பாகம் ஐந்து
கொழும்புவில் இருந்த இந்தியத் தூதரக அரசியல் பிரிவின் முதல் செயலாளர் ஹர்தீப் பூரி, விடுதலைப்புலிகள் தொடர்பாக நடைபெற்ற பல விஷயங்களில் தொடர்பு பட்டிருக்கிறார். இந்தியத் தூதரகத்தில், தூதர் டிக்சித்தின் அதி நம்பிக்கைக்குரிய நபர், பூரிதான் என்பார்கள்.
ஆனால் தமிழர் விவகாரத்தில் பின்னாட்களில் டிக்சித் வாங்கிய கெட்ட பெயர் போன்ற எதையும் பூரி வாங்கவில்லை. கடைசிவரை எந்தவொரு பிரச்னையிலும் அவரது பெயர் சிக்கவில்லை. “கொடுத்த வேலையைக் குழப்பாமல் நேரடியாகச் செய்து முடித்தவர்” என்ற பெயர்தான் பூரிக்கு இன்றுவரை இருக்கிறது.
மற்றொரு விஷயம் தெரியுமா?
இலங்கைத் தமிழர்களால், இலங்கையில் வைத்து அதிகபட்ச மரியாதை கொடுக்கப்பட்ட இந்திய அதிகாரி, ஹர்தீப் பூரிதான்! அந்த விபரத்தை பின்பு பார்க்கலாம்.
விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகரனை டில்லிக்கு அழைத்துச் செல்வதற்காக பூரி ஜுலை மாதம் 24-ம் தேதி சென்றதற்கு முன்னர் சில தடவைகள் யாழ்ப்பாணம் சென்றிருக்கிறார். அவர் முதல் தடவை யாழ்ப்பாணம் சென்றபோது, அவருக்கு கிடைத்த அனுபவங்கள், உணர்ச்சிகரமானவை.
அது நடைபெற்றது, பிரபாகரனை அழைத்துச் செல்ல பூரி யாழ்ப்பாணம் சென்றதற்கு சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் – ஜுன் மாதம் 25-ம் தேதி.
அன்றைய தினம், இரண்டு இந்தியக் கப்பல்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைத் துறைமுகத்தை வந்தடைந்தன. அவற்றில் உணவுப் பொருட்களும் நிவாரண பொருட்களும் இருந்தன.
அதற்கு முன்னர் நிவாரணப் பொருட்களை எடுத்துவந்த இந்தியக் கப்பல்களை இலங்கைக் கடற் கடற்படை நடுக்கடலில் வைத்துத் திருப்பி அனுப்பியதுபோல இம்முறை செய்யவில்லை. மாறாக, இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு…
கொடுத்தபடி, இலங்கைக் கடற்படையின் பீரங்கிப் படகுகள் காங்கேசன்துறைக்கு வந்திருந்தன. எல்லாமே, புதுடில்லி நடத்திய ‘ஆபரேஷன் பூமாலை’ மிரட்டிய மிரட்டல்!
(ஆபரேஷன் பூமாலைக்கு இங்கே கிளிக் செய்யவும்)
உணவுப் பொருட்களுடன் காங்கேசன்துறைக்கு வந்திருந்த இரு கப்பல்களில் ஒன்றின் பெயர் ‘ஐலன்ட் பிரைட்’. இந்த கப்பலில்தான் முதல் தடவையாக பூரி யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் காங்கேசன்துறைக்குத் திரண்டு வந்து, இந்திய கப்பல்களுக்கும், அதில் வந்த உயரதிகாரி பூரிக்கும் மகத்தான வரவேற்பு கொடுத்திருந்தார்கள்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பூரியையும், மற்றைய அதிகாரிகளையும் யாழ்ப்பாணம் டவுனுக்கு அழைத்துச் செல்ல பஸ் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பஸ் சென்ற பாதை முழுவதும், வீதியின் இரு பக்கத்திலும் மக்கள் திரண்டிருந்தார்கள் – பூரிக்கு வரவேற்புக் கொடுப்பதற்கு.
காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் டவுன், சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 16 கிலோ மீட்டரை பூரி பயணித்த பஸ் கடப்பதற்கு 5 மணிநேரம் எடுத்தது. அந்தளவுக்குப் பாதையெங்கும் மக்கள் கூட்டம்.
ஈழத் தமிழர்களால் இந்திய அதிகாரி ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச வரவேற்பு அதுதான். அதைப் பெற்றுக் கொண்டவர் ஹர்தீப் பூரி.
அதற்கு அடுத்த தடவை பூரி யாழ்ப்பாணம் சென்றது, ஜுலை மாதம் 19-ம் தேதி. இந்திய தூதர் டிக்சித், பிரபாகரனுடன் பேசுவதற்காக பூரியை அனுப்பியிருந்தார்.
பின்னாட்களில் விடுதலை இயக்கங்களுடன் இலங்கை அரசு சகஜமாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தியது போன்ற நிலைமை அந்த நாட்களில் இருக்கவில்லை. விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் யாராவது பேசிவிட்டாலே, ஏதோ செய்யக்கூடாத காரியத்தைச் செய்துவிட்டது போல கொழும்பு அரசியல்வாதிகள் துள்ளிக் குதித்த காலம் அது.
அப்படியான நிலையில், பிரபாகரனுடன் பேச வேண்டும் என்று பூரி, யாழ்ப்பாணம் வரை செல்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
டிக்சித், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும், அமைச்சர் காமினி திசநாயகேவுக்கும் மட்டும், பூரி யாழ்ப்பாணம் செல்வது பிரபாகரனை சந்திப்பதற்கு என்று சொல்லியிருந்தார். மற்றய அமைச்சர்களுக்குக் கூடத் தெரியாது.
அப்படியானால், பூரி யாழ்ப்பாணம் செல்வதற்கு காரணத்தைச் சொல்வது?
இந்த விஷயத்தில் இந்திய தூதரகத்துக்கு வாய்ப்பாக ஒரு சம்பவம் நடைபெற்றது.
இந்திய கப்பல்கள் யாழ்ப்பாணத்துக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை எடுத்து வந்தன அல்லவா. அந்த வரிசையில் வந்த கப்பல்களில் ஐந்தாவதாக யாழ்ப்பாணம் சென்ற கப்பலின் பெயர், ‘நிக்கோ ட்ரேட்’. இந்தக் கப்பல் அப்போது காங்கேசன்துறையில் நங்கூரமிட்டிருந்தது.
அதில் வந்த நிவாரண பொருட்களை இறக்குவதற்கு முன்னர், “அவற்றை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்க வேண்டும். அவற்றுக்கு உள்ளே ஆயுதங்கள் இருந்தாலும் இருக்கலாம்” என்று கூறிவிட்டது இலங்கை ராணுவம்.
இலங்கை ராணுவத்தின் இந்த கூற்று, இந்தியத் தூதரகத்துக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படும் போது, ஆயுதங்கள் கண்டுபிடிக்க படுகின்றனவா என்பதை மேற்பார்வை பார்க்க, இந்தியத் தூதரகம் தனது அதிகாரி ஒருவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புகிறது என்று சொல்லப்பட்டது.
அந்த அதிகாரி பூரி!
இதில் மிகப் பெரிய தமாஷ் என்ன தெரியுமா? டிக்சித்துக்கு இந்த ஐடியாவை கொடுத்தவரே, இலங்கை அமைச்சர் காமினி திசநாயகேதான்! தமது நாட்டு சக அமைச்சர்களையும், ராணுவத்தையும் சமாளிக்க இலங்கை அமைச்சரே, இந்திய தூதருக்கு ஐடியா கொடுத்த அதிசயம் அது.
அமைச்சர் காமினி திசநாயகேவின் யோசனைப்படி, டிக்சித் இலங்கையின் ராணுவத் தலைமைக்கு ஒரு உத்தரவாதம் கொடுத்தார்.
“இந்தியாவில் இருந்து வரும் நிவாரண பொருட்களோடு ஆயுதங்களும் இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள். ஆயுதங்கள் இல்லை என்று நாங்கள் சொல்கிறோம். எங்களுடைய பிரதிநிதியாக இந்தியத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை அனுப்பி வைக்கிறோம். அவரது முன்னிலையில் நீங்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்துப் பாருங்கள். ஏதாவது ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், நாங்கள் பொறுப்பேற்கிறோம்”
இப்படிச் சொல்லப்பட்டதில், இலங்கை ராணுவம் திருப்தியடைந்தது. இலங்கை விமானப்படை, தனது விமானம் ஒன்றில் பூரியை யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றது.
நிக்கோ ட்ரேட் கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படுவதையும் மேற்பார்வை செய்த பூரி, யாழ்ப்பாண நகரில் வைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் நால்வரை சந்தித்தார். அதற்கான ஏற்பாட்டை, இந்திய உளவுத்துறை றோ செய்து கொடுத்திருந்தது.
பூரியைச் சந்தித்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், அவரை பிரபாகரனிடம் அழைத்துச் செல்லத் தயாரான போது, பூரி அவர்களிடம் கூறியது:
“உங்கள் தலைவரது ரகசிய இருப்பிடத்துக்கு வெளி ஆளான என்னை அழைத்துச் செல்லப் போகிறீர்கள். எனக்கு இடம் தெரியாமல் இருப்பதற்காக, எனது கண்களைக் கட்டுவதானால், தாராளமாகக் கட்டலாம். எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை”
இதற்கு, அவரை அழைத்துச் செல்ல வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிரித்தபடியே “உங்களுக்கு ஒரு கம்பியூட்டர் மூளை இருந்தால்கூட, நாங்கள் அழைத்துச் செல்லப் போகும் பாதையை உங்களால் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது” என்றார்கள்.
யாழ்ப்பாணத்தின் சந்து பொந்துகளின் அமைப்பு அப்படி!
இப்படி அழைத்துச் செல்லப்பட்ட பூரி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் இருந்த வீடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகள் பலர் அங்கே இருந்தார்கள். மிகவும் அரிதான விதத்தில், பிரபாகரனே கேட் வரை வந்து பூரியை வரவேற்றார்.
விறுவிறுப்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக