ஞாயிறு, 23 ஜனவரி, 2011

இரு தேசங்களாக மாறும் நிலையில் சூடான்

சண்டையிட்டவர்கள் சமாதானமாகிப் போகலாம். பின்னர் சேர்ந்து வாழலாம் அல்லது பிரிந்து செல்லலாம். இது உலக மரபு எனலாம்.
சமாதானம் வரவேற்கத்தக்க விடயமே.

சேர்ந்து வாழ்வதும், பிரிந்து செல்வதும் சர்ச்சைக்குரிய விடயங்கள்.

சேர்ந்து வாழ்வதால் பிரச்சினைகள் இல்லை என்றால், அதனை ஆதரிக்கலாம்.ஆனால், சேர்ந்து வாழ்வதை விடவும் பிரிந்து செல்லுதல் நல்லதாயின், அதுவே சிறப்பானதெனக் கருத வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது. சூடான் விவகாரமும் இப்படிப்பட்டது தான். சேர்ந்து வாழ்வதா, பிரிந்து செல்வதா, எது சிறந்தது....? என்பதை பரிசீலிக்கக்கூடிய பலப்பரிட்சைக்களமாக வடசூடான், தென்சூடான் பிரச்சினை அமைந்திருக்கிறது.

சூடானின் வடபகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன.

வடக்கின் பெரும்பகுதி பாலைவனமாக இருப்பதும், தெற்கில் வனாந்தரங்கள் நிறைந்து காணப்படுவதும் முக்கியமான வித்தியாசம்.

வடக்கு வாழ் மக்களில் முஸ்லிம்கள் செறிந்திருப்பதும், தெற்கு வாழ் மக்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக காணப்படுவதையும் குறிப்பிட முடியும்.

தெற்கில் பாரம்பரிய மதங்களைப் பின்பற்றும் பல்வேறு இனக் குழுமங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்கிறார்கள்.

வடக்கும் தெற்கும் சேர்ந்து வாழ வேண்டுமா அல்லது பிரிந்து செல்ல வேண்டுமா..? என்பது சமகாலத்தின் முக்கியமான கேள்வி.

இந்தக் கேள்விக்கு பதில் தேடும் விதத்தில் அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்துக் கணிப்பொன்று நடந்திருக்கிறது.

இந்தக் கருத்துக்கணிப்பின் பெறுபேறு சூடானின் எதிர்காலத்தை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த ஆபிரிக்காவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக்கூடிய ஆற்றல் கொண்டதாகத் திகழ்கிறது.

சூடானில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த ஆயுத நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்த தீர்வு, நடைமுறையின் ஓரம்சம் என்பதால் மாத்திரம் கருத்துக் கணிப்பு முக்கியத்துவம் பெற்றுவிடவில்லை.

இந்தத் தீர்வு நடைமுறையில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கருத்துக்கணிப்பைத் தொடர்ந்து உருவாகக்கூடிய சூழ்நிலை, இந்தச் சூழ்நிலை ஆபிரிக்க தேசத்தின் ஏனைய நெருக்கடிகளில் ஏற்படக்கூடிய தாக்கம் போன்ற பல விடயங்களின் அடிப்படையில் அதனை ஆராய வேண்டியிருக்கிறது.

சூடானின் ஆட்சி இயந்திரம் வடபகுதியில் இருந்து இயங்குகிறது. அரசாங்கத்தால் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறி, தென்பகுதி மக்களின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஆயதப் போராட்டம், சிவில் நெருக்கடிக்கு வித்திட்டிருந்தது. இந்த யுத்தத்தில் பலியான உயிர்கள் ஏராளம். விளைந்த பாதிப்புக்களை விபரிப்பதும் கடினம்.

சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்த முயற்சிகளுடன் சூடான் அரசாங்கம், சூடான் மக்கள் விடுதலைச் சேனையும் (SPLA/M) 2005ஆம் ஆண்டு செய்து கொண்ட சமாதான உடன்படிக்கை நெருக்கடிக்குத் தீர்வாக அமைந்தது.

இந்த சர்வாம்ச சமாதான ஒப்பந்தமானது ““நைவாஷா உடன்படிக்கை'' என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இதில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் வளங்களைப் பகிர்ந்தளிப்பது முதற்கொண்டு அதிகாரப்பரவலாக்கம் வரையிலான பல்வேறு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதன் பிரகாரம், கடந்த ஐந்தாண்டுகளாக ஆயதங்களைக் கீழே வைத்து விட்டு தென்பகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை SPLA/M நிறைவேற்றி வருகிறது.

தென்பிராந்தியம் தொடர்ந்தும் வடபகுதியுடன் இணைந்திருக்க வேண்டுமா அல்லது அது ஆபிரிக்காவின் 54 ஆவது நாடாக உருவாக வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்கும் நோக்கில், தென்பகுதி மக்களின் கருத்தை அறிவதற்காக வெகுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
வடக்கும், தெற்கும் பிரிய வேண்டுமா?என்பதைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரம் தென்பகுதி மக்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டமை ““நைவாஷா உடன்படிக்கை''யின் சிறப்பம்சம் என்று கூறலாம்.

ஆனால், தற்போதைய பிரச்சினை அதுவல்ல. இந்தக் கருத்துக் கணிப்பின் பெறுபேறு என்னவாக இருக்கப் போகிறது, பெறுபேற்றின் அடிப்படையில் நிகழப் போகும் மாற்றங்கள் எவை, என்பவையே பிரதானமான கேள்விகள்.

““நைவாஷா உடன்படிக்கை''யின் பிரகாரம், இந்தக் கருத்துக் கணிப்பை அங்கீகரிக்க வேண்டுமாயின் 60 சதவீதமான மக்கள் வாக்களிப்பது அவசியமானதாகும்.

இந்த வரம்பைக் கடந்த புதனன்றே தாண்டி விட்டதாக SPLA/M இன் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதில் முக்கியமான விடயம் யாதெனில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரிந்து செல்வதை ஆதரித்தே வாக்களித்துள்ளார்கள் என்ற ஹேஷ்யத்தின் அடிப்படையில், தென்பகுதி மக்கள் வெடிகொளுத்தி ஆரவாரம் செய்து வருகின்றமையாகும்.

அநேகமாக, அவர்களுக்கு சார்பான முடிவுகள் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமெனவும், அவ்வாறு நடந்தால் எதிர்வரும் ஜூலை மாதம் அளவில் தென்சூடான் புதியதொரு தேசமாக மாறி விடுமெனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் பிராந்தியத்திற்காக தனியொரு தேசியக் கொடியை வடிவமைத்து, தேசிய கீதத்தை உருவாக்கும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால், தேசியக் கொடியும் தேசிய கீதம் மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வாகி விடுமா? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது.

வடசூடான், தென்சூடான் பிரிவினையில் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளின் தாற்பரியம் சற்று சிக்கலானது.

தென்சூடான் எண்ணெய் வளம் நிறைந்த பிரதேசமாகும். இந்தப் பிரதேசம் தனிநாடாகப் பிரிந்து செல்லும் பட்சத்தில் வடசூடான் வருமானத்தை இழந்து விடலாம். அதற்குத் தீர்வாக, வளங்களை சரியாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் அவசியம்.

இந்தப் பிரச்சினையின் ஆழம் அபியே என்ற பிரதேசத்தின் உரிமையைத் தீர்மானிப்பதில் எழுந்த சிக்கலில் ஆழமாக வெளிப்படுகிறது.

இங்கு அதிகமான எண்ணெய்க் குதங்கள் இருப்பதால், இதனைத் தன்னோடு இணைத்துக் கொள்ள வடக்கில் உள்ளவர்களும், தெற்கில் உள்ளவர்களும் விரும்புகிறார்கள்.

இதன் காரணமாக, இந்தப் பிரதேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய பிரத்தியேகக் கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

அடுத்து, தென்பிராந்தியம் சார்ந்த பிரச்சினை.

வடக்கிற்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்வதற்காக அணி திரண்டார்கள் என்பதால், தென்பகுதி மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று கருதி விட முடியாது.

தென்பகுதி மக்கள் மத்தியிலும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இனக்குழுக்கள் பல வருடகாலமாக ஒன்றுடன் ஒன்று ஆயதப் போராட்டம் நடத்தியிருக்கின்றன.

அடுத்ததாக, SPLA/M இயக்கத்தின் ஆட்சி நிர்வாகத் திறன்.

தென்பிராந்தியத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் பெருமளவு பணம் சம்பாதித்தபோதிலும், இயக்கத்தின் ஆட்சியாளர்கள் மக்கள் வாழ்க்கையில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அந்த இயக்கத்தை தென்பகுதியில் வாழும் அனைத்து இன மக்களும் சிவில் யுத்தத்தைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் இடம்பெயர்ந்த மக்கள் எந்தக் குடியுரிமையைப் பெறுவது? என்ற கேள்வியும் எழுகிறது.

இதனை இந்த மக்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று இரு தரப்பும் இணக்கம் கண்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

எது எவ்வாறானபோதிலும், தென்பிராந்தியம் பிரிந்து செல்வதை வடக்கின் தலைவர்கள் விரும்பவில்லை என்பதை ஜனாதிபதி மொஹமட் அல்பஷீன் பேச்சுத்தொனி புலப்படுத்துகிறது.

இத்தகைய பிரிவினை வடபகுதியில் உள்ளவர்கள் பொருளாதார சுபீட்சம் கருதி தென்பகுதிக்குச் செல்வதை ஊக்குவித்து விடுமெனவும், இதனைத் தடுப்பதற்காக ஷரிஆ சட்டங்களை கடுமையான முறையில் அமுலாக்கப் போவதாகவும் பஷீர் கூறியிருக்கிறார்.

இந்த மாதியான முயற்சிகள் மத அடிப்படையிலான முனைவாக்கத்தைத் (Religious Polarization) தீவிரப்படுத்தி விடக்கூடும்.

தென்பிராந்திய பிரிவினையை தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு, தர்பூர் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களும் தனித்தாயகம் கோரக்கூடிய சாத்தியம் உள்ளது. அதனையும் அவர் சமாளித்தாக வேண்டும்.

தென்பிராந்தியப் பிரிவினை சார்ந்த பிராந்தியப் பிரச்சினையும் இத்தகைய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஒருபுறத்தில் லிபியத் தலைவர் மொஹமட் கடாபி ஒரே ““ஆபிரிக்க தேசம்;'' என்ற கோட்பாட்டுக்காக பாடுபடுகையில், மறுபுறத்தில் ஆபிரிக்க நாடுகள்
““இனம், மதம், பொருளாதார நலன்கள்'' போன்ற காரணங்களின் அடிப்படையில், தனித்தனி நாடுகளாகப் பிரிந்து செல்வதற்கு தென்சூடானின் சுதந்திரப் பிரகடனம் வழிவகுக்கக்கூடும்.

சூடானின் அயல்நாடான சோமாலியாவின் சோமாலிலாந்து பிராந்தியம் பிரிவினை கோரலாம். ஐவரிகோஸ்ட் பிரச்சினையும் புவியியல் எல்லைகளுக்குள் செறிந்திருக்கும் இரு வேறுபட்ட இனக்குழுமங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், சூடான் விவகாரம் ஐவரிகோஸ்ட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இன்னும் இரு வாரங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்பின் பெறுபேறுகளுக்கு அமைவாகச் சேர்ந்து வாழ்வதா, பிரிந்து செல்வதா...? என்பதைத் தீர்மானிக்கப் போகும் சூடானியத் தலைவர் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தலையில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தான்.

ஆனால், ““பிரிந்து செல்லும் வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகம்'' என்ற மாயையைத் தகர்த்து, முழு உலகிற்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்றே கூற முடியும்.


சதீஷ் கிருஷ்ணபிள்ளை
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல