கசிப்புக்கு அடிமையாகும் தகப்பனுக்கு எந்த நாளும் தலைகெட்ட வெறி என்றாலும், பணியகக் கணக்கு லயத்திலே வாசம் செய்யும், எந்தத் தொழிலுக்கும் லாயக்கில்லாத சோம்பேறியான ‘தரகு’ வேலை பார்க்கும் முனியாண்டியின் வசியப்படுத்தும் முணுமுணுப்பு மந்திரம் பார்வதியின் காதுகளிளே உருக்கிய கொதிக்கும் வெள்ளித் துகள்களாக நிறைந்து மரண அவஸ்த்தை காட்டும் பொழுதுதான் தனக்குச் சிலுவை அறையப் போகும் துயரச்சம்பவம் இன்னும் பக்குவப்படாந் எலும்புத் தோலுமாக வாடிவதங்கிக் கிடக்கும் அந்தப் பேதைப் பெண்ணுக்குப் புரிய ஆரம்பித்தது.
காலையிலிருந்து அந்தி வரை தேயிலை மலையிலே கொழுந்தெடுத்துக் கொழுந்தெடுத்து பசியால் துவண்டு போய்வந்ததாய்க்கு, கிடந்த கொஞ்சம் அரிசி மணியைக் கழுவி உலையிலே போட்டுவிட்டு, இன்னும் சின்னச் சின்ன வேலைகளைத் தாய் வேலம்மாவுக்குச் செய்து கொடுத்துவிட்டு “லயத்து” அறைக்குள் கால் வைக்கும் பொழுதுதான் “லயக்” காம்பிறாவின் ஓரத்திலே, அந்தக் கும்மிருட்டிலே குந்திக்கொண்டு, “கசிப்பு” போத்தலை பதம் பார்த்தவாறு தகப்பன் மாடசாமியும், “தரகன்” முனியாண்டியும் இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பதை கூர்ந்து நோக்கி, காதுகளைத் தீட்டியவள் அப்படியே ஆடாமல், அசையாமல் அந்த இருட்டிலே சிலையாக நின்று கொண்டு அவர்களது சூழ்ச்சி வலைப் பின்னலுக்குள் சங்கமம் ஆகிறாள். லயத்துக் குசினிக்குள் மட்டும் குப்பி விளக்கொன்று எண்ணெய் இல்லாமல் “திரி” கருகிப் போய் சாகப் போகும் கிழவியின் கடசி மூச்சுப் போல் மின்மினிப் பூச்சாக மினுங்குகிறது. இதைத் தவிர ‘லயம்’ முழுவதும் ஒரே இருட்டு மயந்தான். அந்த இரட்டிலே தன்னைப் பற்றிய பேச்சே அசை போடுவதை காதுகளைத் தீட்டியவாறு கேட்டுக் கொண்டு நிற்கிறாள் பார்வதி.
“டேய் மாடசாமி நான் சொல்ற சங்கதிய ஒரு பிசகுமில்லாம அம்புட்டையும் காதில வாங்கிப் புட்டு. உம்மவள் பார்வதிய கொழும்பு முதலாளி சில்வா ஐயாக்கிட்ட வேலைக்கு அனுப்புற முடிவ உடனே பார்க்கணும் புரியுதா. ஆமா மாடசாமி உன்னைத்தான் கேக்கிறன். இந்த லயத்தில பசியும் பட்டினியுமா நீங்கத்தான் ஜீவியம் நடத்திக்கிட்டு வர்றிங்க, அந்தப் பிஞசுக் கொழுந்தையாவது சுகமாக வாழவைக்க வேணாமா? அவளுக்கும் நிம்மதியான வாழ்வுகிட்டும் உங்களுக்கும் துட்டுப் புரளும் இல்லையா மாடசாமி”, “ஆமா! ஆமா! நீ சொல்ற நூத்துக்கு நூறு அம்புட்டும் நிஷந்தான். எண்டாலும் அந்தப் பொட்டப் பொடிச்சி சம்மதிக்கணுமே. எம்பொஞ்சாதி வேலம்மா, மகளைப் பிரிஞ்சு வாழுவா அப்படி எண்டு என்னால் நினைச்சும் பார்க்க முயடியல்ல முனியாண்டி. வேலம்மா மலையிலே மாரடிச்சுப் போட்டு வர்ற நேரம் இந்தப் பொட்ட பொடிச்சுதானே, அடுப்பெரிய “தேயில மிலாரு” இருந்து, சட்டிபானையக் கழுவி, லயக் காம்புறா வாத்துப் பரவு செய்து, சமையலுக்கு அடித்தளமிட்டு அவளிற பாரத்தச் சுமக்கிற அந்தக் குட்டிதானே. அதுதான் முனியாண்டி என்ன செய்வதென்று புரிஞ்சிக்காமத் தவியாத் தவிக்கிறன்” “போடா விடயம் புரியாத பேய் மாண்டியே. அந்தச் சின்னக் குட்டி இஞ்ச இருந்து என்னத்தையா கிழ்ச்சிடப்போவுது.
இந்த ஊத்தலயத்தச் சுத்தி சேத்தில புரளுற எருமமாட்டு வாழ்க்கையைத்தானா நீயும் விரும்புறா அப்படி எண்டா இந்தக் கதைய நான் எடுக்கல்ல. என்ன உட்டு உடுசாமி, நான் வேற புள்ளங்களப் பாத்துப் புடிச்சிக்கிட்டுப் போறன். வாற அதிஷ்ட தேவதை காலில் போட்டு மிதிக்கிற உன்னிட்ட எம்புட்டுத்தான் கதைச்சாலும் அதப் புரிஞ்சிக்காமல் போனா நான் போறன் சாமி, ஆளவிடு”. “என்ன முனியாண்டி நான் ஏதோ கதைக்குச் சொன்னா டக்கெனக் கோபிச்சிக்கிற- சரி முயற்சித்துப் பாப்பம். மசியாட்டி தாய்க்கும், மகளுக்கும் செவிட்டையில நாலு போட்டா தானாக அடங்கிப் போறாவுக. சரி முனியாண்டி நீ சொல்ற மாதிரிக் காரியத்த பிசகு இல்லாம முடிச்சிக்கிடுவம்” “புரியுது, புரியுது இப்பதான் மாடசாமிக்கு ஞானம் பொங்கிக் குதம்பி வழிந்து நல்ல பாதையில வளமான வாழ்வுக்குக் கால்பதிக்க மனம் இடந்தருது இல்லையா மாடசாமி” “ஆமா, ஆமா! நீ புரிஞ்சிக்காம எதையும் உழராம எப்ப கூட்டிப்போவுறா. அட்வான்ஸ் நிறைய வாங்கித் தருவையா. அந்தப் பணக்கார ஊட்டுத் துரைச்சாள புள்ளையச்சரியாப் பார்த்துக்குவானா. உனக்கென்ன ஐயா ரெண்டு பக்கமும் துட்டு வெள்ள மாகப்புரளும்”. “போடாமாடசாமி பட்டுப் போன தேயிலமரமாக உண்ட வாழ்வு போகப் போடாது எண்ட கரிசனையால இந்தக் காரியத்தில துணியுறன். எண்ட கூட்டாளி “கவாத்து” வெட்டிய தேயிலமரக்கொழுந்தாக பளிச் செனச்சிலிர்த்து நிக்க வேணாமா? உம் பொஞ்சாதி வேலம்மாவையும் சவூதிக்கனுப்பி பணம் சம்பாரிக்க ஏதோ இருக்கிறதெல்லாம் சேத்து, போதாக்குறைக்கு கடனும் பட்டு புறக்கரோடு கொழும்புக்கனுப்பி வைச்சா, என்ன நடந்திச்சு தெரியுந்தானே.
பொஞ்சாதி அரபு தேசத்துக்குப் போகவுமில்ல, உண்ட கனவு பலிக்கவுமில்ல. புறக்கருக்கும், வெளியே அனுப்புறன் எண்டு ஏமாத்தின ஏசெண்டுக்கும், இன்னும் இன்னும் எவனுக்கெல்லாம் உடலத் தானம் செய்து, ஆறுமாதம் கொழும்பிலவெச்சு ஏமாத்தி, ஏமாத்தி அந்தத் தறுதலைகள் அம்புட்டுப் பேரும் ஆள்மாற உம் பொஞ்சாதி வவுத்தில புள்ளையச் சுமந்து கிட்டு வந்ததுதான் மிச்சம். எவனுக்கோ வம்புல முளைச்ச குட்டிதானே இந்தப் பார்வதிப் பொட்டா எல்லாத்தையும் கழுவி முழுகி திரும்பவும் ஏத்துக் கிட்டவன் தானே நீ. இளணிய எவறோ குடிக்க, கோம்பையச்சுமந்த ரோஷக்காரன் இல்லையா மாடசாமி நீ. ஆனா வேலம்மா பொடிச்ச இந்த நிலைமைக்குத் தள்ளிவிட்டது நீதானே. பேராசைப்பட்டு சும்மா லயத்தில சுத்தித்திரிஞ்சு தேயிலைக் கொழுந்தெடுத்த அப்புறாணிப் பொண்ண கொழும்பானுக்குக் கூட்டிக் கொடுத்தது எந்தக் கூறு கெட்டவனுக்கோ வம்புல புள்ளைய உண்டாகி இண்டைக்கு எலும்புத் தோலுமாகக் கிடக்காள் வேலம்மா” உள்ளுக்குள்ள போன “கசிப்பு வசியம்” முனியாண்டியைப் பழைய குப்பையைக் கிழற வைக்க, “ஆம்”, ஆமா! பழைய கும்பையைக் கிழறி, வெந்த புண்ணில வேல்பாச்சாத முனியாண்டி, அவளுக்குச் செஞ்ச பாவத்துக்கு எனக்குப் பிராயசித்தம் தேட நீதான் கைகொடுத்து உதவனும். பார்வதிப் பொடிச்சி வீட்டு வேலை செய்து கொழும்புச் சீமையில் சம்பாரிசுக்கு துட்ட அள்ளிக்கொட்டினா எண்ட பொண்டாட்டி வேலம்மாவ ராசாத்திபோல வெச்சிக்கிடுவன்.
நீதான் முனியாண்டி எனக்குக்கெதியா உதவி செய்யணும்” மாடசாமி வெறிமயக்கத்தில் வார்த்தைகளை தட்டுத் தடுமாறு வெளியேகக்க, “மாடசாமி நீ சொல்றமாதிரி கொழும்புச் சீமைக்கு பார்வதிப் பொடிச்சி வேலைக்கு போனா, துட்டென்ன எல்லாமே காலடியில் வந்து கொட்டிக்கிடக்கும். சில்வா முதலாளி கொழும்புச் சீமையிலே கொடிகட்டிப்பறக்கிற கோடிஸ்வரர் பார்த்தும்பாராம நமக்கு அள்ளிக் கொட்டுவாரு. நீத்தான் மாடசாமி உண்ட ரி!zதீlழி சரியான விடிவு காலம் புறக்கப்போவது. சரிமாடசாமி உம் மவளையும், பொஞ்சாதி வேலம்மாவையும் வசப்படுத்தி ஒருநல்ல முடிவு எடுத்திடு ஐயா. கெதியாக் கூட்டித்துப் போவம் பார்வதிய “கசிப்பு ஏறுமாறாக வயிற்றுக்குள் போக, நாக்குப் பிரண்டு பேச்சுத்தடுமாற தரகன் முனியாண்டி எழும்ப முடியாமல் எழும்பி தட்டுத் தடுமாறி நடந்து போக, மாடசாமி எந்த உணர்வும் இல்லாமல் பிணம் போல் லயத்து மூலையிலே முடங்கிக் கிடக்க, முனியாண்டி நடந்து போகும் காலடி ஓசையில் “லயத்து நாய்கள்” ஓங்காரச் சத்தங்கள் போட்ட வண்ணம் வெறிக் கூத்து ஆடுகின்றன.
சிலை போல் நின்று இந்தக் கொடுமையை சீரணிக்க முடியாமல், தாய் வேலம்மாவை நோக்கி ஓடிவருகிறாள் சிறுமி பார்வதி, லயத்துக் குசினிக்குள் ஏதோ வேலை செய்து விட்டு, சோர்வும், அசதியும், அடங்காத பசியும் வேலம்மாவை ஆட்டிப் படைக்க, தன்னை மறந்து குசினிக் காம்புறாவுக்குள் பிணம் போல் கிடந்தவளை பார்வதி, “அம்மாயி, அம்மாயி நான் செத்துப் போயிடுவன் தெரிஞ்சுக்கோ குடிக்கார அப்பன் என்ன கொழும்புச் சீமைக்குக் கொண்டுபோய் வீட்டு வேலை செய்ய சிங்கள முதலாளிக்கு விக்கப்போறானாம். நான் உசிரோடு இருக்கமாட்டன் செத்துப் போயிடுவன் அம்மாயி” இடியும், மழையும் பெய்யும் போது ஒன்றுமே தெளிவாகத் கேட்காத வானொலி நிகழ்ச்சி போல், அயர்ந்து தூங்கிக் கிடந்த தாய் வேலம்மாவுக்கு மகளின் வார்த்தைகள் எதுவென்று புரியாமல் குழப்பம் அடைந்து துணுக்குற்று எழுந்தவள், “என்னடி பார்வதி நீ சொல்ற ஒன்னுமே புரியல்ல” என்று வேலம்மா சுகாரித்துக் கொண்டு மகளைப் பார்த்துக் கேட்க, “அம்மாயி உம்புருஷனும், தரகன் முனியாண்டிப் பயலும் கசிப்பு வெளியில உழறுகிறானுகள் எண்டுதான் அம்மாயி நினைச்சன்.
புறகுதான் புரிஞ்சிக்கிட்டன் அம்மாயி என்னக்காசுக்கு கொழும்புச் சீமையில் வீட்டு வேலைக்கு விக்கப் போறானுகள் எண்டு. நான் நிஷமாகச் செத்துப் போயிடுவன் அம்மாயி நான் உன் புருஷனுக்குப்புறக்க இல்¨யாம். நீகொழும்பானுக்கு வம்புல என்னப் பெத்தாயாமே. ஏனம்மா இந்தப் பாவத்தப் புரிஞ்சிக்கிட்டா. நான் எதற்காக அம்மாயி உசிரோடு வாழணும்” மகள் பார்வதி கூறிய கூர்மையான நெருப் புவார்த்தைகள் வெலம்மாவின் செஞ்சைப் பிழந்து அவளைத் தீராத வேதனைக்குள் அமுக்கிவிட, அவள் மகளுக்கு என்ன பதில் செல்வதென்று புரியாமல் தவித்தாள். மகள் பார்வதி மீண்டும் மீண்டும் குலுங்கி அழுது மாய, கொஞ்சம் பதட்டத்தோடு துணிந்தவளாக தாய் வேலம்மா, “அந்தக் குடிகாரனுக ஏதோ பித்தத்தால புலம்புன கதைய, பார்வதிப் புள்ள நீ நிஷமெண்ணு நம்பிக்கிட்டு குழம்பிக்கிடக்கையா. போடி புள்ளம்மா, குடிகாரன் பேச்சு விடிஞ்சாத் தெரியும் பார்வதிக்குட்டி, நீ பேசாம சாப்பிட்டுத் தூங்கு என் கண்ணல்ல.
நான் உன்ன எங்கிட்டும் அனுப்பமாட்டன். செல்லக் குட்டி. என் உசிரு போன புறவதான் எதுவும் நடக்கும் புரிஞ்சிக்க தாயே” வேலம்மா தன் மகள் எல்லாவற்றையும் அறிந்து விட்டாள் என்ற பதட்டத்தில் உண்மைகளை மூடி மறைக்க கஸ்ரப்பட்டுப் பொய்வார்த்தைகளைக் கூறியதும், பார்வதிக்கு மீண்டும் சினம் பொங்கி வந்தது. “ஏன் அம்மாயி உண்மைய மூடி மறைக்கிறா. நான் கொழும்பு ஏசண்டுக்குப் பொறந்தது நிஷந்தானே”
“இல்லடி இல்லடி அவனுக குடிபோதையில பொய்சொன்னத்த நீயும் நம்பிக்கிட்டு மனதப் போட்டுக் குழப்பிக்காத பார்வதி மவ” கூறும் போதே ஒப்பாரி வைத்து அழுதுவிட்டாள் வேலம்மா.
சாப்பாடு வேண்டாமென்று கூறிவிட்டு, பார்வதி நித்திரைகொள்வது போல பாசாங்கு பண்ணயவாறு படுத்துக்கிடக்க, மற்றத் தம்பிகளான நான்கு சிறு ஆண் குழந்தைகளும் பசிக்களையால் நித்திரையில் மூழ்கிக்கிடக்க, வேலம்மாவும் மவள் பார்வதிக்கும் பக்கத்திலே கண்களை மூட, அவளுக்கும் பழைய நினைவுகள் எல்லாம் பளிச்செனப்படமாக ஓடுகிறது.
அந்தத் தேயிலைத் தோட்டத்திலுள்ள மற்றவர்களைக் கவரக்கூடிய அழகான ‘குட்டிகளில்’ வேலம்மா முதன்மைப் பெண்ணாக விளங்கினாள் தேயிலைத் தோட்டத்துக் காவல்கார கறுப்பையாவுக்கும், அவனது பொஞ்சாதி லட்சுமிக்கும் ஒரே பிள்ளையாகப் பிறந்தவள் வேலம்மா. பொங்கி வரும் பெரு நிலவாக பளிச்சென ஒளிகாட்டி, பார்க்கும் இளந்தாரிகளை தூண்டில் போட்டு இழுக்கும் வசீகரப் பெண்ணாக வலம் வந்த வேலம்மா, பதி மூன்று வயதிலே பெரிய மனிசியாகி, பதினெட்டு வயதிலே தோட்டத்திலே பேர் பதிந்து தேயிலைக் கொழுந்து நோண்டும் வேலைக்குப் போகத் தொடங்கினாள். அவளது “மோகினித்தனமான” மயக்கும் அழகிலே எத்தனையோ தோட்டத்து இளைஞர்கள் மதிமயங்கி அவளை வாரி அனைத்துக் கொள்ளத்துடித்தது என்னவோ உண்மைதான். ஆனால் காவல்க்காரன் கறுப்பையா கையிலே காவல் காக்கும் வைரம் பாய்ந்த நெடிய பொல்லை எடுத்துச் சுழற்றி லயத்தையும், மலைக்காடுகளையும் சுற்றி வந்தால் அடங்காத குழந்தைகளும் அடங்கிப் போகும். தோட்டத்துச் சனங்களுக்கு ஒரு இனம் தெரியாத பயமும், அச்சமும் கறுப்பையாவைக் கண்டால் ஏற்படுவது வழக்கம்.
நீண்டு பீப்பா வயிறும் தொந்தியும் உடம்புமாகப் பெருத்து, அடர்ந்த மயிர்க்கற்றையான நீண்ட மீசையோடு எந்தநேரமும் சிவந்த கொச்சிப் பழம் போன்ற கண்களோடு நெடிய வைரம் செறிந்த காவல்ப் பொல்லோடு ஆசான பாவனாக வலம் வரும் பொழுது தேயிலைத் தோட்டமே அந்தக் கம்பீரத்துக்குத் தலை குனிந்து கொள்ளும், கறுப்பையாவுக்குப் பயந்து வேலம்மாவை எல்லோரும் பயபக்தியோடு நோக்கினார்கள். வேலம்மாவுக்கு இருபது வயது நடக்கும் போது கறுப்பையா தனது மருமகன் முறையான மாடசாமியை வேலம்மாவுக்குக் கலியாணம் முடிச்சு வைச்சான். கலியாணம் முடிச்சு மூன்று வருஷங்களாக வேலம்மாவுக்கு ஒரு பூச்சி புழுவும் பிடிக்காத நிலையில் மாடசாமியும், கறுப்பையாவும் குழந்தைச் செல்வத்துக்கு ஏங்கித் தவித்த வேளையில் இரவு நேரம் தேயிலை மலையைச் சுற்றிக் காவல் செய்த வேளையில் கூடிய “மப்பு” வெறியில் மலைப்பள்ளத்திலே விழுந்து, உடல் சிதறி மரணத்தைத் தழுவிய பொழுது மாடசாமி அந்தக் குடும்பத்தை ஆட்டிப் படைக்கத் தொடங்கினான். வெளிநாட்டுக்கு வீட்டு வேலைக்குப் போகும் பெண்கள் கைநிறையப் பணத்தோடு திரும்பி வந்து சீரும் சிறப்புமாக வாழுவதாக, வெளிநாடான சவூதிக்குப் பெண்களை அனுப்பும் தரகண் மாடசாமிக்கு ஆசை வார்த்தைகளைக் கூற, மனைவி வேலம்மாவைச் சவூதிக்கு வீட்டு வேலைக்கு அனுப்பத்துணிந்தான். அவனது பேராசையின் விளைவாக இருந்த நகைகளைவிற்று, இன்னும் சிலரிடம் கடன் வாங்கி, தரகனோடு வேலம்மாவைக் கொழும்புக்கு அனுப்பிவைத்தான். அது முடியல்ல, இது இன்னும் சரிவரல்ல, வைத்திய சோதனை இன்னும் முடியல்ல, பாஸ்போட் விசாவந்தால் சவூதிக்கு உடனே போய்விடலாமென்று அந்த ஒன்று மேதெரியாத கிணற்றுத் தவளையான தேயிலைத்தோட்டத்து அப்பாவிப் பெண்ணான வேலம்மாவை கொழும்பிலே ஆறுமாதம் வைத்து ஏமாற்றி, ஏமாற்றி சவுதிக்கு அனுப்பும் ஏசண்டும், அவனது கூட்டாளிகளும் வேலம்மாலின் இளமையைச் சீரழித்து, பாழ்படுத்தி, நாசமாக்கி, அவள் தூண்டிலில் அகப்பட்ட மீன்குஞ்சாக சொல்லொணாத நகரவேதனை அடைந்தாள் கடைசியில் சவூதிக்குப் போகவுமில்லை. பணம் சம்பாரிக்கவுமில்லை சஞ்சலத்தை விலைக்கு வாங்கி, வயிற்றிலே நாலு மாதச் சுமையோடு தோட்டத்துக்கு வந்ததுதான் மிச்சம். தனது பேராசை செய்த மன்னிக்க முடியாத பாவச் செயலால் மனைவிக்கு இந்த நிலை வந்ததென்று மாடசாமியும் துடித்தே போய்விட்டான். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம் அவமானம் தாங்க முடியாமல் வேலம்மா தற்கொலை செய்ய முற்பட்ட வேளையெல்லாம் மாடசாமி அவளைத் தடுத்து நிறுத்தி அவளுக்கு ஆறுதல் கூறி அந்த அவமானச் சுமையைப் பாரம் எடுத்துக் கொண்டான்.
கொழும்பிலிருந்து வந்த தரகன் அந்தத் தேயிலைத் தோட்டத்துப் பக்கம் அதன்பிறகு எட்டிப் பார்க்கவேயில்லை. கூனிக்குறுகிய அவமானத்தால் எலும்புந்தோலுமாக வேலம்மா தோட்டத்து லயக்காம்புறாவுக்குள்ளே முடங்கிக்கிடந்தாள். தாய் லட்சுமியும் இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எலிப்பாசணத்தைத் தின்று கண்களை மூட, வேலம்மா எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டு, கொழும்பிலுள்ள எந்தப் போக்கிரிக்கோ உண்டாகிய அந்த “வம்புக் குட்டியைப்” பெற்றெடுக்கிறாள். அவள்தான் இந்தப் பார்வதி. அந்தத் தேயிலைத் தோட்டத்துக்கே பார்வதிப் பெண்ணின் பிறப்பு, துல்லியமாகவிளங்கும். எல்லாவற்றையும் மறந்தவளாக தேயிலைத் தோட்டத்திலே கொழுந்தெடுக்கப்புறப்பட்ட பொழுது, தேயிலை மலைக் கங்காணி இருந்து கொழுந்து நோண்டும் பெண்கள் வரைக்கும், ஏன் “கவாத்து” வெட்டும் ஆண்கள் வரைக்கும் குத்துக்கதைபோட்டு, கேவலமாக நையாண்டிச் செய்து வேலம்மாவை மேலும் மேலும் அவமானத்தால் தலை குனிய வைத்தார்கள்.
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அவள் வெறும் கல்லாக வாழ்ந்தாள். இந்த அவமானச் சின்னத்துக்குப் பிறகு மாடசாமி ஓயாத குடிகாரனாக மாறி வேலம்மாவுக்கு குஞ்சும் குரலுமாக நாலு ஆண் குழந்தைகளுக்குத் தாயாக்கினான். இவற்றையும் பார்வதிப் பொடிச்சிக்கு ஏற்படப் போகும் இக்கட்டையும் நினைத்து, அவளைத் தனது உயிரைக் கொடுத்தாலும் வீட்டு வேலைக்கு அனுப்பக்கூடாதென்ற உறுதியான வெறியோடு, தன்னை மறந்த நிலையில் பசிக் களைப்பினால் அயர்ந்து தூங்கிப் போகிறாள் வேலம்மா.
தாயின் குறட்டை ஒலி காதுகளில் வந்து ஓங்காரமாக நிறைய, பார்வதிப் பெண் மெதுவாகப் படுக்கையிலிருந்து எழும்பிக் கொண்டு தட்டுத்தடுமாறு இருட்டு லயத்துக்குள்ளிருந்து வெளியேறி மெதுவாகத் தேயிலை மரங்களை ஊடறத்துச் செல்லும் பாதையால் நடக்க ஆரம்பிக்கிறாள். நாய்களின் ஓயாத மரணக் கூச்சல்கள் தேயிலைத் தோட்டமெங்கும் வழிந்து நிறைய, வானத்தைத் தொட வளர்ந்து நிற்கும் சவுக்கு மரக் கிளையிலிருந்து “ஆந்தை” ஒன்று வாளால் அறுப்பது போல அவல ஒலியை எழுப்ப, குருட்டு வெளவால்கள் அங்கும், இங்கும் பறந்து போவது அவளது கண்களுக்குத் தெரிகிறது. இனி உயிரோடு இருப்பதில்லை என்ற உறுதியான முடிவுகளோடு அந்தத் தேயிலைத் தோட்டத்தை வளர்ப்படுத்தும் பெருத்த இரைச்சல் ஓசைகளோடு ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் பெரிய ஆற்றை நெருங்குகிறாள் பார்வதிக் குட்டி. அவளுக்கு எந்தப் பயமும் கிடையாது. அவளது உள்ளம் அந்த உறுதியான முடிவுக்கு எந்தச் சிக்கல்கள் எதுவுமில்லாமல் வந்துவிட்டது. இனி எதற்காக வாழவேண்டும்? நமக்கு இனிமேலும் ஒரு வாழ்வு தேவை தானா? தாயோ எவனுக்கோ கள்ளமாக உண்டாகி என்னைப் பெற்றெடுத்தவள். அவருக்கு உடந்தை இல்லை என்றாலும் நான் முகம் தெரியாத எவனுக்கோ பிறந்தவள் தானே! தகப்பன் என்று இதுவரை அழைக்கப்பட்டவன் அவருக்குத் தகப்பனாக நடித்தவன்தான். அந்த நடிகன் காசுக்காக என்னை விற்கப்பார்க்கிறான். இனிநான் எதற்கு வாழ வேண்டும். இப்படி எல்லாம் அந்தப் பிஞ்சுமனம் நினைத்திருக்கும்.
இனி இந்த உலகத்தில் இருப்பதில்லை என்ற இறுதி முடிவோடு அந்த மலைக்குன்றுகளைப் பிழந்து வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் பெரிய ஆற்றை நெருங்கி விடுகிறாள். அந்தப் பயங்கர இருட்டிலே அந்த மலைப்பகுதியும், மலையை அண்டி வளர்ந்து கிடக்கும் தேயிலை மரங்களும் கால் முளைத்த பூதங்களாகத் தெரிய, தனது தாய் வேலம்மாவை நினைத்து ஒருதரம் அழுது விட்டு திடீரென அந்த மலை இடுக்கிலே ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றிலே பாய்ந்து விடுகிறாள். பார்வதிக் குட்டியின் இந்தக் கோர மரணம் விடிந்ததும், கரையிலே ஒதுங்கிக் கொண்டிருக்கும் அவளது இறந்த உடலைக் கொண்டு முதன் முதல் காணும் ஒருவரால் வேலம்மாவுக்கும், அவளது புருஷன் மாடசாமிக்கும் தெரியத்தானே போகிறது. அதன் பிறகு அந்தத் தேயிலைத் தோட்டத்துக்கு தெரியாமலா போகும்.
ஆரையம்பதி ஆ.தங்கராசா


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக