ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

இளிச்சான்

மாட்டுக்கும் இளிச்சானுக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை. மாட்டுக்கு நாலு கால் இளிச்சானுக்கு அவ்வளவேதான்.

படிக்காதது. வசதியில்லாததெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சுத்தமாக கூடவா இருக்க முடியாது...?

சும்மா சாணத்துல புரண்டு எழும்பின மாதிரி ஒரு தோற்றம். ரொம்ப நாட்களாய் வெட்டப்படாத கேசம்... அகலமான பாதங்கள்...

பார்க்க ஒருவித அசிங்கமாய் தான் இருப்பான். ஆனால் எப்பவுமே அவன் முகத்தில் ஒருவித புன்னகை தவழும். அதனாலோ என்னவோ அவனுக்கு அப்படியொரு பெயர். இவன் மட்டும் ஸ்டைலா இருந்தான்னு வச்சுக்கங்க... கமலஹாசன் தோத்தான்.

ஒரு ரெண்டு மூணு நாட்களாய் இளிச்சான் பற்றி தான் ஊரெல்லாம் பேச்சி... சந்திக்கு சந்தி இளிச்சான் பெயர் தான் அடிபடுது.

இளிச்சானுக்கு கல்யாணமாம்.

கங்காணியார் தான் இளிச்சானுக்கு பொண்ணு பார்த்திருக்கிறார். நாளைக்கு பெண் பார்க்க போகவென்று இளிச்சான் ரெடியாகிக் கொண்டிருந்தான்.

கிணற்றடியில் கூட்டம் குறையும் வரை பொறுத்து பொறுத்து பார்த்தவன் பொறுமையிழந்து, வாளியும் ஒரு கட்டி சன்லைட்டும் எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு வந்தான்.

பெண்கள் சிலர் அவனை வியப்புடன் பார்த்தவாறு வழிவிட்டனர்.

“அட...! இளிச்சான பாருங்கடா...” என்று சிலர் கேலி பேசினர்.

இளிச்சான் எதையுமே கண்டுக் கொள்ளவில்லை. அவனுக்கு ஒரே சந்தோஷம். ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தவாறே அவன் குளிக்க ஆயத்தமானான்.

நாலைந்து வாலி தண்ணீரை தலையோடு ஊற்றிக் கொண்டான். சில்லென்று ஆனந்த பரவசமாய் இருந்தது. ச்சே...! அடிக்கடி குளித்தாலும் பரவாயில்லையோவென்று அவனுக்குத் தோன்றியது.

சன்லைட் பேப்பரை ஒரு பக்கமாய் உரித்து போட்டு விட்டு பரட் பரட்டென்று மேல் காலெல்லாம் சோப்பை தேய்த்தான். அது அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஒரு கயிற்றுத் துண்டை சுருட்டி அதில் சோப்பை அப்பி தேய் தேயென்று தேய்த்தான்.

ஓரளவு சுத்தமாய் குளிப்பதாய் அவனுக்கு நினைப்பு. கூடவே பக்கத்தில் கிடந்த ஒரு கரித்துண்டை நசித்து பற்களை பளிச்சென்று துலக்கினான்.

ஒரு கற்பாறையில் கால் பாதங்களை அழுத்தி தேய்த்து அழுக்குகளை அகற்றிக் கொண்டான்.

மெய்யாலுமே அவனுக்கு நல்ல சுகமான அனுபவமாய் இந்தக் குளியல் இருந்தது.

வழமைக்கு இரண்டு வாளி தண்ணீரை மட்டும் தலைக்கு ஊற்றி துவட்டி கொள்பவனுக்கு, இந்த குளியல் ஒரு சாதனையாய் தெரிந்தது.

மனமெல்லாம் சந்தோஷத்துடன் குளித்து முடித்து துவட்டிக் கொண்டான். கங்காணியார் வாங்கிக் கொடுத்த இரண்டு சாரங்களுள் ஒன்றை உதறிக் கட்டிக் கொண்டான்.

அவனது நடையிலும் கொஞ்சம் மாற்றம்.

சதா கங்காணியின் வீட்டிலும் மாட்டுப் பட்டியிலும் உழைத்து உழைத்து சலித்துப் போன அவனுக்கு இந்த உணர்வும் அனுபவமும் புதிதாய் இருந்தது... பிடித்திருந்தது. கங்காணி, கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் மீண்டும் அவனுள் நிழலாடியபடியே இருந்தன.

விடியும் வரை அவனுக்கு பொறுமையே இல்லை. தனக்கு எவ்வளவு பெரிய எடத்துல கலியாணம் பேசிட்டாரு கங்காணி. வாழ்க்கையில் கொழும்பையே பார்க்காத அவனுக்கு கொழும்புல பொண்ணு கிடைக்குண்ணா..... !!!

பொண்ணு சொன்னிச்சாம், நல்லா வேலை செய்யுற. மாப்பிள்ள தான் வேணுண்ணு.... அங்கேயே வீடெல்லாம் கூட இருக்காம்.

இளிச்சானுக்கு கையும் ஓடாமல் காலும் ஓடாம கங்காணியின் காலில் விழுந்து ஒரு மூச்சு அழ வேண்டும் போல் தோன்றியது.

கல்யாணத்திற்கு அப்புறம் தினமும் குளிக்கணும். நல்ல உடுப்பு உடுத்தணும் அழகாய் பேசணும். இப்படி நிறையவே திட்டங்கள் வைத்திருந்தான் இளிச்சான்.

ஆனாலும் கங்காணியாரை விட்டுப் போவதில் ஒருபக்கம் அவனுக்கு வருத்தம் தொட்ட அத்தனை வேலையையும் செய்வது இளிச்சான்தான். மாடு மேய்ப்பதில் தொடங்கி வீட்டு விறகு தூக்குவது வரை.... இத்தனைக்கும் சாப்பாட்டைத் தவிர ஒரு சதம் காசு வாங்க மாட்டான். அவ்வளவு விசுவாசம் அவனுக்கு.

அத்தனை தூரம் நம்பிக்கையா உழைச்சதாலோ என்னவோ கங்காணியார் இப்படியெல்லாம் தனக்கு நல்லது பண்ணுறார்.

எது எப்படிப் போனாலும் அடிக்கடி பொண்டாட்டியோட வந்து கங்காணியார பாத்துட்டு போகணும்.

இளிச்சான் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டான். தூக்கமே வரவில்லை.

கங்காணியார் வந்து எட்டிப் பார்த்தார். தடாரென வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தான்.

“என்னடா.... உடுப்புகிடுப்பெல்லாம் எடுத்திட்டியா...? எல்லாத்தையும் எடுத்து வச்சுக்க அங்கேயே இருக்க வேண்டி வந்தாலும் வரும்”

இளிச்சான் தலையை ஆட்டினான்.

ஐயோ....! ஐயோ.....! ஐயோ.....! இளிச்சான். கோடிப்பாக்கத்திற்கு ஓடிச் சென்று நாலைந்த முறை அங்கும் இங்கும் நடந்தான். அங்கு நின்ற பலா மரத்தை ஓங்கி உதைத்தான்.

அவனுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

ரொம்பவும் தாமதமாகி விடிந்ததாய் அவனுக்குப்பட்டது. அவசர அவசரமாக தயாராகி பையையும் தூக்கிக் கொண்டான்.

முதன் முறையாய் செருப்பு போட்டான். நடக்க முடியாமல் தடுமாறி தடுமாறி கங்காணியின் பின்னாலேயே சென்றான். பஸ் போய் கொண்டே இருந்தது. கங்காணி அவனை எழுப்பி இறங்கச் சொன்னார். உறங்கி களைத்து முகமெல்லாம் எண்ணெய் வடிந்து அசிங்கமாய் இருந்தான்.

கங்காணி ஒரு துவாய் கொடுத்தார். முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டான். கைகளாலேயே தலை முடியை வாரிக் கொண்டான்.

இருவரும் ஒரு கடையில் சாப்பிட அமர்ந்தனர். அவனால் சாப்பிட முடியவில்லை. மனம் எப்படியெல்லாமோ இருந்தது.

இரண்டு பணிஸ் வாங்கிக் கொடுத்தார். ஒன்றை இரண்டாகப் பிய்த்து விழுங்கி விட்டு தண்ணீர் குடித்தான்.

ஒன்றை பையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

இருவரும் கொஞ்சம் தூரம் நடந்தார்கள். ஒரு பெரிய வீடு...

“கங்காணி.... இவ்வளவு பெரிய வீடா....?”

“ஒண்ணும் பேசாம வா”

பின் பக்கமாய் ஒரு நாய்கூடு. அதனருகே இளிச்சான் நின்று கொண்டான்.

கங்காணி மட்டும் உள்ளே சென்றார்.

அந்த நாய் இளிச்சானை பார்த்து உறுமியது. தன் பையில் இருந்த பணிஸை எடுத்துப்போட்டான்.

அதை லபக்கென்று பிடித்து தின்றது.

உள்ளே கங்காணியின் பேச்சுக் குரல் கேட்டது. இளிச்சான் கூர்மையாய் காது கொடுத்தான்.

“வஞ்சகம் இல்லாம வேலை செய்வான். மாத்தியா...”

“சரி சம்பளங் எவ்வளவு கொடுக்கோனும்” “தேவையே இல்லிங்க. பசிக்கிற நேரம் சாப்பாடு போட்டா போதும் நாய் மாதிரி உழைப்பான்”

கங்காணியார் சத்தத்தை கொஞ்சம் தணித்து மெதுவாய் சொன்னார்.

“அவனுக்கு பொண்ணு பார்க்க போறோம்னு பொய் சொல்லி கூட்டி வந்தேனுங்க... கொஞ்சம் பார்த்து கவனிங்க”

“சரி உங்க கமிசன் சல்லி புடிங்க”

அவர் கொடுத்த ஐயாயிரம் ரூபாயை முகமெல்லாம் சிரிப்புடன் வாங்கி பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்ட கங்காணியார் வெளியே வந்தார்.

அருகில் கிடந்த கல்லில் தொப்பென்று அமர்ந்தான் இளிச்சான்.

அவனுக்கு முதன் முறையாய் மனது வலித்தது.

“இவுங்க சொல்றபடி கேட்டு நட... என்ன...?”

கங்காணியார் விடைபெற்றார்.

நாய் இளிச்சானின் அருகே வந்து அவன் காலை முட்டி முட்டி உரசியது.

அவன் அதை தடவிக் கொடுத்தான்.

பிரமிளா பிரதீபன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல