ஞாயிறு, 3 மார்ச், 2013

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-2


அப்போது சென்னையில் இருந்த விடுதலைப் புலிகளின் தொடர்பாளருக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. அவரை சென்னை றோ அலுவலகம் தொடர்பு கொள்கிறது. அதையடுத்து பண்ருட்டி ராமசந்திரன் தொடர்பு கொள்கிறார். முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும், பிரபாகரன், ராஜிவ் காந்தியை நேரில் சந்திக்கும் படி சொல்கிறார்.

இப்படி வெவ்வேறு ஆட்கள் மூலமாகத் தொடர்பு கொள்ளப்படுவதில் இருந்து, டெல்லி, இந்தச் சந்திப்பில் மிகவும் அக்கறையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் விடுதலைப் புலிகளின் தொடர்பாளர். இந்தச் செய்தி உடனடியாக யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலை புலிகளின் கம்யூனிகேஷன் பொறுப்பாளர் ஒருவருக்கு தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகளின் தலைமையகத்தில் இருந்து அன்றிரவே தகவல் வந்தது. “பலாலி ராணுவ முகாம் ஊடாக இந்தியா செல்வதை தலைவர் (பிரபாகரன்) ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்”

இந்த தகவலை, சென்னையில் உள்ள றோ அலுவலகத்துக்கு தெரிவித்தார், சென்னையில் இருந்தவர்.

இதன் பின்னர் அன்று இரவோடு இரவாகவே சென்னைக்கும், டில்லிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையே தகவல்கள் பரிமாறப்பட்டன. இந்திய விமானம், யாழ்ப்பாணத்தில் தாம் குறிப்பிடும் இடத்துக்கு வந்தால், பிரபாகரன் வருவார் என்பதை, புலிகள் திரும்ப திரும்ப கூறிக்கொண்டு இருந்தனர். இறுதியில், விடுதலைப் புலிகளால் குறிப்பிடப்படும் ஒரு இடத்துக்கு விமானத்தை கொண்டுவந்து, பிரபாகரனை அழைத்துச் செல்ல டில்லி சம்மதம் தெரிவித்தது.

விடுதலைப் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சுதுமலை என்ற கிராமம். அங்குள்ள அம்மன் கோவிலுக்கு முன் பெரிய அளவில் நிலம் ஒன்று உள்ளது. ஆனால், தாம் தேர்ந்தெடுத்துள்ள இடம் எது என்பதை புலிகள் இறுதி நேரம்வரை இந்தியாவுக்கு சொல்லவில்லை. இந்திய ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர்தான் சொன்னார்கள்.

20-ம் தேதி ஜுலை மாதம், 1987ம் ஆண்டு. வட இந்தியாவிலுள்ள ஹின்டொன் விமானப்படைத் தளம். அதிகாலை நேரம்.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹின்டொன் விமான படைத்தளம், டெல்லி-மீரட் நெடுஞ்சாலையிலிருந்து 10 கி.மீ. உள்வாங்கி அமைந்துள்ளது. அந்த நாட்களில் அங்கே மிக்-27 விமானப் படையணி ஒன்றும், ஹெலிகாப்டர் படையணி ஒன்றும் இருந்தன.

அன்றைய தினம் ஹின்டொன் விமானப் படைத்தளத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இந்திய விமானப் படைக்கு புதிதாக மற்றுமோர் ஹெலிகொப்டர் படையணி உருவாக்கப்படும் நிகழ்ச்சி அது.

இந்த சம்பவம் நடைபெற்ற காலத்தில்தான் இந்திய விமானப் படை, புதிதாக எம்.ஐ.-17 ராணா ரக ஹெலிகொப்டர்களை வாங்கியிருந்தது. இந்த புதிய ஹெலிகாப்டர்களால் உருவாக்கப்படும் புதிய படையணியே அன்றைய தினம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட இருந்தது.

கேப்டன் ஏகு அலுவாலியா இந்தப் புதிய படையணியின் முகாம் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

புதிய படையணி ஆரம்பிக்கப்படும் தினத்தன்று அதிகாலை, அவருக்கு முக்கிய உத்தரவு ஒன்று வந்திருந்தது. இந்திய விமானப்படையின் தலைமையகத்திலிருந்து வந்திருந்த அந்த உத்தரவில், அவரது படையணியின் ஹெலிகாப்டர்கள் முக்கியமான ஆபரேஷன் ஒன்றுக்கும் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

“எந்த நேரமும் ஆபரேஷன் பற்றிய அறிவிப்பு வரலாம். ஹெலிகாப்டர்களையும், விமானிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கவும்” என்றது உத்தரவு…

அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்த உத்தரவு வந்து சேர்ந்தது – ஆபரேஷன் என்ன என்று தெரிவிக்காமலேயே அவருக்கு கொடுக்கப்பட்ட உத்தரவின்படி, 6 ஹெலிகாப்டர்களை பெங்களூருக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

6 ஹெலிகாப்டர்களும் பெங்களூர் போய் இறங்கியபோது, மற்றொரு உத்தரவு தயாராக இருந்தது. “தமிழ்நாட்டிலுள்ள சூலூர் விமானப்படை முகாமுக்கு ஹெலிகாப்டர்களைக் கொண்டு செல்லுங்கள்”

சூலூர் இருப்பது கோயம்புத்தூரின் புறநகரப் பகுதியில். 1980-களில் சூலூர் விமானப் படைத்தளம், ஒரு பொட்டல் வெளியான பகுதியில் அமைந்திருந்தது. இந்த 6 ஹெலிகாப்டர்களும் அங்கே போய்ச் சேர்ந்தன.


பின்னாட்களில் சூலூர் விமானத் தளம்

அப்போதுகூட, ஆபரேஷன் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. “டில்லியிலிருந்து தகவல் வரும். அது வந்தவுடன் ஆபரேஷன் ஆரம்பமாகும்” என்று மாத்திரம் கூறப்பட்டது.

ஹெலிகொப்டர் விமானிகள் சூலூரில், டெல்லியின் உத்தரவுக்காகக் காத்திருந்தார்கள்.

புது டில்லியின் தாமதத்துக்கும் ஒரு காரணம் இருந்தது.

இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் இரண்டை யாழ்ப்பாணத்தில் ஒரு இடத்தில் இறக்குவதற்கு அனுமதி கோரியிருந்தது இந்தியப் பாதுகாப்பு அமைச்சு. (இந்த அனுமதி கோரல் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் செய்யப்படவில்லை. புது டில்லியே நேரடியாகக் காரியத்தில் இறங்கியிருந்தது)

ஆனால் எந்த இடத்தில் இறங்குவது என்ற விபரம் இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. (உண்மையில், இந்தியாவுக்கே எங்கே இறங்கப் போகிறோம் என்பது தெரிந்திருக்கவில்லை. பிரபாகரனின் பாதுகாப்பு என்ற காரணத்துக்காக விடுதலைப்புலிகள் அதைத் தெரிவித்திருக்கவில்லை)

இதனால், அனுமதி கொடுப்பதில் கொஞ்சம் இழுபறி நிலை ஏற்பட்டது.

சில அரசியல் காரணங்களுக்காக, கடந்த தடவை ‘ஆபரேஷன் பூமாலை’க்காக இலங்கையின் வான் எல்லைக்குள் அனுமதியில்லாமல் புகுந்ததுபோல டில்லி இம்முறை தடாலடி விளையாட்டு எதையும் செய்ய விரும்பவில்லை. அவர்களது திட்டம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்துச் செல்வது என்பதால், எந்த விதமான ரிஸ்க் எடுக்கவும் டில்லி தயாராக இல்லை.

ஆபரேஷன் பூமாலை ஒரு குறிப்பு

‘ஆபரேஷன் பூமாலை’ நடவடிக்கையின் மூலம் இந்திய விமானப்படை விமானங்கள், இலங்கையின் அனுமதியின்றி யாழ்ப்பாணத்தில் உணவுப் பொதிகளை வீசின. இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தில் போட்ட உணவு பொருட்களின் அளவு – 23 டன்.

யாழ்ப்பாணத்துக்கு அவற்றை எடுத்துச் செல்வதற்கு உபயோகிக்கப்பட்ட விமானங்களுக்கான செலவு, பாதுகாப்புக் கொடுக்கச் சென்ற போர் விமானங்களின் செலவு என்று ஆபரேஷன் பூமாலைக்கான செலவுகளைக் கூட்டினால், யாழ்ப்பாணத்தில் போடப்பட்ட உணவு பொருட்களின் விலையைவிட பல மடங்கு அதிகமாக வரும்.

போடப்பட்ட 23 டன் உணவுப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தவர்களது ஒருநேர உணவுக்குக்கூடப் போதாது.

அப்படி இருந்தும், ஆபரேஷன் பூமாலை என்ற நடவடிக்கையை இந்தியா நடத்தியதன் காரணம் மிகவும் சிம்பிள் – இலங்கை அரசுக்கு ஆபரேஷன் பூமாலையின் மூலமாக ஒரு செய்தி தெரிவிக்க விரும்பியது டில்லி.

“இலங்கையில் நடைபெறும் இனப்பிரச்சனையை இனியும் நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். நேரடியாக இறங்கப் போகிறோம்” என்பதுதான் அந்தச் செய்தி.

இந்தியாவின் செய்தியை இலங்கை அரசு நன்றாகவே புரிந்து கொண்டது. புரிந்து கொண்டது என்பதைவிட, கொஞ்சம் மிரண்டு போனது என்றும் கூறலாம்.

மிரளலுக்குக் காரணம், ஆபரேஷன் பூமாலை நடவடிக்கை இலங்கையின் சிங்கள பகுதிகளில் வேறு விதமாகப் பார்க்கப்பட்டது. சிங்கள மக்களிடையேயும் சரி, அரசியல்வாதிகளிடமும் சரி, இந்தியா பற்றிய ஒரு விஷயம் மனதில் பதிந்திருந்தது “இந்தியா ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனது ராணுவத்தின் பலம் கொண்டு இலங்கையை ஆக்கிரமிக்கப் போகின்றது.”

“இந்திய ஆக்கிரமிப்பின் முதற்படியாகத்தான் யாழ்ப்பாணத்தின் மீது உணவுப் பொருட்களைப் போட்ட ஆபரேஷன் பூமாலை” என்ற விதத்தில், சிங்கள மக்கள் நினைத்தார்கள்.

‘உணவுப் பொருட்களுடன் இந்திய விமானங்கள் வந்துவிட்டன. அடுத்தபடியாக குண்டுவீச்சு விமானங்கள் குண்டுகளுடன் வரப்போகின்றன’ என்று ஒரு பிரபல கொழும்புப் பத்திரிகை எழுதியது.

சிங்கள மக்கள் முதல்முறையாகத் தமிழர்களை பயத்துடன் பார்க்கும் நிலையை ஆபரேஷன் பூமாலை தோற்றுவித்தது. “இவர்களில் கை வைத்தால், இந்தியா இங்கே வந்துவிடும்” என்ற பயம்.

ஆபரேஷன் பூமாலை வெற்றிகரமாக முடிந்தபின், இந்திய அரசு உயர்மட்டத்தில் அடுத்துச் செய்யப்படவேண்டிய அரசியல் நகர்வுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. உண்மையில் அந்த நேரத்தில், இலங்கை பயந்தது போல ராணுவ ரீதியான நடவடிக்கை பற்றிய எந்தவொரு திட்டமும் இந்தியாவிடம் இருக்கவில்லை.

அவர்கள் ஈழ விடுதலை இயக்கங்களைத்தான் இலங்கையில் ராணுவ ரீதியாக உபயோகித்துக் கொள்வதாகத் திட்டம் வைத்திருந்தார்கள்.

தாங்கள் டெல்லியில் இருந்து அரசியல் ரீதியான நகர்வுகளை ஒரு புறமாகச் செய்வது; மறுபுறமாக தங்களது திட்டத்துக்கு ஏற்ப இலங்கையில் விடுதலை இயக்கங்கள் ராணுவத்தை தாக்குவது. இரண்டும் ஒன்றாகப் பொருந்தி வரும்போது, தாங்கள் ‘நினைத்த காரியம்’ நடந்துவிடும் என்று நினைத்து டில்லி.

ஆனால் அதெல்லாம், காற்றோடு போயின. டில்லிக்கு ஆதரவாக இருந்த சக ஈழ விடுதலை இயக்கங்களை அழித்தது விடுதலைப் புலிகள் அமைப்பு. தாமும் டில்லியுடன் முரண்பட்டு, இந்திய அமைதிப் படையுடன் யுத்தம் புரிந்தது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். ஈழ யுத்தத்துக்கு இந்தியா என்ற பின்தளம் இல்லாது போனது.

2009-ல் பிரதான தளமே அழிந்ததுடன், யுத்தம் முடிந்தது! “புதுடில்லி பழிவாங்கி விட்டது. முதுகில் குத்தி விட்டது” என்று இப்போது சொல்லிக் கொள்கிறார்கள்.

புதுடில்லி, இலங்கைக்குள் நேரடியாக செய்த முதலாவது ராணுவ நடவடிக்கை, இந்த ‘ஆபரேஷன் பூமாலை’தான்.

அந்த ஹெலிகாப்டரில் பிரபாகரன் இருப்பது இலங்கை அரசுக்கு தெரிந்தால், இலங்கை வான்பரப்புக்குள் அனுமதியில்லாமல் பிரவேசித்தது என்ற காரணத்தைக் காட்டியே இலங்கை ராணுவம் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த முயற்சி செய்யலாம்.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு, இந்திய ஹெலிகாப்டர்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பலாலி ராணுவ முகாமுக்குள் இறங்குவதற்கு அனுமதி கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் அதற்குச் சம்மதிக்கத் தயாராக இல்லை.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது – முடிவெடுக்கப்படாமல்.

விறுவிறுப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல