அமைச்சர் சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ப்ரப்போசலின் ஆயுள் அத்துடன் முடிந்தது.
இந்த ப்ரபோசல் பிரபாகரனால் நிராகரிக்கப்பட்ட தகவல் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த நடேசனால், அமெரிக்க தமிழருக்கு சொல்லப்பட்டது. அவர் அதிர்ச்சியடைந்தார். இது எப்படி நடந்தது என்று விசாரித்துக்கொண்டு போனபோது, அமைச்சர் சிதம்பரத்தின் ப்ரபோசலுக்கு எதிராக வைகோ, மற்றும் நெடுமாறன் கொடுத்த ஆலோசனை விபரம் அவருக்கு தெரியவந்தது.
அவர் இந்த விஷயத்தை உடனே தமிழகத்தில் உள்ள தேசியக் கட்சி தலைவருக்கு சொல்லவில்லை. இந்த ப்ரபோசலை எப்படியாவது புலிகளின் தலைமை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சிகளில் இறங்கினார்.
“யுத்தம் முடிவை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், இது (சிதம்பரத்தின் ப்ரபோசல்) ஒரு கடைசி நேர சந்தர்ப்பம். இதை தவற விடாதீர்கள்” என பா.நடேசனிடமும், புலிகளின் வேறு சில தளபதிகளிடமும் இரு தினங்களாத திரும்ப திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், பலன்தான் பூச்சியம். “மேல்மட்டத்தில் (பிரபாகரன்) முடிவு எடுக்கப்பட்டு விட்டது. இதை விட்டுவிடுங்கள்” என்ற பதிலே கிடைத்தது.
அவர் ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்தார். தமிழகத்தில் உள்ள தேசியக் கட்சி தலைவருக்கு விஷயத்தை சொன்னார். அப்படியே அந்த விஷயம் அமைச்சர் சிதம்பரத்துக்கும் சொல்லப்பட்டது.
இதற்கு அமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன பதில், அமெரிக்க தமிழருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மூலமாக, பா.நடேசனுக்கும் போய்ச் சேர்ந்தது.
அந்தப் பதில்: “இந்த விஷயத்தில் ரகசியம் காக்கும்படி நான் சொன்ன பின்னரும், தமிழகத்திலுள்ள சிலரிடம் புலிகள் இது பற்றி ஆலோசித்திருக்கிறார்கள். அது போகட்டும். புலிகளிடம் ஒரு விஷயம் சொல்லுங்கள். அவர்கள் கடைசி சந்தர்ப்பத்தை தவற விடுகிறார்கள்.
தற்போது இலங்கையில் நடக்கும் யுத்தம் பற்றிய விபரங்கள் உங்கள் தமிழக தலைவர்களுக்கு (வைகோ, நெடுமாறன்) தெரியாது. இலங்கை ராணுவத்தின் பலம், அவர்களால் எதுவரை போக முடியும் என்பதும் உங்கள் தமிழக தலைவர்களுக்கு தெரியாது. ஆனால், உளவுத்துறை மூலம் எமக்கு (மத்திய அரசு) தெரியும். இந்த யுத்தம் இன்னும் சில மாதங்களில் முழுமையாக முடிந்துவிடும். புலிகள் ஜெயிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
புலிகள் இயக்கம் தப்பிப்பதற்கு ஒரே வழி இப்போது யுத்த நிறுத்தம்தான். அதை இந்தியா கொண்டுவர வேண்டுமென்றால் ஒரே வழி, மத்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஈழம் கோரிக்கையை புலிகள் கைவிட்டார்கள் என்று நாம் (மத்திய அரசு) இலங்கை அரசிடம் சொல்லி கன்வின்ஸ் செய்ய வேண்டும். அதற்கு எம்மிடம் திட்டம் இருக்கிறது. ஆனால், புலிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது.
மத்திய அரசில் உள்ள தமிழன் என்ற முறையில் எனது எல்லைகளை தாண்டி, out-of-the-wayயாக இந்த முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் புலிகள் என்னை நம்புவதைவிட, அவர்களது தமிழக கனெக்ஷன்களை நம்புவதாக தெரிகிறது. நல்லது. எனது முயற்சிக்கு எதிராக ஆலோசனை கொடுத்த உங்கள் தமிழக தலைவர்களால் (வைகோ, நெடுமாறன்) பிரபாகரனையும், புலிகள் இயக்கத்தையும், காப்பாற்ற முடிந்தால், எனக்கும் சந்தோஷம்தான். Good luck.”
அமைச்சர் சிதம்பரத்தின் இந்தப் பதிலை, பா.நடேசனிடம் கூறிவிட்டு ஒதுங்கிக்கொண்டார் அமெரிக்க தமிழர். அதன்பின் அவர், புலிகள் தொடர்பான எந்த விஷயத்திலும் தலையிடவில்லை.
இதன்பின் யுத்தம் துரிதகதியில் நடந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது.
இந்த நிலையில்தான், புலிகள் மீண்டும் இந்தியாவை தொடர்பு கொள்ள முயன்றார்கள். (இதற்கிடையே அமெரிக்க திட்டம் ஒன்றும் ப்ரபோசல் அளவில் இருந்தது. இந்திய திட்டம், ‘ஈழம் கோரிக்கையை கைவிட வேண்டும்’ என்ற அளவில் இருந்தது. அமெரிக்க திட்டமோ, ஒரு ஸ்டெப் அதிகமாகி, ‘புலிகள் சரணடைய வேண்டும்’ என்ற வகையில் இருந்தது)
பா.நடேசன் மீண்டும் அமெரிக்க தமிழரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் அமெரிக்காவிலேயே இல்லை. தமிழகத்தில் இருந்த தேசியக் கட்சித் தலைவரை தொடர்பு கொண்டபோது அவர், ‘என்னை விட்டுவிடுங்கள். நீங்களே நேரடியாக அமைச்சர் சிதம்பரத்துடன் பேசுங்கள்’ என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.
பா.நடேசனுக்கு அல்லது, வன்னியில் இருந்த புலிகளுக்கு அமைச்சர் சிதம்பரத்துடன் நேரடி தொடர்பு கிடையாது.
இந்த நிலையில் வன்னியில் இருந்த பிரபாகரனால் தொடர்பு கொள்ளப்பட்டவர்தான், கேபி. அவர் அப்போது மலேசியாவில் இருந்தார்.
இது நடந்தது, 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில். அப்போது புலிகள் மிகமிக சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டு இருந்தார்கள்.
இன்னும் சில தினங்களில் கதை முடிந்துவிடும் என்பது, யுத்த நிலைமை பற்றி விஷயமறிந்தவர்களுக்கு தெரியும். அதற்கு ஒரு வாரத்துக்கு முன், ‘அமெரிக்க திட்டத்தை’யும் பிரபாகரன் நிராகரித்திருந்தார். (அமெரிக்கா கப்பல் கொண்டுவந்து பிரபாகரனையும், தளபதிகளையும் வெளியேற்றும் அந்த ‘அமெரிக்க திட்ட’ விபரங்களை ‘ஈழ யுத்தம் இறுதி நாட்கள்’ என்ற எமது தொடரின் இறுதி அத்தியாயங்கள் வெளியாகும்போது பாருங்கள்)
“இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பாருங்கள்” என்றார் பிரபாகரன் கே.பி.யிடம்.
இதற்கிடையே பா.நடேசனுடன் தொடர்பில் இருந்த வைகோ, “இன்னும் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடியுங்கள். மத்தியில் அரசு மாறிவிடும். ஆட்சி மாறினால், மறுநாளே யுத்த நிறுத்தம்” என்றார்.
இரண்டு வாரங்கள் தாக்குப்பிடிப்பதே சிரமம் என்ற நிலை வன்னியில் இருந்தது.
கே.பி. தமது முயற்சிகளில் இறங்கினார். அவற்றில் ஒன்று, வெளிநாட்டு தனியார் செக்யூரிட்டி ஆட்களை வாடகைக்கு அமர்த்தி, ஹெலிகாப்டர் மூலம் பிரபாகரனையும் வேறு ஓரிருவரையும் வெளியேற்றுவது. புலிகளின் வெளிநாட்டு நிதியை வைத்திருந்த நெடியவன், அதற்கு தேவையான பணத்தை (சுமார் 10 லட்சம் டாலர்) கொடுக்க மறுத்துவிட்டார்.
“பணம் இருக்கிறது. ஆனால், காஸ்ட்ரோ உத்தரவிட்டால்தான் பணம் கொடுக்க முடியும்” என்றார் அவர். அப்போது காஸ்ட்ரோவே உயிருடன் இல்லை. “கடைசியாக காஸ்ட்ரோவுடன் எப்போது பேசினீர்கள்?” என்று கேட்டபோது, “10 நாட்களாக அவரிடம் இருந்து போன் வரவில்லை” என்றார் நெடியவன் அப்பாவியாக!
கே.பி.யின் இரண்டாவது முயற்சி, மீண்டும் டில்லியின் கதவை தட்டுவது.
கே.பி. தொடர்புகொண்டது, தி.மு.க. தலைவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் நண்பரை. அவர் மூலமாக மீண்டும் அமைச்சர் சிதம்பரத்திடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. சிதம்பரம் சில முயற்சிகளை செய்ததாக தெரிகிறது. ஆனால், அந்த முயற்சிகளை செய்வதற்கு முன்பே, “எனது முயற்சிகள் பலிப்பது சந்தேகமே. யுத்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இனி இலங்கை அரசை யாராலும் தடுக்க முடியாது. இருந்தாலும் முயற்சிக்கிறேன்” என்றார்.
எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
“பா.ஜ.க. ஆட்சி வரட்டும். எல்லாமே ஒரே நாளில் தலைகீழாக மாறும்” என்று சொல்லிக்கொண்டு இருந்தார் வை.கோ.
அதுவும் பலிக்கவில்லை.
லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16-ம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. முடிவு வெளியாகி 48 மணி நேரத்துக்குள் மே 18-ம் தேதி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தது.
இலங்கை ராணுவத்தின் 53-ம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4-ம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்த நாள், மே 19-ம் தேதி.
அன்றைய தினத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன், அமைச்சர் ப.சிதம்பரம், “எனது முயற்சிக்கு எதிராக ஆலோசனை கொடுத்த உங்கள் தமிழக தலைவர்களால் (வைகோ, நெடுமாறன்) பிரபாகரனையும், புலிகள் இயக்கத்தையும், காப்பாற்ற முடிந்தால், எனக்கும் சந்தோஷம்தான். Good luck” என்று கூறியிருந்தார்.
அவர் கூறியது பலித்ததா? ஒரு விதத்தில் பலித்தது!!
வைகோவும், நெடுமாறனும் புலிகள் இயக்கத்தையும் காப்பாற்றி, பிரபாகரனையும் இன்றுவரை உயிருடன் வைத்திருக்கிறார்கள்… தமது அறிக்கைகளில்!
(முற்றும்)
விறுவிறுப்பு.காம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக