பாகம் நான்கு
டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, அது இறுதி வடிவமும் பெற்ற பின்னர், அன்றைய இலங்கை அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் முக்கியமான சிலருக்கு மாத்திரம் சொல்லலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
அன்றைய அமைச்சர் (இன்று எதிர்க்கட்சித் தலைவர்) ரணில் விக்ரமசிங்கே, இந்த ஒப்பந்தத்தை அமைச்சரவையின் முன்னே வைக்கவேண்டும் என்று கோரினார். ஜே.ஆர். ஜெயவர்தனேவும் அதற்குச் சம்மதிக்கவே, ஜுலை 15-ம் தேதி, முதல் தடவையாக இலங்கை அமைச்சர்களின் கண்களில் ஒப்பந்தம் காட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தம் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான ரகசிய டீல்கள் சில கடைசிவரை வெளியிடப்படவே இல்லை. ஒப்பந்தத்தை முன்னின்று செய்த தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை அது பாதிக்கலாம் என்று கூறப்பட்டு, ரகசியமான சில பகுதிகள் தொடர்ந்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டன.
அப்படியான டீல்களில் ஒன்று என்ன என்று, பின்னாட்களில் தகவல் கசிந்தது.
அது என்ன என்றால், இலங்கையின் வடக்கு மாகாணத்தையும் (யாழ்ப்பாணம்) கிழக்கு மாகாணத்தையும் (திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை) ஒன்றாக இணைப்பதற்கு இலங்கை அமைச்சரவையின் சம்மதம் கிடைத்தால், இந்தியா அதுவரை ஈழ விடுதலை இயக்கங்களுக்கு செய்துவந்த உதவிகள் அனைத்தையும் நிறுத்திக் கொள்ளும். அவர்களை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கும்.
இந்த விவகாரம், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ரகசிய பகுதியாக இருப்பது வெளியே தெரியவந்தால், அப்போது என்ன ஆகியிருக்கும்? இதோ பாருங்கள்:
1) சிங்கள மக்களின் எதிர்ப்பை ஜே.ஆர்.ஜெயவர்தனேவின் அரசு சந்திக்க நேரிடும்.
2) இந்தியா, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்த கதையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகிவிடும்.
3) ஈழ விடுதலை இயக்கங்கள் இந்தியாவை சந்தேகப்படுவார்கள். இந்தியாவின் பேச்சை கேட்க மாட்டார்கள்.
இதனால்தான் இதுபோன்ற டீல்கள் எல்லோரிடமும் இருந்து மறைக்கப்பட்டன.
ஆனால் இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவை என்பதால், ஒப்பந்தம் முக்கிய அமைச்சர்களுக்கு காட்டப்பட்டது. அதை அப்போது பிரதமராக இருந்த (பின்னாட்களில் ஜனாதிபதி) பிரேமதாச எதிர்த்தார். (விடுதலைப் புலிகள் எதிர்த்த அதே ஒப்பந்தத்தை எதிர்த்த பிரேமதாசா, 1993-ல் விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார்)
இந்த ரகசிய ஒப்பந்த விஷயத்தில் மற்றுமோர் வேடிக்கை என்னவென்றால், பிரதமர் பிரேமதாசவுக்கு கொழும்பு முழுவதும் கண்களும் காதுகளும் உண்டு. அதனால், பிரேமதாச லண்டன், டோக்கியோ ஆகிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்த வேளையிலேயே, இப்படியான ரகசியச் சந்திப்புகள் நடைபெற்று, ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
விஷயம் பிரேமதாசவுக்குத் தெரியவந்த போது, “எமது ஜனாதிபதி நாட்டையே இந்தியர்களிடம் விற்றுவிட்டார் என்பது மாத்திரமல்ல, தனது பிரதம மந்திரியிடமே ஒரு ரகசியத்தைச் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார்” என்றார் கோபமாக.
ஜுலை 15-ம் தேதி இலங்கை அமைச்சர்கள் சிலருக்கு ஒப்பந்தம் காண்பிக்கப்பட்டது. மறுநாள் 16-ம் தேதி டிக்சித், இலங்கையின் 10 அமைச்சர்களை சந்தித்து ஒப்பந்தம் பற்றி விளக்கினார். ஜுலை 21-ம் தேதி சென்னை சென்ற டிக்சித், அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து ஒப்பந்தம் பற்றி எடுத்துக் கூறினார்.
கொழும்பில் இப்படியாக பல ரகசிய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தான், தொடரின் ஆரம்பத்தில் கூறியதுபோல, புது டில்லி நேரடியாக காரியத்தில் இறங்காமல், கொழும்புவில் உள்ள இந்திய தூதர் டிக்சித் மூலமாக கொழும்புவின் அனுமதியை பெறுவது என்ற முடிவுக்கு வந்தது.
டிக்சித்துக்கு டில்லியில் இருந்து தகவல் போனது – யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புது டில்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவரை அழைத்து செல்ல இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க இலங்கை அரசின் அனுமதி வேண்டும்”
டில்லியாலேயே பெற முடிந்திராத அனுமதி இது. “நோ ப்ராப்ளம்” என்றார் டிக்சித். சில மணி நேரத்திலேயே கொழும்புவின் அனுமதியை பெற்றுக் கொடுத்தார் டிக்சித்.
இதை எப்படி அவர் சாதித்தார்?
இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவின் இல்லத்துக்கு நேரில் சென்றார். அங்கே போய் கதையை லேசாக ஒரு ட்டுவிஸ்ட் கொடுத்து சொன்னார்.
“இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது எப்போது என்று முடிவெடுக்கும் முன்னர், டில்லி ஒரு விஷயத்தை செய்ய விரும்புகிறது. எல்லா ஈழ விடுதலை இயக்க தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து, சில விஷயங்களை ‘கடுமையாக’ கூற விரும்புகிறது.
பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார். அவரை, டில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை தொடர்பு கொள்வதை நாங்கள் (டில்லி) பார்த்துக் கொள்கிறோம். எங்கள் ஹெலிகாப்டர் யாழ்ப்பாணத்தில் இறங்க அனுமதி வேண்டும்”
இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனே, உடனே அனுமதி கொடுத்தார்.
அடுத்த கட்டமாக, யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
அப்போது கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் முதல் செயலாளராக (அரசியல்ப் பிரிவு) இருந்தவர் ஹார்டிப் பூரி. அவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார் டிக்சித்.
ஹார்டிப் பூரி, இந்திய தூதரகத்தில் இருந்த றோ அதிகாரி ஒருவர் உதவியுடன் யாழ்ப்பாணம் சென்றார். பிரபாகரனை சந்தித்தார்.
“இந்தியப் பிரதமர் உங்களை சந்திக்க விரும்புகிறார். இலங்கையில் வடக்கேயும் கிழக்கையும் இணைப்பதற்கு ஜே.ஆர். சம்மதித்திருக்கிறார். அத்துடன் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகச் சேர்த்துக் கொள்ளவும் சம்மதித்திருக்கிறார். இவற்றின் அடிப்படையில் நீங்கள் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடுவீர்களா”
இதற்கு பிரபாகரன், “இல்லை. இலங்கை அரசு எங்களது இரண்டு நிபந்தனைகளுக்கு சம்மதிக்க வேண்டும். முதலாவது, இலங்கை ராணுவம் தாங்கள் மே 26-ம் தேதிக்கு முன்னர் நின்ற இடங்களுக்குப் பின்வாங்க வேண்டும். (‘ஆபரேஷன் லிபரேஷன்’ என்ற ராணுவ நடவடிக்கையில், புலிகள் வைத்திருந்த சில பகுதிகளை கைப்பற்றியிருந்தது இலங்கை ராணுவம்)
இரண்டாவது, தமிழ் அகதிகள் அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்த படவேண்டும். இந்த இரு நிபந்தனைகளுக்கும் இலங்கை அரசு சம்மதித்தால் பேசலாம்”
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அறுதி செய்யப்பட்டு தயாராக இருக்கும் ஒப்பந்தம் பற்றி எந்தப் பிரஸ்தாபமும் இந்தச் சந்திப்பில் இல்லை.
கொழும்பு திரும்பிய பூரி, இந்த நிபந்தனைகள் பற்றி டிக்சித்திடம் கூற, அவர் ராஜீவ் காந்தியிடமும், ஜே.ஆர். ஜெயவர்த்தனேவிடமும் அது பற்றிக் கூறினார்.
இந்த நிபந்தனைகளையும் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்வது என்று இருவரும் முடிவெடுத்தார்கள். மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற பூரி, பிரபாகரனை சந்தித்தார்.
இம்முறைதான் முதல் தடவையாக ஒப்பந்தம் ஒன்றுபற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. “இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட சான்ஸ் இருக்கிறது” என்று லேசாகச் செல்லப்பட்டது.
மீண்டும் பூரி யாழ்ப்பாணம் சென்றது ஜுலை மாதம் 24-ம் தேதி. அவருடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சென்றிருந்தார். பாதுகாப்பு அதிகாரியின் பெயர், கேப்டன் குப்தா.
கேப்டன் குப்தா யாழ்ப்பாணம் சென்ற காரணம், பிரபாகரனை டில்லிக்கு அழைத்துச் செல்வதற்கு!
விறுவிறுப்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக