அதைத்தொடர்ந்து இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி பக்கத்து மாநிலமான உத்திரப்பிரதேசத்திலிருந்து வாகனங்களில் மக்களை அழைத்து வந்து டெல்லியில் பேரணிகளை நடத்தினார். அப்பேரணிகளை அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து காட்டுமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரான இந்திர குமார் குஜ்ராலை கேட்டுக்கொண்டார், ஆனால் குஜரால் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனாலயே குஜரால் நீக்கப்பட்டு வித்யா சரண் சுக்லா தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என பலர் கருதுகின்றனர்.
பின்பு சோவியத் ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டார்.
குஜ்ரால் 1980 களின் நடுவில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஜனதா தளத்தில் இணைந்தார். 1989 தேர்தலில் ஜலந்தர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார். 1989 ம் ஆண்டு முப்தி முகமது சயதுவின் மகள் ருபயா சயத் கடத்தப்பட்ட போது கடத்தப்பட்டவர்களுடன் பேசி ருபயாவை மீட்க வி.பி.சிங் இவரை அனுப்பினார். குவைத் மீது ஈராக் படையெடுத்து ஆக்கிரமித்ததும் அதன் விளைவாக 1991ல் ஏற்பட்ட முதலாம் வளைகுடா போரும் இவர் வெளியுறவு துறை அமைச்சராக கையாண்ட பெரிய செயல். அச்சமயம் ஈராக் அதிபர் சதாம் உசேனை நேராக சந்தித்து பேசினார். 1991 நடுவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாட்னா தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் யஷ்வந் சின்காவை எதிர்த்து போட்டியிட்டார். எனினும் அதிக அளவு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததைத்தொடர்ந்து இத்தேர்தல் இரத்து செய்யப்பட்டது.
1992 ஆம் ஆண்டு குஜ்ரால் இந்தியாவின் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 தேர்தல் முடிந்து தேவ கௌடா தலைமையில் ஐக்கிய முன்னனி அரசமைந்த பொழுது இரண்டாம் முறையாக வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார். அப்போது இவர் குஜ்ரால் திட்டம் என்பதனை முன்மொழிந்தார், இத் திட்டம் அண்டை நாடுகளுடன் நல்லிணக்கத்தை பேணுவதாகும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக