கொள்ளும் பலம், புலிகளிடம் இருப்பதாக தெரிவித்தனர்.

நீண்ட ஆலோசனையில், ‘ஈழம்’ கொள்கையை கைவிடுவதாக அறிவிப்பது குறித்து பலத்த விவாதம் நடந்தது. அதில், 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் ஒன்று ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது.

2002-ம் ஆண்டு புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாங்காக்கில் தொடங்கியபோது, “நாட்டை பிரித்து ஈழம் அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகள் ஈழம் கொள்கையை கைவிட்டால்தான், பேச்சுவார்த்தையை தொடங்க முடியும்” என இலங்கை அரசு சார்பில், ஜி.எல்.பீரீஸ் (தற்போது இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளவர்) நிபந்தனை விதித்தார்.

அப்போது, புலிகளின் சார்பில் கலந்துகொண்ட குழுவின் தலைவர் ஆன்டன் பாலசிங்கம், “எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையை கைவிட தயார்” என தெரிவித்தார். அதையடுத்தே, பேச்சுவார்த்தைகள் அப்போது தொடங்கின.

“இப்போதும், அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையை கைவிட்டால், இந்தியாவால் எந்த விதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்” என்பது சில தளபதிகளின் கருத்து.

இது நடந்துகொண்டிருந்தபோது, புலிகளின் சம்மதத்துடன் அமெரிக்கா ராஜாங்க அமைச்சின் உயர்மட்டத்தில் உள்ளவர்களை சந்தித்து புலிகள் தரப்பில் பேசுவதற்கு சிலர் முயற்சித்துக் கொண்டிருந்தனர். அந்த முயற்சிகள் வெற்றியடையும் கட்டத்தில் இருந்ததாக வன்னியில் இருந்த புலிகளின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. (கடந்த பாகத்தில் நாம் குறிப்பிட்ட அமெரிக்கா வாழ் தமிழருக்கும், இதற்கும் தொடர்பு கிடையாது)

வாஷிங்டனின் முடிவை பார்த்துவிட்டு, புதுடில்லியிடம் செல்லலாம் என்பதே புலிகள் தலைவர் பிரபாகரனின் கருத்தாக இருந்தது.

அதேநேரத்தில், “போர் நிலைமை புலிகளுக்கு மிக மோசமாக இருந்த காரணத்தால், புதுடில்லியின் ஆஃபர் என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது” என தீபன் தெரிவித்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமைச்சர் பா.சிதம்பரம், “ஈழம் கொள்கையை கைவிடுவதாக புலிகள் அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் டில்லி மத்திய அரசு நடவடிக்கையில் ஈடுபடும்” என தெரிவித்திருந்தார். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதா என்ற விவாதமும் நடந்தது.

இந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன், விசித்திரமான முடிவு ஒன்றை எடுத்தார். “ஈழம் கொள்கையை கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்” என்பதே, அந்த முடிவு.

அத்துடன், புதுக்குடியிருப்பில் நடந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது. இந்த முடிவை டில்லிக்கு தெரிவிக்கும் பொறுப்பு பா.நடேசனிடம் வழங்கப்பட்டது.

நடேசன், தம்முடன் தொடர்பில் இருந்த அமெரிக்கா வாழ் தமிழரிடம் இது குறித்து தெரிவித்தார். அதன்பின், தமிழகத்தில் உள்ள தேசிய கட்சியின் தலைவருக்கும் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா வாழ் தமிழர், டில்லியில் இருந்த அமைச்சர் சிதம்பரத்துடன் நேரடியாக பேச முயற்சி செய்தார். அது முடியவில்லை. அமைச்சர் சிதம்பரத்தின் உதவியாளர் (காரைக்குடியை சேர்ந்தவர். முன்னாள் பத்திரிகையாளர்) ஒருவருடன் மட்டுமே பேச முடிந்தது.

ஆனால், தமிழகத்தில் இருந்த தேசியக் கட்சித் தலைவரால், அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொள்ள முடிந்தது. “ஈழம் கொள்கையை கைவிடுவது தொடர்பான ப்ரபோசலை புதுடில்லியே தயாரித்து கொடுத்தால், புலிகளின் தலைமை அதை பரிசீலிக்க தயார்” என்று கூறப்பட்டது.

இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் ரகசியமாக தயாரித்தது யார் தெரியுமா? அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்பட தயாரித்தார்.
மிக ரகசியமாக தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தை கொடுப்பதற்கு முன், அமைச்சர் சிதம்பரம் விதித்த நிபந்தனை: “இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது”

அமைச்சர் சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்ட ஆவணம், முல்லைத்தீவுக்கு போய் சேர்ந்தது. அவரது நிபந்தனையும் பா.நடேசனிடம் தெளிவாக, மிக அழுத்தமாக கூறப்பட்டது.

இந்த விஷயங்கள் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தன. அதே ஆண்டு ஏப்ரலில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன (தமிழகத்தில் மே மாதம் 13-ம் தேதி நடந்தது. அதே மாதம் 18-ம் தேதி யுத்தமும் முடிந்தது). அப்போது தமிழகத்தில் இருந்த அரசியல் நிலைமை பற்றி சுருக்கமாக சொல்லிவிடலாம்.

அப்போதுதான், இந்தக் கட்டுரையில் நாம் கூறப்போகும் சில விஷயங்கள் புரியும்.

2009 லோக்சபா தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில், வைகோவின் ம.தி.மு.க. இணைவதாக இருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன.

அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா, “இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஈழம் அமைத்துக் கொடுப்பது” என அறிவிப்பதாக நிலைப்பாடு எடுத்திருந்தார். வைகோ கொடுத்த ஆலோசனை காரணமாகவே அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தார் என்று பின்னர் (தேர்தல் நெருங்கியபோது) பரவலாக நம்பப்பட்டது.

வைகோவும், தமது பேட்டிகளில் ஈழம் அமைப்பது தொடர்பாகவே கருத்து கூறிக்கொண்டு இருந்தார். ஈழத்தமிழரின் சில வெளிநாட்டு மீடியாக்கள் ஜெயலலிதாவை ‘ஈழத்தாய்’ என்றெல்லாம் வர்ணித்துக் கொண்டிருந்தன.

மேலே குறிப்பிட்டதுதான், தமிழகத்தில் இருந்த அரசியல் நிலைமை.

இந்த நிலையில்தான், ப.சிதம்பரம் தயாரித்த ப்ரபோசல், பா.நடேசனின் கைகளுக்கு போனது. புலிகளின் தலைவர் பிரபாகரனிடமும் கொடுக்கப்பட்டது.

“இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது” என்று அமைச்சர் சிதம்பரம் விதித்திருந்த நிபந்தனையை புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா, அல்லது தமிழகத்தில் உள்ள தமக்கு தெரிந்தவர்களுக்கு கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை… விஷயத்தை வைகோவிடம் விலாவாரியாக கூறிவிட்டார்.

விபரம் அறிந்த வைகோ கொதித்தார். “இது காங்கிரஸ் கட்சியின் சதி” என்றார்.

“நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்க போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையை கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்” என்றார் வைகோ, நடேசனிடம்.

குழம்பிப் போனார் நடேசன்.

நடேசன் அடுத்து தொடர்பு கொண்டது, பழ.நெடுமாறனை. அவரும் வைகோ சொன்னதையே ரிப்பீட் செய்தார். “காங்கிரஸ் அரசை நம்பவேண்டாம். அவர்கள் எப்படி தந்திரமாக செயல்படுவார்கள் என்பதை முன்னாள் காங்கிரஸ்காரனான நான் நன்றாகவே அறிவேன்” என்றார்.

இவர்கள் இருவரும் சொன்னதை, புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கொண்டுபோய் சேர்த்தார் நடேசன்.

அப்போது, பிரபாகரனுடன் வேறு சில தளபதிகளும் இருந்தனர். சிலர், இலங்கை ராணுவம் முல்லைத்தீவை கைப்பற்றாமல் இன்னும் சில மாதங்களுக்கு (இந்திய லோக்சபா தேர்தல் முடிவு வரும்வரை) தாக்குப்பிடிக்க முடியும் என்ற கருத்து சில தளபதிகளால் சொல்லப்பட்டது. பிரபாகரனும் அதையே நம்பியதாக தெரிகிறது.

சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, அமைச்சர் சிதம்பரம் தயாரித்து கொடுத்த ஆவணத்தை எடுத்துவர சொன்னார். அந்த ஆவணத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, பேனாவை எடுத்து அதில் ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.

(நாளை இறுதிப்பாகம் வெளியாகும்)

விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல