செவ்வாய், 1 ஏப்ரல், 2014

இந்தியா முகத்தில குத்தினாலென்ன துப்பினாலென்ன...

'ஜெனிவாத்தீர்மான'த்தில் இந்தியா காலை வாரீட்டுதெண்டு பலருக்குக் கோவம்.

'ஆனானப்பட்ட அமெரிக்காவையே வளைச்சுப் பிடிச்சு, பிரேரணையைத் திருத்தி அதை நிறைவேற்றவும் வைச்சிட்டம். இந்த இந்தியாதான் சுழிச்சுப்போட்டுது' எண்டு பொருமிக்கொண்டிருக்கினம்.



போதாக்குறைக்கு 'இந்தியா தமிழருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திட்டுது' எண்டும் 'இந்தியா மீண்டும் தமிழரின் முதுகில் குத்திப்போட்டுது' எண்டும் ஆளாளுக்குக் குற்றச்சாட்டுகளை அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கினம்.

அமெரிக்காவை வளைச்சுப் பிடிக்க முடிந்தவையால ஏன் பக்கத்தில, அடிக்கடவைக்கை இருக்கும் இந்தியாவை வளைச்சுப் பிடிக்க முடியாமல் போனது?

புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள், தமிழ்ப் புத்திஜீவிகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி என்று பலரும் அமெரிக்கா, ஐரோப்பா, ஜெனிவா எண்டு படையெடுத்துப்போய் 'மேற்குலகத் தெய்வங்க'ளுக்கு நேர்த்திக் கடன் வைச்சுத் தேவாரம் பாடியதில் காட்டிய அக்கறையை இந்தியாவின் மீது காட்டவில்லை.

'டில்லியின் நாணயக் கயிற்றை' தமிழ்நாட்டுக்காரர் பிடிச்சுக்கொள்ளுவினம் எண்ட பெரிய நம்பிக்கையில இவையள் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாயக் கப்பல் ஏறீட்டினம்.

ஏனெண்டால், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாறபடியால், எப்பிடியும் (விரும்பியோ விரும்பாமலோ) இந்தியா – கொங்கிரஸ் அரசு - அமெரிக்கப் பிரேரணையை ஆதரிச்சு, ஈழத்தமிழரின் பக்கம் நிண்டுதான் ஆக வேண்டும் எண்ட ஒரு நம்பிக்கை.

சார்க் மாநாடு நடக்கும்போது தமிழ்நாட்டுக்காரர் பொங்கியெழுந்து மன்மோகன் சிங்கை கொழும்புக்கு வரவிடாமல் தடுத்தவையெல்லோ. (ஆனால், சார்க் மாநாட்டு நேரம் ஒரு நல்ல பாடத்தை டில்லி படிச்சு வைச்சிருந்தது. அதை இப்ப ஜெனிவாவில காட்டியிருக்கு. அவ்வளவுதான்). அதைப்போல இந்தத் தடவையும் நடக்கும் எண்டு கணக்குப் போட்டிருக்கினம்.

எல்லாம் தப்புக்கணக்குத்தான். - குருட்டு நம்பிக்கைதான்.

'காலம் முழுக்க இப்பிடித் தப்புக்கணக்குப் போட்டும் குருட்டு நம்பிக்கையோட இருந்தும்தானே நாசமாய்ப் போயிருக்கிறம்' எண்டு இவை ஒரு போதும் உணருறதுமில்லை. இதை மனந்திறந்து ஏற்றுக்கொள்ளிறதுமில்லை.

இந்தப் பேய்க்குணத்தாலதானே நாங்கள் தொடர்ந்தும் அழிஞ்சு கொண்டிருக்கிறம்.

திருந்தாத சாதி என்றால் இந்தத் தமிழ்ச்சாதி எண்டு நான் அடிச்சுச் சத்தியம் செய்வன்.

சரி, இது போகட்டும். இப்ப நாங்கள் பார்க்க வேண்டிய விசயத்துக்கு வருவம்.

'இந்தியா தமிழரின் காலை வாரீட்டுது, முதுகில குத்திப்போட்டுது, முகத்தில துப்பீட்டுது' எண்டெல்லாம் சும்மா 'பீலாக்கதை' விட்டுக்கொண்டிருக்காமல் 'நாங்களும் ஒரு விளையாட்டை இந்தியாவுக்கு விளையாடிக் காட்டினால் என்ன?' எண்டு இவை ஒரு முடிவை எடுக்கட்டும் பார்ப்பம்.

புலம்பெயர்ந்த நாடுகளில இருந்தும் இலங்கையில இருந்தும் இந்தியாவுக்கு படையெடுத்துப் போய்வாற ஆட்கள் 'இந்தத் தடவை இந்தியாவுக்கு வரமாட்டம். இந்தியாப் பொருட்களை வாங்க மாட்டம், இந்தியப் படங்களைப் பார்க்க மாட்டம். இந்தியத் தொலைக்காட்டித் தொடர்களைப் பார்க்க மாட்டம்' எண்டு தீர்மானம் எடுத்துக்கொண்டு அதைச் செய்து இந்தியாவின்ர முகத்தில திருப்பிக் குத்திக் காட்டட்டும்.

'டில்லியின் கள்ளத்தனத்துக்கு நீங்கள் இடங்குடுத்திட்டியள்' எண்டு தமிழ்நாட்டுக்காரரைப் பார்த்து ஒருமுறை சினந்து காட்டட்டும் பார்ப்பம்.

இதையெல்லாம் எந்தப் பயலும் செய்ய மாட்டான். ஏனெண்டால், இப்பிடியான தீர்மானத்தை எடுத்தால் அது இவையின்ரை மடியில கடிக்கும், மனதிலை இடிக்கும் எல்லோ.

'இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்க மாட்டம்' எண்டு எவனாவது ஒரு தீர்மானத்தை எடுத்தாலே அவன்ரை கதை கந்தல். மச்சான் பிறகு தன்ரை வீட்டிலயே தண்ணி குடிக்கவும் ஏலாது. படுக்கையை விரிக்கவும் முடியாது. வீட்டில இருக்கிற பொம்பிளையளும் வயசான ஆட்களும் ஆளைப் பிடிச்சு வெளியில விட்டிடுவினம்.

ஒரு தொலைக்காட்சி நாடகத்தையே இழக்க மாட்டாத அளவுக்குத்தான் எங்கட அரசியற் போராட்டங்களும் சிந்தனையும் இருக்கு.

இதுதான் ஈழத்தமிழர்களின் அரசியல் நிலவரம்.

சொல்கிறது ஒண்டாகவும் செய்யிறது ஒண்டாகவும் இருக்கும்போது எப்பிடித்தான் வெற்றி வரும்?

தமிழ்த் தேசிய அரசியல் எண்டால் அதைப் பற்றிப் பேசினால் மட்டும் போதும். அல்லது அதுக்காக எதையும் இழக்காமல், அதிகமாகச் சிரமப்படாமல் சும்மா ஆளோட ஆளாக நிண்டு எழுதி, நாலு பேச்சுப் பேசி, நாலு இடத்தில கூடித் திண்டு குடிச்சு ஒரு அறிக்கை விட்டால் காணும்.

இதுக்கு மேல எண்டால்.....

இதுக்கு மேல கேட்காதையுங்கோ....

இந்தியா முகத்தில குத்தினாலென்ன துப்பினாலென்ன... நாங்கள் அதைப்பற்றிக் கோவிக்க மாட்டம். ஆனால், இதை மாதிரி கொழும்பார் ஏதாவது செய்தால் நாங்கள் சும்மா அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டம்.



-வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல