புதன், 26 ஜனவரி, 2011

இலங்கையின் பொதுச் சட்டத்தின் கீழ் விவாகரத்து தொடர்பான சட்ட நிலைமை

திருமணம் என்ற பிணைப்பு பிள்ளைகளை உருவாக்கி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குகின்றன. ஆரோக்கியமான குடும்பங்களாக நிலைத்திருப்பதில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இப்பிரச்சினைகளுக்கு பொருளாதாரம், வாழ்க்கைத் துணைவர்களுடைய சமூக அந்தஸ்து, திருமணத்திற்குப் புறம்பான உறவு, கூட்டுக் குடும்பத்தில் ஏனைய உறவினர்களால் ஏற்படுகின்ற பிரச்சினைகள், திருமணத்தின் மூலமாக எழுகின்ற கட்டுப்பாடுகளை கணவன் அல்லது மனைவி உரிய முறையில் நிறைவேற்றத் தவறுகை என்பன காரணங்களாக அமைகின்றன.

அந்தப் பிணக்குகளுக்கு சுமுகமான முறையில் வீடுகளிலேயே தீர்வுகளை எட்டுவது சிறப்பாகும். ஏனெனில், கணவன் மனைவியிடையே ஏற்படுகின்ற பிணக்குகள் வெகுதூரம் செல்லுமானால் அது பிள்ளைகளுடைய கல்வி, ஆரோக்கியம் பாதுகாப்பு, மனநிலை என்பவற்றில் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஆரோக்கியம் பிள்ளைகளுடைய உரிமைகள் பாதிக்கப்படுவதுடன் அப்பிள்ளை எதிர்காலத்தில் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சீரழிவுக்கு ஆளாக வழியேற்படுகின்றது. இது, எமது சமூகத்தையும் நாட்டையும் பாதிப்பதுடன் அரசுக்கு தேவையற்ற பிரச்சினைகளையும் சுமைகளையும் ஏற்படுத்துகின்றன.

எனவே, சுமுகமான முறையில் சட்டத்தை நாடாது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள முயற்சிப்பது உசிதமானதாகும். எவ்வாறியினும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சுமுகமான இணக்க அடிப்படையில் தீர்வுகாண இயலாத போது பொதுச் சட்டத்தை நாடுவதில் தவறில்லை.

இனி, சட்டம் எவ்வாறு விவாகரத்துப்பெற ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது எனப் பார்ப்போம்.

முஸ்லிம் மற்றும் கண்டியச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்தவர்கள் தவிர தேசவழமை உட்பட நாட்டின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பொதுச் சட்டம் ஏற்புடையதாகின்றது.

இந்தச் சட்டம் கிறிஸ்தவ சமய சட்டங்களின் மூலம் பெரிதும் செல்வாக்குப் பெற்றுள்ளது.

விவாகரத்துப் பெறவிரும்பும் ஒருவர் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்திற்கான வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். விவாகரத்திற்கான அடிப்படைகளாக கணவன் அல்லது மனைவி தன்னுடைய துணைவர்/ துணைவியைத் தவிர இன்னுமொருவருடன் உறவு வைத்துக்கொள்கின்ற போது, நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெறலாம்.

மேலும், கணவன்/ மனைவி மறுத்தவரை, கொடூரமான நடத்துகைக்கு உட்படுத்துகின்ற போது, ஒரு வாழ்க்கைத்துணை வீட்டை விட்டுச் செல்லும் போதே அவ்வாறு செல்வதற்கு மறுத்தவருடைய நடத்துகை காரணமாக இருக்கின்ற போதோ அதனை சகித்துக்கொண்டு வாழ முடியாத கணவன்/ மனைவி வழக்குத் தாக்கல் செய்யலாம்.

இதனைவிட கணவனுடைய மலட்டுத்தன்மையை காரணமாக வைத்தும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். திருமணம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் கணவன் மலட்டுத்தன்மையை கொண்டிருக்க வேண்டும்.

முதலாவது குறிப்பிட்ட காரணம் சட்டத்தில் சோரம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இலங்கையில் சோரம் என்பது கணவன்/ மனைவி வேறு ஒருவருடன் உறவு- வைத்துக்கொள்ளல்.

இது குற்றவியல் தவறு ஒன்றல்ல, எனினும், இது மண வாழ்க்கையில் திருமணம் தொடர்பான தவறாகக் கருதப்படுகின்றது. இத்தவறை சான்றுகளின் அடிப்படையில் நிரூபித்தல் வேண்டும். திருமணம் ஒன்று நிலைத்திருக்கும் சந்தர்ப்பத்தில் இன்னுமொரு திருமணத்தைப் பதிவு செய்தல் இரதார குற்றமாகும்.

இரண்டாவது அடிப்படையான உறவறுத்தல் என்பது வேண்டுமென்று தீய எண்ணத்துடன் தவறினை மேற்கொள்கின்ற போது அது விவாகரத்திற்கு ஒரு அடிப்படையாகும். மனைவி- கணவனை விட்டு வெளியேறுதல், காரணமின்றி சேர்ந்து வாழ மறுத்தல், உடலுறவு வைத்துக்கொள்ள மறுத்தல் என்பவற்றை சான்றாகக் காட்டுதல். கணவன்/ மனைவி கூடிவாழ விருப்பமில்லை போன்றவற்றை நிரூபிப்பதன் மூலம் விவாகரத்துப் பெறலாம்.

எனினும், நீதிமன்றம் இறுதித் தீர்ப்பினை எட்டும் வரையில் எச்சந்தர்ப்பத்திலும் வழக்கைப் பதிவு செய்தவர் சேர்ந்து வாழ்வதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

மூன்றாவது, அடிப்படையான மலட்டுத்தன்மை என்பது, குணப்படுத்த இயலாததாக இருத்தல் வேண்டும். மலட்டுத்தன்மை கணவன்/ மனைவி இருவருக்கும் பொதுவான அடிப்படை அதாவது, திருமணத்தின் பின்பு முறையாக உடலுறவை மேற்கொள்ள முடியாத போது அது மருத்துவச் சான்றுகளின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும்.

நீதிமுறையாகப் பிரிந்திருத்தல்

இலங்கையில் சேர்ந்துவாழ விரும்பாத கணவன்- மனைவி உடனடியாக விவாகரத்து வழக்கை தாக்கல் செய்யாது குறிப்பிட்ட காலப்பகுதிக்குப் பிரிந்திருப்பதற்கான கட்டளையைப் பெற நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்யலாம். இவ்வழக்கைத் தாக்கல் செய்ய கணவன்/ மனைவி மறுவழக்கைத் துணையுடன் வாழ்தல் சகித்துக்கொள்ள முடியாது. கொடூரமானது மற்றும் தாக்குதல், பாலியல் குற்றங்கள் புரிகிறார் என்பவற்றைக் காரணங்களாகக் காட்ட வேண்டும்.

பிரிந்து வாழ்தலுக்கான கட்டளை இரண்டு வருட காலப்பகுதிக்கு வழங்கப்படக் கூடும். இக்காலப்பகுதி முடிவின் போது இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால், தொடர்ந்து தமது மணவாழ்க்கையைத் தொடரலாம் அல்லது விவாகரத்திற்கான கட்டளை பெற மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதைவிட கணவன் மனைவி இருவரும் தொடர்ச்சியாக 7 வருடங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர் என்பதை நிரூபிப்பதன் மூலம் விவாகரத்துப் பெறலாம்.

விவாகரத்திற்கான வழக்கை சட்டத்தரணி ஒருவர் ஊடாக மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். கணவன் அல்லது மனைவி வசிக்கின்ற பிரதேசத்திற்கு உட்பட்ட மாவட்ட நீதிமன்றம், திருமணம் நடைபெற்ற பிரதேசத்திற்கு உட்பட்ட நீதிமன்றம் அல்லது திருமணம் குலைக்கப்பட்ட இடத்திற்குரிய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கிற்கு அவசியமான அனைத்து நிகழ்வுகளையும் சட்டத்தரணியிடம் வெளிப்படுத்த வேண்டும். அதனை அடிப்படையாக வைத்து சட்டத்தரணி உரிய காரணத்தின் அடிப்படையில் வழக்கைத் தாக்கல் செய்வார். விவாகரத்து வழக்கிற்கான விண்ணப்பத்தின் வழக்காளி அதாவது விவாகரத்தை கேட்கும் வாழ்க்கைத் துணை நீதிமன்றத்தில் இருந்து எதிர்பார்க்கப்படுகின்ற பரிகாரங்களை அதாவது விவாகரத்து கட்டளை, எதிர்வாதியிடம் இருந்து பெற எண்ணும் நட்டஈட்டின் அளவு வழக்கிற்குரிய செலவு என்பனவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்பு நீதிமன்றம் எதிர்வாதியை பதிலளிக்குமாறு அழைப்பாணை விடுக்கும். எதிர்வாதி உரிய திகதியில் நீதிமன்றத்தில் தோன்ற வேண்டும். எனினும், எதிர்வாதி தொடர்ச்சியாக மூன்று தவணைகள் நீதிமன்றத்தில் தோன்றத் தவறும் போது வழக்காளி கேட்கும் பரிகாரத்தை நீதிமன்றம் வழங்கும்.

இது, சட்ட வழக்கில் ஒரு பக்கத்தீர்ப்பு என அழைக்கப்படுகின்றது. மறுவாறாக எதிர்வாதி நீதிமன்றத்தில் தோன்றினால் அதன்பின்பு இரு பக்க விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படும்.

விவாகரத்தும் பிள்ளைகளுடைய பாதுகாவலும் கணவன் மனைவி ஆகியோருக்கு திருமணத்தின் விளைவாக பிள்ளைகள் இருக்கின்ற போது விவாகரத்து பெற்ற பின்பு பிள்ளைகளுடைய பாதுகாவலராக யார் செயற்படுவார் என்ற வினா எழுகின்றது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் அவர்களை மட்டுமன்றி அவர்களை சார்ந்துள்ள பிள்ளைகளுடைய எதிர்காலத்தையும் பாதிக்கின்றது. எனவே, விவகாரத்து வழக்கு நடவடிக்கையின் போது நீதிமன்றம் பிள்ளைகளுடைய உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு யாரிடம் பிள்ளையை ஒப்படைப்பது என்பது தொடர்பில் பிள்ளையின் அதிகூடிய நலனை மையமாக வைத்து முடிவெடுக்கும்.

பிள்ளை என்பது 18 வயதுக்குக் குறைந்த ஆண், பெண் பிள்ளைகளை உள்ளடக்கும். திருமணம் ஒன்று நிலைத்திருக்கின்ற போது பெற்றோர் இருவரும் பிள்ளையினுடைய பாதுகாவலராக செயற்படுகின்றனர். பொதுவாக விவாகரத்து வழக்கின் போது கணவன் மனைவி இருவரும் போட்டி அடிப்படையில் பிள்ளைகளுடைய பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முனைவர்.

தந்தையின் வருமானம் தாயினுடைய வருமானம் பெற்றோருடைய தற்கால மற்றும் கடந்தகால நடத்தை என்பவற்றை நீதிமன்றம் கருத்தில் எடுக்கும். ஏனெனில், பெற்றோருடைய வருமானம் பிள்ளையினுடைய கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை விடயங்களை தீர்மானிக்கும் கருவியாக இருக்கின்றது. அதேவேளை, பிள்ளை வாழ்கின்ற சூழல் நல்ல முறையில் அமைய வேண்டும்.

உதாரணமாக தாய்/ இன்னுமொருவருடன் உறவு வைத்துள்ள போது அந்த தாயிடம் அல்லது தந்தையிடம் பிள்ளையை ஒப்படைத்தால் அப்பிள்ளையுடைய வளர்ப்பு, ஒழுக்கம், கல்வி போன்ற விடயங்களில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இந்தக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் பிள்ளையுடைய பாதுகாவலனாக யாரிடம் ஒப்படைப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

சிறுவர் உரிமைகளைப் பற்றி அதிகமாகவும் ஆரோக்கியமாகவும் ஆலோசித்து வருகின்ற இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளின் கருத்துக்களுக்கு முக்கிய இடமளிக்க வேண்டும் என்பது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பிள்ளையினுடைய பாதுகாவலை ஒப்படைக்கும் போது பிள்ளையின் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதும் அவசியமாகும். சாதாரணமாக பிள்ளையிடம் யார் அதிக அன்பும் அக்கறையும் செலுத்துகிறாரோ அவரிடமே பிள்ளை வாழ விரும்பும்.

பெற்றோர் தவிர மூன்றாம் திறத்தவர்களிடமும் பிள்ளையுடைய பாதுகாவலை நீதிமன்றம் வழங்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. இவ்விடத்திலும் பெற்றோர் பிள்ளையின் பாதுகாவலைப் பெற்றுக்கொள்ள தகுதியற்றவர்களாக இருந்து மூன்றாம் திறத்தவர் பிள்ளையை சிறந்த முறையில் பாதுகாப்பர் என நீதிமன்றம் திருப்தியடைகின்ற போது அவரிடம் ஒப்படைக்கும். இவ்விடயத்திலும் நீதிமன்றம் பிள்ளையுடைய கருத்திற்கு முக்கிய இடமளிக்கும் என்பதை கருத்தில் எடுக்க வேண்டும்.

பெற்றோர் அல்லது மூன்றாம் நபர் ஒருவர் பிள்ளையின் பாதுகாவலைப் பெற்றுக் கொள்ள தகுதியில்லாதவிடத்து மாவட்ட நீதிமன்றம் பிள்ளையின் பாதுகாவலனாக செயற்படும்.

இல்லத்து வன்முறைகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான சட்ட ஏற்பாடு

ன்று எங்கு பார்த்தாலும் கணவன், மனைவிக்கு எதிராக வன்முறை, மனைவி கணவனுக்கு எதிராக வன்முறை, பெற்றோர் பிள்ளைகளுக்கு எதிராக வன்முறை, பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக வன்முறை என்று வீடுகளில் வன்முறைகள் தலைதூக்கியுள்ளன.

இவ்விதமான வன்முறைக்கு உள்ள பரிகாரங்களைப் பார்க்கும் போது, முதலாவது சமரசமான முறையில் வீடுகளிலேயே பெரியோர்கள் விசாரித்து குடும்ப ஒற்றுமையை மேம்படுத்துவது முக்கியமாகும். எனினும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சமரசமான முறையில் தீர்வு காண இயலாத போது சட்ட பரிகாரங்களை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. இலங்கையில் இல்லத்து வன்முறைகளைத் தடுப்பதற்கான சட்டம் 2005 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தினால் ஆக்கப்பட்டது.

வன்முறை

இச்சட்டம் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களுக்கும் பரிகாரம் வழங்குகிறது. மேலும் வாய் மூலமாக மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகமும் உள்ளடங்கும். வன்முறைகளுக்கு உதாரணங்களாக , தாக்குதல், கடுங்காயத்தை ஏற்படுத்துதல், மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டுதல், மன உலைச்சலுக்கு ஆளாக்குதல்.

வன்முறைகள் உடல் ரீதியாக, உள ரீதியாக ஏற்படுத்தப்படுவதுடன், பொருளாதார ரீதியில் மனைவியைக் கணவன் பராமரிக்கத் தவறுமிடத்தும், வீட்டில் பிணக்குகள் ஏற்படுகின்றன.

சட்டத்தினுடைய நோக்கம்

இல்லத்து வன்முறைகளினால் பாதிக்கப்படுவோருக்கு இடைக்காலக் கட்டளை, பாதுகாப்புக் கட்டளை வழங்குவதாகும்.

சட்டத்தின் கீழான பயனாளிகள்

கணவன், மனைவி, பிள்ளைகள், கூடிவாழும் வாழ்க்கைத்துணை, பெற்றோர், சகோதரன், சகோதரி, பாட்டன், பாட்டி.

முறைப்பாட்டை எவ்வாறு மேற்கொள்வது

விண்ணப்பப் படிவத்தில் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கின்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் முறைப்பாட்டாளரின் பெயர், விலாசம், ஏற்படுத்தப்பட்ட ஊறு என்பவற்றையும் யாருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படுகின்றதோ அவருடைய பெயர், விலாசம் என்பவற்றையும் முறையாகக் குறிப்பிட வேண்டும்.

முறைப்பாட்டை மேற்கொண்ட பின்பு நீதவான் நீதிமன்றம் யாருக்கு எதிராக முறைப்பாடு அவருக்கு எதிராக அழைப்பாணை வழங்கி விசாரணை மேற்கொள்ளும், நீதிமன்றம் உடனடி நிவாரணமாக பாதிக்கப்பட்டவர் சார்பாக இடைக்காலக் கட்டளை ஒன்றை வழங்கும். இடைக்காலக் கட்டளையின் நோக்கம் பாதிக்கப்பட்டவர் மேலும் வன்முறைக்கு உள்ளாகாமல் தடுப்பதாகும்.

இடைக்காலக் கட்டளை வன்முறை புரிந்த நபர், பாதிக்கப்பட்டவர் வசிக்கின்ற அல்லது கல்வி மேற்கொள்கின்ற அல்லது வேலை செய்யும் இடத்தில் உட்பிரவேசிப்பதைத் தடை செய்யும். எனவே இடைக்கால கட்டளை மூலம் உடனடி நிவாரணம் பெறலாம். மேலும், இக்கட்டளை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் வரை நடைமுறையில் இருக்கும். இடைக்காலக் கட்டளை வழங்கப்பட்ட பின்பு நீதிமன்ற சம்பந்தப்பட்ட இரண்டு திறத்தவரையும் ஆலோசனைக்காக (விounsலீlling) கட்டளையிடும். இதன் மூலம் இரு நபரும் சமரசத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு உண்டு.

இச்சட்டத்தின் கீழ் வழக்கிடும் நபருக்கும் நபரைப் புரிந்த அல்லது வன்முறையை மேற்கொண்ட நபருக்கும் இடையில் இல்லத்து உறவுமுறை இருக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட நபர் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் மேற்கொண்டு பொலிஸார் ஊடாக விண்ணப்பத்தை மேற்கொள்ளலாம்.

அல்லது நீதிமன்றத்தில் நேரடியாக முறையிடலாம். இவ்வன்முறைக ளுக்கு பாதுகாப்புப்பெற இச்சட்டம் தவிர குற்றவியல் சட்டத்தின் கீழுள்ள ஏற்பாடுகளையும் நாடலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல