ஞாயிறு, 23 ஜனவரி, 2011

திருமணம் மற்றும் திருமண உறவின் விளைவாக ஏற்படுகின்ற சட்டக்கடப்பாடுகள்

எமது சமூகத்தில் திருமணம் என்பது ஒரு அத்தியா வசியமான அமைப்பாகவும் அதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது இன்றியமையாத நடை முறை ஒன்றாகவும் காலம் காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ள வியடமாகும். நமது நாட்டில் பல் வேறுபட்ட இன, மத, மொழிகளைக் கொண்ட சமூகங்கள் இருந்து வருகின்றன.

இச்சமூகங்கள் அனைத்தும் விவாகம் என்பது ஒரு புனிதமான உறவு என்பதை அங்கீகரித்திருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. திருமணங்கள் சட்ட ரீதியாகவும், சம்பிரதாய ரீதியிலும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையின் அத்தியாவசியமான விடயங்களை ஒழுங்கமைக்கும் சட்டத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமுடையவனாக இருத்தல் வேண்டும்.

திருமணத்திற்குரிய அடிப்படைச் சட்டத்தை எடுத்துப் பார்க்கும் போது தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் உட்பட கண்டியச் சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டத்தின் கீழ் வருபவர்கள் தவிர அனைவரும் பொதுச் சட்டத்திற்கு இணங்கி ஒழுக வேண்டும். இலங் கையில் திருமணங்களை ஒழுங்கமைக்கும் சட்டங்கள்.

1. இல. 19:1907 ஆம் ஆண்டின் பொது திருமண கட்டளைச் சட்டம் (பொ.க.ச)

2. இல. 44:1952 ஆம் ஆண்டின் கண்டிய திருமண விவாகரத்துச் சட்டம்

3. இல. 13:1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டம்

இலங்கையில் பொது திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் ஒன்றை நிறைவேற்றத் தேவைப் படுத்தப்பட்ட சட்டத் தேவைப்பாடுகளை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

இலங்கையில் 18 வயதைப் பூர்த்தி செய்த ஆண், பெண் ஆகியோர் திருமணம் செய்யத் தகுதியுடையவர் ஆவர். திருமணம் முடிக்க எண்ணியுள்ள இருவரில் ஒருவர் திருமணம் முடிப்பதற்கான உத்தேசித்து அறிவித்தலை, மூன்று மாதத்திற்கு முன்பே தான் வசித்து வருகின்ற பிரதேசத்தின் மாவட்ட விவாகப் பதிவாளருக்கு அறிவித்தல் வேண்டும்.

மேலும் விவாகப் பதிவினை மேற்கொள்கின்ற போது பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை பதிவாளரிடம் சமர்ப்பிப்பது அத்தியாவசியமாகும்.

இன்றைய நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்ய முன்பே போலி பிறப்புப் பத்திரத்தை வழங்கி திருமணத்தை மேற்கொள்கின்றவர்களை நாம் காணக்கூடியதாகவுள்ளது. திருமணத்திற்குரிய ஆண், பெண் ஏற்கனவே திருமணம் முடித்து பின்பு விவாகரத்துப் பெற்றிருப்பின் விவா கரத்திற்குரிய கட்டளை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அவதானித்தல் வேண்டும்.

ஏனெனில் ஒரு திருமணம் சட்டரீதியாக நிலைத்திருக்கையில் இன்னுமொரு திருமணத்தைப் பதிவு செய்தல் குற்றவியல் தவறு. இருதார மணங்கள் புரிந்தவர் சிறைத்தண்டனைக்கு ஆளாவர்.

மேலும் திருமணம் ஒன்று ஆண், பெண் இருவருடைய சம்மதத்தின் பேரிலேயே நடைபெற வேண்டும். தமக்குரிய விருப்பத்தை விவாக பதிவாளரிடம் இருவரும் தெரியப்படுத்தல் அத்தியாவசியமான ஒன்றாகும். முஸ்லிம் சட்டத்தின் கீழ் 12 வயதுக்குக் குறைந்த ஒரு பெண்பிள்ளை திருமணம் செய்ய காதியுடைய சம்மதம் அவசியமாகும்.


பொதுச் சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகள்:

திருமணம் முடிக்கக் கருதியுள்ள ஆண் அல்லது பெண் உரிய விண் ணப்பத்தில் திருமணத்திற்குரிய அறிவித்தலை வழங்க வேண்டும். இவ்வறிவிப்பில் குறிப்பிட்ட பிரிவு களுக்குரிய பதிவாளர் சமாதான நீதவான், நொத்தாரிசு அல்லது பாதிரியார் மற்றும் இரண்டு சாட்சிகள் பிரசன்னமாக இருக்கவேண்டும்.

பதிவாளரால் வழங்கப்படும் சான்றிதழ் முக்கியமாகும். திருமணப் பதிவுக்கு முன்பதாக ஆட்சேபனைகள் இருப்பின் அதனை தெரிவித்தல் வேண்டும். திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும்.

தேவாலயத்தில் நடைபெறின் பாதிரியாரின் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் நடைபெற வேண்டும். பாதிரியார் தேவாலயத்தில் திருமணம் நடை பெற்றதில் இருந்து ஒரு வாரத்திற்குள் உரிய கூற்றினை விவாகப் பதிவாளருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.


பதிவு செய்யப்படும் திருமணங்கள் சட்டரீதியானதா?

பதிவு செய்த திருமணங்கள் மாத்திரம் சட்டரீயான திருமணங்களாகக் கருதப்படுவதில்லை. வழக்காற்று திருமணங்களும் சட்டரீதியான திருமணங்களாகக் கருதப்படுகின்றன.

எமது நாட்டில் சுதேச மக்கள், காலனித்துவ ஆட்சிக்கு முன்னர் திருமணங்களைப் பதிவு செய்யவில்லை. வழக்காற்றுத் திருமணங்களை மேற்கொள்வதனாலும் திருமணத்திற்குரிய குறைந்தபட்ச வயதெல்லையை கொண்டிருத்தல் வேண்டும். அத்துடன் ஒவ்வொரு சமூகத்திற்குரிய சம்பிர தாயங்களைப் பூர்த்தி செய்வதன் மூலம் வழக்காற்று திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

ஒவ்வொரு சமூகத்தினரும் தமது சட்டங்களை பூரணப்படுத்தி தமது திருமணத்தை மேற்கொண்டிருந்தால் அது பதிவு செய்யப்படாது விடினும் சட்டரீதியான திருமணமாகக் கருதப்படும். உதாரணம், வட மாகாணத்தைச் சேர்ந்த இந்துக்கள் தாலி கட்டுவது அத்தியா வசியமான சடங்கு ஒன்றாகும். எனினும் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இந்துக்கள் தாலி கட்டுதல் அத்தியா வசியமான சடங்கு ஒன்றல்ல.

கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் உரிய சடங்குகளை நிறைவேற்றுவதன் மூலம் தமது திருமணத்தை நடத்தும் போது அது சட்டரீதியான வழக்காறுத் திருமணமாகக் கருதப்படும்.

மேலும் பெளத்தர்களின் போருவ வைபவம் முக்கிய சடங்கு ஒன்றாகும். மேலும் முஸ்லிம்கள் நிக்காஹ் சடங்கினை நிறைவேற்றுவது அவர்களுக்குரிய வழக்காற்றுச் சம்பிரதாயமாகும். தாலிக்குப் பதிலாக மஞ்சள் துண்டு ஒன்று கழுத்தில் கட்டுதல் கூட இந்த வழக்காற்று திருமணமாக ஏற்றக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்காற்றுத் திருமணங்கள் மூலம் ஏற்படுகின்ற பிரதான சிக்கல் யாதெனில், திருமணம் நடைபெற்றமைக்கான சான்றுகளை எடுத்துக்காட்டுவதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படலாம். எனினும், திருமணம் பதிவு செய்யப்படுகின்ற போது ஆவண ரீதியான சான்றிதழை எடுத்துக்காட்டலாம். எனவே திருமணத்தைப் பதிவு செய்தல் சிறந்ததும் உசிதமெனவும் கூறலாம்.

மேலே கூறப்பட்ட தேவைப்பாடுகளை செவ்வனே பூர்த்தி செய்து நடைபெற்ற திருமணம் சட்ட அமைப்பாக (ழிலீgal யிntuition) ஆக ஏற்கப்பட்டு கணவன், மனைவிடையே பிரதான கடமைகளும் கடப்பாடுகளும் தோற்றுவிக்கப்படுகின்றது. அதில் பிரதான கடப்பாடு பராமரிப்பு ஆகும்.


சட்டரிதியான பராமரிப்புப் பெறுதல்

திருமண உறவின் மூலம் வாழ்க்கைத்துணைகளுக்கு இடையே பரஸ்பர ரீதியான கடமைகள் ஏற்படுகின்றன. அவ்வகையிலேயே திருமணத்தின் பின்பு கணவன் மனைவியை பராமரிப்பதிலும், மனைவி கணவனை பராமரிப்பதிலும் பெற்றோர் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் முக்கிய இடம்பெறுகின்றது. இலங்கையில் பராமரிப்பு தொடர்பாக சட்ட நிலைமையை நன்றாக நோக்கும் போது கணவன், மனைவி இருவரும் பராமரிப்பு தொடர்பாக சமமான கடமையுடையவர்களாகக் கருதப் படுகின்றனர்.

வாழ்க்கைத்துணை ஒருவருக்குப் போதுமான வருமான வழிவகைகள் இருந்து மறுவாழ்க்கைத்துணையைப் பராமரிக்கத் தவறும் போதோ அல்லது நியாயமான காரணங்கள் இன்றி பராமரிக்க மறுக்கும் போதோ நீதவான் நீதிமன்றத்தில் பராமரிப்புக்கான நீதிமன்ற கட்டளையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வழக்கிடலாம்.

எனினும் விண்ணப்பத்தை மேற்கொள்ளும் நபரோ அல்லது கணவன், மனைவி இருவரும் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருப்பின் இக்கட்டளையைப் பெற இயலாது. கணவன் நல்ல உடல் நிலையில் இருந்து தொழில் புரியாமல் இருக்குமிடத்து நீதிமன்றம் கணவனை தொழில் ஒன்று மேற்கொள்ளுமாறு கட்டளையிடும். மேலும் கணவன் மனைவி இருவரும் பரஸ்பர உடன்பாட்டின் கீழ் பிரிந்து வாழ்ந்து வரின் பராமரிப்புக்கான வழக்கைத் தாக்கல் செய்ய இயலாது.


பிள்ளைகளைப் பராமரித்தல்

சட்டரீதியான திருமணத்தின் விளைவாக பிறக்கின்ற பிள்ளைகளை பராமரிக்கும் கடப்பாடு சமமாகப் பெற்றோருக்கு உண்டு. எனினும், திருமண உறவுகளுக்குப் புறம்பாக பிள்ளை ஒன்று பிறந்திருப்பின் அப்பிள்ளையின் தந்தை யார் என்பது மருத்துவச் சான்றின் கீழ் நிரூபிப்பதன் மூலம் பராமரிப்பைப் பெறலாம்.

மேலும் தத்தெடுக்கப்பட்ட பிள்ளையுடைய பராமரிப்புப் பெற சட்டரீதியாக உரித்துடையவர் ஆவர். மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட திருமணத்தின் விளைவாக ஒரு பிள்ளை தன்னைத் தானே பராமரித்துக்கொள்ள இயலாத போது 25 வயது வரையும் பெற்றோரிடம் இருந்து பராமரிப்புப் பெற உரித்துடையவர்கள் ஆவர். அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட 25 வயதுக்குக் குறைந்த பிள்ளை ஒன்று தன்னைப் பராமரித்துக்கொள்ள இயலுமான வழிவகைகள் உள்ள போது பராமரிப்புக் கோர உரித்துடையவர் அல்லர்.

பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்ளும் 25 வயதுக்குக் கீழ்ப்பட்ட மாணவன், பராமரிப்புப் பெற வாய்ப்பு உண்டு. திருமணத்திற்குப் புறம்பாக பிறந்த பிள்ளையொன்று பராமரிப்பு வழக்குத் தாக்கல் செய்ய கால எல்லை ஒன்று இல்லை. எந்நேரத்திலும் தாக்கல் செய்யலாம்.


வலது குறைந்த பிள்ளைகள்

உடல் ரீதியாக அல்லது உள ரீதியாக பாதிப்புக்குள்ளான பிள்ளை ஒன்று பராமரிப்புக் கோர இயலும்.


யாரால் பராமரிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்படலாம்?

கணவன் மனைவியிடம் இருந்தும் மனைவி கணவனிடம் இருந்தும் பராமரிப்புக்கான வழக்கைத் தாக்கல் செய்யலாம். பிள்ளை சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் வழக்குத் தொடரலாம். அப்பிள்ளை 18 வயதுக்குக் குறைவாயின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வழக்கிடலாம். 18 வயதுக்கு மேற்பட்ட நபர் தானே நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். அவரால் தாக்கல் செய்ய இயலாத போது அவர் சார்பாக வேறு ஒருவர் தாக்கல் செய்யலாம்.

பராமரிப்புக்கான விண்ணப்பம் எழுத்துமூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும். விண்ணப்பப்படிவத்தில் யார் பராமரிப்பு கோருகிறாரோ அவருடைய கையொப்பம் இருத்தல் அவசியமாகும். முத்திரை வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்ய பணச் செலவு ஏற்படாது.


நீதிமன்ற கட்டளை

யாருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ அவருடைய வருவாய் வழிகளை கருத்திற்கொண்டு நீதவான் நீதிமன்றம் பராமரிப்புக்கான கட்டளையிடும். நியாயமான நீதிமன்ற கட்டளையை மதிக்கத் தவறும் நபருக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்படும். வேண்டுமென்றே பராமரிப்புத் தொகை செலுத்த தவறினார் என்று கருதுமிடத்து குறிப்பிட்ட நபர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவராக இருப்பின் தொழில் தருனருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கும்.

அதன் பிரகாரம் குறிப்பிட்ட நபருடைய சம்பளத்தில் இருந்து பராமரிப்புத் தொகை கழிக்கப்படும். இது ஒரு சிறந்த விடயமாகக் கருதப்படலாம். தொழில் தருநர் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்படத் தவறுமிடத்து முதல் முறை 500/= வரை தண்டப்பணமாக அறவிடப்படும். மேலதிக ஒவ்வொரு தவணைக்கும் 1000/= அறவிடப்படும்.

வருவாய் வழிகள் எனும் போது ஒருவர் எவ்வகையான தொழிலை மேற்கொள்கின்றார். வருமான தராதரம் என்ன என்பது மிக முக்கிய விடயம் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் ஒரு நபரால் செலுத்த இயலாத ஒரு கட்டணத்தை யார் பராமரிப்புக்காக வழக்குத் தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளாரோ அவர் தான் வகிக்கின்ற பிரதேசத்திற்குரிய நீத வான் நீதிமன்றத்தில் மேற்கொள்ள வேண்டும்.

நீதிமன்றக் கட்டளையின் கீழ் கூறப்பட்ட மாதாந்த தொகையை மாற்ற வேண்டுமாயின் சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நிரூபிப்பதன் மூலம் நீதவான் எத்தகைய கட்டளையை ரத்துச் செய்யலாம். அல்லது தான் உசிதம் எனக் கருதும் தொகை தீர்மானிக்கலாம்.

இதன் மூலம்விளங்கிக்கொள்வது யாதெனில், நபர் ஒருவர் நீதிமன்றக் கட்டளை வழக்கப்பட்ட காலத்தின் பின்பு வேறு சிறந்த தொழில்களைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது குறைந்த வருமானத்தைப் பெறலாம். மேலும் அடிக்கடி பொருட்கள் சேவைகளில் ஏற்படுகின்ற விலை மாற்றங்களும் நீதிமன்ற விதிப்புத் தொகையில் தாக்கத்தைச் செலுத்துக்கின்றது. பராமரிப்புப் பணத்தொகை தபால் அலுவலகம், வங்கி ஊடாகச் செலுத்தப்பட வேண்டும்.

திருமணச் சட்டம் தேவைப்படுகின்ற பராமரிப்புக் கடமைகளை ஒருவர் நிறைவேற்றத் தவறுகின்றவிடத்து பரிகாரம் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்தை நாடுதல் மூலம் ஒருவர் தனது வாழ்வாதார உரிமையை நிலை நாட்டிகொள்ள வழி ஏற்படுத்தப்படுவதுடன், கணவன், மனைவி, பிள்ளைகளுடைய பராமரிப்பு உரிமைகள் அங்கீகரித்துள்ளது. பராமரிப்பை உரிய வகையில் பெறுவதன் மூலம் உயிர் வாழ்வதற்கான உரிமையை நாம் அனுபவிக்கலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல