- இந்தோனேசியாவில் சம்பவம்
திருமணமான நபரொருவருடன் முறையற்ற காதல் தொடர்பை வைத்திருந்ததற்காக 8 பேரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு பிரம்படி தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
பண்டா ஏக் மாகாணத்திலுள்ள அந்தப் பெண்ணின் (25 வயது) வீட்டிற்குள் பிரவேசித்த 8 ஆண்களைக் கொண்ட குழு, அந்தப் பெண்ணையும் அவருடன் இருந்த 40 வயது ஆணையும் பிடித்து அடித்து உதைத்துள்ளனர்.
அந்தப் பெண்ணும் அவருடன் பிடிபட்ட ஆணும் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டிய அந்தக் குழுவினர், அந்த ஆணை மரத்தில் கட்டி வைத்த பின் அந்தப் பெண்ணை திரும்பத் திரும்ப பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதன்பின் அவர்கள் இருவர் மீதும் சாக்கடை நீரை அள்ளி அந்தக் குழு வீசியுள்ளது. தொடர்ந்து மேற்படி பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற அந்தக் குழுவினர், அந்தப் பெண் திருமணத்திற்கு அப்பாலான உறவை பேணி மத சட்டத்தை மீறியுள்ளதாக முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 13 வயது சிறுவன் ஒருவன் உட்பட 3 ஆண்கள் கைதுசெய்யப்பட்டனர். அதேசமயம் அவர்களது சகாக்களான ஏனைய ஐவர் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மதச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், அந்தப் பெண்ணும் அவரது காதலரும் 9 க்கு மேற்பட்ட பிரம்படிகளை எதிர்கொண்டுள்ளனர்.
அந்தப் பெண்ணை பாலியல் வல்லு றவுக்குட்படுத்தியவர்களும் அதே எண்ணிக்கையான பிரம்படிகளை எதிர்கொண்டுள்ளனர்.
தப்பிச் சென்றுள்ள ஏனைய ஐவரையும் பொலிஸார் தொடர்ந்தும் தேடிவருகின்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக