ஞாயிறு, 3 மார்ச், 2013

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-9

பாகம் ஒன்பது

சென்னையில் தங்கியிருந்த மற்றய இயக்கங்களின் தலைவர்களிடம் டெல்லி வரும்படி றோ உளவுத்துறையின் உயரதிகாரிகள் இருவர் நேரில் சென்று சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்த அழைப்பு விடுக்கப்பட்ட தினத்தில் புளாட் இயக்கத்தின் தலைவர் சென்னையில் இல்லை என்று கூறப்பட்டது.

“அவர் முக்கிய வேலை நிமித்தமாக, பெயர் குறிப்பிடப்பட முடியாத இடம் ஒன்றுக்குச் சென்றிருக்கிறார்” என்று கூறினார்கள் அந்த இயக்கத்தினர்.

இந்தப் பதிலுக்கு மற்றுமோர் விளக்கமும் உண்டு.

றோ அதிகாரிகள் இயக்கங்களின் தலைவர்களை டெல்லிக்கு வரும்படி அழைத்தபோது உண்மையில் புளாட் இயக்கத்தின் தலைவர் உமா மகேஸ்வரன் சென்னையில்தான் இருந்தார். டில்லி ஏதோ ஒரு சிக்கலான காரியத்தைச் செய்யும்படி இயக்கத் தலைவர்களைக் கட்டாயப்படுத்தப் போகின்றது என்பதைப் புரிந்து கொண்டு, றோ அதிகாரிகள் வந்து சென்ற சிறிது நேதை்திலேயே, ஒரத்தநாட்டில் இருந்த அவர்களது பிரதான முகாமுக்கு அவர் சென்று விட்டார்.

கடைசிவரை றோ அதிகாரிகளால் உமா மகேஸ்வரனைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

“இதற்கு என்ன செய்யலாம்?” என்று சென்னையிலுள்ள றோ அதிகாரிகள், டில்லியை ஆலோசனை கேட்க, கால அவகாசம் அதிகம் இல்லாத காரணத்தால், புளாட் இயக்கத்தில் இருந்து வேறு யாரையாவது டில்லிக்கு அனுப்பி வைக்கும்படி கூறப்பட்டிருக்கின்றது.

இந்த வகையில் பிரபாகரன் டெல்லி சென்று இறங்கியபோது, மற்றய இயக்கங்களின் தலைவர்கள் எல்லோரும் டில்லியில் இருந்தார்கள் – உமா மகேஸ்வரனை தவிர.

இங்குள்ள மற்றுமோர் விஷயம் என்னவென்றால், இவர்கள் எல்லோரும் டில்லியில் இருந்தார்கள். ஆனால் யாருக்கும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் சொல்லப்பட்டிருக்கவில்லை.

ஜுலை 28-ம் தேதி, இயக்கங்களின் தலைவர்களை (பிரபாகரன் தவிர்ந்த) தன்னை வந்து சந்திக்கும்படி பிரதமர் ராஜிவ் காந்தி அழைத்திருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப், ஈராஸ், புளாட், டெலோ ஆகிய இயக்கத்தினருக்கும் ஒரே நேரத்தில்தான் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஈராஸ் இயக்கத்துடன் சென்று பிரதமரைச் சந்திக்க முடியாது என்று மற்றய இயக்கங்கள் மறுத்து விட்டன. இதனால் மூன்று இயக்கங்களுக்கு ஒரு நேரமும், ஈராஸ் இயக்கத்துக்கு வேறு நேரமும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

ஈராஸ் இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதால், அவர்களது முன்னிலையில் தாங்கள் பிரதமரைச் சந்திக்க விரும்பவில்லை என்று மற்றய இயக்கங்கள் காரணம் கூறியிருந்தன.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரதிகள் நான்கு இயக்கங்களின் தலைவர்களிடமும் கொடுக்கப்பட்டது. ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்து விட்டு, ஒப்பந்தம் பற்றிய ஆட்சேபனைகள் எதுவும் இருந்தால் எழுத்து மூலமாகக் கொடுக்கும்படி அவர்கள் கேட்கப்பட்டார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் பிரதிகள் இயக்கங்களின் தலைவர்களிடம் (விடுதலைப்புலிகள் தவிர்ந்த) கொடுக்கப்பட்டது ஜுலை மாதம் 27-ம் திகதி. (அவர்கள் பிரதமரை சந்திப்பதற்கு முதல்தினம்)…

இந்திய வெளியுறவு அமைச்சின் தலைமையகத்திலுள்ள அறையொன்றில் வைத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரதி கொடுக்கப்பட்டது. அந்தப் பிரதிகளை அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று படிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

சந்திப்பு முடிவடைந்த போது அனைத்துப் பிரதிகளும் திரும்பவும் வாங்கப்பட்ட பின்னர்தான் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். வெளியே சென்ற பின்னரும் ஒப்பந்தத்தில் இருக்கும் விஷயங்கள் பற்றி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை வெளியே யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்தை முதல் முதலில் விடுதலை இயக்கங்களின் தலைவர்களுக்குக் காட்டியவர், வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் குல்தீப் சாதவ்.

அப்படிக் கொடுக்கப்பட்ட போது அதிலுள்ள ஆட்சேபனைகளை எழுத்துமூலம் கொடுக்கலாம் என்று இயக்கங்களுக்குக் கூறப்பட்டிருந்தாலும், அதே ஒப்பந்தத்தை இலங்கை ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் கையொப்பமிடுவதற்கு ஏற்கனவே நாளும் குறிக்கப்பட்டு விட்டிருந்தது. அதன் வேறுவிதமான அர்த்தம் – “இதுதான் ஒப்பந்தம். இதில் உடன்பாடு இல்லாவிட்டால் தெரிவியுங்கள். ஆனால் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்போகிறோம்”

மிகக் குறுகிய கால அவகாசத்தில் ஒப்பந்தத்தைப் பார்த்த நான்கு இயக்கங்களும் கொள்கை ரீதியாக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டன. ஆனால் ஒப்பந்தத்தில் இருந்த முரண்பாடுகளை எழுத்துமூலமாகக் கொடுத்திருந்தன.

தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் கட்சிக்கும், ஈராஸ் இயக்கத்துக்கும்கூட அதே நிலைமைதான். தங்களது கருத்துக்களை – ஒப்பந்தத்திலுள்ள முரண்பாடுகளை – எழுத்துமூலமாகக் கொடுத்துவிட்டு, நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை.

இந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் இயக்க தலைவர்கள் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஈராஸ் தவிர்த்த மற்றய இயக்க தலைவர்கள் ஒன்றுகூடி ஒப்பந்தம்பற்றி ஆராய்ந்தார்கள். அன்று மாலையே நான்கு இயக்கங்களும் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில் ஒப்பந்தத்திலுள்ள சில முரண்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

மறுநாள் 28ம் திகதி இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி இயக்கத் தலைவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார். சந்திப்பு அவரது இல்லத்தில் நடைபெற்றது….

ராஜிவ் காந்தியின் முன்னால் இரு ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்று இலங்கை-இந்திய ஒப்பந்தம். மற்றயது விடுதலை இயக்கங்கள் இந்த ஒப்பந்தத்திலுள்ள முரண்பாடுகள் பற்றி வெளியிட்டிருந்த அறிக்கை.
அறிக்கையில் இயக்கங்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த முரண்பாடுகள் எல்லாம் பேனாவால் அடிக்கோடிடப்பட்டிருந்தது.

“நீங்கள் கூறியுள்ள முரண்பாடுகள் எல்லாவற்றையும் பார்த்தேன். கவலைப்படாதீர்கள் அவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றார் பிரதமர்.

ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் டீல் பண்ணுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

அந்த ஒப்பந்தத்தின் முழுமையான நகல் ஒன்று அவர்களுக்கு அதுவரை காண்பிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த ஒப்பந்தத்தில் “அது இருக்கிறது. இது இருக்கின்றது” என்று இங்கொன்றும் அங்கொன்றுமான தகவல்களே இந்திய தூதரக அதிகாரி பூரியினால் கூறப்பட்டிருந்தது.

சென்னையில் இருந்து டில்லி சென்ற விமானத்தில் பிரபாகரன் குழுவினருடன் பூரியும் ஒன்றாகவே பயணம் செய்தார். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பிரபாகரன், பூரியுடன் அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை.

விமானம் டில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள விமானப்படை தளம் ஒன்றில் இறங்கியது. அங்கிருந்து அவர்கள் அசோகா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அசோக ஹோட்டலில் செக்-இன் பண்ணிய நிமிடத்திலிருந்து ஆரம்பமாகியது குழப்பம்.

பிரபாகரனும் அவருடன் சென்றவர்களும் அசோகா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நேரத்தில், இலங்கைக்கான இந்தியத் தூதர் டிக்சித் ஏற்கனவே அதே ஹோட்டலில் மற்றுமோர் அறையில் தங்கியிருந்தார். முதலில் அவர் பிரபாகரனை சந்தித்தார்.

“ஒப்பந்தம் பற்றிய நகல் ஒன்று இதுவரை எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை” என்பதுதான் பிரபாகரன், டிக்சித்திடம் முதலில் கூறியது.

“ஒப்பந்தத்தின் இறுதி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மிக விரைவில் உங்களிடம் அந்த ஒப்பந்தத்தின் நகல் கொடுக்கப்பட்டு விடும்” என்று டிக்சித் பதில் கூறியிருக்கிறார்.

“ஒப்பந்தம் முழுமையாகத் தயாரிக்கப்படாமலா எங்களைப் பேச்சுக்கு அழைத்திருக்கிறீர்கள்”

“முக்கியமான விபரங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. சட்ட ரீதியான சில குறிப்புக்கள்தான் இப்போது அதில் இணைக்கப்படுகின்றன”

“ஒப்பந்தம் எம்மால் ஏற்றுக்கொள்ளப் படக்கூடிய அளவிலும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தனி ஈழம்தான் எங்களது ஒரே முடிவாக இருக்கும்”

“ஒப்பந்தம் இந்த அளவுக்கு வந்த பின்னர் நீங்கள் அப்படிக் கூறிவிட முடியாது. இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட ஒரு ஒப்பந்தம்”

“அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். இது உங்களுக்கும் (இந்தியாவுக்கும்) அவர்களுக்கும் (இலங்கைக்கும்) இடையிலான ஒரு ஒப்பந்தம். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமில்லை”

பிரபாகரன் இப்படிக் கூறியதும் டிக்சித் திகைத்துப் போனார். அவர்கள் இதை உண்மையில் அந்தக் கோணத்தில் இதுவரை பார்த்திருக்கவில்லை. ஒப்பந்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருப்பதால் அதில் உள்ளவை விடுதலைப் புலிகள் அமைப்பை எந்தவகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை தாமதமாகவே உணர்ந்து கொண்டார்.

விறுவிறுப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல