அவனை நிமிர்ந்து பார்த்த அவனது தாய் தான் பின்னிக் கொண்டிருந்த பன் பாயை அவசர அவசரமாக முடித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டாள். தந்தை காசிம் நானா சுவரில் சாய்ந்திருந்துகொண்டு இருகரங்களையும் தலைக்குத் தாங்கலாகக் கொடுத்தபடி குந்தியிருந்தார். அவரது உடம்பு தாங்க முடியாத காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்தது.
குசினிக்குள் வந்த அமீனின் கண்களில் ஏதோ வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தங்கை றமீசா தென்படவே, “றமீசா எனக்கு ஒரு பிளேன்ரி ஊற்றித் தா” என்றான்.
“பிளேன்ரி ஊத்த சீனியுமில்ல. தேயிலைத்தூளுமில்ல” என்று கூறிவிட்டு தனது வேலையைக் கவனிக்கலானாள்.
“என்டைக்குத்தான் இருக்கெண்டு சொல்லி இருக்கிaங்க? இல்லை என்ற வார்த்தைதானே உங்களுக்குப் பாடம் ‘ஆத்திரமாகக் கூறியவன், கயிற்றுக் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த சாரனையும் ரவலையும் எடுத்தவாறு கிணற்றடியை நோக்கி நடந்தான்.
“அவரு இங்க வாங்கிவந்து கொட்டுறாரு பாரு. அவரு வாற நேரமெல்லாம் ஊத்திக்கொடுக்க.... ‘ பாய் பின்னிக் கொண்டிருந்த தாய் தன் வயிற்றெறிச்சலைக் கொட்டித் தீர்த்தாள்.
“பேசாம இரிங்க உம்மா, காதிலே கேட்டா சண்டைக்கு நிக்கப் போறான்! தாயின் வாயை அடக்கி விட்டு றமீசா வேலையில் ஆழ்ந்தாள்.
குளித்து முடித்துவிட்டு தலைவாரிக் கொண்டிருந்தான் அமீன். சுவரில் அடித்திருந்த ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த அவனது சட்டைப் பையிலிருந்த கைத்தொலைபேசி மணியடிக்கவே அதனை எடுத்துக் காதில் வைத்து “ஹலோ” என்றவன். “நான் புறப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். இதோ வாறன். நீங்க புளியடிச் சந்தியிலே நில்லுங்க” என்று கூறியபடி அவசரமாகத் தனது ரெனிம் றவுஸரை எடுத்து மாட்டிக்கொண்டு அதற்கேற்றதான சாம்பல் நிற ரீ சேட் ஒன்றையும் அணிந்துகொண்டான். கூளிங் கிளாஸை எடுத்து முகத்தில் அணிந்துகொண்டு புறப்படலானான்.
இதுவரையும் ஒன்றுமே பேசாது அவனை அவதானித்தபடி பாய் பின்னிக்கொண்டிருந்த தாய், “எங்கே போகப் போறாய்? வாப்பாவுக்கு ராவு வந்த காய்ச்சல் இன்னும் உடுகுது இல்ல. எழும்பி இருக்கக்கூட கஷ்டப்படுறாரு, அவரக் கூட்டிகிட்டுப் போய் ஆஸ்பத்திரியிலே காட்டி மருந்த எடுத்துத் தந்திட்டு நீ போற இடத்துக்குப் போ, நேத்துப் பின்னேரம் போன நீ இப்பதான் வந்திருக்காய்! சற்று கோபங் கலந்த தொணியில் கூறிவிட்டு மீண்டும் பாய் பின்னுவதில் ஈடுபடலானாள்.
“எனக்கு இப்ப நேரமில்ல. நாங்க கூட்டாளிமாரெல்லாம் ஒரு இடத்துக்கு ‘ரிப்’ போகப் போறோம். அவங்க காத்துகிட்டு நிக்காங்க. நீங்க கூட்டிகிட்டுப் போய்க் காட்டுங்க! என்றான்.
“நான் கூட்டிக்கிட்டுப் போறயெண்டா ஆட்டோவுக்கு காசி வேணும். உன்ர சயிக்கிளிலே ஏத்திகிட்டுப் போய்க் காட்டியிட்டு வா”
“நான் எப்படி ஏத்திக்கிட்டுப் போற, அந்த உயரச் சயிக்கிளிலே அவரு ஏறமாட்டாரு. என்னாலே கொண்டுபோக முடியா, நீங்க ஆறெண்டாலும் கூட்டியிட்டுப் போய்க் காட்டுங்க. எனக்கு நேரம் போகுது நான் போறேன்” அவன் விறுவிறென சைக்கிளை நோக்கி நடந்தான்.
“நீ........” எதையோ சொல்ல வாயெடுத்த உம்மாவை றமீசா தடுத்துவிட்டு, “உடுங்க உம்மா அவரு போகட்டும். நான் கூட்டிப்போய்க் காட்டியிட்டு வாறன் எனச் சமாதானப்படுத்தினாள்.
பாயை இழைத்து முடித்துக்கொண்டவள் தனது இளைய மகளைக் கூப்பிட்டு “இந்தா பாயிசா இதக் கொண்டுபோய் கயாத்து முதலாளிட கடயில குடுத்துப்போட்டு, அரிசி ஒரு கொத்தும் ரெண்டு ரூபாவுக்குத் தேயிலைத்தூளும் காக்கிலோ சீனியும் பெனடோல் ரெண்டும் வாங்கிவிட்டு மிச்சக் காச எடுத்துக்கிட்டு கெதியா ஓடிவா” என மகளை அவசரமாக அனுப்பிவிட்டு எழுந்து நின்றவள் இரண்டு கைகளையும் இடுப்பில் குத்தி இடுப்பை நிமிர்த்தி தனது வருத்தத்தைத் தீர்த்துக் கொண்டாள்.
காசிம் நாநா ஒரு விவசாயி. தனது விவசாயத் தொழிலால் குடும்பத்தை நல்ல முறையில் நடாத்திக் கொண்டிருந்தார். கஷ்டமில்லாத நிலையில் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருந்தது. குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்சினையில்லாத காரணத்தால் தனது மகன் அமீனைப் படிப்பித்து நல்ல நிலையிற் காண ஆசைப்பட்டார்கள் காசிம்நாநா குடும்பத்தினர்.
ஆனால் அவர்களது கனவு நனவாகாதபடி ஒருநாள் காசிம் நாநா திடீரெனப் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். எத்தனையோ வைத்தியங்கள் செய்தும் அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. பணக் கஷ்டத்தால் குடும்ப நிலை தள்ளாட்டங்கண்டது.
தமது குடும்ப நிலையில் காணப்பட்ட தளம்பல் நிலையை ஓரளவாவது சீர் செய்துகொள்ள காசிம் நாநாவும் மனைவியும் குடும்பத்தாரும் சேர்ந்து ஓரளவாவது சீர் செய்துகொள்ள காசிம்நாநாவும் மனைவியும் குடும்பத்தாரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
மகன் அமீனும் படிப்பில் சோபிக்காத காரணத்தால் அவனைப் படிப்பைவிட்டும் இடைநிறுத்தி தொழிலில் ஈடுபடுத்த விரும்பினர். அதன் பிரகாரம் காசிம் நாநாவின் செல்வாக்கைக் கொண்டு அமீனை ஒரு வியாபார ஸ்தாபனத்தில் வேலைக்கமர்த்திவிட்டனர். அத்தோடு அவனது வருமானத்தில் ஒரு பகுதியை மிச்சம் பிடித்து சீட்டுக்கட்டுவதென்றும் அதைக் கொண்டு மகள் றமீசாவின் வாழ்வை நிலைப்படுத்துவதென்றும் காசிம்நாநா தம்பதியினர் தீர்மானித்துக்கொண்டனர்.
மனைவியும் மகளும் பாய் இழைத்தாலும் மகனின் வருமானமும் கிடைத்ததாலும் குடும்பம் ஓரளவு சீராக ஓடிக்கொண்டிருந்தது.
ஐந்து வருடங்களாக வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சேமித்த சீட்டுக்காசி கைக்குக் கிடைத்ததும் 8!சிம்நாநா தம்பதியினர் மகளின் திருமண விசயத்தில் தீவிரம் காட்டினர். ஆனால் மகனுடைய திடீர் மாற்றம் அவர்களை நிலைகுலையச் செய்தது.
அமீனுக்கு தன்வயதை ஒத்தவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்கி ஓடித்திரிவதையும் தனது நண்பர்களிற் பலர் மோட்டார் சைக்கிள்கள் வைத்திருப்பதையும் காணும் போது தானும் ஒரு சைக்கிள் வாங்கி ஓட வேண்டும் என்ற ஆசை தலைக்கேறி அவனை ஆக்கிரமித்துக்கொண்டது. சீட்டுக் காசி கிடைத்ததும் சைக்கிள் வாங்குவதென தீர்மானித்து அதுபற்றிய கனவுகளில் ஆழ்ந்திருந்து கிடந்தான். இதன்காரணமாக பெற்றாரின் புத்திமதிகளோ அவர்களது மன்றாட்டங்களோ அவனது மனத்தை மாற்றுவதில் தோல்வியையே கண்டன. விடாப்பிடியாக நின்று சைக்கிள் ஒன்றினை வாங்கிக் கொண்டான்.
மனம் உடைத்த காசிம் நாநா மீண்டும் நோய்க்குள்ளானார். குடும்ப எதிர்பார்ப்பும் புஷ்வாணமாகிவிட்டது. பணக்கார வீட்டுப் பையனைப் போல அவன் மோட்டார் சைக்கிளில் பவனி வந்துகொண்டே இருந்தான்.
நான்கு நாட்களுக்குப் பின் தனது உல்லாசப் பிரயாணத்தை முடித்துக் கொண்டு சாமவேளையில் வீடுதிரும்பிய அமீன் தனது மோட்டார் சைக்கிளை ஒருபக்கம் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டினுட் செல்ல படியிற் கால் வைத்தான். வீட்டின் முன் திண்ணையில் அடுத்தவீட்டு மரியம் மாமி படுத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டவன் திண்ணை முழுவதும் தனது கண்களை ஒருமுறை சுழலவிட்டான். வாப்பா படுத்திருக்கும் திண்ணை மூலையில் அவரைக் காணவில்லை. அவரது பக்கத்தில் வழமையாகத் தூங்கும் தனது தாயும் அங்கு படுத்திருக்கவில்லை.
அவனது கால் அரவத்தால் கண்விழித்த மரியம்மாமி, “யாரது?” என அதட்டிக் கேட்டார்.
“நான்தான் மாமி அமீன்” என்றதைக் கேட்ட மாமி எழுந்திருந்தபடி “இப்பதானா வாறாய்?” என்றார்.
“ஓம் மாமி” எனக் கூறியவன், “எங்கே மாமி உம்மாவும் வாப்பாவும்” எனக் கேட்டு விட்டு அவரை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்ட நின்றான்.
சிறிது நேரம் ஒன்றுமே பேசாது அவனது முகத்தையே உற்றுப் பார்த்தபடி மெளனமாக இருந்த மரியம்மாமி. நெஞ்சு முட்டிய விம்மலுடன், “வாப்பா மெளத்தாய்ப் போனா ரப்பா, நீ போன அன்றிரவே மெளத்தாகிவிட்டார். நீ எங்கே இருக்கிறாய் என்றறிய எவ்வளவோ கஷ்டப்பட்டாங்க. முடியாம போச்சு. அடுத்தநாள் காலத்தால மையத்தை அடக்கிப் போட்டாங்கன். உம்மாவையும் நேத்த ராவு இத்தாவில் வச்சிருக்கு” கூறிய மரியம்மாமி விம்மி விம்மி அழுதார்.
ஸ்தம்பித்துப்போய் நின்ற அமீனின் முன்னால் ஆயிரக் கணக்கான வெடில்கள் வெடிப்பன போன்று இருந்தது. நீண்ட நேரம் அப்படியே அசைவில்லாது நின்றான்.
தன்னுணர்வை அடைந்த அமீன் மெல்ல மெல்ல நடந்து அறையினுள் எட்டிப்பார்த்தான். உம்மா வெள்ளைச் சீலை உடுத்தவண்ணம் ஒரு பாய்த்துண்டில் சுருண்டு படுத்துக்கிடந்தாள். பக்கத்தே தங்கைகள் இருவரும் தலைவிரி கோலமாகக் கிடந்தனர்.
மருதமைந்தன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக