சனி, 26 ஜூன், 2010

மயக்க மருந்தூட்டி கொள்ளையடிக்கும் கும்பல் கட்டுநாயக்கவில் மடக்கிப் பிடிப்பு

அக்கரைப்பற்று, பாணந்துறை வாசிகள் கைது 18 வெளிநாட்டு பொதிகள், தங்கநகைகள், மயக்க மாத்திரைகள் மீட்பு...

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்று நாடு திரும்புபவர்களை மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.அக்கரைப்பற்று, பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்களும் கொழும்பு -12 டயஸ் பிளேஸைச் சேர்ந்த தமிழர் ஒருவரையுமே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இரண்டு மாத கால கண்காணிப்பின் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைகள், வெளிநாட்டு, உள்ளூர் நாணயங்கள் மற்றும் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

25 மில்லி கிராம் எடையுள்ள 25 மாத்திரைகள், மூன்றரை பவுண் எடையுள்ள தங்க நகைகள், இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள், இரண்டு ஒலிப்பதிவு (கெசட் ரெகோடர்) கருவிகள், இரண்டு மடி கணினிகன், ஏழு பணப்பைகள், ஆடைகள் உள்ளடங்கிய 18 பயணப் பொதிகள், கையடக்க தொலைபேசிகள் என்பவற்றையும் பொலிசார் இவர்களிடமிருந்து மீட்டெடுத்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

25மில்லி கிராம் மாத்திரையைப் பயன்படுத்தியே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எந்த வகையான மாத்திரை என்பது அடையாளங் காணப்படாததை அடுத்து அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை அணுகி போக்குவரத்து வசதிகள் தருவதாக கூறி அழைத்துச் சென்று அவர்களுக்கு மாத்திரை கலந்த குளிர்பானங்களை வழங்கி வந்துள்ளனர். இதனை குடிப்பவர்கள் சுமார் நான்கு மணி நேரம் மயக்க நிலையில் இருப்பது விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

கடுவல, நிட்டம்புவ, குளியாப்பிட்டிய மற்றும் நவகமுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு இதுபோன்று அழைத்துச் செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் கைவிடப்பட்டுள்ளனரென்று கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எரிக் பெரேரா தெரிவித்தார்.

இவ்வாறு ஏமாற்றப்பட்டவர்கள் 20 பேரிடமிருந்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் இதனைவிட அதிகமான மோசடிகள் இடம்பெற்றிருக்கலாமென நம்புவதாகவும் குறிப்பிட்டார்.அம்பாறை, பொத்துவில், கல்முனை, அக்கரைப்பற்று, கொழும்பு கோட்டை, வெள்ளவத்தை, மருதானை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களிலிருந்து பெருந்தொகையான பொருட்களையும், லொட்ஜ் ஒன்றிலிருந்து பயணப் பொதிகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலபத்தியின் ஆலோசனையில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எரிக்பெரேரர தலைமையிலான குழுவினர் இவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.சந்தேக நபர்கள் ஐவர் நீர்கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை ஜூலை மாதம் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல