ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

இன்றுமுதல் குடிக்கமாட்டேன்

சைக்கிள் பெடலை உற்சாகமாக மிதித்தான் மாயா. அவனது உடலின் ஒவ்வொரு செல்லிலும் சந்தோஷக்காற்று நுழைந்து அவனை உற்சாகப்படுத்தியது. இப்படியொரு மாற்றத்திற்காகத்தான் தான் இத்தனை நாள் ஏங்கித் தவித்ததாக அவனுள் எண்ணம் தோன்றியது.

ஆஸ்பத்திரி வாசலை நெருங்கியதும் சைக்கிளை விட்டு இறங்கிய மாயா, சைக்கிளை சாத்திவிட்டு உள்ளே சென்றான்.

வார்டுக்குள் நுழைந்ததும்அவனுக்கு வியர்த்தது. என்னவென்று விபரிக்க முடியாத ஒரு உணர்வுக் கலவை அவனை அலைக்கழிக்க செண்பகம் படுத்துக்கிடந்த கட்டிலை நெருங்கினான்.

வெறுமையாகக் கிடந்த அந்தக் கட்டிலைப் பார்த்ததும் நெற்றியில் சுருக்கங்களுடன், தாதிப்பெண்ணை நெருங்கினான்.

“இங்க செண்பகம்...”

“நீங்க அவங்களுக்கு என்ன வேணும்”

“அவ என்ட பொஞ்சாதி...”

“உங்களுக்கு ஆண் குழந்தை இப்ப ஐசியூவில வெச்சிருக்கு. மூணு நாள் கழிச்சி நீங்க எடுத்துப் போகலாம். இப்பபோய் பார்க்கலாம். வார்ட் நம்பர் எட்டுக்குப் போங்க...” தாதிப்பெண் கூறிய எதுவும் அவன் நெஞ்சில் பதியவில்லை. அவன் மீண்டும் செண்பகம் படுத்துக்கிடந்த கட்டிலையே திரும்பிப் பார்த்தான்.

“என்ட பொஞ்சாதி செண்பகம்”

“பிரசவத்தின் போது அவங்க இறந்துட்டாங்க.... அவங்க அம்மா பொடிய எடுத்துப் போயிட்டாங்களே...” என்றாள் சாதாரணமாக அவள்.

மாயா நொறுங்கிப் போனான். மின்சாரம் பாய்ச்சினாற் போல் அவனுக்குள் வேலை செய்த உற்சாக நரம்புகள் ஒருநொடியில் செயலிழந்து போக கண்கள் கலங்கின.

“உனக்கு ஆம்புள்ள புள்ள புறந்திருக்கு என்று மட்டுந்தானே மாரிமுத்து சொன்னான். செண்பகம் தவறிப்போனதப்பத்தி எதுவும் சொல்லலியே...” என்று நினைத்தவாறே வார்டை விட்டு வெளியேறிய மாயா சைக்கிளில் ஏறி செண்பகத்தின் தாய் வீடு நோக்கி விரைந்தான்.

எவ்வளவு பெரிய முட்டாள் நான்? எதற்காக நான் கலங்குகிறேன்? அவளுக்காகக் கண்ணீர் சிந்த எனக்கு என்ன அருகதை இருக்கிறது? அவளுக்காக நான் ஏதாவது செய்திருக்கிறேனா? ச்சீ... ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டேன்...?

மாயாவுக்குள் பல நூறு கேள்விகள் நெஞ்சு படபடத்தது. ‘கல்யாணமாகிய இந்த ஆறு வருட காலத்தில் அவளை நான் எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருப்பேன்” குற்ற உணர்வால் மனம் குறுகுறுத்தது.

குடிவெறியோடு அவளை அடித்ததும், மழையிலும் வெயிலிலும் அவளை வீட்டை விட்டு வெளியே இழுத்தெறிந்து வேதனை செய்ததும் காட்சிகளாக அவனது மனக்கண்ணில் விரிந்தன.

செண்பகம் பெயருக்கேற்றாற் போலவே அழகுடன் பிறந்தவள். சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். செண்பகத்திற்கு பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்துத்தான் மாயாவை கல்யாணம் செய்து வைத்தனர்.

கல்யாணமாகி ஒரு வருடம் அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்.

‘ஒரு வருடமாச்சே .. விசேசம் ஒன்றுமில்லையா? என்று ஊரவர்களும் உறவினர்களும் கேட்க ஆரம்பித்தனர்.

அங்கிருந்துதான் அவர்களுக்குள் பிரச்சினையும் ஆரம்பித்தது. செண்பகத்தில்தான் குறையிருப்பதாக நினைத்த மாயா அவளை வையத் தொடங்கினான். அவளில் காரணமில்லாமல் கோபப்பட்டான். அவளைப் பார்த்தாலே சிலபோது மாயாவுக்குப் பிடிக்கவில்லை.

அரிசி ஆலையொன்றில் கூலி வேலை செய்த மாயா குடிப்பழக்கத்துக்கு ஆளானான். உழைக்கும் பணத்தில் தினமும் குடித்துவிட்டு வந்து செண்பகத்தை அடித்தான் ‘உன்ட அம்மா வீட்டுக்குப் போடி’ என்று நேரங்காலமில்லாமல் அவளை வெளியே தள்ளிக் கதவை மூடினான்.

சில இரவுகளில் போதையில் அவளை வெளியே இழுத்தெறிந்து விட்டு மாயா தூங்கிவிடுவான். ஆனால் செண்பகம் விடியற்காலைவரை வாசற்படியிலேயே படுத்துக் கிடப்பாள். அவன் எது செய்தாலும் பொறுத்துக்கொண்டு அவனுடனே வாழ வேண்டும் என்ற மனம் அவளுக்கு அவளது அம்மா சொல்லிக் கொடுத்த பாடமும் அதுதான். ‘கஷ்டமோ நஷ்டமோ புருஷன் வீடுதான் இனி உனக்கு எல்லாமே.... சின்னச் சின்ன சண்டைகள் வரும்.

அதற்காக அழுதுட்டு அம்மாக்கிட்டே... வந்திராதே.. ஒரு பெண் வாழாவெட்டியா இருக்கிறதும் செத்துப் போறதும் ஒன்றுதான். புருஷன் வீட்டிலே இருந்து அவனோடதான் வெளிய வரணும். தனியா வாறதா இருந்தா பொணம்தான் வரணும்’ அம்மாவின் இந்த வார்த்தைகளை மீறி செயற்படும் சந்தர்ப்பங்கள் பல வந்தபோதும், ஏதேதோ சிந்தனைகள் அவளைக் கட்டிப்போட்டன.

இவர்களுக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதை அறிந்த இரு வீட்டுப் பெரியவர்களும் சமரசம் செய்துவைக்க முயற்சித்த போதுதான் குழந்தைப் பாக்கியம் இல்லாதது பிரச்சினைக்கான முக்கிய காரணம் என்பதை அறிந்து கொண்டு இருவரையும் வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இருவருக்குமே மலட்டுத்தன்மையோ, வேறெந்த குறைபாடோ இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. எனவே பெரியவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி ஆசி கூறினர்.

மருத்துவ பரிசோதனை ஓரளவுக்கு ஆறுதலை ஏற்படுத்திய போதும், மாயாவால் குடிப்பழக்கத்தை விடமுடியவில்லை. செண்பகத்துடன் அன்பாக நடந்து கொள்ள அவன் விரும்பிய போதும், அவனது குடிப்பழக்கம் அதற்குத் தடையாக இருந்தது. திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்த பின்னர்தான் செண்பகம் கருவுற்றாள். அந்தச் செய்தியால் மாயா மிகுந்த சந்தோஷப்பட்டான்.

எனினும், எப்போதும் போலவே குடிபோதையுடன் வந்து சட்டிப்பானைகளை உருட்டி, செண்பகத்தையும் வருத்தினான். +ரியிஜி அடி உதையால் கர்ப்பிணியாக இருந்த போது அவள் பலமுறை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டாள். இதனால் சில சமயங்களில் பொலிஸாரால் மாயா விசாரிக்கப்படவும் நேர்ந்தது. அப்போதெல்லாம் “நான்தான் கிணற்றடியில் சறுக்கி விழுந்தேன்” ‘பரணியில் சாமான்களை அடுக்கும் போது உரலிலிருந்து விழுந்தேன்’ என்றெல்லாம் செண்பகம் பொய்யான காரணங்களைக் கூறி அவனைக் காப்பாற்றி விட்டாள்.

“எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்று... உன்ட அன்ப நான் மறக்கமாட்டேன் புள்ள... “ என்று சிரித்துக்கொண்டே சொல்வான் மாயா.

“எனக்கு நம்பிக்கையிருக்கு நான் கும்புடுற சாமி எப்பவாவது ஒருநாள் உங்க மனச மாத்தும்...” என்று மட்டும்தான் செண்பகம் பதில் சொல்வாள்.

மாயாவின் இந்தப் போக்குகளை அறிந்து செண்பகத்தின் தாய் அவளை தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல எடுத்த முயற்சிகளும் பயனளிக்கவில்லை. “நீதானேம்மா சொன்னே... சாவோ வாழ்வோ புரூஸனோடதான் என்று... இனி நான் இந்த வீட்ட விட்டுட்ட வாறதா இருந்தா நீ சொன்ன மாதிரி புணமாகத்தான் வருவேன்...” என்று வெறுப்புடன் ஒரேயடியாக செண்பகம் மறுத்துவிட்டாள்.

தனது செல்ல மகளுக்கு தான் கூறிய உபதேசங்கள் எவ்வளவு முட்டாள்தனமானது. வாழ்க்கைக்குப் பெருத்தமற்றது என்பதை உணர்ந்த அந்தத் தாயுள்ளம் வேதனையில் துவண்டது. பிஞ்சு வயதிலேயே தகப்பனை இழந்த பிள்ளை, அம்மாவே உலகம் என்று இருந்தவள், புருஷனை அனுசரித்து வாழத் தெரியாமல் தொட்டதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு அம்மாவிடம் ஓடி வந்துவிடுவாள் என்ற எண்ணத்தினால்தான் செல்லாத்தா இப்படியொரு உபதேசத்தை தன் மகளுக்கு வழங்கியிருந்தாள்.

“சரி புள்ளே... நானும் உன் கூடவே இங்க இருந்துடறேனே...” என்று செல்லாத்தா கேட்டதற்கும் செண்பகம் மறுத்துவிட்டாள்.

“என் கஷ்டம் என்னோட போகட்டும். குடிச்சிட்டு வந்த அந்தாள் சத்தம் போடும் போது உன்னால பொறுத்துட்டு இருக்க ஏலாது... அதுவுமில்லாம அவரு உன்ன வேற தேவையில்லாம வம்புக்கு இழுப்பாரு.... நீ வீட்டிலேயே இருந்துரும்மா... என்னோட தலைவிதி நான்தான் கெடந்து அனுபவிக்கணும்... நினைச்சா வந்து எட்டிப்பார்த்துட்டுப் போற தூரம்தானே நானும் நீயும் இருக்கிறம்” என்று செண்பகம் ஒரேயடியாக மறுத்துவிட்டாள். தன் மகளின் தேகாரோக்கியத்திற்காகவும், அவள் எந்தவிதக் கெடுத்தலுமின்றி வயிற்றுச்சுமையை இறக்கிவிட வேண்ம் என்றும் தன் இஸ்ட தேய்வங்களை வேண்டிக் கொள்வதைத் தவிர செல்லாத்தாவினால் முடியுமானது எதுவுமிருக்கவில்லை.

கடவுளிடம் பாரத்தை சுமத்தியவளாகத்தான் செண்பகம் ஒவ்வொலரு நாளையும் கடத்திக் கொண்டிருந்தாள். மாயா குடிப்பக்கத்தை விட்டு திருந்தி வாழ வேண்டும் என்றுதான் அவள் கடவுகளை பிரார்த்தித்தாள். தான் அளவு கடந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் கணவன்தான் தனக்கு யமனாவான் என்று அவள் ஒரு நோடியும் நினைத்திருக்கவில்லை.

அன்று- மணக்க மணக்க அவனுக்குப் பிடித்த விநால் மீன் கறியுடன் கடுசோற்றைப் பரிமாறிக்கொண்டிருந்தாள். செண்பகம் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அவள் தனது பெரிய வயிற்றுடன் அவனுக்கு முன்னால் கால்களை நீட்டி அமர்ந்திருந்தாள். அழகான அவளது முகம் அணையப் போகும் மெழுகுவர்த்தி போன்று பிரகாசித்தது. நிறைமாதமாக இருக்கும் மனைவியின் அழகு முகத்தை ரசிக்கும் மனநிலையில் அவனில்லை. முழு போதையில் இருந்த அவனது கண்களில் எப்படித்தான் அந்தத் தலைமுடி சிக்கியதோ... “என்ன சாப்பாடு இது.... கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா உனக்கு... இன்டக்கி முடி சோறு... நாளைக்கு...” என்றவாறு சோறு இருந்த பீக்கானை தூக்கிவீச அது செண்பகத்தின் வயிற்றில்பட்டு விட்டது.

பீங்கான் வயிற்றில்பட்ட உடன் அவளுக்கு எந்த வலியும் விளங்கவில்லை. சில மணி நேரங்கழித்துத்தான் அவளுக்கு இடுப்பு வலியெடுத்தது. அவள் தாங்கமுடியாத வேதனையில் துவண்டு துவண்டு சரிந்த போதுகூட எந்தவித சலனமுமில்லாமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். மாயா, வீட்டைவிட்டு வெளியேறி சத்தமிட்டு அவள் அழுத போதுதான் அயளவர்கள் ஓடிவந்து அவளை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். பொழுது விடிந்த பின்னர்தான் செண்பகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பது மாயாவுக்குத் தெரியும்.

இரண்டு மூன்று வாரங்களுக்கு மேலாக ஆஸ்பத்திரியில் இருந்த அவளை இரண்டு தடவைகள்தான் மாயா சென்று பார்த்தான்.

ஒவ்வொரு சம்பவங்களும், நினைவுகளும் கண்களுக்குள் நெருப்பாய் விரிந்து சுட மாயாவுக்கு முகமெல்லாம் வியர்த்தது. செண்பகம் இனி திரும்பக் கிடைக்கமாட்டாளா என்று அவன் மனம் ஏங்கியது.

“என்னங்க... நான் உண்டாயிருக்கேன்... இப்ப மூணு மாசமிருக்கும்..” என்று ஒரு விடியற்காலையில் சிவி சிங்காரித்து சிரித்த முகத்துடன் செண்பகம் சொன்னது இன்னமும் அவன் நெஞ்சில் நிறைந்திருந்தது.

தன்னை மறந்து அவளைத் தூக்கி அணைத்து உச்சி முகர்ந்த போது அவள் கண்கள் கலங்கினாள்.

“ஏன் புள்ள அழுவுற.. இப்பதான் நம்ம பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைச்சிட்டுதே...” “இல்லிங்க... இப்பதான் பிரச்சினையே ஆரம்பிக்கிற மாதிரி தோணுது. நீங்க இப்பிடி குடிச்சிக்கிட்டேயிருந்தா... நம்ம புள்ள எதிர்காலம் என்னாவும்... எனக்குப் பயமாயிருக்கு...” “நீ சொல்லுறது நியாயம்தான் புள்ளே... இந்தப் பாழாய்ப்போன பழக்கத்தினால் உன்னையும் நான் கஷ்டப்படுத்தறேன். இனி அப்பிடி ஒன்றும் நடக்காது புள்ளே... சத்தியமாய்ச் சொல்றேன் இன்டயிலிருந்து நான் குடிக்கமாட்டேன்.... நம்ப புள்ளய நல்லா வளர்த்து ஆளாக்கணும்... இனி என் எண்ணமெல்லாம் அதப்பத்தித் தான். என்ன சரியா” என்று காவிப் பற்களைக் காட்டிச் சிரித்தான் அவன்.

ஆனால் அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டுத் தான் வந்தான். சிரித்த முகத்து டன் வாசலில் நின்ற செண்ப கம் தடுமாறி வரும் மாயாவைக் கண்டதும் அழுதபடி வீட்டுக்குள் ஓடி மறைந்தாள்.

“சனியனே ஏன்டி என்னப்பாத்ததும் ஓடிவந்துட்டே...” என்று அவள் கொண்டையைப் பிடித்துக் கொண்டு கேட்டான் மாயா.

“உங்களுக்கிட்டே நான் என்னத்த கேட்டுட்டேன். இந்தப் பழக்கத்த விடச் சொல்லித்தானே கேக்கிறேன்...”

“நீ யாருடி எனக்குச் சொல்ல.... மூதேவி நீ செத்து தொலைஞ்சாதான்டி எனக்கு நிம்மதி” அவளைத் தள்ளிவிட்டான்.

மாயா செண்பகத்தின் தாய் வீட்டை நெருங்கிய போது அழுகுரல் வீதிவரை கேட்டது. ஆண்களும் பெண்களும் முற்றத்தில் நிறைந்திருந்தனர். எல்லோரையும் அடித்துத் தள்ளிக்கொண்டு மாயா உள்ளே சென்றான்.

செண்பகம் மலர் மாலைகளுக்கிடையே அமைதியாக உறங்கிக் கிடந்தாள். அந்தக் கோலத்தில் அவளைப் பார்த்ததும் அவனையும் மீறி ‘செண்பகம்’ என்று கூவினான் மாயா.

“அடப்பாவி அவள் நிம்மதியா வாழத்தான் விடல.... பிணமாகக்கிடக்கும் போதும் ஏன்டா வந்து தொல்லை பணறே...” என்று செண்பகத் தின் பெரிய தாய் ஒருத்தி ஒப்பாரி வைக்க அங்கிருந்த ஆண்கள் சிலர் அவனை பிடித்து வெளியே தள்ளினனர்.

“ஐயோ செண்பகம்.... என்ன மன்னிச்சிரும்மா.... இண்டயிலயிருந்து சத்தியமா நான் குடிக்கமாட்டேன். தாயி” மாயா ஓலமிட்டான்.

அவனது அழுகையை அங்கு யாரும் பொருட்படுத்தவில்லை. நாலைந்து பேர இழுத்துவந்து அவனை வீதியில் தள்ளிவிட்டனர்.

மண்ணில் புரண்டு அழுதான் மாயா “ஐயோ.. இந்தப் பாழாப்போன குடிப் பழக்கம் என்ர கண்ணை மறைச்சிட்டுதே... செண்பகம் தாயே... என்னை அநாதை யாக்கிகிட்டியம்மா” வெறிகொண்டவன் போலக்கத்தினான் மாயா.

சில நொடிகளில் அங்கிருந்து மறைந்தான். மண்ணில் புரண்டு அழுத அவன் திடீரென எழுந்து செல்வதைக் கண்ட சிலர் பலவாறு முணுமுணுத்துக்கொண்டனர்.

“இவனெல்லாம் எங்க திருந்தப் போறான்...”

“இப்ப பாருங்க... குடிச்சிட்டு வந்து கத்துவான்” என்ற குரல்களைத் தொடர்ந்து மாயாவைப் பற்றிய சலசலப்புக்கள் மாறி மாறி ஒலிக்க ஆரம்பித்தன. வழமையாக சாராயம் அருந்தும் தவறணைக்குள் மாயா நுழைவதைக் கண்ட குடிப்பழக்கதால் கூட்டாளியான சிலர்.

“அட பொஞ்சாதிய இழந்த கவலையில குடிக்க வாறான்பா... நம்ப மாயா” என்ற படி “வா மச்சான்” என்று வரவேற்றனர்.

“ஏன்டா இப்பிடி குடிச்சி மத்தவங்கள சாகடிக்கிறங்க...” என்று கத்திக் கொண்டே மாயா அவர்களைத் தாக்கினான். சிலர் பயத்தில் எழுந்து ஒடினர். ஆத்திர மேலீட்டால் சாராயத் தவறணையையும் அவன் சேதப்படுத்தினான். இடையிடையே “செண்பகம்” என்று கூவினான்.

எதையோ சாதித்துவிட்டாற்போல அவனது மனம் ஆறுதலடைய மீண்டும் செண்பகத்தின் தாய் வீடு நோக்கி ஓடினான் மாயா, செண்பகத்தின் உடலை பாடையில் கிடத்தி நாலுபேர் தூக்கத் தயாராகிக் கொண்டிருந்தனர். ஓடிவந்த மாயா அவர்களில் ஒருவனைத் தள்ளி விட்டு தானும் தாங்கினான்.

ஏறாவூர்

ஸர்மிளா ஸெய்யித்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல