விறகுகள் ஒளிவிட்டு பிரகாசமாக எரியத் தொடங்கின. அவளது வாழ்க்கையும் ஆரம்ப காலங்களில் பிரகாசமாகத்தான் இருந்தது. காலப் போக்கிலே அந்த ஒளி மெதுமெதுவாக மறைந்து இருள் கவிழ்ந்துவிட்டது.
அவளையறியாமலே கண்களிலிருந்து வடிகின்ற நீரை முந்தானைத் தலைப்பினால் துடைத்துக்கொண்டு கொதித்த நீரை அடுப்பை விட்டு மெதுவாக இறக்கினாள். குழந்தை அழுத களைப்பினால் சற்று கண் அயர்ந்திருந்தது.
பால்மா பெட்டியில் கொஞ்சம் மாவு இருந்தது. ‘இது இன்றைக்குப் போதும்’ என மனதினுள் எண்ணிக் கொண்டாள் கமலம். பால்மாவை நன்றாகக் கலக்கி போத்தலில் ஊற்றி குழந்தையின் வாயில் வைத்தாள்.
குழந்தை சூப்பியைச் சப்பிச் சப்பி பாலை மெதுவாக அருந்தி தன் பசியைத் தீர்த்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தது. கமலம் குழந்தையைப் பார்த்தவாறே பூசாத வீட்டுச் சுவற்றில் தன் முதுகைச் சாய்த்தவாறு குந்தியிருந்தாள்.
காலை நேரச் சூரியன் அடிவானில் இருந்து விழித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டான். பறவைகள் அவனை வரவேற்று இசைபாடி மகிழ்ந்தன. அந்தப் பறவைகளுக்குள்ள சுதந்திரம் கூட கமலத்திற்குக் கிட்டவில்லை. அவளுக்கு சூரியனும் ஒன்றுதான் இருட்டும் ஒன்றுதான்.
எண்ணிலடங்கா சிறப்புக்கள் வாய்க்கப் பெற்ற காரைதீவு மண்ணிலே கமலத்தின் குடும்பம் காலாகாலமாக வாழ்ந்து வருகின்றது. மணி மாஸ்டர் என்றால் ஊரில் தெரியாதவர்களே இல்லை.
மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். அவருடைய மகள்தான் கமலம். பெயருக்கேற்றபடி முழுமதி போல அழகும் குணமும் நிறைந்தவள். சிறிய வயதிலே தாயைப் பறிகொடுத்து தந்தையின் அரவணைப்பிலே வளர்ந்தவள்.
கமலத்திற்கு இருபது வயதைத் தொட்டபோது தந்தை மாப்பிள்ளை பார்க்கும் படலத்தினைத் தொடங்கிவிட்டார். ஆனால் அவளோ மனதில் பக்கத்துவீட்டு சண்முகத்தை வருங்கால கணவனாக நினைத்துக் கொண்டிருந்தாள். சண்முகம் ஒன்றும் பெரிதாகப் படித்தவனல்ல.
உறவினர்களற்ற அநாதை. கராஜ் ஒன்றில் வேலை செய்து தன் காலத்தை கழித்து வருபவன். கமலம் உயர் தரத்தில் கற்கின்ற போது அவன் வேலை செய்யும் கராஜ் அமைந்திருக்கும் வீதியால் தான் பாடசாலைக்குச்சென்று வருவாள். அவ்வே
எல்லோரையும் போல சாதாரண ஒருவனாகத்தான் பார்த்தாள்.
ஒருதடவை கமலம் விழிகளை எங்கேயோ புதினம் பார்க்க விட்டுக்கொண்டு செல்ல திடீரென முன்னால் வந்த பஸ் ஒன்றில் மோதிவிடப் பார்த்தாள். அவ்வேளை சண்முகம் ஓடிவந்து அவள் கையைப் பிடித்து இழுத்து விபத்திலிருந்து காப்பாற்றினான்.
‘றோட்டால வரும்போது பார்த்து வரக்கூடாதா’ என்று சொன்னவுடன் தான் சுயநிலைக்கு வந்தாள். அப்போது ஏற்பட்ட ஈர்ப்பு, இன்று காதலாகி விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. இவர்கள் இருவரினதும் காதல் விசயம் தெரிந்தவர் யாரோ ஒருவர் மூலமாக மணி மாஸ்டருக்கு காதில் ஊதப்பட்டது.
‘கமலம் இன்றைக்கு ஒரு விஷயம் கேள்விப்பட்டனான். நீ யாரோ கராஜில் வேலை செய்றவனை விரும்புறியாமே. உண்மையா’ கேட்டுவிட்டார். அவளும் அப்பாவிடம் தைரியமாகப் பேசி பழக்கப்படாதவள்.
அவர் முன் நின்று ஒருபோதும் பேசாதவள். ஆனால் இன்று காதல் அவளைப் பேச வைத்துவிட்டது. ‘ஓம் அப்பா. நான் அவரை விரும்புறன்’.
‘நீ சொல்றது உனக்கே அவமானமாப் படல? அவன் யாருமேயில்லாத அநாதை. அவன்ட அந்தஸ்து என்ன, நம்மட பரம்பரை கெளரவம் எங்க? பேய்க்கதை கதையாத. நான் உனக்கு டொக்டர், என்ஜீனியர் என்று படித்த மாப்பிள்ளை தேடக்க இது என்ன அசிங்கம்.
இதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன்’ கடுகடுத்த குரலில் கோபம் கொப்பளிக்க மாஸ்டர் கூச்சலிட்டார். அவரது பேச்சுக்குப் பதில் கூறாது சிலைபோல் நின்றிருந்தாள் கமலம்.
மறுநாள் காலை மணிமாஸ்டர் எழுந்து மகளை எழுப்ப முயன்ற போது தான் அவள் வீட்டில் இல்லை என்ற விடயம் அவருக்குத் தெரியும். ‘கமலம் அவசரப்பட்டு விட்டாய்’ என்று மனதில் பொருமிக்கொண்டே ஊரெல்லாம் தேடினார். இச்செய்தி காட்டுத் தீ போல் எங்கும் பரவியது. ஊரவர்கள் ‘மகளை வளர்த்த விதம் சரியில்லை’ என்று மணி மாஸ்டரின் காதுபடவே பேசிக்கொண்டார்கள்.
சதாநேரமும் மகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறதோ என்ற சிந்தனையிலேயே இருந்ததால் நோயும் கூடவே சேர்ந்து கொண்டு சுறுசுறுப்பாக இயங்கியவரை கட்டிலில் தள்ளிவிட்டது. கமலமோ சண்முகத்தோடு வேறொரு ஊர் சென்று கல்யாணம் செய்து கொண்டாள்.
அவளுக்கும் அப்பாவின் நினைவு வராமலில்லை. ‘அப்பா அங்கே என்ன பாடுபடுகின்றாரோ. கவனிக்க யாருமே இல்லையே’ அடிக்கடி சண்முகத்திடம் முறையிட்டுக் கொண்டே இருப்பாள்.
மனைவியையும் இழந்து பெற்ற மகளையும் தொலைத்துவிட்டு மணி மாஸ்டர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அவரது பரிதாபநிலை கண்டு அயல் வீட்டார் சமைப்பதில் அவருக்கும் ஒரு பங்கை கொடுப்பார்கள். சில நாட்கள் சோறு தொண்டைக்குள் இறங்கும் முன்னமே வாந்தி எடுத்துவிடுவார். பல நாட்கள் பட்டினியிலேயே கழிந்தன. டொக்டர்மாரிடம் காட்டியும் எவ்வித முன்னேற்றமுமில்லை.
இப்படியே கிடந்தவர் மகளின் ஏக்கத்திலே செத்தும் போனார். ஊரவர்கள் தான் அவரது சவத்தை அடக்கம் செய்தனர். ‘எப்படி வாழ்ந்த மனிசன். இன்று யாருமில்லாத அநாதையாக இறந்து போனாரே.
எல்லாம் போன ஜென்ம பாவம்’ என்று தமக்குள் பேசிக் கொண்டார்கள். அவர் வாழ்ந்த வீடும் யாரும் இல்லாமல் பூட்டிக் கிடந்தது.
சண்முகம் அந்த ஊரில் வேலை தேடிக் கொண்டான். இருவருக்கும் ஒரு வருடம் கழித்து அழகான குழந்தையும் பிறந்தது. கமலம் சண்முகத்திடம் ‘குழந்தையை எடுத்துக் கொண்டு அப்பாவிடம் சென்று காட்டுவோமே, அவர் எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார். நாம் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வோம்’ என்றாள். இதற்கு சண்முகம் உடன்பட்டு தந்தையைப் பார்க்க ஊருக்குப் புறப்பட்டனர்.
ஊரில் காலடி வைத்தவர்களுக்கு ஒரு வருடத்தில் ஊரில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன என்பதனை அறிய நீண்ட நேரம் பிடிக்கவில்லை. கமலம் வீட்டைச் சென்று பார்த்தாள்.
வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டைச் சுற்றி பெயர் தெரியாத தாவரங்கள் வளர்ந்து காடாகக் காட்சியளித்தன. பக்கத்து வீட்டாரிடம் ‘அப்பா எங்கே’ என்ற கேள்விக்கு +ரிவிஜி மரணச் செய்திதான் பதிலாகக் கிடைத்தது. அது கேட்ட மாத்திரத்தில் ‘அப்பாவின் மரணத்திற்கு நான் தான் காரணம்’ எனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
இக்கவலையிலேயே ஆறு மாதங்கள் உருண்டோடின. கமலம் மெதுவாக கவலையிலிருந்து விடுபடத் தொடங்கினாள்.
ஒரு நாள் காலை சண்முகம் மனைவியிடமிருந்து விடைபெறும் போது மீண்டும் மீண்டும் மனைவி, குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். ‘இண்டைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு. எங்களைப் பார்த்துக் கொண்டு நிக்கிறியள்’ என்று கேட்டாள் கமலம்.
‘என்னமோ, தெரியல கமலம்’ என்றபடி சண்முகம் வீதியில் இறங்கி சைக்கிளில் ஏறி மறைந்தான். வேலை முடிந்து வீடு வரும் வழியில் பழம், மரக்கறிகளை வாங்கிக் கொண்டான். சிறிது தூரம் சென்றிருப்பான். எதிர்பாராமல் முன்னால் வந்த பெரிய லொறி அவன் மீது மோத அவ்விடத்திலேயே சண்முகத்தின் உயிர் அவனை விட்டுப் பிரிந்திருந்தது.
அப்பாவைப் பறிகொடுத்து சில மாதங்களில் கணவனையும் பறிகொடுத்து விதவைக் கோலத்தில் கையில் குழந்தையையும் வைத்துக் கொண்டு நாளெல்லாம் அழுதாள், ஊரவர்கள் ஆறுதல் வார்த்தைகளைக் கூறினர்.
நாட்கள் நகர்ந்தன. தனக்கில்லாவிட்டாலும் குழந்தைக்காவது உழைக்க வேண்டும் என்பதால் ஊரிலுள்ள பணக்காரர் செல்வத்தின் மில்லில் வேலைக்கு சேர்ந்தாள்.
கமலம் கணவனை இழந்திருந்தாலும் அவளின் அழகில் குறை சொல்ல முடியாது. பார்ப்பவர்களுக்கு போதையை ஏற்படுத்தும், அதில் செல்வம் மயங்கிவிட்டார். எப்படியாவது கமலத்தை தன் இச்சைக்கு இரையாக்கிக் கொள்ள வேண்டும் என மனதுள் தவித்தார். இது எதுவும் கமலத்திற்கு தெரியாது. முதலாளியை நல்லவர் என நம்பிக் கொண்டிருந்தாள். சம்பளம் கொடுக்கும் போது அவரது கை அவளது கையைத் தொடும். அதைத் தற்செயல் என எண்ணிக் கொண்டாள்.
ஓரிரவுப் பொழுதில் வீட்டு வாசலில் யாரோ வந்து நிற்கும் சத்தம் கேட்க கமலம் வாசலுக்கு வந்தாள். அங்கே செல்வம் முதலாளி, ‘ஐயா, உள்ளே வாங்க. இப்படி உக்காருங்க.
என்ன விஷயமா இந்தப் பக்கம்’ கதிரையை அவரருகில் இழுத்துப் போட்டாள். ‘ஒன்றுமில்லை கமலம். நீயும் புருஷனை இழந்துவிட்டு தனிய நிக்கிறாய். இளம் வயசுப் புள்ள. உனக்கொரு துணை வேண்டாமா? நான் உன்ன நல்லாப் பார்த்துக்குவேன்’ வார்த்தைகள் அவள் காதில் நாரசமாய்ப் பாய்ந்தன.
கமலம் துடித்துப் போனாள், வாய்க்கு வந்தபடி திட்டி செல்வத்தை துரத்திவிட்டாள். இனி அவனிடம் வேலைக்குச் செல்வதில்லை என முடிவெடுத்துக் கொண்டாள். எனினும் செல்வத்தின் மனதிலோ கமலம் மீது கொண்ட வெறி அடங்குவதாக இல்லை. எவ்வாறாவது அவளை அடைந்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டான்.
ஊரெல்லாம் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த நடுச் சாம வேளையில் செல்வம் யாருக்கும் தெரியா வண்ணம் கமலத்தின் வீட்டுக்குள் புகுந்து அவள் வேண்டாம் வேண்டாம் என கெஞ்சியும் எச்சரித்தும் அதைக் கேளாமல் அவளிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டார்.
கமலம் சற்று நேரம் திக்பிரமை பிடித்தவள் போல அமர்ந்துவிட்டாள். தன் கற்பு பறிக்கப்பட்டதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அன்றைய இராப் பொழுது அவளது அழுகையுடன் சேர்ந்தே விடிந்தது. காலையில் கண் விழித்த குழந்தை அழுதபோதுதான் சுயநினைவிற்கே வந்தாள். குழந்தையின் அழுகைக்கு எதையாவது கொடுத்து அடக்கிவிடலாம். ஆனால் அவளது அழுகைக்கு எதைக் கொடுப்பது? கமலம் ஒரு முடிவுக்கு வந்தாள்.
கிணற்றடியில் முகத்தைக் கழுவிக் கொண்ட கமலம் புடைவையை உடுத்திக் கொண்டு குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்தபடி வீட்டைத் தாண்டி நடந்தாள்.
அவளுக்கு நடந்த கொடுமைக்கு எதிராகப் போராட அவளிடம் பணமும் இல்லை, உடம்பில் சக்தியும் இல்லை. இந்தப் பூமி பாவப்பட்ட பூமி. இங்கே மனிதனுக்கு அவனது சுகங்கள்தான் பெரிது, மனித உணர்வுகளல்ல.
கால்கள் எங்கே போவதென வழி தெரியாமல் கமலத்துடன் சேர்ந்து போகின்றது. மனிதர்கள் அற்ற நிம்மதியான இடத்தைத் தேடி கமலம் போகிறாள்.
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை, வாழ்க்கையில் இவ்னொரு அத்தியாயத்தைத் தேடி நடந்து கொண்டேயிருக்கிறாள்...
எம். எம். முஹம்மட் சப்ரி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக