ஞாயிறு, 23 ஜனவரி, 2011

மாஜிஸ்ரேட் மகனாகப் பிறந்தும் வறுமையில் வாடிய எம்.ஜி.ஆர்

“நான் ஏன் பிறந்தேன்... நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா...
நினைத்துச் செயல்படு என் தோழா ““நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?

நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உண்டு!'' கவிஞர் வாலியின் மேற்படி பாடல் வரிகளைக் கேட்கும் போது 1972ஆம் ஆண்டு எம். ஜி. ஆர்.நடித்து வெளிவந்த ““நான் ஏன் பிறந்தேன்'' திரைப்படத்தில் இடம்பெற்ற ““நான் ஏன் பிறந்தேன்'' என்ற பாடல்தான் ரசிகர்களுக்கு ஞாபகத்துக்கு வரும்.

வாசகர்களுக்கோ ““ஆனந்த விகடன்'' வார இதழில் ““நான் ஏன் பிறந்தேன்'' என்ற தலைப்பில் எம். ஜி. ஆர். எழுதி வந்த அவருடைய சுய சரிதைத் தொடர் கட்டுரைதான் ஞாபகத்துக்கு வரும்.

அவரே தன்னைப் பற்றி எழுதிய கட்டுரை மூலம் அவரை இங்கே நினைவு கூருவோமாக...

“இலங்கையிலுள்ள கண்டியில் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி நான் பிறந்தேன்.

இந்தியாவின் கேரளத்தில் பிறக்க வேண்டிய நான் கண்டியில் எப்படிப் பிறந்தேன் என்று கேட்கிறீர்களா? கேட்காவிட்டாலும் பரவாயில்லை கேட்டதாகவே நினைத்துக் கொள்ளுங்கள்.

கேரளாவிலுள்ள அரூர், குன்னங்குளம், இரு ஞாலக்குடா, திருச்சூர், சிற்றூர், ஏர்ணாகுளம் ஆகிய ஊர்களில் மாஜிஸ்ரேட்டாகப் பணியாற்றி வந்தவர்தான் என் தந்தை மருதூர் கோபால மேனன். அந்தக் காலத்தில் மாஜிஸ்ரேட் என்றால் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் சொல்வதுதான் வேதவாக்கு.

சட்டத்தை மீறும் நம்பூதிகளுக்கெல்லாம் அவர் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த காரணத்தால் தான் அடிக்கடி பல ஊர்களுக்கும் அவர் பணி மாற்றம் செய்யப்பட்டார்.

அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதே கிடையாது. ஆனால் அந்த நம்பூதிச்சமூகமோ அவரை அந்தப் பதவியிலிருந்து விலக்கிட தீவிர முயற்சியிலீடுபட்டது.

அதன் விளைவாக அந்தச் சமூகத்தார் எடுத்துக் கொண்ட எதிர்ப்பு முயற்சிகள் கொச்சியில் அவர்களுக்கு வெற்றியாகவே முடிந்தது.

செல்வாக்கு மிக்க ஒரு பெரிய குடும்பத்தின் சொத்து சம்பந்தமான வழக்கு என் தந்தையிடம் வந்தது. எதிரிகள் சிலர் ஒன்று கூடித் திட்டம் போட்டு கட்சிக்காரர்களில் ஒருவரும் பணக்காரருமான ஓர் அம்மையாரைத் தூண்டி விட்டு, என் தந்தையாரைச் சந்தித்துத் தீர்ப்பைத் தமக்குச் சாதகமாக அளிக்குமாறு கேட்கச் செய்தார்கள்.

ஆனால் என் தந்தையோ நான்கு பெரிய மனிதர்களை அழைத்து, அவர்களுடைய திட்டத்தை அம்பலப்படுத்தி, அந்த அம்மையாரையும் அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்.
ஆத்திரமடைந்த எதிரிகளோ தமது திட்டம் தோல்வியடைந்ததைப் பொறுக்க முடியாமல் அந்த அம்மையாருக்கு வேறு யோசனைகளைக் கூறி கொச்சியில் திவானாக இருந்த ஓர் ஐயரின் உதவியை நாடி வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றினார்கள்.

இதைத் தனக்கு நேர்ந்த பெரிய அவமானமாகக் கருதிய எனது தந்தை, உடனடியாகத் தன் நீதிபதிப் பதவியை ராஜினாமாச் செய்தார். அத்துடன் அந்த திவானுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரவும் முடிவெடுத்தார்.

இதையறிந்த எனது பாட்டனாரோ, உயர் சாதிக்காரர்களான அவர்களை எதிர்க்க வேண்டாமென்றும், அவர்கள் தவறு செய்திருப்பினும் அவர்களை அவமானப்படுத்தவோ, குறைகூறவோ வேண்டாமென்றும் ராஜினாமாவை வாபஸ் பெறும்படியும் எனது தந்தையிடம் வேண்டினார்.

அத்துடன் இப்படிப்பட்ட மாஜிஸ்ரேட் உயர் பதவி மலையாளிகளுக்குக் கிடைப்பது அபூர்வ மென்றும் அறிவுரை கூறினார். ஆனால் என் தந்தையோ அவருடைய புத்திமதிகளைக் கேட்கவில்லை.
மான நஷ்ட வழக்குப் போடுவதாக மட்டும் விலக்கிக் கொண்டாரே தவிர, ராஜினாமாவை திரும்பப் பெற முடியாதென்று கண்டிப்பாக மறுத்து விட்டார். அதன் பிறகுதான் கல்லூரிகளில் பிரின்சிப்பலாகப் பணியாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இறுதியாக இலங்கைக்குச் சென்று அங்கே கண்டி என்னுமிடத்திலுள்ள கல்லூயொன்றில் பிரின்சிப்பலாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நான் பிறந்தேன்.

நான் மட்டும்தான் கண்டியில் பிறந்தேனே தவிர, எனக்கு முன் பிறந்த காமாட்சி, பாலகிருஷ்ணன், சுபத்ரா, சக்ரபாணி ஆகிய நால்வரும் கேரளத்திலேதான் பிறந்தார்கள்.

எனக்கு இரண்டரை வயதான போது என் தந்தையும் இறந்தார். அம்மாவும் நாங்களும் ஆதர வற்றவர்களாகித் திக்கற்றவர்களானோம்.

செல்வந்தர் ஒருவரின் குடும்பம், அதுவும் மாஜிஸ்ரேட் பதவி வகித்தவரின் மனைவியும் மக்களும் எப்படி ஆதரவற்று அனாதைகளாகி விட முடியுமென்று நினைக்கலாம்! ஆம்! அன்றைய கால கட்டங்களில் கேரளத்திலே ““மருமக்கள் தாயம்'' என்றொரு சமுக சட்ட முறை வழக்கிலே இருந்து வந்தது.

அதன்படி...

ஒருவருக்கு எவ்வளவு செல்வம் சொத்துக்களும் இருந்தாலும் அவருடைய பிள்ளைகளுக்கு அதில் எவ்வித உரிமையும் கிடையாது என்பதும் அவருடைய உடன் பிறந்த சகோதரிகளின் பிள்ளைகளுக்கும்தான் அந்தச் சொத்தில் பங்குண்டென்பதும் அன்றைய சட்டமாகும்.

வேறு வழியின்றி நாங்கள் தூர உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்தோம். அவருடைய பாதுகாப்பில் வாழ்ந்து வந்தோம். அந்த உறவினர் ஒரு பொலிஸ்காரர். அவருடைய பெயர் வேலு நாயர். அவருக்கும் மனைவி, மக்கள், தமக்கை, தங்கை என குடும்பம் இருந்தது.

வேலு நாயருடைய தங்கையின் கணவரான நாராயணநாயர், “மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'' யில் பின்னணிப் பாடகராகப் பணி யாற்றிக் கொண்டிருந்தார்.

இவர்களது பாதுகாப்பிலே இருக்கும் போது தான் வேலை மாற்றம் பெற்று கும்பகோணம் சென்ற பொலிஸ்காரர் வேலுநாயருடன் நாங்களும் சென்று கும்பகோணத்தில் குடியேறினோம்.

பாடசாலைக்குச் சென்று படிக்கும் வயதடைந்த நான், என் அண்ணன் சக்ரபாணியுடன் கும்பகோணம் “ஆனையடி ஸ்கூல்'' என்ற பள்ளிக்கூடத்தில் கல்வி கற்க ஆரம்பித்தேன்.

என் வாழ்க்கையில் நான் முதன் முதலாக எழுதப் படிக்கத் தொடங்கிய மொழி தமிழ் தான்.
கல்வி பயின்ற இடம் தமிழ்நாடு.

நாங்கள் பட்ட வறுமைத் துன்பம் என்ற நாடகப் பாடகர் நாராயண நாயர், என்னையும் அண்ணனையும் தான் பாடும் நாடகக் கம்பெனியிலேயே சேர்த்து விட்டார்.

எனக்கு அப்போது சுமார் ஏழு வயதிருக்கும்.
என்னையும் அண்ணனையும் தவிர ஏனைய என் உடன் பிறப்புக்கள் மூவரும் பசி, பட்டினி, வறுமை காரணமாக துன்பங்களின் பிடிகளினின்றும் தப்பி மரணத்தின் பிடியிலே ஒன்றுபட்டு விட்டனர்.

நாடகக் கம்பெனியில் சேர்க்கப்பட்ட எங்களிருவருக்கும் வேலை மட்டும்தான் கிடைத்தது.
சம்பளம் கிடையாது. மூன்று வேளை உணவு மட்டுமே ஊதியமாகத் தரப்பட்டது.

எங்களின் துயர் கண்டு துன்பப்பட்டுக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த எங்கள் அம்மாவுக்கு, நாடகக் கம்பெனியில் எங்களுக்கு வேலை கிடைத்ததன் மூலம் மனப்பாரம் ஒன்று குறைந்தது.

காலையில் எழுந்ததும் இன்றைய உணவுக்கு என்ன வழி என்றும் கவலை, இரவு படுக்கைக்குப் போகும் போது நாளைய உணவுக்கு என்ன வழி என்றும் கவலை. இவ்வாறான சிந்தனைகளுக்கு எங்களைப் பொறுத்தவரையில் கவலை இல்லாமல் போய் விட்டாலும் எங்கள் தாயை எண்ணிக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்தினோம்.

எங்கள் மேல் அன்பும் பாசம் நேசம் கொண்டிருந்த எங்கள் தாய், தன் பிள்ளைகள் பசிப்பிணிக்கு இலக்காவதை விட, தன்னைப் பிரிந்தேனும் நிம்மதியாக நேரம் தவறாது உணவு உண்ணட்டும் என்று எண்ணிய தாய் உள்ளம் எங்களைப் பிரிந்து செல்ல இணங்கிய போதுதான் இளமையில் கொடியது வறுமை என்பதை உணர்ந்தோம்.

யார் யாருடன் எப்படி எப்படிப் பழக வேண்டும் என்பதறியாத, உலகமறியாத பிள்ளைப் பருவத்திலே எங்களுக்கு அறிவு விளக்கம் தருவதில் தந்தையாகவும் உள்ளத் தூய்மை தருவதில் கடவுளாகவும் இருந்த எங்களுடைய அன்னையைப் பிரிந்து நாடகக் கம்பனியில் சேர்ந்து அந்த ஊரை விட்டே வேற்றூருக்குப் பயணமானோம்.

எங்களைப் போன்றே தாய்மாரைப் பிரிந்து முதலாளியே தாய், நாடக ஆசியரே தந்தை, கம்பெனியே குடும்பம் என நம்பியிருந்த பல சிறுவர்களின் உடன் பிறப்புக்களாகி நாங்களும் அந்த நாடகக் கம்பெனியென்ற குடும்பத்தில் கலந்து நடிகர்களானோம். பெற்ற தாயைப் பிரிந்த சேய்களானோம்.'' இப்படி எல்லாம் ஆரம்ப வாழ்க்கையில் கஷ்டப்பட்ட எம். ஜி. ஆர். தான் தன் உழைப்பால் உயர்ந்து நடிகனாலும் நாடாள முடியும் என்பதை நிரூபித்து மக்கள் திலகமாகிச் சாதனை புரிந்து சத்திரம் படைத்தார்!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல