ஞாயிறு, 11 மே, 2014

நரேந்­திர மோடியின் கனவு நன­வா­குமா?

சாது ஒருவர் ஒரு வீட்­டிற்கு சென்றார். வீட்­டி­லி­ருந்த பெண்­மணி அவ­ருக்கு உணவு பரி­மா­றினார். சாப்­பிட்டு முடித்­ததும் வீட்டில் யாரு­டைய ஜாத­க­மா­வது இருக்­கி­றதா என்று கேட்டார். அப் பெண்­மணி தனது பன்­னி­ரெண்டு வயது நிரம்­பிய மகனின் ஜாத­கத்தை எடுத்து வந்து சாது­விடம் கொடுத்தார். சாது ஜாத­கத்தை பார்த்­ததும் “இவன் அர­சி­ய­லுக்கு வந்தால் ஒரு சக்­க­ர­வர்த்தி போல வலி­மை­யுடன் திகழ்வான். ஒரு வேளை, அர­சி­ய­லுக்கு செல்­ல­வில்லை என்றால் பெரிய சந்­நி­யா­சி­யாக ஆகி­வி­டுவான்” என்றார். அவர்தான் நரேந்­திர மோடி .



குஜராத் மாநி­லத்தின் மெஹ்­ஸானா மாவட்­டத்தில் வாத் நகரில் நரேந்­திர தாமோ­தர்தாஸ் மோடி, ஹீராபென் ஆகிய தம்­ப­தி­யி­ன­ருக்கு 1950 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 17 ஆம் திகதி, ஆறு பிள்­ளை­களைக் கொண்ட ஒரு நடுத்­தரக் குடும்­பத்தில் மூன்­றா­வது பிள்­ளை­யாக பிறந்தார். இவர்கள் காஞ்ஜி எனும் தாழ்த்­தப்­பட்ட இந்து மதப் பிரிவை சேர்ந்­த­வர்கள். அதா­வது இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்பை சேர்ந்­த­வர்கள். குஜ­ராத்தில் இந்தப் பிரி­வினர் ஒரு சத­வீ­தத்­தையும் விட குறைந்­த­வர்கள்.

நரேந்­திர மோடி, அரசு ஆரம்பப் பள்­ளியில் படித்தார். அடுத்து பக­வத்­சா­ரியா நாரா­ய­ண­சா­ரியா மேல்­நிலைப் பள்­ளியில் சேர்ந்து படித்தார். சிறு­வ­யதில் இவ­ரது நெருக்­க­மான நண்­ப­ராக ஜசூத்கான் பதான் விளங்­கினார். சிறு­வ­ய­தி­லேயே மோடியின் நட்பு வட்டம் பெரி­தா­கவே இருந்­தது. சிறு­வ­யதில் மோடிக்கு சுவாமி விவே­கா­னந்­தரை மிகவும் பிடிக்கும். விவே­கா­னந்­தரின் தேசப்­பற்றும் தத்­துவ விளக்­கமும் மோடியை மெய்மறக்கச் செய்­தன. விவே­கா­னந்தர் எழு­திய அனைத்­தையும் இளம்­ப­ரா­யத்­தி­லேயே படித்­து­விட்டார் மோடி. மோடிக்கு பாட­சாலை நாட்­களில் நாடகம் நடிப்­பது என்றால் மிகவும் பிடிக்கும். “ஹர­யாளி நோ ஹத­யாரோ” என்ற நாடகம் சீனா, இந்­தியா மீது தொடுத்த போரை மைய­மாக வைத்து எழு­தப்­பட்ட நாடகம். அந்த நாட­கத்தில் மோடிக்கு இந்­திய சிப்பாய் வேடம். பிர­மா­த­மாக நடித்து நாட்­டுப்­பற்றின் உச்­சத்தை தன்­னு­டைய நடிப்பில் வெளிக்­காட்­டினார். பதி­னேழு வயது நிரம்­பிய மோடி பள்ளிப் படிப்பை முடித்­ததும் விஸ் நக­ரி­லுள்ள ஒரு கல்­லூ­ரியில் சேர்ந்தார். அக் கல்­லூ­ரியில் ஓராண்டு காலம் படித்து முடித்­ததன் பின்னர் ஒருநாள் தாயா­ரிடம் “நான் இம­ய­ம­லைக்குப் போய், சுவாமி விவே­கா­னந்­தரை சந்­தித்த ஒரு யோகியைக் காணப் போகிறேன்” என்று கூறினார். குடும்­பத்­தா­ருக்கு பலத்த அதிர்ச்சி. சாது கூறிய விடயம் தாயா­ருக்கு ஞாபகம் வந்­தது. வேண்டாம் என்று சொல்லி தடுத்தார். இம­ய­ம­லைக்கு செல்­லு­வது உறுதி என்று திட்­ட­வட்­ட­மாக சொன்னார் மோடி.வேறு வழி­யில்­லாமல் பிரிவு உப­சார விழா­வையும் நடத்தி அனுப்­பி­வைத்­தனர்.

வீட்­டை­விட்டு வெளி­யே­றிய மோடி இம­ய­ம­லை­யி­லுள்ள அந்த யோகி இருக்கும் அடர்ந்த காட்­டுக்குச் சென்றார். மனித நட­மாட்­ட­மில்­லாத அந்தக் காட்டின் நடுவில் தொண்­ணூறு வயது நிரம்­பிய அந்த மெல்­லிய தேகத்­தை­யு­டைய யோகி காணப்­பட்டார். மோடி அந்த யோகி­யுடன் ஒரு மாத காலம் தங்கி பணி­விடை செய்தார். ஆன்­மீக சந்­தே­கங்­களை அவ­ரிடம் கேட்டுத் தெளிவு பெற்றார் மோடி. பிறகு அங்­கி­ருந்து புறப்­பட்டு இம­ய­மலைப் பகு­தி­யி­லேயே ஓரிரு ஆண்­டு­களை கழித்தார். பிறகு சொந்த ஊருக்கு திரும்­பினார். திடீ­ரென மோடியைப் பார்த்­ததும் குடும்­பத்­தி­ன­ருக்கு இன்ப அதிர்ச்சி. மகனை அழைத்து, நலம் விசா­ரித்து, சுவை­யாக விருந்­த­ளித்து மகிழ்ந்­தனர். ஒரேநாள் மட்­டுமே வீட்டில் இருந்தார். மறுநாள் புறப்­பட்டு அஹ­ம­தா­பாத்­தி­லுள்ள தன்­னு­டைய மாமா பாபுபாயின் வீட்­டுக்கு சென்­று­விட்டார். மாமா பாபுபாய் தேநீர்க்­கடை நடத்திக் கொண்­டி­ருந்தார். அந்தக் கடையில் வேலைக்கு சேர்ந்து கொண்டார் மோடி. அந்தத் தேநீர்க்­க­டைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்­டர்கள் வந்து போவது வழமை. அந்த நேரத்தில் மோடியை துடி­து­டிப்­பான இளை­ஞ­னாக கண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்­கத்­தினர், தங்­க­ளது கொள்­கை­களை விளக்கி அவரை தங்­க­ளது இயக்­கத்தில் இணைத்­துக்­கொண்­டனர். மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்­கத்தில் முழு நேர ஊழி­ய­ராக பிர­சா­ர­க­ராகப் பணி­யாற்­றினார்.

மகாத்மா காந்­தியின் நட­வ­டிக்­கை­களில் ஏற்­பட்ட அதி­ருப்தி கார­ண­மாக காங்­கி­ர­ஸி­லி­ருந்து வில­கிய மருத்­துவர் கேஷவ் பலிராம் ஹெட்­கேவார் என்­ப­வர்தான் ஆர்.எஸ்.எஸ். இயக்­கத்தை 1925 ஆம் ஆண்டு மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தி­லுள்ள நாக்­பூரில் உரு­வாக்­கினார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பிர­சா­ரகர் திரு­மணம் செய்­து­கொள்ளக் கூடாது. குடும்பப் பொறுப்பு எத­னையும் எடுத்­துக்­கொள்ளக் கூடாது. தன்­னு­டைய அறிவு, சக்தி, நேரம் அனைத்­தையும் சமு­தா­யத்­திற்­காக செல­விட வேண்டும். தங்கள் வாழ்நாள் முழு­வ­தையும் மக்­க­ளுக்கு சேவை செய்­வ­தையே குறிக்­கோ­ளாக வைத்­தி­ருக்க வேண்டும். எல்­லா­வற்­றுக்கும் தயா­ரான மோடி, தன் மாமா வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி ஆர்.எஸ்.எஸ். இயக்க அலு­வ­ல­கத்­தி­லேயே தங்­கி­விட்டார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்க அலு­வ­ல­கத்தில் அதி­கா­லையில் எழுந்­ததும் மற்­றைய சேவ­கர்­களை எழுப்­புவார். காலைப் பிரார்த்­தனை முடிந்­ததும் எல்­லோ­ருக்கும் தேநீர் தயா­ரித்துக் கொடுப்பார். பாத்­தி­ரங்­களை கழு­வுவார். எல்­லோ­ருக்கும் சிற்­றுண்டி தயா­ரித்து பரி­மா­றுவார். பிறகு கழி­வறை உட்­பட அலு­வ­ல­கத்தை சுத்தம் செய்வார். மதிய உண­வுக்கு சுழற்சி முறையில் ஆர்.எஸ்.எஸ். இயக்­கத்­தி­னரின் வீட்­டிற்கு செல்வார் மோடி. மருத்­துவ சிகிச்­சைக்­காக வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்­கத்­தி­னரின் குடும்­பத்­தி­னரை கவ­னித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பு மோடிக்கு கொடுக்­கப்­பட்­டது.

பிர­பல மனி­தர்­களை சந்­திக்கும் வாய்ப்பு மட்­டு­மல்ல, பல புத்­த­கங்­க­ளையும் வாசிக்கும் சந்­தர்ப்­பமும் மோடிக்கு கிடைத்­தது. ஆர்.எஸ்.எஸ். இயக்­கத்­தி­ன­ரான லக்ஸ்மன் ராவ் இனாம்தார் என்­பவர் மோடியை அழைத்து, “கடவுள் உனக்கு நிறைய கொடுத்­தி­ருக்­கிறார். நீ ஏதா­வது படியேன். சமஸ்­கி­ருதம் அல்­லது சரித்­திரம் படி” என்று கேட்­டுக்­கொண்டார். அதனை ஏற்­றுக்­கொண்டு மோடி டில்லி பல்­க­லைக்­க­ழ­கத்தில் தொலை­தூரக் கல்­வியில் சேர்ந்தார். மிகுந்த சிர­மத்­துடன் வெற்­றி­க­ர­மாக தன்­னு­டைய படிப்பை முடித்து டில்லி பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து குஜராத் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அர­சியல் பாடப்­பி­ரிவில் முது­கலைப் பட்டம் பெற்றார். மோடிக்கு குஜ­ராத்தி, ஹிந்தி, மராத்தி, ஆங்­கிலம் ஆகிய நான்கு மொழிகள் தெரியும். லக்ஸ்மன் ராவ் இனாம்தார் அவர்­களே மோடியின் குரு ஆவார்.

குஜராத் மாநில பார­தீய ஜனதா கட்­சிக்கு ஒரு புதிய துடிப்­புள்ள நிர்­வாகி தேவைப்­பட்டார். அப்­போது பா.ஜ.க. தலைவர் அத்­வானி ஆர்.எஸ்.எஸ். இயக்க தலை­மை­யிடம், ஆர்.எஸ்.எஸ். இயக்­கத்தில் பதி­னைந்து ஆண்­டு­க­ளாக பணி­யாற்­றிய நரேந்­திர மோடியை அர­சி­ய­லுக்கு நுழை­வ­தற்கு அனுப்பி விடு­மாறு கேட்டுக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். தலைமை அதற்கு இணங்­கி­யது. பா.ஜ.க. தலைவர் அத்­வானி 37 வயது நிரம்­பிய நரேந்­திர மோடியை குஜராத் மாநில பொதுச் செய­லா­ள­ராக ஆக்­கினார். அதனைத் தொடர்ந்து அர­சி­யலில் தீவி­ர­மாக ஈடு­பட்டார் மோடி.

2001 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 6 ஆம் திகதி குஜராத் மாநில முத­ல­மைச்சர் கேஸுபாய் படேல் ராஜி­னாமா செய்­ததை தொடர்ந்து, நரேந்­திர மோடி 2001 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 7 ஆம் திகதி குஜராத் மாநி­லத்தின் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்றுக் கொண்டார். அஹ­ம­தா­பாத்தில் தேநீர் விற்­றுக்­கொண்­டி­ருந்­தவர் ஒரு மாநி­லத்தின் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­றதைப் பார்த்துப் பலரும் பூரிப்­ப­டைந்­தனர். ஆர்.எஸ்.எஸ். இயக்­கத்தின் பிர­சா­ரகர் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­பது இந்­திய அர­சி­யலில் அதுதான் முதல் முறை ஆகும். முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்றுக் கொண்டபின் தன் தாயை சந்­தித்து ஆசி பெற்றார். அப்­போது மோடியின் தாயார் கொடுத்­தது ஒரே ஒரு அறி­வு­ரைதான். “நீ எக்­கா­ர­ணத்தைக் கொண்டும் இலஞ்சம் வாங்கக் கூடாது.”

சட்ட சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டாத நிலை­ய­லேயே அதா­வது எம்.எல்.ஏ. ஆகாமல் முத­ல­மைச்சர் ஆகி­விட்டார். அவ்­வாறு முத­ல­மைச்­ச­ராக ஆகி­வி­டு­ப­வர்கள் ஆறு­மாத காலத்­தினுள் ஏதேனும் ஒரு தொகு­தியில் போட்­டி­யிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும். முத­ல­மைச்சர் நரேந்­திர மோடி சௌராஷ்­டி­ரா­வி­லுள்ள ராஜ்கோட் தொகு­தியை தேர்ந்­தெ­டுத்து போட்­டி­யிட்டு வெற்றி பெற்றார். மூன்று நாட்கள் கழித்து மோடி சட்ட சபையில் எம்.எல்.ஏ. ஆக பத­வி­யேற்றார். அதே அன்று கோத்ரா ரயில் எரிப்புச் சம்­ப­வமும் இடம்­பெற்­றது. கோத்ரா ரயில் எரிப்புச் சம்­ப­வத்தில் 58 இந்­துக்கள் கொல்­லப்­பட்­டதை தொடர்ந்து குஜராத் முழு­வதும் மக்கள் வன்­மு­றையில் ஈடு­பட்­டனர். இந்­துக்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே கல­வரம் மூண்­டது. கல­வ­ரத்தில் சுமார் 790 முஸ்­லிம்­களும் 254 இந்­துக்­களும் உயி­ரி­ழந்­தனர். சுமார் 2500 பேர் காய­ம­டைந்­தனர். 223 பேர் காணாமல் போயினர். சுமார் 1,50,000 பேர் தங்கள் வீடு­களை இழந்­தனர். கல­வ­ரத்தில் 298 தர்­ஹாக்கள், 205 மசூ­திகள், 17 கோயில்கள் மற்றும் மூன்று தேவா­ல­யங்கள் பாதிப்­புக்­குள்­ளா­யின.

முத­ல­மைச்சர் நரேந்­திர மோடி கல­வ­ரத்தை அடக்­காமல் வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டு எதிர்க்­கட்­சி­க­ளிடம் இருந்தும் ஊட­கங்­க­ளிடம் இருந்தும் வந்­தன. மோடி அரசு எடுத்த துரித நட­வ­டிக்­கை­களால், குஜராத் மாநிலம் முழு­வதும் ஏற்­பட்ட கல­வரம் மூன்றே நாட்­க­ளுக்குள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக முத­ல­மைச்சர் நரேந்­திர மோடி கூறினார்.

காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் சோனியா காந்தி, நரேந்­திர மோடியை “மரண வியா­பாரி” என்று ஒரு பொதுக் கூட்­டத்தில் சாடினார். இஸ்­லா­மிய அமைப்­பினர் நரேந்­திர மோடியை “காவி தீவி­ர­வாதி” என்று வர்­ணிக்­கின்­றனர். கல­வரம் ஓய்ந்­தி­ருந்­தாலும் எதிர்க்­கட்­சி­களும் பத்­தி­ரி­கை­களும் மோடி சார்ந்­தி­ருந்த பா.ஜ.க. வில் சிலரும் அவ­ருக்­கெ­தி­ராக பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டனர். “குஜராத் கல­வ­ரத்தை நரேந்­திர மோடி அடக்­கி­யி­ருக்­கலாம், ஆனால் அவர் அவ்­வாறு செய்­ய­வில்லை, குஜராத் கல­வ­ரத்­திற்கு கார­ண­மா­ன­வரே மோடிதான்” என்று திரும்பத் திரும்ப பிரசாரம் செய்­யப்­பட்­டது. எதிர்ப்­பு­களும் நச்­ச­ரிப்­பு­களும் அதி­க­ரிக்க “எனக்கு முத­ல­மைச்சர் பதவி வேண்டாம்” எனக் கூறி முத­ல­மைச்சர் பத­வியை 12.-07.-2002 இல் ராஜி­னாமா செய்தார்.

குஜராத் மாநில சட்ட சபை கலைந்­ததும் மீண்டும் 12-.12.-2002 இல் சட்ட சபை தேர்தல் நடை­பெற்­றது. மீண்டும் நரேந்­திர மோடியே குஜராத் மாநி­லத்தின் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்றார்.

பின்னர் 2007, 2012 ஆகிய ஆண்­டு­களில் நடை­பெற்ற குஜராத் சட்ட மன்ற தேர்­த­லிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்­திர மோடியே முத­ல­மைச்­ச­ரானார். நரேந்­திர மோடி அவர்கள் பன்­னி­ரெண்டு வரு­டங்கள் முத­ல­மைச்­ச­ராக பதவி வகித்தார்.

நான்கு முறையும் சட்­ட­சபை தேர்­தலில் போட்­டி­யிடும் போது வேட்பு மனுவில் தனது திரு­மணம் பற்றி எதுவும் தெரி­விக்­க­வில்லை. தற்­போது வதோ­கரா மக்­க­ளவை தொகு­தியில் வேட்பு மனுத்­தாக்கல் செய்த போது தனக்கு திரு­மணம் ஆகி­விட்­ட­தா­கவும் தனது மனை­வியின் பெயர் ஜசோதா பென் என்றும் முதல் முறை­யாக குறிப்­பிட்­டுள்ளார் என்­பது குறிப்பி­டத்­தக்­கது.

பல எதிர்ப்­புகள் இருந்­தாலும், மாநி­லத்தின் வளர்ச்­சியை மட்­டுமே நோக்­க­மாகக் கொண்டு செயற்­பட்ட மோடி, சோலார் மின் உற்­பத்­தி­யினை அதி­கப்­ப­டுத்தி குஜ­ராத்தை மின் மிகை மாநி­ல­மாக மாற்­றினார். இளை­ஞர்கள் போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யா­வதை தவிர்க்க, “குட்கா” எனும் போதைப்­பொ­ரு­ளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்­கு­த­லுக்குப் பின், குஜராத் கட­லோர பாது­காப்பைப் பன்­ம­டங்கு பலப்­ப­டுத்­தினார். மேலும், தண்ணீர், சாலை வச­திகள், பெண் கல்வி, ஆரோக்­கியம், ஊழ­லற்ற நிர்­வாகம், விவ­சாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறை­க­ளிலும் பல திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி, குஜராத் மாநி­லத்தை மற்ற மாநி­லங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக மாற்­றிக்­காட்­டினார்.

நரேந்­திர மோடி முத­ல­மைச்­ச­ரா­கி­யதன் பின்­னரே குஜராத் மாநி­லத்தில் அரசின் அனைத்து அலு­வல்­க­ளிலும் கணனி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. குஜ­ராத்­தி­லுள்ள சுமார் 14,000 அரசு அலு­வ­ல­கங்கள் கணனி வலை­ய­மைப்பு மூலம் இணைக்­கப்­பட்­டுள்­ளன. ஆசியப் பசுபிக் பகு­தி­லேயே குஜராத் மாநில கணனி வலை­ய­மைப்பே மிகப் பெரி­யது.

சம­கால அர­சி­யலின் தவிர்க்க முடி­யாத சக்­தி­யாக உரு­வெ­டுத்­துள்ள நரேந்­திர மோடி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்­ட­ராக அறி­மு­க­மாகி அர­சியல் படிக்­கட்­டு­களில் மெல்ல மெல்ல முன்­னேறி, குஜராத் முதல்­வ­ராக நான்கு முறை பதவி வகித்து பார­தீய ஜனதா கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்­தப்­பட்­டுள்ளார். “குஜராத் மாநி­லத்தை இந்­தி­யாவின் முன்­மா­திரி மாநி­ல­மாக உரு­வாக்­கிய மோடி, இந்­தி­யா­வையும் முன்­மா­திரி தேச­மாக மாற்­றுவார்” என்­கி­றார்கள் பார­தீய ஜனதா கட்­சி­யினர். “நரேந்­திர மோடி பிர­த­ம­ரானால் இந்­தி­யாவை மிகப் பெரிய வல்­ல­ரசு நாடாக உரு­வாக்­குவார்” என அர­சியல் அவ­தா­னிகள் கருத்துத் தெரி­விக்­கின்­றனர்.

சாத­னை­களை அவர் உரக்கச் சொல்லும் போதெல்லாம் அதற்­கான எதிர்க்­கு­ரல்­களும் கோத்ரா வன்­முறை, குஜராத் கல­வரம், போலி என்­க­வுண்டர், இளம் பெண்ணை உளவு பார்த்­தது போன்ற அவர் மீது சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டு­களும் பஞ்­ச­மில்­லாமல் கூடவே எழத்தான் செய்­கின்­றன. மோடியின் சாத­னைகள் ஒரு பக்­கமும் மோடியின் மீதான சர்ச்­சைகள் இன்­னொரு பக்­கமும் ஏறக்­கு­றைய சம­ப­லத்­துடன் நிற்கும் நிலையில், மோடியின் எதிர்­கால அர­சியல் வாழ்க்கை மிகுந்த எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அர­சியல் அவ­தா­னிகள் இந்­தி­யாவின் அடுத்த புதிய பிர­த­ம­ராக நரேந்­திர மோடியே தேர்ந்­தெ­டுக்­கப்­படக் கூடிய சாத்தியம் அதிகம் உள்ளதாக கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அல்ஹாஜ் எம்.எப்.எம். இக்பால்

யாழ்ப்பாணம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல