பாகம் மூன்று
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை டெல்லிக்கு அழைத்துச் செல்ல சென்னையில் உள்ள தொடர்புகள் மூலம் செய்யப்பட்ட முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் யாழ்ப்பாணத்திலுள்ள ரகசிய இடமொன்றில் தரையிறங்கவும் கொழும்பு அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் டில்லி தமது அடுத்த முயற்சிகளை, கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்தின் மூலமாகச் செய்யத் தீர்மானித்தது.
அப்போது கொழும்பில் இந்தியத் தூதுவராக இருந்தவர் ஜே.என்.டிக்சித். (ஜோதிந்திர நாத் டிக்சித்).
இந்த டிக்சித் ஒரு வித்தியாசமான நபர். இலங்கைக்கான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சொதப்பியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு என்று கொழும்பிலும் சொல்லுவார்கள். டில்லியிலும் சொல்லுவார்கள். யாழ்ப்பாணத்திலும் சொல்லுவார்கள். இப்படி அனைத்து தரப்பிலும் சொல்கிறார்கள் என்பதில் இருந்து, அவரது சுபாவத்தை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.
“டிக்சித் ஒரு வட இந்தியர் என்பதால், இலங்கை தமிழர் விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை” என்பதாக ஒரு விமர்சனம் உள்ளது. அது, உண்மையல்ல. டக்சித் பற்றி பலருக்கு தெரிந்திராத ஒரு விஷயம், இவர் வட நாட்டவர் அல்ல. பிறந்தது வட நாட்டில் அல்ல, சென்னையில் (அந்த நாட்களில் மெட்ராஸ்).
இவரது தந்தை, பிரபல மலையாள எழுத்தாளர் முன்சி பரமு பிள்ளை. தாய், ரெட்னமாயி தேவி. அப்புறம் எப்படி டிக்சித் என்ற பெயர் வந்தது? முன்சி பரமு பிள்ளையை பிரிந்து, இவரது தாய் சீத்தாராம் டிக்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த வழியில்தான் டிக்சித் என்ற பெயரை சேர்த்துக் கொண்டார். (சீத்தாராம் டிக்சித் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும், பத்திரிகையாளர்!)
ஒரு தடவை அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, டிக்சித் பற்றிய பேச்சு வந்தது. அமெரிக்க தூதரக அதிகாரி சிரித்தபடி சொன்னார், “இந்த டிக்சித் எந்த விவகாரத்தில் தலையை விட்டாலும், அங்கே யுத்தம் ஏற்படும்”
அவர் நிஜமாக கூறினாரா அல்லது காகம் இருக்க தேங்காய் விழுந்த கதைபோலவா என்பது தெரியாது. ஆனால் இந்திய வெளியுறவுத் துறையில் டிக்சித் கடந்து வந்த பாதையைப் பாருங்கள். கொஞ்சம் உண்மை இருப்பதுபோலத் தெரியும்.
நீண்டகாலமாக இந்திய வெளியுறவுத் துறையில் இருந்தவர் டிக்சித். 1962-ல் (ஆம்! அந்த நாட்களில்
…இருந்து பதவியில் இருந்தவர்) வெளியுறவு அமைச்சில் இருந்தபோது டிக்சித் கவனித்து வந்தது, வெளியுறவு அமைச்சின் சீன விவகாரங்களுக்கான டெஸ்க்கை.
அப்போதுதான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் யுத்தம் நடைபெற்றது.
1971ல் டிக்சித் பதவி உயர்வு பெற்றார். சிறப்பு வெளியுறவு இலாகாவுக்கான இயக்குனர் ஆனார். இந்த இலாகாதான் பாகிஸ்தானின் விவகாரங்களை டெல்லியில் கவனித்த இலாகா!
1971ல் இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்று, பங்களாதேஷ் என்ற நாடு உருவாகியது.
அதன்பின் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதராக அனுப்பப்பட்டார். அவர் காபுல் சென்று சில மாதங்களில் ரஷ்ய ராணுவம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துக் கொண்டது.
இப்படியான அதிஷ்டம் உள்ள டிக்சித், 1985-ம் ஆண்டு மே மாதம் கொழும்பு போய் இறங்கினார் – இந்திய தூதராக!
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் பிரதானமாக இருந்து இயங்கிய இருவரில் இவர் ஒருவர். மற்றயவர் இலங்கையின் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயகே (1994-ல் விடுதலைப் புலிகளால் அனுப்பி வைக்கப்பட்ட பெண் தற்கொலை போராளியால், குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்).
இந்திய – இலங்கை ஆரம்பகால ஒப்பந்தத்தை டிக்சித், காமினி இருவரும் ஒன்றாக அமர்ந்தே தயாரித்தார்கள். பின்னர் அதில் சில சில மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதிவடிவம் பெற்றது.
இலங்கை விவகாரத்தில் இந்தியா சட்ட ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளது இந்த இந்திய – இலங்கை ஒப்பந்தத்தால் என்பதால், இந்த ஒப்பந்தத்தின் பின்னணி பற்றிய சில சுவாரசியமான விபரங்களை மாத்திரம் (ஒப்பந்த நகல் வேண்டாம்) பார்த்துவிட்டுச் செல்லலாம்.
டிக்சித், காமினி திசநாயகே ஆகிய இருவரும்தான் ஒப்பந்தத்தின் தயாரிப்பு வேலைகளில் முக்கிய ஆட்டக்காரர்கள் என்றாலும், வேறு சிலரும் அதில் சம்மந்தப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் என்.ராம். அந்த நாட்களில் ஹிந்து பத்திரிகையில் அவர் அசோசியேட் எடிட்டர் (தற்போது, இந்து பத்திரிகையின் எம்.டி.)
ராம் எப்படி கொழும்பு காட்சிகளுக்குள் வந்தார்?
இந்திய பிரஜையான ஷாஃப்பர் (CTA) அந்த நாட்களில் கொழும்பில் வசித்து வந்தார். அவர் ஒரு பிசினெஸ்மேன் மற்றும் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட். அவரது நண்பர் என்.ராம்.
ஷாஃப்பர் மூலமாகத்தான் ராம், காமினி திசநாயகேவுடன் நெருக்கமானார். (காமினி பின்னாட்களில் புலிகளால் கொல்லப்பட்டதன் பல காரணங்களில் ஒன்று, அவருக்கு இருந்த இந்திய நெருக்கம் என்று ஒரு கதை உண்டு)
ஹிந்து ராம், ராஜிவ் காந்தியுடனும் ஓரளவு பழக்கம் உடையவர், ஜெயவர்தனேவுடனும் ஓரளவு பழக்கமுடையவர் என்ற வகையில் இரண்டு பகுதிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட ஓரளவுக்கு உதவினார். இலங்கை – இந்திய ஒப்பந்தம் தொடர்பாகவும் இணைப்பாளராக இருந்தார்.
காமினி திசநாயகேவுக்கும், ராஜிவ் காந்திக்கும் எப்படி நெருக்கம் ஏற்பட்டது? கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட நெருக்கம் அது. காமினி திசாநாயகேதான் அந்த நாட்களில் இலங்கை கிரிக்கட் போர்டின் சேர்மனாக இருந்தார். அப்போது இந்திய கிரிக்கட் போர்டின் சேர்மனாக இருந்தவர், N.K.P சால்வே (நரேந்திர குமார் சால்வே). காமினியும், சால்வேயும் நண்பர்கள்.
N.K.P சால்வே, ராஜிவ் காந்தியுடன் நெருக்கமானவர். (சால்வே சமீபத்தில் – 2012 ஏப்ரல் 1-ம் தேதி – தனது 91-வது வயதில் டில்லியில் மரணமடைந்தார்.)
இப்படி இவர் மூலமாக அவர், அவர் மூலமாக மற்றயவர் என்று, ஜே.ஆர்.ஜெயவர்த்தனே – ராஜிவ் காந்தி – டிக்சித் – காமினி திசாநாயகே கூட்டணி ஏற்பட்டது. இவர்கள் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவின் அமைச்சரவையில் இருந்த மற்றய அமைச்சர்களுக்கேகூடத் தெரியாமல்! (அப்போது இலங்கை பிரதமராக இருந்த பிரேமதாசாவுக்குக்கூட, ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது!)
கொழும்பு – புதுதில்லி – திம்பு – பங்களூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்தே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது என்றாலும், அதில் தமிழர்கள் யாருடைய பங்களிப்பும் இருக்கவில்லை. இந்த கூட்டணிகள் எதிலும் தமிழர்கள் யாரும் இல்லை.
அதற்கு காரணம், என்னவென்று சொல்ல முடியும். சொன்னால் துரோகி பட்டம் கட்டி விடுவார்கள். அதெல்லாம் ஜீன் சமாச்சாரம்.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இந்தியத் தூதரகத்தின் ஊழியர்களைக்கூட நம்பாமல் டிக்சித் தாமே நேரடியாக ஒப்பந்தம் பற்றிய குறிப்புக்களை டைப் செய்தார். இந்திய தயாரிப்பு என்று கூறப்படும் இந்த ஒப்பந்தத்தின் ஆரம்ப கால டைப்பிங்கை, இந்திய தூதர் டிக்சித் எங்கே வைத்து செய்தார் தெரியுமா?
கொழும்புவில் உள்ள காமினி திசநாயகேவின் நண்பர் ஒருவருடைய வீட்டில் வைத்துத்தான் டைப் செய்தார்.
விறுவிறுப்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக