சனி, 26 ஜூன், 2010

வெள்ளைக்கொடிகளுடன் புலிகள் சரணடைய வந்தமையை நோர்வே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில், விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக, ஒஸ்லோ சென்றுள்ள சில இலங்கை ஊடகவியலாளர்களிடம், கருத்து தெரிவித்த முன்னாள் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சொல்ஹெய்ம் கூறியதாவது:


தாம் இறுதி யுத்த காலத்தின் போது, விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் எஸ். புலித்தேவன் மற்றும், சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர்கள் சரணடையப் போவதாக தம்மிடம் முன்னதாகவே அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் விடுதலைப்புலிகள் சரணடையும் தீர்மானத்துடன் தொடர்புடையவர்கள் யாவர் என அவரிடம் கேட்டபோது, அதற்கு பதில் வழங்க எரிக் சொல்ஹெய்ம் மறுத்துவிட்டார். எனினும் 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதியில் இருந்து சரணடையும் பேச்சுக்கள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உடனடியாக இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என தெரிவித்த சொல்ஹெய்ம், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்துள்ளமையையும் வரவேற்றுள்ளதாக தெரிவித்தார்..

இரண்டாம் இணைப்பு

இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களிடம் அவர் இத்தகவலை நேற்று வெளியிட்டார். அவர் இலங்கை ஊடகவியலாளரிடம் மேலும் தெரிவித்த தகவல்கள், விவரங்கள் வருமாறு :

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு நாங்கள் முன்வந்திருந்தோம்.

கடைசிவரை யுத்தத்தைத் தவிர்த்து இரு தரப்புகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி எடுத்தோம். ஆனால் இரு தரப்பினரும் பல தடவைகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இறுதியில் போர் ஏற்பட்டுவிட்டது.'' என்றும் சொல்லி வருத்தப்பட்டார் சொல்ஹெய்ம்.

கேள்வி: யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் சரணடைவது தொடர்பாகப் புலிகள் உங்களுடன் தொடர்பு கொண்டார்களா?

பதில்: ஆம். 2009 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பல தடவைகள் என்னுடன் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். நாங்களும் அதற்காகப் பல வழிகளில் முயன்றுகொண்டிருந்தோம்.

இறுதியாக கடந்த வருடம் மே 17 ஆம் திகதி வன்னியிலிருந்து நடேசன், புலித்தேவன் போன்ற புலித்தலைவர்கள் வன்னியிலிருந்து என்னுடன் தொடர்புகொண்டு தாங்கள் யுத்தத்தை நிறுத்தி சரணடையப்போகிறார்கள் என்றும் அதற்கு ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டார்கள். அதற்கு நான் ""உங்களுடைய முடிவு, காலம் பிந்தியதாகிவிட்டது. இருந்தாலும், நீங்கள் வெள்ளைக்கொடியுடன் சென்று படையினரிடம் சரணடையுங்கள்'' என்று தெரிவித்தேன்.

அதற்கு முதல் புலிகளின் சரணடைவு குறித்து இலங்கை அரசுக்கும் நான் தெரியப்படுத்தியிருந்தேன். எங்களுடன் மாத்திரமல்ல, செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, ஐ.நா. போன்ற பல தரப்புகளுடனும் அவர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகே சரணடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் பற்றி ஏற்கனவே இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் அரசு சார்பான எவருடன் பேசினேன் என்பதை நான் கூற விரும்பவில்லை. ஆனால் புலித்தலைவர்கள் தொடர்பு கொண்டு சில மணித்தியாலங்களின் பின்னர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று நான் அறிந்துகொண்டேன்.

கேள்வி: போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்று கருதுகிறீர்களா?

பதில்: ஆம். யுத்தத்தின் இறுதிப்பகுதியில் பல போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை ஒன்று தேவை. அதைத்தான் ஐ. நா. செயலரும் வலியுறுத்துகிறார். எமது நிலைப்பாடும் அதுதான். சர்வதேச சுயாதீன விசாரணைகள் மூலம் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம்.

கேள்வி: இலங்கையின் தற்போதைய அரசுடனான உங்களுடைய உறவுகள் பற்றி...?

பதில்: இரு தரப்புகளுக்கும் இடையில் சாதாரணமான உறவு இருக்கிறது. புதிய அரசுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக சில அமைச்சர்களை இங்கு அழைக்க இருக்கிறோம். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசுக்கு நல்ல வாய்ப்பு கிட்டியிருக்கிறது. கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் தங்களுடைய அமோக ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். எனவே அவர்களுடன் பேசி தமிழர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்பதே எமது விருப்பம் என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல