புதன், 11 டிசம்பர், 2013

அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகளை இழந்து நாடோடிகளாக திரியும் மக்கள்

மொத்தத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு காரணமாக இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்கள் இன்று அகதிகளாக வாழ்வுரிமை மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் வாழ்வாதார உரிமைகளும் மறுக்கப்பட்டிருக்கின்றன. மறுக்கப்பட்டிருக்கின்றது என்பதிலும் பார்க்க அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்றே கூறவேண்டியுள்ளது.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரசாங்கம் பல பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருக்கின்றது. கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் போன்ற வேலைத்திட்டங்களின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விவசாயம், நிர்வாகம் என பலதுறைகளில் இந்த தீவிர கவனம் செலுத்தப்பட்டு, பல மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

பிரதான வீதிகள் மட்டுமல்லாமல், இணைப்பு வீதிகள், கிராமிய வீதிகள் என்பன புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன. ரயில் பாதைகள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மடுறோட், கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு ரயில் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் வரையிலும் ரயில் சேவைகளை விஸ்தரிப்பதற்காக ரயில் பாதைகள் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. வைத்தியசாலைகள், பாடசாலைகள் என்பன நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்களைப் பெற்றிருக்கின்றன. விவசாயத்திற்கு அவசியமான குளங்கள் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. அழிந்த குளங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன, இப்படி எத்தனையோ வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் வடமாகாணத்தில் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானத்தளம் என்பனவும் பெரும் பணச்செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் பயன்படுத்தத்தக்க வகையில் பலாலிக்கான விமான சேவை நடத்தப்படுவதற்காக அந்த விமானத்தளம் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யயப்படுவதன் மூலம் வடபகுதிக்கான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. போரினால் அனைத்தையும் இழந்துள்ள மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு இந்தப் பணிகள் முக்கியமானவைகளாகும்.

ஆனால், இந்தப் பணிகள் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை மறுப்பதாகவும், அவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றாததாகவும் அமைந்திருப்பது வேதனைக்குரியது. அபிவிருத்திப் பணிகளுக்காக அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதும் இடம்பெற்று வருகின்றது. இது பாரதூரமானது. அபிவிருத்தி என்பது மக்களுக்காக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அபிவிருத்திக்காக மக்கள் என்ற வகையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. ஒரு வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் பாதிக்கப்படத்தக்க வகையில் பணிகள் அமைந்திருக்கின்றன. அல்லது அந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இயற்கை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது

இயற்கையினால் படைக்கப்பட்ட மனிதனுக்கு இயற்கையாகவே உரிமைகள் இருக்கின்றன. அவற்றில் வாழ்வதற்கான உரிமையும், வாழ்வதற்குரிய இல்லிடம் மற்றும் காணிகள் உரிமையும் முக்கியமானவை. இந்த உரிமைகள் இயற்கை நீதியுடன் சம்பந்தப்பட்டவை. தங்களுக்கு மட்டுமே உள்ளது என்று கூறி, உரிமை கொண்டாடி, இவற்றை எவரும், யாருக்கும் மறுக்க முடியாது. இவ்வாறு? மறுப்பவர்கள் இயற்கை நீதி முறைமையை மீறியவர்களாகக் கருதப்படுவார்கள். அத்தகைய நடவடிக்கை பாரதூரமானதாகும். அதுமட்டுமல்லாமல், அத்தகைய நடவடிக்கையானது மனித நாகரிகத்தைக் கேவலப்படுத்துவதாகக் கூட கருத முடியும்.

ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் உலகில் சாதாரணமாக நடைபெறுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இயற்கைக்கு விரோதமாக, உரிமைகளை, ஏகபோகமாகக் கொண்டு பிறருக்கு அநீதி விளைவிப்பதைத் தடுப்பதற்கு சர்வதேச ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதற்காக நீதி விசாரணைகள் நடத்தப்படுகின்றன. ஆயினும் உரிமைகளை மறுப்பவர்கள் அனைவரும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவதில்லை. அதற்கான தண்டனை அவர்களுக்கு வழங்கப்படுவதுமில்லை.

நீதி விசாரணைக்கு அப்பால், உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் சர்வதேச மனித உரிமை தினமாகும். இந்தத் தினத்தை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களும் சாதாரண மக்களும் அனுட்டிக்கின்ற அதே நேரத்தில் உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களும் அதனைக் கொண்டாடுவதுதான் மிகவும் கவலைக்குரியது.
இலங்கையைப் பொறுத்தமட்டில், இறுதி யுத்தத்தின்போது மனித உரிமைகள் மிகமோசமாக மீறப்பட்டன. மனிதாபிமான சட்டவிதிகள் அப்பட்டமாக மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டுக்கள் யுத்த மோதல்களில் ஈடுபட்டிருந்த அரச படைகள் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இருதரப்புக்களின்மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றன. இதற்கான விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.. இந்த விசாரணைகள் சுதந்திரமாக வெளிப்படைத் தன்மையுடன், சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மன்றமும், சர்வதேச நாடுகளும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றன.

சர்வதேச ரீதியிலான இந்த வற்புறுத்தலானது, அரசுக்கு அரசியல் ரீதியாக பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த நெருக்கடிகளைத் தணிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. மறுபுறத்தில் அரசாங்கத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ, யுத்தத்திற்குப் பின்னரும் உரிமை மீறல் நடவடிக்கைகள் நாட்டில் இடம்பெற்று வருகின்றன. அதுவும் அபிவிருத்தி என்ற போர்வையில் அவைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

வலிகாமம் வடக்கு நிலைமைகள்

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மக்கள் காலம் காலமாக வசித்து வந்துள்ளார்கள். பலாலி விமானத்தளம், காங்கேசன்துறை துறைமுகம் இவற்றைச் சூழ்ந்த அந்தப் பிரதேசம் கடல் வளத்துடள், நிலவளமும் நிறைந்தது.

இங்கு அமைந்துள்ள மயிலிட்டி துறைமுகம் இலங்கையின் மீன்பிடி தொழிற்றுறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு பிடிக்கப்பட்ட மீன்கள் பெருமளவில் நாட்டின் தென்பகுதிக்கும், வெளியிடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன. மீன்பிடி தொழில் இங்கு மிகவும் சிறப்பாக இடம்பெற்று வந்தது. இது 1990 ஆம் ஆண்டுக்கு முந்திய நிலைமையாகும். ஆனால், 1990 ஆம் ஆண்டு பலாலி விமானப்படைத்தளத்தைச் சூழ்ந்த பிரதேசமும் காங்கேசன்துறை துறைமுகத்தைச் சூழ்ந்த பகுதிகளும் அதியுயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அங்கு குடியிருந்த பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டன.

விடுலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் காரணமாக தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அப்போது பிரதமராக இருந்த ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கூறியிருந்தது. யுத்தம் முடிவடைந்ததும், இந்தப் பிரதேசம் வெளியேற்றப்பட்ட மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற பகிரங்க வாக்குறுதியும் வழங்கப்பட்டிருந்தது. வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களைத் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி நடத்திய ஒரு போராட்டத்தை அங்கு சென்று பார்வையிட்ட ஐக்கிய தேசிய கட்சியி;ன் தலைவரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமாகிய ரணில் வி;ககிரமசிங்க தனது வாயால் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

பலாலி விமானத்தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் பொதுமக்களின் நலன்கருதி அபிவிருத்தி செய்வதாகக் கூறும் அரசாங்கம் 6381 ஏக்கர் பரப்பளவுள்ள பொதுமக்களின் காணிகளை இதற்காகக் கையகப்படுத்தியுள்ளது. இதனால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்திற்குரிய சிறிய அளவிலான விவசாய நிலங்களையும் இழந்திருக்கின்றார்கள்.

இங்கு ஆலயங்கள், பாடசாலைகள், பொது வாழ்க்கைக்குரிய இடங்கள் என அந்த மக்களுடைய வாழ்க்கையோடும், சமூகத்தோடும் பின்னிப் பிணைந்துள்ள முக்கியமான இடங்கள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நடைமுறைகளை மீறிய சுவீகரிப்பு

இந்தக் காணிகளை சுவீகரிப்பதாகக் கூறி, அரசாங்கம் அறிவித்தல்களை அந்தக் காணிகளில் உள்ள மரங்களில் உடைந்த கட்டிடங்கள், வீடுகள் என்பவற்றில் ஒட்டியிருந்தது. ஆனால் அந்த அறிவித்தலை வாசித்து அறிந்து கொள்வதற்கு அங்கு மக்கள் இருக்கவில்லை.

கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் கைவிடப்பட்டிருந்த அந்தக் காணிகளைச் சென்று பார்ப்பதற்கு, அந்தக் காணிகளின் உரிமையாளர்களான இடம்பெயர்ந்துள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்த இடங்கள் பாழடைந்த இடங்களாக இராணுவத்தினரின் நடமாட்டம் மட்டுமே இருந்த இடமாக மாறியிருந்தன. அங்கு இடம்பெற்ற இராணுவச் செயற்பாடுகள் காரணமாக அங்குள்ள காணிகளின் எல்லைகள் அடையாளம் தெரியாத வகையில் உருமாறியிருக்கின்றன.

இந்த நிலையில்தான் அந்தக்காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. பொதுமக்களின் பாவனையில் உள்ள ஒரு காணியை அரசாங்கம் சுவீகரிக்கும்போது, அதற்கென காணிச்சட்டத்தின் கீழும், காணி சுவீகரிப்பு நடைமுறைகளின் கீழும் பல்வேறு செயற்பாடுகள் இருக்கின்றன. அதற்கென குறித்து ஒதுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் இருக்கின்றன. அவைகள் பின்பற்றப்பட்ட பின்பே பொதுமக்களின் காணிகள் அரசாங்கத்தின் பாவனைக்குச் செல்ல முடியும். ஆனால், இந்த நடைமுறைகள் எதுவும் வலிகாமம் வடக்கில் சீராக நடமுறைப்படுத்தப்படவில்லை.

காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கும் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டதுடன் சரி, காணிகளை அடையாளம் காட்டுமாறு உரிமையாளர்களை அதிகாரிகள் கேட்கவில்லை. சுவீகரிக்கப்படவுள்ள காணிகளின் சந்தைப் பெறுமதிகள் மதிப்பீடு செய்யப்படவில்லை. அந்தக் காணிகளை அரசு சுவீகரிப்பது தொடர்பில் உரிமையாளர்களான பொதுமக்களிடம் விருப்பு வெறுப்பு அல்லது கருத்துக்கள் கேட்கப்படவில்லை.

சுவீகரிக்கப்படுகின்ற காணிகளுக்குப் பதிலாக, உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படுமா அல்லது அந்தக் காணிகளுக்குரிய நட்டயீடுகள் வழங்கப்படுமா என்பது பற்றிய கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. இராணுவ ஆட்சியொன்றின் கீழ்; அல்லது சர்வாதிகார ஆட்சியொன்றின் கீழ் நடப்பது போன்று இந்தக் காணிகள் உரிமையாளர்களின் அனுமதியின்றி – ஒப்புதலின்றி அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கின்றன.

உரிமை மறுக்கப்பட்டவர்கள்

அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், அரசாங்கத்தின் அனுமதியில்லாத – அங்கீகாரம் பெறாத வகையில் அகதி முகாம்கள் என்று சொல்லப்படுகின்ற இடங்களில் - தனியாருக்குச் சொந்தமான காணிகளில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வேறு பலர் வாடகைக்கு வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வாடகைக்கு குடியிருப்பவர்கள் சீரான வருமான வசதியற்றவர்களாகவும், வேறு வீடுகளுக்குச் செல்லாதவர்களாக - இடமபெயர்ந்த மக்களாக இருப்பதனால் வீடுகளை வாடகைக்குக் கொடுப்பவர்களும் குறுகிய காலத்தில் வீடுகளை விட்டுச் செல்லுமாறு வற்புறுத்துகின்றார்கள். இதனால் இடம்பெயர்ந்த மக்கள் நாடோடிகளாக இடத்திற்கு இடம் வாடகைக்கு வீடுகள் தேடி அலைபவர்களாக அவல வாழ்க்கை நடத்த வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

காலத்திற்குக் காலம் தேர்தல்கள் நடைபெறுகின்ற, பாராளுமன்ற முறைமையைக் கொண்டுள்ள ஜனநாயக நாட்டில், அதன் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் காணிகளைப் பெற்றிருந்தார்கள். அந்தக் காணிகள் அவர்களுடைய வாழ்விடங்களாக, வாழ்வாதாரத்திற்குரிய விவசாய காணிகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தன. அத்துடன் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக கடலோர நடைமுறைகளுக்கு இசைவாக மீன்பிடி துறைகள் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் கடற்றொழில் செய்து வந்தார்கள். இதுவே அவர்களுடைய வாழ்வாதாரமாக இருந்தது. கடற்றொழில் செய்து வந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்குரிய முக்கிய இடமாக மயிலிட்டி துறைமுகம் விளங்கியது. இப்போது அங்கு கடற்படையினர் நிலைகொண்டிருக்கின்றார்கள். அந்தத்துறையில் தொழில் செய்து வந்த மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் மற்றும் மேசன் தொழிலாளிகளாக மாறி வாழ்க்கை நடத்துவதற்கு இயலாதவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

மொத்தத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு காரணமாக இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்கள் இன்று அகதிகளாக வாழ்வுரிமை மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் வாழ்வாதார உரிமைகளும் மறுக்கப்பட்டிருக்கின்றன. மறுக்கப்பட்டிருக்கின்றது என்பதிலும் பார்க்க அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்றே கூறவேண்டியுள்ளது.

பலாலி விமானத்தளமும் உரிமை மீறல்களும்

கடந்த 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தமோதல்கள் தீவிரம் பெற்றிருந்தன. யாழ் குடாநாட்டில் அப்போது நிலைகொண்டிருந்த இராணுவத்தினருக்குப் பலாலி விமானத்தளம் முக்கியமான வான் வழியிலான விநியோகத் தளமாக விளங்கியது. கொழும்பில் இருந்து இராணுவத்தி;ற்குத் தேவையான இராணுவ தளபாடங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான உணவுப்பொருட்களும் வான்வழியாகவே விநியோகிக்கப்பட வேண்டிய இராணுவச் சூழல் அப்போது நிலவியது.

அதேநேரம், பீரங்கிகளைக் கொண்ட இராணுவ வலிமை பெற்றிருந்த விடுதலைப்புலிகள் எறிகணைகளின் மூலம் பலாலி விமானத்தளத்தைத் தாக்கவல்லவர்களாக இருந்தார்கள். இதனால், பலாலி விமானத்தளம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த இராணுவ படைத்தளம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக பலாலி விமானத்தளத்தின் எல்லைகளைப் பெருப்பிக்க வேண்டிய அவசியம் எழுந்திருந்தது. இதன் காரணமாகவே பரந்த ஒரு பிரதேசத்தை பலாலி மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றைச் சூழ்ந்த பகுதிகளில், இராணுவம் தனது தேவைக்காக எடுத்திருந்தது. அதன் காரணமாக அங்கு குடியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

இந்த அடிப்படையிலேயே அன்றைய அரசாங்கம் யுத்தம் முடிவடைந்ததும், பலாலியைச் சூழ்ந்த அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் காணிகள் பொதுமக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்படும் என அறிவித்திருந்தது.

இப்போது யுத்தம் முடிவடைந்துவிட்டது. கடந்த நான்கு வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தில் இராணுவத்தினர் மீதான எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படவில்லை. ,அத்தகைய தாக்குதல்களைத் தொடுக்கக்கூடிய விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். இப்போது அமைதி நிலவுகின்றது. இராணுவத்தினரும் யுத்தச் செயற்பாடுகளில் இருந்து மாற்றப்பட்டு சிவில் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

இத்தகையதொரு நிலையில், பலாலி விமனாத்தளத்தைச் சூழ்ந்த பகுதியில் இராணுவத்தின் முன்னணி காவலரண்கள் அதிக தூரத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் பலாலி விமானத்தளத்தை நோக்கி யாரும் எறிகணை தாக்;குதல் நடத்தப் போவதில்லை. அத்தகைய தாக்குதல்களுக்கான சூழலும் கிடையாது.

அது மட்டுமல்லாமல், பலாலி விமானத்தளத்தை பொதுமக்களின் பாவனைக்குரிய சிவில் விமானத்தளமாக அரசாங்கம் அபிவிருத்தி செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. சிவில் விமானத்தளத்துக்கருகில் இராணுவ முகாம்களே அமைந்திருக்கின்றன. அந்த முகாம்களுக்குத் தேவையான காணிகள், தேசிய பாதுகாப்பை முன்னிட்டு பொதுமக்களிடம் இருந்து எடுப்பதை ஏற்றுக்கொண்டாலும்கூட, அந்தப் பகுதியில் பொதுமக்களுடைய சுமார் 6400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலப்பகுதியை சுவீகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

அதேநேரம் இந்த காணி சுவீகரிப்பை எதிர்த்து சுமார் இரண்டாயிரம்பேர் நீதிமன்றத்தில் உரிமை கோரல் வழக்குகள் தாக்கல் செய்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இந்தக் காணிகளின் உரிமை தொடர்பில் நீதிமன்றத்தினால் தீர்ப்பு ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது. அதில் இந்தக் காணிகள் உரியவர்களுக்குப் படிப்படியாகக் கையளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நாட்டின் நீதித்துறை நடைமுறைகளுக்கு மாறான வகையிலும் இங்கு காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இது பாரதூரமான ஒரு விடயமாகும்.

இன்றைய யுத்த மோதல்களற்ற, அமைதி நிலவுகின்ற நிலைமையில் பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகிய பகுதிகளைச் சூழவுள்ள பிரதேசங்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பது அப்பட்டமான உரிமை மீறல்கள் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

எனவே, இறுதி யுத்தமோதல்கள் இடம்பெற்ற நேரத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் காரணமாக போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அரசாங்கம் வலிகாமம் வடக்கு காணி விவகாரத்தில், இயற்கை நீதி மற்றும் நாட்டில் மக்களுக்குரிய அடிப்படை உரிமைகள் தொடர்பான நீதி என்பவற்றைக் கவனத்திற்கொண்டு செயற்படுவது நல்லது. இது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், நல்லுறவு என்பவற்றுக்கும் பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

செல்வரட்னம் சிறிதரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல