ஞாயிறு, 11 மே, 2014

இறுதிநேர ஆட்சேர்ப்பு!

மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் எழுதிய ‘ஈழத்தின் வலி’ என்ற புத்தகம் கடந்த ஜனவரி மாதம் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது. இந்நூல் வெளியிடப்பட்டு ஒரு மாதம் கழிந்து விட்ட நிலையில், அதற்கு பல்வேறு விமர்சனங்களும் வெளிவந்த வண்ணமுள்ளன. விடுதலைப்புலிகளின் தவறுகளை கடுமையாக விமர்சித்துள்ள படியினால் இந்நூல் அரசாங்கத்தில் ஆதரவில் வெளியிடப்பட்டது என்கின்ற வழமையான, புலி ஆதரவாளர்களின் கண்டனங்களையும் பெற்றுள்ளது.


உண்மையில், ஈழம் என்கிற போராட்டத்திற்காக பொதுமக்கள் எதிர்கொண்ட வலியே இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளது. போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விட்ட போதிலும் அதனால் ஏற்பட்ட ரணமும், வலியும், இன்னமும் மாறவில்லை. இந்த மண்ணிலிருந்து அனுபவித்தவர்களுக்கே அந்த வலி தெரியும்.

இவ்வாறான பதிவுகள் யாரையும், எதையும் கொச்சைப் படுத்துவதாக பார்க்கவியலாது. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அறிவுபூர்வமானதாக மாற்றிக் கொள்ள இவ்வாறான பதிவுகள் பெரிதும் உதவும், எதிர்கால சந்ததியினருக்கு இப்பதிவுகள் ஒரு பாடமாகவும் இருக்கும். எதனையும் வரலாற்றில் புதைத்துவிட முடியாது. புதைத்துவிடவும் கூடாது. இவ்வகையிலேயே இந்நூலை வாசகர்கள் அணுக வேண்டும்.
மருத்துவர் உமாகாந் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளராகவும், பொது வைத்திய நிபுணராகவும் பணியாற்றுகின்றார்.

‘நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த எனது உடன் பிறப்பு ஒன்று தாயக விடுதலைக்கென்று புலிகள் இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்ட போது, எனக்கு புலிகள் இயக்கத்தில் ஏதோ ஒரு பற்று ஏற்பட்டது. எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்காக, ஏதோ ஒருவகையில் செலவிட்டேன். எனது 14ஆவது வயதில், மாங்குளம் இராணுவ முகாமைச் சுற்றி பதுங்குகுழிகளை அமைத்து கொடுத்து செயற்பட்டதுடன் ஆரம்பித்த எனது புலிகள் மீதான ஆதரவுப் படலம், எனது 37வது வயதில், 30-09-2009 அன்று, இலங்கையின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட போது முடிவிற்கு வந்தது…’ என்று நூலாசிரியர் தனது அறிமுகத்தை தருகின்றார்.

‘வைத்தியர் உமாகாந் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவன். இவர் தனது மருத்துவமானிப் பட்டத்தை 1999ஆம் ஆண்டு யாழ்.மருத்துவ பீடத்தில் பெற்றார். பின்னர் மருத்துவ முதுமானிப் பட்டத்தை 2007ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றார். 2008இல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 20 மாதங்கள் தடுப்பிலிருந்தார். இக் காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரணடைந்த போராளிகளைச் சந்தித்து இறுதிப் போர் பற்றிய தொகுப்பை ஆவணப்படுத்தினார்…’ என்று இவரது நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் வைத்திய கலாநிதி சுதர்சன்.

மருத்துவர் உமாகாந் ‘ஈழத்தின் வலி’ என்ற இந்த நூலில், இனப்பிரச்சினையின் அடிப்படை உண்மைகள் என்ற அத்தியாயத்திலிருந்து, நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், முகாம் தகர்ப்புகள், நான்காம் கட்டப் போர் என இறுதி முடிவு வரை எழுதியிருக்கின்றார். 38 அத்தியாயங்களாக பல தலைப்புக்களில் தரப்பட்டுள்ள இந்நூலில், இறுதிக்கட்ட ஆட்சேர்ப்பு பற்றிய இவரது விபரிப்பை இங்கு தருகின்றோம்.

இறுதி நேர ஆட்சேர்ப்பு!


ஆரம்ப காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைவதென்பது கல்லிலே நார் உரிப்பது போன்றது. ஒவ்வொரு போராளியினதும் உறுதித் தன்மையானது இயக்கத்தில் சோதித்துப் பார்க்கப்படும். இதனால்தான் 1990ஆம் ஆண்டிற்கு முற்பட்ட போராளிகள் பலர் தனித்து நின்று சாதனைகள் பலவற்றை புரிந்தனர்.

1990ஆம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப்புலிகள் போக்கில் ஒரு தளர்வு ஏற்பட்டது. பயிற்சிப் பாசறைகளிலும் ஒரு மென்போக்கு ஏற்பட்டது. எது எவ்வாறாயினும், 1990ஆம் ஆண்டு வரை புலிகள் தமது இயக்கத்தில் வலுக் கட்டாயமாக இளைஞர், யுவதிகளை இணைக்கவில்லை. மூன்றாம் கட்ட ஈழப்போராட்ட காலப் பகுதியில் புலிகள் ஆட்சேர்ப்பில் பல்வேறு யுத்திகளைக் கையாண்டனர்.

நாடகங்கள், தெருக்கூத்துக்கள், மேடைப் பேச்சுக்கள், மற்றும், ஆயுத தளபாடங்களை கண்காட்சிக்கு வைத்தல் போன்றவை மூலம் இயக்கத்திற்கு ஆட்சேர்த்தனர்.

நான்காம் கட்ட ஈழப்போராட்டத்தில் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் ஆட்களை இணைப்பது கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. வீட்டிற்கு ஒருவர் என்ற நிலை மாறி வீட்டிற்கு இருவர் என்ற நிலைக்குச் சென்றது. பெற்றோர்களை பணயம் வைத்து போராட்டத்திற்கு ஆட்களை இணைத்தனர். இதனால், இன்றும் பல பெற்றோர் மனநிலை குழம்பிய நிலையிலேயே காணப்படுகின்றனர்.

மாவிலாறு பகுதியில் சண்டை தொடங்கி, கிழக்கு மாகாணம் முழுமையாக இராணுவத்தின் கட்டப்பாட்டின் கீழ் வந்த பின்னர் வன்னியிலுள்ள புலிகளின் போக்கில் சடுதியான மாற்றம் ஏற்பட்டது. 2007ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவால் வெளியிடப்பட்ட சுற்றிக்கையின் படி, வன்னியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவர் இணைய வேண்டும் என்றும், மாவீரர்கள் உள்ள குடும்பங்களில் இன்னொரு போராளியை இணைக்கலாம் என்றும் ஆட்சேர்ப்பில் ஈடுபடுவோருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

வன்னியில் நடந்த ஆள் பிடிப்பினால் புலிகளுக்கும் மக்களுக்குமான பிளவு அதிகரித்தது. புலிகளின் முக்கிய தளபதிகளில் சிலர் பலவந்தமாக ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதைக் கண்டிருந்தாலும் தலைமைப்பீடத்துடன் கதைப்பதற்கு தயங்கி நின்றனர்.

அதிகளவு போராளிகளை இணைத்துக் கொடுப்பவருக்கு சலுகைகளையும் பதவி உயர்வுகளையும் தலைமைப்பீடம் வழங்கியது. இறுதி நேர ஆட்பிடிப்பானது இயக்கத்திலுள்ள சகல படைப்பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்டது.

விடுதலைப்புலிகளின் விமானப்படைக்கு ஆட்களைச் சேர்ப்பதாக கூறியும் இளைஞர்களைக் கவர்ந்து பயிற்சிப் பாசறைக்கு அனுப்பினர். பல படித்த இளைஞர்கள் புலனாய்வுப்பிரிவில் இணைந்தால் களமுனைக்கு செல்லத் தேவையில்லை என நினைத்து அதில் இணைந்து ஏமாந்து போயினர்.

புலிகளின் ஆட்சேர்ப்பு படையானது வீடு வீடாகச் சென்று இளைஞர்களையும் யுவதிகளையும் பலவந்தமாக இழுத்துச் சென்றது. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு காப்பாற்றுவது என எண்ணி இளம் வயதிலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். அத்துடன் பல இளைஞர்கள் தங்கள் வாழ்நாளை காடுகளுக்குள்ளேயே கழித்தனர். சில இளைஞர், யுவதிகள் தங்களுக்குத் தெரிந்த புலிகளின் தளபதிகளின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். பல பெற்றோர் பதுங்கு குழியினுள் இன்னொரு குழியினைத் தோண்டி அதற்குள் பிள்ளைகளை ஒளித்து வைத்தனர். காட்டிலே அடைக்கலம் தேடி ஒளிந்த பிள்ளைகள் சிலர் அரவம் தீண்டி மாண்டனர்.

இளம் வயதில் திருமணங்கள் நடைபெறுவதைக் கேள்விப்பட்ட விடுதலைப்புலிகள் உசாரடைந்தனர். திருமணப் பதிவாளர்களுக்கு அச்சறுத்தல் விடுத்ததோடு, திருமண வயதெல்லை ஆண்களுக்கு 35 ஆகவும், பெண்களுக்கு 28 ஆகவும் கூட்டினர்.

ஆள் சேர்ப்பில் புலிகளுடன் ஊரச் சண்டியரும் இணைந்து கொண்டனர். பல குடும்பத் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற தாமே முன்வந்து புலிகள் இயக்கத்தில் இணைந்தனர். இவ்வாறு இணைந்த குடும்பத் தலைவர்கள்தான் மற்றவர்களின் பிள்ளைகளைப் பிடிப்பதில் முன்னின்றனர். பல முறைகேடான ஆட்பிடிப்புகளும் நிகழ்ந்தன.
ஒரு கிராமத்தில் குறுக்குக் கட்டோடு குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணை இழுத்துச் சென்றதை பொதுமக்கள் பலர் கண்டுள்ளனர்.

வன்னியில் இராணுவம் தாக்குதலை தொடங்கிய காலத்திலிருந்து மன்னார் களமுனை பகுதியிலிருந்து நாளுக்கு நாள் பத்து வரையிலான புலிகளின் உடல்கள் வந்த வண்ணமே இருந்தன. இதனால் விரக்தியடைந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விடுதலைப்புலிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு தமது உயிரைக் கொடுக்கவும் அஞ்சவில்லை. ஆட்சேர்ப்பிற்கு வந்த விடுதலைப்புலிகளின் முன்னால் மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு தாய் எரிந்த சம்பவமும் இடம்பெற்றது.

பல புலி உறுப்பினர்கள் முன்பாக பெற்றோர்கள் மண்ணை வாரியள்ளி எறிந்து திட்டினர். இதன் எதிரொலியாகவே புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் இறந்த போது, ‘மக்கள் விட்ட கண்ணீர் வீண் போகவில்லை’ என்று மக்கள் சுவர்களில் எழுதியிருந்தனர். நாட்கள் செல்லச் செல்ல பிள்ளைகளைத் தடுக்கும் பெற்றோருக்கு புலிகளின் ஆயுதங்கள் பதில் சொல்லத் தொடங்கின. இறுதிக் காலங்களில் விடுதலைப்புலிகள் மிருகங்கள் போன்று நடந்தனர். பொதுமக்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கியது இதுதான் முதற்தடவையல்ல. புலிகளின் பரிணாம வளர்ச்சியில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆட்சேர்ப்பின் போது பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தடுக்க வந்த பெற்றோரினது கால்களில் சுட்டும் உள்ளனர்.



ஆட்பிடிப்பின் வேகமானது வன்னியிலே ஒரு குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒரு காலத்தில் புலிகளால் துரோகிகள் என்று அழைக்கப்பட்ட வீடுகளிலும் ஆட்சேர்ப்பு இடம்பெற்றது. இவ்வாறு வலுக் கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்களுக்கு இறுதிக் காலத்தில் ஐந்து நாட்கள் மட்டும் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டது. பல புலி உறுப்பினர்கள் இராணுவத்தின் முன்னகர்வை எதிர்க்காது ஆயுதங்களை தமது நிலைகளிலேயே வைத்து விட்டு ஓடிவிடுவர். இயக்கத்தை விட்டு இவ்வாறு ஓடிவந்தவரை தேடிப்பிடிப்பதற்கென புலிகள் சிறிய படையணி ஒன்றையும் நியமித்து வைத்தனர்.

இங்கு புதுக்குடியிருப்பில் நடந்த ஒரு கோரமான சம்பவத்தை குறிப்பிட வேண்டும். புலிகளால் பலவந்தமாக பிடிக்கபட்ட 60 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பதுக்குடியிருப்பின் புலிகளின் முகாமிலுள்ள ‘கெண்டைய்னர்’ இல் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேளையில், இலங்கை விமானப்படையின் விமானத் தாக்குதலில் அனைவருமே மாண்டு போனதாக சரணடைந்த புலி உறுப்பினர் ஒருவர் கண்ணீர் மல்க கூறினார். இதன் பின்னர் அவர்களது சிதைந்த உடல்கள் ‘புல்டோசர்’ கொண்டு குழிதோணடி புதைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப்புலி உறுப்பினரான தராசு என்பவர் பல முறைகேடான விதத்தில் பெண்பிள்ளைகளைப் பிடித்தது புலிகளின் சில பொறுப்பாளர்களுக்குத் தெரிய வந்தது. இவரைப் பிடிக்க இரண்டு புலி உறுப்பினர்கள் சென்ற போது, அவர் அவர்களது ஆயுதங்களைப் பறித்து, வந்தவர்களையும் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இறுதி நேர ஆட்பிடிப்பானது 2009 ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை இடம்பெற்றது. இறுதிக் காலங்களில் பலவந்தமாக பிடித்துச் செல்பவர்களுக்கு அணிவதற்கு பயிற்சி முகாம்களில் உரிய ஆடைகள் இன்றி, படுக்கைக்காக பயன்படுத்தும் போர்வைகளை வெட்டி காற்சட்டைகள் தைத்து பயிற்சியில் ஈடுபட வைத்தனர். பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்கள் பயிற்சி எடுக்க மறுப்பார்களாயின் அவர்களின் தலைமுடி ஒட்ட வழிக்கப்பட்டு ‘வெளவால்’ படையணியில் சேர்க்கப்படுவர். இப்படையணி களமுனைக்குச் செல்வதில்லை. ஒரு வேளை உணவுடன் நிலவறைக்குள் இருப்பதே இவர்களுக்கான தண்டனையாகும்.

நான் தடுப்புக் காவலில் இருந்த வேளையில் பல ‘வெளவால்’ படையணியினரை சந்தித்துள்ளேன்.
அத்துடன், புலிகளால் பிடிக்கப்பட்டவர்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி அவர்களது தலை முடிகள் ஒட்ட வெட்டப்பட்டன. இதனால் இறுதி யுத்தத்தின் பின், மொட்டைத் தலையை வைத்து புலிகளில் இணைந்தவரை இராணுவத்தினர் இலகுவாக இனங்கண்டனர். எத்தனையோ கொடுமைகள் மத்தியில் நடந்த ஆட்சேர்ப்பானது தமிழ் மக்கள் மனங்களில் ஆற்ற முடியாத வடுவாகவே இருந்தது. இதுவும் விடுதலைப்புலிகளின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும்.

ஆட்பிடிப்புகளில் புலிகளில் சிலர் தமது குடும்ப பலிவாங்கல்களையும் காட்டினர். பல பெற்றோர் தங்கள் பிள்ளை பிடிபட்டால் மற்றையவர்களின் பிள்ளைகளை ஏன் பிடிக்கவில்லை எனக் கேட்டு அவர்கள் ஒளிந்திருக்கும் இடங்களையும் காட்டிக் கொடுத்தனர். மேலும், புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து திருமணம் முடித்த பெண் கர்ப்பமாக இருந்த வேளையில், மீண்டும் அப்பெண் பிடிக்கப்பட்டு கர்ப்பிணியாக களம் சென்று இறந்த செய்திகளை வன்னி மக்கள் அறிந்திருப்பர்.

இன்று விடுதலைப்புலிகளின் போராட்டம் தோற்றபடியால் நாங்கள் நடந்தவற்றை கிளறிப் பார்க்கின்றோம். இதே போராட்டம் வென்றிருந்தால் கர்ப்பத்துடன் தமிழ் பெண் களம் சென்று விடுதலைக்காக களத்திலே மாண்டாள் என்று மார்தட்டிக் கூறியிருப்போம்.



இரண்டு சந்தர்ப்பங்களாலும், நடைபெற்றது கொலை என்பதை எவரும் நியாயப்படுத்த முடியாது. இந்த விடயங்கள் யாவும் இனிவரும் சந்ததிகளுக்கு ஒரு படிப்பினையாக அமையட்டும். சரணடைந்த போராளிகள் கூறியவற்றில் சிலவற்றையே இங்கு எழுதியுள்ளேன். தமிழரின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக மேலும் பல கொடுமைகளை எழுத எனது பேனா மறுத்து விட்டது.

தேசம் நெட்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல