வியாழன், 11 நவம்பர், 2010

இராணுவத்திடம் சரணடையும் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழக்கப்படும் என்ற அறிவித்தலை ஏற்றே எனது கணவர் சரணடைந்தார்.

புதுவையின் மனைவி
யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகிய யோகரட்ணம் யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் சாட்சியமளித்துள்ளார்கள்.

யோகியின் மனைவி ஜெயவதி தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது:
வன்னியில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தினால் இடம் பெயர்ந்து கடந்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி நாங்கள் வட்டுவாகல் பிரதேசத்தைச் சென்றடைந்தோம். மறுநாள் 18ஆம் திகதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை சென்றடைந்தோம்.

அங்கு இராணுவத்தினரிடம் சரணடையும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.இதனை நம்பி எனது கணவர் யோகரட் ணம் யோகி, கவிஞர் புதுவை இரத்தினதுரை, கல்விப்பிரி வைச் சேர்ந்த பேபி சுப்பிரமணியம், அரசியல் பிரிவைச்சேர்ந்த லோரன்ஸ் திலகர் உட்பட 50இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலி களின் உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்தவர்கள் பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைத் தான் கண்டதாகவும், அவ்வாகனம் புறப்படும் வரை நான் சம்பவ இடத்திலேயே நின்றிருந்ததாகவும் தெரிவித்தார்.

அதன்பின்னர் அவர்களைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கு பலவழிகளிலும் முயற்சித்த போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும் இன்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டி ருக்கின்றார்களா என்பது பற்றிய தகவல்களை அரசாங்கம் தெரிவிக்கவில்லை என்றும், சரணடைந்தால் பொதுமன்னிப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் சரணடைந்த எனது கணவர் எங்கே? தயவு செய்து அவர் தொடர்பான தகவல்களை பெற்றுத்தாருங்கள் என அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை ஆரம்பமாகவிருந்த போதிலும் கொழும்பில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக அவர்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அரியாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசாரணைகள் பிற்பகல் 3.30 மணிக்கே ஆரம்பமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியாலையில் நடைபெற்ற விசாரணைகளின்போது காணாமல் போயுள்ள தமது கணவர்கள், பிள்ளைகள் தொடர்பான முறைப்பாடுகளே கூடுதலாக ஆணைக்குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரியாலையில் நடைபெற்ற விசாரணைகளையடுத்து, நீர்வேலியில் இந்த ஆணைக்குழுவின் அமர்வு இரவு 8 மணிக்கு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில் வடமாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைப் போன்று மன்னாரிலும் இந்த ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இந்த வேண்டுகோளை ஆணைக்குழு ஏற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னாரில் எப்போது இந்த ஆணைக்குழு தனது அமர்வை நடத்தும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என பிபிசி செய்திச்சேவையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


போராளியான எனது கணவரின் விபரங்களைப் பெற்றுத்தாருங்கள் - மனைவி சாட்சியம்

வட்டுவாகலில் இராணுவத்தில் சரணடைந்த முன்னாள் புலிகளின் போராளியான எனது கணவர் தொடர்பான விபரங்கள் எதுவும் இல்லையென மனைவி மகிந்தராஜ் துளசிகா சாட்சியமளித்தார்.

ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையிலேயே திருமதி மகிந்தராஜ் துளசிகா மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் தனது சாட்சியத்தில்,

விடுதலைப்புலிகள் அமைப்பில் மருத்துவப்பிரிவிலிருந்த ரேகா என அழைக்கப்பட்ட ரங்கசாமி மகிந்தராஜ் என்ற எனது கணவர் மற்றும் நான் எனது பிள்ளைகள் இருவரும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வட்டுகாவில் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். எனினும் என்னையும் பிள்ளைகள் இரு வரையும் ஓமந்தையில் விடுவித்து விட்டு கணவரை இராணுவத்தினர் அழைத்துச சென்றனர்.

அத்துடன் மருத்துவப்பிரிவில் பணியாற்றிய போராளிகள் அனைவரையும் சரணடையுமாறு இராணுவத்தினர் ஓமந்தையில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.பின்னர் நானும் பிள்ளைகள் இருவரும் வவுனியா வலயம்-4 முகாமில் தங்கியிருந்த போது இராணுவத்தினர் இரண்டு தடவைகள் வந்து விசாரணை செய்தனர்.

எனினும் இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது கணவர் தொடர்பில் எதுவித தகவல்களும் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என கேட்டுக்கொள்கின்றேன்.இவ்வாறு தனது சாட்சியத்தில் திருமதி மகிந்தராஜ் துளசிகா தெரிவித்தார்.



நோயாளியான கணவரை மீட்டுத் தாருங்கள்! புதுவையின் மனைவி வேண்டுகோள்

”நோயாளியான எனது கணவரை மீட்டுத் தாருங்கள்.” இவ்வாறு புதுவை இரத்தினதுரையின் மனைவி தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் வேண்டுகோள் விடுத்தார்.


இவர் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது:-

”எனது கணவர் உட்பட விடுதலைப்புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் வைத்து கடந்த வருடம் மே மாதம் 18 ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்தனர். நான், கணவர், பிள்ளைகள் ஆகியோர் முதல் நாள்தான் அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளுடன்இராணுவக்கட்டுபாட்டு பகுதிக்கு வந்திருதோம்.

மறுநாள் சரண் அடைந்த எனது கணவரும், ஏனைய புலி முக்கியஸ்தர்களும் பஸ்களில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டனர். அதன் பின்னர் பிள்ளைகளுடன் வலயம் 4 நலன்புரி நிலையத்துக்கு சென்றேன். எனது கணவரை பின்னர் காணவே இல்லை. முகாமில் இவ்விடயத்தை இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு முறையிட்டேன். எழுத்துமூலமும் முறையிட்டேன்.

இது தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி செயலகத்துக்குஇராணுவத்திடம் சரண் அடைந்த கணவர் காணாமல் போய் இருக்கின்றார் என்று ஃபக்ஸ் மூலம்அறிவித்தேன் அத்துடன் ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ, இராணுவ தளபதி ஆகியோருக்கும் முறையிட்டேன். எனது கணவர் ஒரு நோயாளி. அவரை மீட்டுத் தர வேண்டும்.”


யாழில் இடம்பெற்ற கைதுகளுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு உண்டு - அடையாளம் காட்டவும் தயார் என சாட்சியமளிப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கைது சம்பவங்களுக்கும் காணாமல் போன சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் முழுத் தொடர்பு இருப்பதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. நேற்று அரியாலை சரஸ்வதி கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசார ணைக்குழு முன் சாட்சியமளித்த பெருமளவானோர் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இராணு வத்தினரைக் கண்டால் அவர்களை அடையாளம் காட்ட தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கைதுச் சம் பவங்களுக்கும்,காணாமல் போன சம்பவங் களுக்கும் இராணுவத்தினருக்கும் முழுத் தொடர்பு இருப்பதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

இதில் கோண்டாவிலைச் சேர்ந்த சத்தியா தேவி என்பவர் சாட்சியமளிக்கையில், எனது மகன், அவரது மனைவி 3 பிள்ளைகளுடன் நான் வசித்துவந்தேன்.

2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி இரவு 8.45 மணியளவில் எமது வீட் டுக்கு வந்த இராணுவத்தினர் விசாரணைக்கென எனது மகனை அழைத்துச் சென்றனர்.ஆனால் அவர் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை. எனது மகனை இராணுவத்தினர் அழைத்துச் சென்ற மறுநாளே மனித உரிமைகள் ஆணைக்குழு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, இராணுவத்தரப்பு ஆகிய வற்றிடம் முறையிட்டேன் ஆனால் எந்தவிதபதிலும் எனக்கு தெரிவிக்கவில்லை.

ஆனால் எனது மகன் ஊரெழு இராணு வமுகாமில் இருப்பதாக அங்கு கண்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். எனது மகன் இன் னமும் உயிருடனே இருக்கிறார்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனவே எனது மகனை கண்டு பிடித்துத் தாருங்கள் என அவர் கோரிக்கை விடுத்தார்.


இதேவேளை. திருநெல்வேலியைச் சேர்ந்த நா.சத்தியவா கேஸ்வரன் என்பவர் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,எனது மகன் ரஜீவன். இவர் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் பணியாற்றிவந்தார். இவ ருக்கு 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி திருமணம் நடந்தது. இவர் திருமணம் செய்து 15 ஆவது நாளே இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.சம்பவநாளன்று இரவு வீடுபுகுந்த இராணு வத்தினர் எனது மகனை இழுத்துச் சென்றனர். நாங்கள் கெஞ்சினாம், மன்றாடினோம்.எனது பிள்ளையை விடுதலை செய்யுமாறு கோரி னோம் ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை. மகனை இழுத்துச் சென்றனர். அதனைத் தடுத்த எனது மனைவியின் தலையில் தாக்கி னர். மறுநாள் எமது மகனை இராணுவம் அழைத்துச் சென்றமை தொடர்பில் சகல தரப் பினரிடமும் முறையிட்டோம்.

ஆனால் எந்தவிதபதிலும் இல்லை எனது மகனை கைது செய்த இராணுவ அதிகாரியை எனக்குத் தெரியும். அவரை நான் அடையாளம் காட்டுவேன். அவர் என்னுடன் நன்கு பழக்கப் பட்டவர் என்றார்.இதேவேளை தனது மகன் வெள்ளவத்தை யில் நின்றதை தனது உறவினர்கள் கண்ட தாகவும் அவர் தனது சாட்சியில் மேலும் கூறினார்.

இதேவேளை நேற்றுச் சாட்சியமளித்த நல்லூரைச் சேர்ந்த த.புவனேஸ்வரி என்பவர், தனது மகன் பாதுகாப்பு அனுமதி பெறுவதற்கு யாழ்.சிவில் நிர்வாக காரியாலயத்துக்குச் சென்ற போது காணாமல் போனதாக தெரிவித்தார்.2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி 12.30 மணிக்கு இச்சம்பவம் இடம் அபற்றது. எனது மகன் சிவில் அலுவலகத்துக்குள் சென்று அங்கு இருந்ததை ஏனையவர்கள் கண்டுள்ளனர்.

அவரது சைக்கிள் வெளியில் விடப்பட்டிருந்தது. ஆனால் அவர் பாதுகாப்பு அனுமதியை பெற்றுக் கொண்டு திரும்பி விட்டதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்றுவரை வீடுதிரும்பவில்லை தயவுசெய்து எனது மகனை திருப்பித்தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல