புகார்கள்
நடிகர் விஜயகுமாருக்கும், அவருடைய மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்து இருக்கிறார்கள்.
``என் மகள் வனிதாவும், மருமகன் ஆனந்தராஜ×ம் என்னை தாக்கியதால் என் கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது'' என்று விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில், ஆனந்தராஜை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ``விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய் என்னை தாக்கினார். அதற்காக அவரை கைது செய்ய வேண்டும்'' என்று வனிதா புகார் கொடுத்தார்.
பேட்டி
இதைத்தொடர்ந்து நடிகர் விஜயகுமார் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
``வனிதா ஒருநாளைக்கு ஒரு கதை சொல்கிறாள். என் மகன் அருண் விஜய் அவள் கழுத்தைப்பிடித்து நெரித்ததாக பொய் புகார் கொடுத்து இருக்கிறாள். அருண் விஜய் எங்கள் உறவினர் ஒருவரின் அறுபதாம் திருமண நிகழ்ச்சிக்காக தனது மனைவி, குழந்தை, மாமனார், மாமியாருடன் அமெரிக்கா போய் இருக்கிறான்.
ஆதாரங்கள்
அதற்காக அவன் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி `ஆன் லைன்' மூலம் விமான டிக்கெட் பதிவு செய்து இருக்கிறான். நவம்பர் 22-ந் தேதி அவன் விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றான். ஆனால் வனிதா நவம்பர் 23-ந் தேதி அன்று தன் கழுத்தை அருண் விஜய் நெரித்ததாக புகாரில் குறிப்பிட்டு இருக்கிறாள். விமானத்தில் பறந்தவன் எப்படி இவள் கழுத்தை நெரித்து இருக்க முடியும்?
இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என் கை மணிக்கட்டை ஆனந்தராஜ் அடித்து முறித்ததற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. இதையெல்லாம் தேவைப்பட்டால் போலீசாரிடம் கொடுப்பேன்.
65 வயது
என் மகன் அருண் விஜய்யும், மருமகன் டைரக்டர் ஹரியும் அவரவர் வேலைகளை செய்துகொண்டு, அவரவர் குடும்பங்களை கவனித்து வருகிறார்கள். எனக்கு 65 வயது ஆகிறது. என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு என் மகனும், மருமகனும் அவரவர் வேலைகளை கவனித்து வருகிறார்கள். அவர்கள் இரண்டு பேர் மீதும் வனிதா அபாண்டமாக புகார் செய்து இருக்கிறாள்.
அவளுடைய முதல் கணவர் ஆகாசுக்கு பிறந்த மகன் எங்கே இருக்கிறான்? என்று யாராவது அவளை கேட்டது உண்டா? அந்த பையன், அவன் தந்தையுடன்தான் இருந்தான். அவனை சாலிகிராமத்தில் உள்ள ஆகாசின் வீட்டில் இருந்து வனிதா அடித்து இழுத்து சென்று இருக்கிறாள். அந்த பையனை அவள் ஏதாவது செய்துவிட்டு, பழியை எங்கள் மீது போட்டுவிடுவாளோ என்று பயப்படுகிறேன்.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
மஞ்சுளா பேட்டி
அருகில் அமர்ந்திருந்த விஜயகுமாரின் மனைவி நடிகை மஞ்சுளா கண்ணீர்மல்க பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
``வனிதாவை என் வயிற்றில் சுமந்து பெற்றதற்காக வெட்கப்படுகிறேன். அவள் முதலில் ஆகாசை காதலிப்பதாக கூறினாள். அவரையே திருமணம் செய்வேன் என்றாள். அவள் விருப்பப்படி திருமணம் செய்து வைத்தோம்.
2 குழந்தைகள் பெற்ற பிறகு ஆகாசுடன் தகராறு செய்துகொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தாள். அவருடன் வாழமாட்டேன் என்றாள். நாங்கள் அவளை சமாதானப்படுத்தினோம். குடும்பம் என்றால் தகராறு வரத்தான் செய்யும். நாம்தான் அனுசரித்துப்போக வேண்டும் என்று அறிவுரை கூறினோம்.
`ஆன் லைன்' காதல்
ஆனால், எங்களுக்கு தெரியாமலே அவள் விவாகரத்துக்கு மனு செய்து இருக்கிறாள். ஒரு வருடம் கழித்து, `ஆன் லைன்' மூலம் ஆனந்தராஜை காதலித்து, திருமணமும் செய்துகொண்டாள்.
என் கணவருக்கு 2 மனைவிகள் இருக்கிறோம். இரண்டு பேர் மூலமும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் அத்தனை பேரிடமும் ஒரே மாதிரிதான் அன்பு செலுத்தி வருகிறோம். மூத்த மனைவி பிள்ளைகள், இளைய மனைவி பிள்ளைகள் என்ற பேதம் எங்களுக்குள் இல்லை.
வனிதா ஒருத்திதான் இப்படி ஆகிவிட்டாள். அவளை என் பொண்ணு என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன்.''
மேற்கண்டவாறு மஞ்சுளா கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக