ஞாயிறு, 3 மார்ச், 2013

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-10

பாகம் பத்து

கடந்த பாகத்தில் கூறப்பட்டது போல, பிரபாகரன் டில்லி வந்திறங்கிய தினத்திலேயே குழப்பம் ஆரம்பமாகி விட்டது. மறுநாள் குழப்பம் மேலும் அதிகரித்தது.

மறுநாள் காலையில் பிரபாகரனுக்கு மற்றுமோர் விஷயம் தெரியவந்தது. மற்ற இயக்கங்களின் பிரதிநிதிகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதிகளையும் டில்லிக்கு அழைத்து வந்து அசோகா ஹோட்டலுக்கு அருகே சாம்ராட் ஹோட்டலில் தங்கவைத்திருக்கும் விஷயம்தான் அது. அது தெரியவந்ததும், பிரபாகரன் கடும் கோபத்தில் இருந்தார்.

அதே தினத்தில் (ஜுலை 25-ம் தேதி) இந்திய அதிகாரிகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரதியொன்றை முதன் முதலில் பிரபாகரனிடம் கொடுத்தார்கள். தூதரக அதிகாரி பூரி, ஒப்பந்தத்திலுள்ள ஒவ்வொரு பகுதியையும் படித்துக்காட்ட, ஆன்டன் பாலசிங்கம் அதை மொழி பெயர்த்தார்.

இது கிட்டத்தட்ட ஒன்றேகால் மணிநேரம் நடைபெற்றது.

ஒப்பந்தம் பற்றிக் கலந்தாலோசிக்க தங்களுக்கு அவகாசம் தேவை என்று பிரபாகரன் கூறியதில், “பின்னர் வருகிறோம்” என்று கூறிவிட்டு, பூரியும் மற்றையர்களும் புலிகளை அந்த அறையில் ஆலோசனை நடத்த விட்டுவிட்டு வெளியே சென்றார்கள்.

மதிய நேரம், மீண்டும் இந்திய அதிகாரிகள் அந்த அறைக்கு வந்தார்கள். “ஆலோசனை செய்து என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்”

“ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது”

இதைக் கேட்டதும் பூரி திகைத்துப் போய்விட்டார்.

“ஒப்பந்தத்தில் இருப்பவை அனைத்தும் உங்களுக்குத் தெளிவாக விளக்கியிருக்கிறேன்”

“அதுதான் சொல்கிறோம். ஒப்பந்தம் விடுதலை புலிகள் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று”

“இதைவிட உன்னதமான தீர்வு ஒன்று ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கமுடியாது என்பது எங்கள் எண்ணம்”

“கிடைக்கும் என்பது விடுதலை புலிகள் இயக்கத்தின் தீர்மானமான முடிவு. நீங்கள் கொடுக்கும் தீர்வை விட உன்னதமான தீர்வு ஒன்றை எமது மக்களுக்கு எப்படி பெற்றுக் கொடுப்பது என்று எமது தலைவருக்கு தெரியும்” என்றார் பாலசிங்கம்…

“இந்தியா பெற்றுக் கொடுக்கும் தீர்வில், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து, நீங்களே மாநில அரசை நடத்தும் அதிகாரம் கிடைக்கிறதே”

“அது எங்களுக்கு தேவையில்லை. எமது தலைவரால் அதைவிட பெரிதான ஒன்றை பெற்றுக் கொடுக்கும் வல்லமை உள்ளது”

“இதைவிட பெரிய தீர்வா? அது என்ன”

“தனி ஈழம். எமது மண்ணை நாங்களே ஆட்சி செய்யும் தனிநாடு”

விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இப்படிக் கூறியதும் தூதரக அதிகாரி பூரி சிறிது நேரம் பேச்சு வராமல் நின்றிருந்தார். இதற்குமேல் எதைக் கூறி புலிகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைக்கச் செய்ய முடியும் என்பதை அவரால் ஊகிக்க முடியாது இருந்திருக்கலாம்.

“இதுதான் உங்கள் முடிவு என்றால், அதை எனது மேலதிகாரியிடம் கூறுகின்றேன். நான் ஒரு அதிகாரிதான். எனது மேலதிகாரியும், ஆட்சியில் இருப்பவர்களும் என்ன செய்வது என்று முடிவு எடுப்பார்கள்” என்றார் பூரி.

அந்த அறையில் இருந்து வெளியேற முயன்ற அவர், ஒரு கணம் தயங்கியபின் திரும்பி கேட்டார்: “இப்போது உங்களுக்கு (இலங்கை தமிழர்களுக்கு) இலங்கையில் எந்த அதிகாரமும் கிடையாது. நாங்கள் இரு மாகாணங்களை ஒன்றிணைந்து, மாகாண அரசு ஒன்றை உருவாக்கி, அதன் அதிகாரத்தை தருவதாக கூறுகிறோம். ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்கிறீர்கள். உங்கள் மக்களுக்கு கிடைக்கவுள்ள இந்த அதிகாரத்தை, அவர்களது பிரதிநிதிகள் என்று கூறி மறுக்கிறீர்கள்.

நாளைக்கே வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட மாகாணசபை அதிகாரமும் இல்லாமல், உங்களால் தனி ஈழமும் பெற்றுக் கொடுக்க முடியாமலும் போனால், உங்கள் மக்களுக்கு என்ன பதில் கூறுவீர்கள்?”

இதற்கு பிரபாகரன் தமிழில் கூறிய பதிலை, ஆன்டன் பாலசிங்கம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார். “அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள்”

இதற்குமேல் எதுவும் பேசாமல், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் பூரி.

இந்த தூதரக அதிகாரி ஹர்தீப் பூரி, நடக்கப் போவதை ஊகித்து கேட்டாரா, உள்ளுணர்வில் கேட்டாரா, அல்லது அந்த நேரத்தில் மனதில் எழுந்த கேள்வியை கேட்டாரா என்பது தெரியாது.

ஆனால், அவரது சந்தேகமே பலித்தது.

இந்தியாவால் உருவாக்கி கொடுக்கப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண அரசை, விடுதலை புலிகளே கலைக்க வைத்தார்கள். அதைவிட உன்னதமான ஈழத்தை பெற்றுத் தருவதாக கூறி, யுத்தத்தை தொடர்ந்தார்கள். யுத்தம் முடிந்தது.

“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிய பிரபாகரனின் தற்போதைய இருப்பிடம், நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியவர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளது.

“வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண அரசை டில்லியின் வற்புறுத்தல் காரணமாக கொடுத்தோம். இனி அதெல்லாம் கொடுக்க இயலாது” என்று கூறிவிட்டது இலங்கை அரசு. இந்தியாவால் அதிக நெருக்கடி கொடுக்க முடியாதபடி, சீனாவை அழைத்து வந்து வீட்டு வாயிலில் நிறுத்தியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஷே.

இந்த மாப்பிள்ளை முறைந்தால், அந்த மாப்பிள்ளை உள்ளே வருவார்!

தனி ஈழத்தின் கதி?

அமெரிக்காவில் வசிக்கும் உருத்திர குமாரன், பெற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார். எந்த நாட்டில் என்று கூறவில்லை.

நாடு கடந்த தமிழீழ அமைச்சரவை எல்லாம் அமைத்து, தாமே பிரதமராகவும் உள்ளார். அமைச்சர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும், கனடாவிலும் வசிக்கின்றனர். ஈழ பிரதமர் இலங்கை செல்வதை விடுங்கள், அமைச்சர்களை சந்திக்க ஐரோப்பா செல்வதற்கே, முடியாது. அவரிடம் இருப்பது இலங்கை பாஸ்போர்ட்தான்.

இதனால், அமைச்சரவை Skype-ல் கூடுகிறது. விளையாட்டுத் துறைக்கு கூட ஒரு அமைச்சர் உள்ளார். நல்ல விளையாட்டுதான்…..

மக்களை பாதுகாக்க போகிறோம் என்று சொன்னவர்கள், தம்மை நம்பி வந்த போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, மறைந்து விட்டார்கள். (‘மறைந்து விட்டார்கள்’ என்பதை நெடுமாறனின் கோணத்திலும் எடுக்கலாம். மற்றைய கோணத்திலும் எடுக்கலாம். உங்களது நம்பிக்கைப்படி எடுத்துக் கொள்ளவும்) ஆயிரக்கணக்கான இந்த போராளிகளை சிறிது சிறிதாக விடுதலை செய்கிறது இலங்கை அரசு.

விடுவிக்கப்பட்ட போராளிகள் எங்கே தங்கியிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது இலங்கை உளவுத்துறைக்கு மிக நன்றாக தெரியும். அவர்களில் உளவுத்துறை ஒரு கண் வைத்திருக்கும் என்பது எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறைதான்.

“தலைவனின் சேனை தயாராகிறது. இலங்கை அரசே, எச்சரிக்கை விடுக்கிறேன். ஈழத்தை நீங்களாக கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால், தலைவனின் படையுடன் வந்து அடித்துப் பறிப்போம்” என்று நரம்பு புடைக்க மணச்சநல்லூரில் வீரவசனம் பேசினால், மன்னாரில் முன்னால் போராளிகளை பிடித்து உள்ளே போடுவார்கள்.

அவர்கள் ஆயுதம் ஏந்தி போராடியதற்காக, ஏதோ எம்மாலான உதவி!

கருணாநிதியை ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். அந்த மனுஷனால் என்ன செய்திருக்க முடியும்? அவர் பிரதமராக இருந்தால்கூட யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது.

காரணம், அது இந்தியாவின் யுத்தம் கிடையாது. அதன் மறைமுக ஆட்டக்காரர்கள் வேறு. புதுடில்லி லேசாக அழுத்தம் கொடுத்திருக்கலாம். அவ்வளவுதான். ‘விடுதலைப் புலிகளை முற்றிலும் அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது’ என்ற முடிவு, 2002-ல், இந்தியாவைவிட பெரிய சக்தியால் எடுக்கப்பட்டது. அது கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது.

கருணாநிதி தமது இயலாமையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்தால், லோக்கலில் அரசியல் செய்ய முடியாது. அதற்காக உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று ஸ்டன்ட் அடித்தார். அதை வேண்டுமானால் கிண்டலடிக்கலாமே தவிர, 30 ஆயிரம் பேரின் ரத்தம் குடித்தார் என்று சொன்னால், சொல்பவரின் ஆரோக்கியம் பற்றித்தான் கவலை கொள்ள வேண்டியிருக்கும்.

எமக்கு தெரிந்தவரை, தற்போது உயிருடன் உள்ள தமிழக அரசியல்வாதிகளில், தமது ‘அதிகாரத்தை’ பயன்படுத்தி, இலங்கை தமிழருக்கு ஏதாவது நன்மை செய்த முதல் மூன்று பேரில் கருணாநிதிதான் முதன்மையானவர். (மற்றைய இரண்டு பேரும், ப.சிதம்பரம், கனிமொழி) இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை இவர்களாலேயே வெளிப்படையாக கூற முடியாது.

தற்போது இந்த மூவரும்தான், ‘உணர்வாளர்களின்’ துரோகிகள் லிஸ்டிலும் உள்ளார்கள் என்பதுதான், தமிழினத்தின் தமாஷ்.

ஜூனியர் விகடனில் நெடுமாறன், “இந்திய கடற்படை இலங்கையை சூழ நின்றுகொண்டு, புலிகளின் 13 ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்தது” என்று சொல்லியிருக்கிறார். புலிகளின் பெரிய ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது இந்தோனேசியக் கடலில் என்பது, அவருக்கு தெரியவில்லை. இலங்கை அருகே மூழ்கடிக்கப்பட்டவை சிறிய ட்ரோலர்கள்.

புலிகளின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட விபரங்களை, அவற்றின் சட்டலைட் இமேஜ்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதில் இருந்து, கப்பல்கள் பற்றிய விபரங்களை படம் வரைந்து, பாகங்களை குறித்து கொடுத்தவர்கள் யார் என்பதுவரை கூறமுடியும். நிச்சயமாக, அது இந்தியா அல்ல.

தெரிந்து கொள்ள விரும்பினால், ‘ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?’ தொடரை பார்க்கவும். நம்புவதும், நம்பாததும் உங்கள் இஷ்டம். இனி, நம்பி எதுவும் ஆகப்போவதில்லை. சும்மா ஒரு தகவலுக்கு தெரிந்து கொள்ளலாம். அவ்வளவே!

சரி. இந்திய தூதரக அதிகாரி ஹர்தீப் பூரிக்கு ஏற்பட்ட சந்தேகம் உங்களுக்கும் ஏற்பட்டால்?

அதாவது, “இலங்கை தமிழருக்கு இப்போது எதுவுமே இல்லாமல் போனதைவிட, டில்லி பெற்றுக் கொடுத்த வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண அரசு அதிகாரம் மேலானது அல்லவா?” என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால்?

சந்தேகமே இல்லை. உங்களுக்கு, ‘தமிழினத் துரோகி’ பட்டம் கிடைக்கும். கிடைப்பதை மறுக்காமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், 30 வருஷ போராட்டத்தில் மிஞ்சியது, இந்த பட்டம் ஒன்றுதான்! Souvenir!!

THE END
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல