ஞாயிறு, 3 மார்ச், 2013

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-7

பாகம் ஏழு

யாழ்ப்பாணம் சுதுமலையில் இருந்து, பிரபாகரனை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஹெலிகாப்டர்கள் நேரே சென்னைக்குச் செல்லவில்லை. அவை முதலில் தரையிறங்கிய இடம் திருச்சி.

மத்திய அரசு, இதற்கு முன்னர் இப்படியான ஆபரேஷன் ஒன்றை இலங்கையிலிருந்து தமிழகத்தின் ஊடாக செய்திருக்கவில்லை. அதனால் கொஞ்சம் குழப்பம் நிலவியது.

இதில் குழப்பம் எங்கிருந்து வருகிறது? பிரபாகரனும் அவருடன் அழைத்து வரப்பட்ட மற்றயவர்களும் இந்தியப் பிரஜைகள் அல்ல. வெளிநாட்டுப் பிரஜைகள் இந்தியாவுக்குள் நுழையும்போது செய்யப்பட வேண்டிய சில குடிவரவு நடைமுறைகள் இருந்தன.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் – வெளிநாட்டு அரசு தலைவர்கள் உள்பட – வழமையான குடிவரவு நடைமுறைகளுக்கு உட்படவேண்டியதில்லை என்பது உண்மைதான். ஆனால் வேறு சிறப்பு நடைமுறை ஒன்று, இந்திய குடிவரவு துறையில் உண்டு.

வெளிநாட்டு அரசு பிரதிநிதிகளிடம் ஒரு ராஜதந்திர பாஸ்போர்ட் இருக்கும். மத்திய அரசின் அழைப்பையேற்று வருபவர்களின் உதவியாளர்கள் இந்த டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்டின் விபரங்களை இந்திய குடிவரவு இலாகா அதிகாரிகளிடம் கொடுக்க, விமானநிலையத்தில் வைத்து அவர்களது வருகை IN-IE6234 என்ற படிவத்தில் பதிவு செய்யப்படும்.

அதன் ஒரு பிரதி டெல்லியிலுள்ள குடிவரவு இலாகா தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மற்றொரு பிரதி வெளியுறவு அமைச்சுக்குப் போகும். மூன்றாவது பிரதி உள்ளூர் குடிவரவு அலுவலகத்தில் பைலில் இருக்கும்.

ஆனால் பிரபாகரனும், அவருடன் வந்த மற்றயவர்களும் ராஜதந்திர பாஸ்போர்ட் ஒன்றுடன் அழைத்துவரப் படவில்லை.

இதனால் அவர்களது வருகை இந்தியாவுக்குள் முதலாவது தரையிறங்கும் இடத்தில் (India’s First Point of Entry) எப்படிப் பதிவு செய்யப்படுவது என்ற குழப்பம் திருச்சி ஏர்போர்ட்டில் ஏற்பட்டது.

மத்திய வெளியுறவு அமைச்சுக்கும், இவர்களது வருகைக்கும் தொடர்பு இருந்தாலும், ஏற்பாடுகள் முழுமையாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சினாலேயே செய்யப்பட்டிருந்தன.

மத்திய பாதுகாப்பு அமைச்சோ, திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்கு இந்திய விமானப்படையின் அன்டனோவ் பயணிகள் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ததோடு சரி. வேறு ஏற்பாடு எதையும் செய்திருக்கவில்லை.

திருச்சி விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகளுக்கும் கடைசி நிமிடத்தில்தான் தகவல் சொன்னார்கள். சும்மாவே குடிவரவுத் துறைக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் லடாய். அந்த நிலையில், கடைசி நிமிடத்தில்தான் தமக்கு தகவல் கொடுத்ததில் திருச்சி குடிவரவுதுறை அதிகாரிகளுக்கு செம கடுப்பு…

அந்த நாட்களில் திருச்சி ஏர்போர்ட்டில் குடிவரவு இலாகாவுக்குப் பொறுப்பாளராக இருந்தவர் N.சீனிவாசன். மிக அமைதியான, நல்ல மனுஷன். ஆனால், குடிவரவு சட்டங்களை சட்டைப் பையில் வைத்திருப்பவர். அந்த நாட்களில் ஒரேயொரு இன்டர்நேஷனல் விமானம் மட்டும் (ஏர்லங்கா) வந்து போன திருச்சி ஏர்போர்ட்டில், எல்லா நடைமுறைகளும் சட்டப்படி நடக்க வேண்டும் என்பதில் கடுமையாக இருந்தவர்.

இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து அன்-யூஷூவலாக ஹெலிகாப்டர்கள் திருச்சி வந்திறங்கியபோது, திருச்சி குடிவரவு இலாகாவுக்குப் பொறுப்பாளராக இருந்த சீனிவாசன், குடிவரவு நடைமுறைகளைப் பூர்த்தி செய்யாமல், மேற்கொண்டு சென்னைக்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியாது என்று முட்டுக்கட்டை போட்டார்.

இது திருச்சியில் ஓரளவு குழப்பத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் சில விளக்கங்களைக் கொடுத்தபோதும், சீனிவாசன் அசைந்து கொடுக்கவில்லை. “டில்லி இமிகிரேஷன் கமாண்டில் இருந்து லெட்டர் வாங்கி வாங்க ஸ்வாமி” என்றார்.

மற்றொரு விஷயம் என்னவென்றால், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும் ஹெலிகாப்டர்கள் வருகின்றன என்பதை மாத்திரம் திருச்சி குடிவரவு இலாகாவிடம் தெரிவித்திருந்தார்களே தவிர, அதில் வருபவர்கள் யார், எதற்காக வருகிறார்கள் என்பதுபோன்ற விபரங்களைச் சொல்லியிருக்கவில்லை.

ஹெலிகாப்டர்கள் தரையிறங்கியபோதுதான் விஷயத்தைத் தெரிந்து கொண்ட உள்ளூர் குடிவரவு இலாகாவினர், அதில் தங்களது அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பியிருந்தார்கள்.

திருச்சியில் நின்று என்ன செய்வது என்று புரியாமல், டில்லியை தொடர்பு கொண்டார்கள் பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

இறுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு தந்திரம் செய்தார்கள். “வெளியுறவு அமைச்சில் இருந்து யாராவது சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டார்கள். இமிகிரேஷனும், வெளியுறவு அமைச்சும் ஒன்றோடு ஒன்று நெருக்கமானவை. சீனிவாசன் அதற்கு சம்மதிக்கவே, கொழும்பு இந்தியத்தூதரக அதிகாரி பூரியை முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

“இவர்களுக்கான குடிவரவு நடைமுறைகளை நாங்கள் டில்லியில் செய்து கொள்கிறோம். நீங்கள் விட்டுவிடுங்கள்” என்று பூரி கூறியபின், திருச்சி குடிவரவு இலாகாவினர் விட்டுக் கொடுத்தனர்.

(ஆனால் பிரபாகரனும், மற்றையவர்களும் டில்லியை அடைந்தபோது, குடிவரவு நடைமுறைகள் பற்றி யாருமே கவலைப்படவில்லை என்பது வேறு விஷயம்)…

1970களில் இருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலிருந்த கடல் மார்க்கமாக எத்தனையோ தடவைகள் பயணம் செய்திருந்த பிரபாகரன், முதல் முறையாக இரு நாடுகளுக்குமிடையே விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார் – அதுவும் மத்திய அரசின் தனிப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம்!

இதற்கும் ஒரு சிறிய பின்னணி கதை உண்டு.

1987 வரை தமிழகத்தில் தங்கியிருந்த பிரபாகரன் மீது மத்திய அரசு சில அழுத்தங்களைப் பிரயோகித்த காரணத்தால், இனிமேலும் இந்தியாவில் தங்கியிருப்பது சிக்கலை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொண்டு, இந்தியாவில் இருந்து வெளியேறத் தீர்மானித்திருந்தார். 1987ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி, புலிகளால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த கடற்பயணம் ஒன்றைச் செய்து இலங்கைக்கு சென்றிருந்தார்.

அந்தப் பயணம்தான் அவர் இறுதியாக இந்தியாவில் இருந்து வெளியேறும் பயணம் என்று, தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவு அரசியல் தலைவர்கள் சிலருக்கு சொல்லப்பட்டது.

யாழ்ப்பாணம் சென்றிருந்த அவருக்கு ஜனவரி மாத இறுதியில் ஈராஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமாரிடமிருந்து தகவல் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. பாலகுமார் அரசியல் வேலைகளுக்காக தமிழகம் செல்கிறார் என்றும், பிரபாகரன் தமிழகத்திலிருந்து திரும்பி வந்துவிட்டதற்கு ஏதாவது விசேட காரணம் இருக்கிறதா என்பதை பாலகுமார் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்பதும் தான் அந்தத் தகவல்.

தகவல் கிடைத்ததையடுத்து, பாலகுமார் தமிழகம் செல்லுமுன்னர் இரு இயக்கத் தலைவர்களும் யாழ்ப்பாணத்திலுள்ள ஈராஸ் அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டார்.

“தமிழகத்தில் தொடர்ந்தும் தங்கியிருந்தால், மத்திய உளவுத்துறையினர் சொல்வதற்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும். எங்கள் கொள்கைகளையே மாற்றிக் கொள்ள வேண்டி வந்திருக்கும். அதுதான், இனிமேலும் தமிழகத்தில் தங்கியிருப்பது வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து, அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன்” என்றார் பிரபாகரன்.

“அப்படியானால் நீங்கள் இனிமேல் தமிழகத்துக்குச் செல்வதாக உத்தேசமில்லையா” என்று பாலகுமார் கேட்டிருக்கிறார்.

“நானாகச் செல்லமாட்டேன். அவர்களுக்கு (இந்தியாவுக்கு) என்னைத் தேவையென்றால் அவர்கள் வந்து அழைக்கட்டும். அழைத்துச் செல்லட்டும்”

“இது நடக்கக்கூடிய காரியமா” என்று கேட்ட பாலகுமார், “அவர்களுக்கு எங்களைத் தேவையில்லை. எங்களுக்குத்தான் அவர்கள் தேவை” என்றிருக்கிறார்.

“நான் இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர்களுக்கும் ஒரு தேவை வரும். அப்போது அவர்கள் வந்து எங்களை அழைக்க வேண்டிய காலமும் வரும்” என்று பதில் கூறியிருக்கிறார் பிரபாகரன்.

ஜனவரி 1987-ல் கூறப்பட்ட இந்தக் கூற்று, அதே ஆண்டு ஜுலை மாதத்தில் பலித்திருக்கிறது!

திருச்சியில் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்டவர்கள் அங்கே தயாராக நின்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அவர்கள் சென்னை வருகிறார்கள் என்ற விஷயம், குறிப்பிட்ட சிலருக்கு, அப்போது தமிழக தலைவர்களுடன் தொடர்பில் இருந்த பேபி சுப்ரமணியத்தால் கூறப்பட்டிருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பரிச்சயமான சில தமிழக அரசியல் தலைவர்கள் வந்திருந்தார்கள்.

பிரபாகரன் சென்னையில் இறங்கியபோது, சென்னையில் தங்கியிருந்த, புலிகளின்அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இருவரும் சந்தித்து உரையாடிய பின், இந்திய அரசு யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தபடி, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விறுவிறுப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல