புதன், 30 ஜூலை, 2014

ஸ்டெம்செல் சிகிச்சையால் புற்றுநோய்க்கும் தீர்வு

“புற்றுநோய் என்றாலே அனைவருக்கும் ஒரு இனம்புரியாத பயம் எழும். புற்றுநோய் பற்றிய சில விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால், புற்றுநோய் பற்றி நாம் பயப்படத் தேவையிருக்காது. மேலும் துரதிர்ஷ்டவசமாக புற்றுநோய் எம்மைப் பாதித்தாலோ, எமது உறவினர், நண்பர்களுக்கு ஏற்பட்டாலோ அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றி அறிந்திருப்பின், அது குறித்த பயம் குறைய வாய்ப்புகள் உண்டு.” எடுத்த எடுப் பிலேயே, புற்றுநோயும் ஒரு சாதாரண நோயைப் போன்றதே என்றும், அதற்கான விளக்கங்கள் பெற்றி ருந்தால் பயப்படத் தேவையில்லை என்றும் எமக்குள் நம் பிக்கை விதை விதைக்கிறார் டொக்டர் பரத் ரங்கராஜன். இவர், கோவையில் இயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற பல் நோக்கு சிறப்பு மருத்துவ மனையான கோவை மெடிக்கல் சென்டர் எண்ட் ஹொஸ்பிட்டல் - சுருக்கமாக கே.எம்.சி.எச்.இன் புற்று நோய் மருந்தியல் சிகிச்சையில் சிறப்பு நிபுணராகச் சேவையாற்றுகிறார். அவருடனான சந்திப்பு உங்களுக்காக...



புற்றுநோய் என்றால் என்ன என்பதை விளக்கிக் கூறுவீர்களா?

சுருக்கமாகச் சொன்னால், நம் உடல் உறுப்புகளுக்குள் வளரும் செல்கள், வழக்கத் துக்கு மாறாக வளர்வதே புற்றுநோய் எனப்படும். அதாவது, நம் உடலினுள் சுவாசப் பை, இரைப்பை, இதயம் எனப் பல உறுப்புகள் இருக்கின்றன. இவற்றின் செல் கள் சீராக வளர்வது இயற்கையானது. அப்படி வளரும்போது, அவை, அவற் றின் பணிகளைச் சீராகச் செய்து கொண்டிருக்கும். இதில், ஏதேனும் ஒரு உறுப்பின் செல், வழக்கத்துக்கு மாறாக, அதிகமாக வளரு மேயானால், அங்கு கட்டிகள் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு தோன்றும் புற்றுக் கட்டிகள், அவை தோன்றும் உறுப்புகளைக் கொண்டு சுவாசப் புற்றுநோய், மார்பகப் புற்று நோய், இரைப்பைப் புற்றுநோய் என வேறுபடுகின்றன. மேலும், ஒவ்வொரு உறுப்பிலும் வளரும் புற்றுநோய் செல் களின் வகைகளை வைத்து ‘ஸ்மோல் செல்கேன்சர்’, ‘அடினோ காஸினோமா’, ‘ஸ்க்யூமாஸ் செல் காஸினோமா’ எனப் பலவகைகளாகப் பிரிக்கலாம். இவ்வாறு, உள்ளங்கால் முதல் உச்சந்

தலை வரை புற்றுநோய் ஏற்படலாம். இவ்வாறு ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் புற்றுநோய்களுக்கு தனிப்பட்ட காரணிகள் இருக்கலாம். அத்துடன், அவற்றுக்கான அறி குறிகளும் வேறுபடலாம்.

இவ்வாறு ஒருவருக்குப் புற்றுநோய் தோன்றுமிடத்து, எந்த உறுப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தப் புற்றுநோயின் வகையையும், அந்த உறுப்பு எந்தளவிற்குப் பாதிக் கப்பட்டிருக்கிறது என்பதையும் அவரும், அவரது உறவினரும் தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.

புற்றுநோய் எந்த இடத்தில், எந்த அளவில் பாதித்திருக்கிறது என்பதை எவ்வாறு அறிய முடியும்?

புற்றுநோய் என்ற சந்தேகம் எழுந்து விட் டதுமே ‘பயொப்ஸி’ எனப்படும் பரிசோதனை செய்யப்படும். அதைக் கொண்டு, என்ன வகையான புற்றுநோய் பாதித்துள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். அது எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதைக் கண்டறிய ஸ்கேனிங் செய்யப்படும். இந்த ஸ்கேனிங்கின்போது, குறிப்பிட்ட ஒரு இடத்தில்தான் புற்றுநோய் பரவியிருக்கிறதா அல்லது வேறெங்கும் பரவியிருக்கிறதா அல்லது பரவுவதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு அறிந்து கொள்வதன் மூலமும், நோயாளியின் உடல் நிலையானது சிகிச்சைகளைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு ஆரோக் கியமாக இருக்கிறதா என்பன போன்ற பல காரணிகளின் அடிப்படையிலேயே அவர் களுக்கான சிகிச்சைகள் தெரிவுசெய்யப்படும்.

முன்பு, எக்ஸ்ரே, அல்ட்ராசௌண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன் போன்றவை மூலமே நோய்களை அறிய முடிந்தது. தற்போது எமது மருத்துவமனையில் அதிநவீன ‘பெட் ஸ்கேன்’ (PET Scan) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது ஒரு விசேட திரவத்தை உடலினுள் செலுத்தியபின் ஸ்கேன் செய்யப்படும். இவ்வாறு செய்யும்போது, அந்தத் திரவமானது, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பரவி, உடலில் எங்கெங்கெல்லாம் புற்றுநோய் இயங்கு நிலையில் இருக்கிறதோ அந்தந்த இடங் களைத் துல்லியமாக, ஒரே ஸ்கேனில் காட்டிவிடும். இது, நோய்ப் பரம்பரையும், நோயின் தாக்கத்தின் அளவையும் அறிந்து கொள்ள இன்றியமையாத ஒரு மருத்துவத் தொழில்நுட்பமாகும்.

உடல் உறுப்புப் புற்றுநோய்க்கும் இரத்தப் புற்றுநோய்க்கும் வித்தியாசங்கள்?

‘சொலிட் டியூமர்ஸ்’ மற்றும் ‘ப்ளட் ரிலேட்டட் கென்சர்’என்பவை பற்றியே நீங்கள் கேட்கிறீர்கள். சொலிட் டியூமர்ஸ் எனப்படுவது, குறிப்பிட்ட உடல் உள்ளுறுப்புக்களில் தோன்றக்கூடிய புற்றுநோய்க் கட்டிகள். இரைப்பைப் புற்று நோய், கர்ப்பப்பை புற்று நோய், மார் பகப் புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட உள்ளுறுப்பில் வளரும் புற்று நோய்கள் சொலிட்டியூமர்ஸ் வகையில் அடங்கும். இரத்தம் மற்றும் அது சார்ந்த நுண்ணுறுப் புக்களில் தோன்றும் ‘லுக்கேமியா’, ‘லிப் போமாஸ்’ போன்ற புற்றுநோய்களை ப்ளட் ரிலேட்டட் கென்சர் என்ற வகையில் அடங்கும். இவற்றில், சொலிட் டியூமர்ஸ் வகையான புற்றுநோய்களை கதிர்வீச்சு, சத் திர சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலமான சிகிச்சைகள் மூலமே குணப்படுத்த முடியும்.பொதுவாக, கதிர்வீச்சு சிகிச்சைகள் என்றாலே, மின்சாரத்தை உடலில் பாய்ச்சுவது என்ற எண் ணம் மக்கள் மனங்களில் உள்ளது. ஆனால், அது தவறானது. ஒளி மூலமான, கண்ணுக்குப் புலப்படாத கதிர்களை உடலுக் குள் செலுத்தி, புற்றுநோய்க் கட்டிகளை அழிப்பதே கதிர்வீச்சு சிகிச்சை என்பதை வாசகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரத்தப் புற்றுநோய்களைப் பொறுத்த வரையில், மருந்துகள் மூலமான சிகிச்சைகளே போதுமானது. எனினும், நோயின் ஆரம்ப காலத்திலேயே அதாவது, முதல் நிலையி லேயே நோயை அறிந்துகொள்ள முடிந்தால், கதிர்வீச்சு, சத்திர சிகிச்சை அல்லது மருந்துகள் என ஏதேனும் ஒரு சிகிச்சை மூலமே குணப்படுத்திவிட முடியும். நோய் இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு, மூன்று சிகிச்சைகளையுமே வழங்கவேண்டியிருக்கும். நான்காவது நிலையில் உள்ளவர்களுக்கு, அதாவது உடல் முழுவதும் புற்றுநோய்க் கட்டிகள் பரவியிருப்பவர்களுக்கு நோயை குணப் படுத்த முடியாது எனினும், கீமோதெரபி மூலம் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து, நோயாளியின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், தரமான வாழ்க்கை வாழவைக்கவும் முடியும்.

சிலர், கீமோதெரபி வலி தரும், உடலில் எரிச்சலை உண்டாக்கும் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் இவை தவறான எண்ணங்கள். எந்தவொரு மருந்துக்கும் பக்கவிளைவுகள் உண்டு. அதுபோலவே, கீமோதெரபியிலும் கொஞ்சம் முடி கொட்டு தல், வாய்ப்புண் ஏற்படுதல் போன்ற சிறு சிறு பக்க விளைவுகள் உண்டாகும். ஆனால், தகுதியான கீமோதெரபி நிபுணர்கள் அந்தப் பக்கவிளைவுகளையும் குணப்படுத்தி விடு வார்கள்.

புற்று நோயாளர்களுக்கு எம்மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?

புற்றுநோயைப் பொறுத்தவரையில் மூன்று முக்கிய சிகிச்சைகள் இருக்கின்றன. முதலாவது புற்றுநோய் அறுவை சிகிச்சை. அடுத்தது ‘ரேடியோ தெரபி’ எனப்படும் அணுக்கதிர் வீச்சு மூலமான சிகிச்சை. மூன்றாவது, ‘கீமோ தெரபி’ எனப்படும் மருந்துகள் மூலமான சிகிச்சை. இவற்றில் எந்த சிகிச்சை வழங்கப்படும் என்பது நோயாளிக்கு நோயாளி வேறுபடும். நம் மருத்துவமனைக்கு வரும் புற்று நோயாளர்களை, இந்த மூன்று சிகிச்சை நிபுணர்களும் பரிசோதிப்பார்கள். பின்னர், அந்த நோயாளிக்கு வழங்கப்படவேண்டிய சிகிச்சை குறித்து அவர்கள் கலந்தாலோசனை செய்வார்கள். அதன் பின்னரே அவரு க்கு என்ன மாதிரியான சிகிச்சை வழங் கப்படவேண்டும் என்பது குறித்துத் தீர்மானிக்கப்படும். மேலும், சிறந்த தாதியர் சேவை, சிகிச்சைக்குப் பின்னான உணவுக் கட்டுப்பாடு வழங்கக்கூடிய ‘டயட்டீஷியன்’, சிகிச்சைக்கு முன்னும் பின்னும் அவர்களது மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உள வியல் நிபுணர்கள் போன்ற அனைவரின் பங்களிப்பும், நமது மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு புற்றுநோயாளருக்கும் வழங்கப்படும். இவர்களின் பங்களிப்பே, புற்றுநோய் சிகிச்சையில் நமது மருத்துவ மனை சிறந்து விளங்கக் காரணம்.

இவை தவிர, அதிநவீன சிகிச்சையாக, ‘ஸ்டெம்செல் தெரபி’ அதாவது, ‘ஹெமெட் டோபொயட்டிக் ஸ்டெம்செல் தெரபி’ (Hemato poietic stem cells) எனும் அதி நவீன மரபணு சிகிச்சையும் உண்டு. ஹெமட்டோபொயட்டிக் ஸ்டெம்செல் என்பதை, இரத்தத்தின் மூலக்கூறு என்று சொல்லலாம். இந்த அணுவை மாற்றீடு செய்வதன் மூலம் சில வகைப் புற்று நோய்களை குணப்படுத்தலாம். இதில் இரண்டு வகையான முறைகள் உண்டு. ஒன்று, ‘ஓட்டோலோகஸ் ஸ்டெம்செல் ட்ரான்ஸ்ப்ளாண்ட்’. இதில், நோயாளியின் சொந்த மரபணுவையே மாற்றீடாக வைத்துச் செய்யப்படும் சிகிச்சை. குறிப்பிட்ட சில இரத்த நுண்பிரிவுப் புற்றுநோய்கள் மற்றும் குழந்தைகளுக்கு வரக்கூடிய புற்று நோய்களுக்கு, இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். இரண்டாவது, ‘அலோஜினிக் ஸ்டெம்செல் ட்ரான்ஸ்ப்ளாண்ட்’. இதன் போது, நோயாளிக்குப் பொருத்தமான மர பணுக்களைக் கொண்ட, ஆரோக்கியமான வேறொருவரிடமிருந்து மரபணுக்கள் பெறப்பட்டு, அதை மாற்றீடாக வைத்துச் செய்யப்படும் சிகிச்சை. பெரும்பாலும் உறவினர்களது மரபணுக்களே இதற்குப் பொருந்தும். லுக்கேமியா, இரத்தப் புற்றுநோய் என்பவற்றுக்கு இந்த வகையில் சிகி ச்சை அளிக்கப்படும்.

ஒருபோதும் இல்லாதவாறு, இன்றைய நாட்களில் பலரும் புற்றுநோயால் பாதிக்கப் படுகிறார்கள். இதற்கு என்ன காரணம்? எப்படி இதைத் தடுப்பது அல்லது வராமல் காப்பது?

புற்றுநோய் என்பது தற்போது நாடு களின் எல்லைகள் கடந்து, உலகம் முழுவதுமாக அதிகரித்து வரும் ஒரு நோய். இந்நோய் உண்டாவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது வாழ்க்கை முறை. இந் நாட்களில் பலரும் தம் வாழ்க்கைக்குக் கிஞ்சித்தும் தேவைப்படாத சில பொருட் களைப் பயன்படுத்தப் பழகியிருக்கிறார்கள். அவற்றுள் முதன்மையானது புகையிலை. புகையிலையை, வெற்றிலையோடும், சிக ரெட்டின் உள்ளீடாகவும், பீடியின் ஒட்டு மொத்த அமைப்பாகவும், பான் மசாலா, பான் பராக் போன்ற போதை தரும் பொரு ட்களாகவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்தப் பழக்கமானது, மிக இளம் வயதிலேயே, அதாவது பாடசாலை நாட்களிலேயே அவர் களைத் தொற்றிக்கொள்கிறது. இந்த ஒரு காரணமே, இன்றைய புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம்.

அடுத்தது உணவுப் பழக்கவழக்கம். முன் னைய காலங்களில், இன்று காணப்படுவது போல் பல்வகையான உணவுகள் இருக்க வில்லை. மக்கள் தம் பசிக்கேற்ப உணவுகளை உண்டு வந்தனர். மேலும், அந்நாட்களில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் உடல் உழைப்பு உள்ளவர்களாகவே இருந்தார்கள். இதனால், அவர்களது உடலில் கொழுப்பு சேராமல் தவிர்க்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய உணவுகளை எடுத்துப் பார்த்தால் அதில் அதிகப்படியான கொழுப்பு நிறைந்த - முக்கியமாக மிருகக் கொழுப்பு நிறைந்த - இறைச்சி வகைகளை அதிகமாக உட் கொள்கிறார்கள். இதனுடன், இன்றைய தலைமுறையினரின் வேலைகளும் பல மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு செய்யும் வேலைகளாக இருக்கின்றன. நேரம் கிடைத்தாலும் உடற்பயிற்சிகளைச் செய்ய முயற்சிப்பதில்லை. இவையனைத்தும் ஒன்று கூட, புற்றுநோய் ஏற்படுவதற்கு ஏதுவாக அமைந்துவிடுகின்றன.

எனவே, புகையிலையை எந்த வடி வத்திலேனும் உட்கொள்வதைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தெரிந்தெடுத்து உண்பதையும், சீரான உடற் பயிற்சிகளைச் செய்வதையும் பழக்கத்திற்குக் கொண்டு வந்தால், புற்றுநோயைப் பெரும் பாலும் தவிர்த்துவிட முடியும்.

இது குறித்து மேலும் உங்களுக்கு விபரங்கள் தேவைப்பட்டால், + 0091 94425 85252, 0091 82200 12455 என்ற எனது அலைபேசி எண்ணுடனோ அல்லது rameshv@kmch hospitals.com என்ற மின்னஞ்சல் முகவரி யுடனோ தொடர்பு கொள்ளலாம். 


Dr. பரத் ரங்கராஜன்

Dr. பரத் ரங்கராஜன்
MD (Internal Medicine), DM (Medical
Oncology), ECMO
Consultant Medical Oncologist, Hemato
Oncologist and Stem Cell Transplant Physician

 தொகுப்பு: ஏ.எஸ்.தேவராஜன்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல