ஞாயிறு, 3 மார்ச், 2013

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-8

பாகம் எட்டு

விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழகத்தில் இருந்து திடீரென இலங்கை சென்றபோது, அவர் தமிழகத்தை விட்டு நிரந்தரமாக வெளியேற போகிறார் என்ற விஷயம் தமிழகக் காவல்துறையின் கியூ பிரான்ச்சுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சென்ற பின்னர்தான் தமிழக உளவுத்துறை விஷயத்தைத் தெரிந்து கொண்டிருந்தது.

தங்களுக்குத் தெரியாமலேயே இப்படியொரு காரியம் நடந்து விட்டதில் தமிழக உளவுத்துறையின் (கியூ பிரிவு) அன்றைய தலைவர் மோகன்தாஸ் கடும் கோபமடைந்திருந்தார்.

அப்போதும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சென்னையில் தங்கியிருந்தார். மோகன்தாஸ், இரண்டு கியூ பிரிவு அதிகாரிகளை ஆன்டன் பாலசிங்கத்தின் இல்லத்துக்கு அனுப்பி வைத்தார்.“தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். உடனடியாகச் சந்திக்க விரும்புகிறார்” என்று அந்த கியூ பிரிவு அதிகாரிகள் சொன்னார்கள்.

அன்டன் பாலசிங்கம் அவர்களுடன் செல்வதற்கு மறுத்து விட்டார்.

இப்போது இந்திய அரசினால் அழைத்து வரப்பட்ட பிரபாகரனுடன் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் சென்ற ஆன்டன் பாலசிங்கம், இந்தச் சம்பவம் பற்றி தனது நிலைப்பாட்டை எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.

“நீங்கள் அழைப்பதாக கியூ பிரிவு அதிகாரிகள் வந்து சொன்னார்கள். அந்த நேரத்தில்தான் பிரபாகரன் இலங்கை சென்றுவிட்ட விஷயம்பற்றி உங்களது கியூ பிரிவு தலைவருக்குத் தெரியவந்து, அவர் கோபமாக இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்.

அவர் என்னை தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்க விரும்புவார் என்று எதிர்பார்த்தேன். நீங்கள் (எம்ஜிஆர்) அழைப்பதாகச் சொன்னபோது, உங்களது பெயரை உபயோகித்து, அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் போகிறார் என்று புரிந்து கொண்டு, செல்ல மறுத்துவிட்டேன்”

இந்த விளக்கத்தைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர்., “அப்படியா” என்ற ஒரு சொல் பதிலுடன் நிறுத்திக் கொண்டார்.

அதிலிருந்து தமிழக முதல்வர் அந்தச் சம்பவத்தை சீரியசாக எடுத்திருக்கவில்லை எனப் புரிந்து கொண்டார்கள் பிரபாகரனும், பாலசிங்கமும்.

எம்.ஜி.ஆர். அதிகம் பேசவில்லை. “இந்தியப் பிரதமர் சில முக்கியமான திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றை பாருங்கள். திட்டங்கள் ஈழத் தமிழர்களுக்கு நன்மை தரும் என்று நீங்கள் நினைத்தால், சம்மதியுங்கள்” என்று சொல்லியதோடு நிறுத்திக் கொண்டார்.

பிரபாகரன், எம்.ஜி.ஆர். சந்திப்பு நடைபெற்றபோது, புது டில்லியில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் தயாராகி…

…ரெடியாக இருந்தது. அந்த ஒப்பந்தம் பற்றி எம்.ஜி.ஆர். எதுவும் கூறவில்லை. டில்லியில் ரெடியாக இருந்த ஒப்பந்தம் பற்றி எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டிருந்ததா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் – டில்லி சொல்வதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எம்.ஜி.ஆர். வற்புறுத்தவில்லை.

பிரபாகரன், எம்.ஜி.ஆரை சந்தித்தது அதுதான் கடைசித் தடவை!

எம்.ஜி.ஆருடனான சந்திப்பு முடிவடைந்ததும், பிரபாகரனும், பாலசிங்கமும் மறுபடியும் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சென்னை வந்து இறங்கியதிலிருந்து சிரித்த முகத்துடன் இருந்த பிரபாகரனின் முகம், சென்னையிலிருந்து டில்லிக்கு விமானம் ஏறும் நேரத்தில் மிகவும் சீரியசாக இருந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. டில்லி, ‘சில ஏற்பாடுகளை’ செய்திருப்பதாக எம்.ஜி.ஆர். கூறியது அவருக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.

அவர்கள் ஏற்றிக் கொண்டு விமானம் சென்னையில் இருந்து டில்லி நோக்கிப் பறக்கத் தொடங்கியது.

சென்னையில் இருந்து பிரபாகரனையும், அவருடன் வந்தவர்களையும் டில்லிக்கு அழைத்து சென்றபோது, அவர்களுக்குத் தெரிந்திராத காரியம் ஒன்றை டில்லி செய்திருந்தது. அது என்னவென்றால், மற்றய ஈழ விடுதலை இயக்கங்களையும், இலங்கை அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியையும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் பற்றி பேசுவதற்காக டில்லிக்கு அழைத்திருந்தது மத்திய அரசு.

இதிலுள்ள முக்கியத்துவம் என்ன?

யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரக அதிகாரி பூரி பிரபாகரனை சந்தித்தபோது, புலிகளின் தரப்பில் இருந்து ஒரு விஷயம் கூறப்பட்டிருந்தது.

இந்தியா புலிகளுடன் தொடர்புகளை வைத்திருக்க விரும்பினால், புலிகளை மாத்திரமே ஈழ தமிழர்களின் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டு பேசவேண்டும். அதாவது மற்றய ஈழ விடுதலை இயக்கங்களையோ, அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியையோ இலங்கை – இந்திய ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்களில் இணைத்துக் கொள்ளக் கூடாது.

இந்த விஷயம் பூரியினால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.

ஆனால், பூரி இதை கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் டிக்சித்திடம் தெரிவித்தபோது அவர் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

டிக்சித், “மற்றைய விடுதலை இயக்கங்களும், ஈழ விடுதலைக்காக தமது உயிரை பணயம் வைத்துதான் போராடுகிறார்கள். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாடு, அவர்களை ஒதுக்கிவிட முடியாது. தவிர, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சி, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் ஓட்டுக்களை பெற்று நாடாளுமன்றம் சென்ற கட்சி. ஒருவிதத்தில் பார்த்தால், அவர்கள்தான் ஈழ தமிழர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகள்” என்றார்.

இந்த விஷயம் யாழ்ப்பாணத்தில் இருந்த விடுதலை புலிகளுக்கு சொல்லப்பட்டிருக்கவில்லை. பிரபாகரன் டில்லியில் போய் இறங்கும்வரை, மற்றைய ஈழ விடுதலை இயக்கங்களும் அங்கே வரப்போகும் விஷயம் தெரியவே தெரியாது.

பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் இருந்து டில்லிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் ஒருபக்கமாகச் செய்யப்பட்டுக் கொண்டிருக்க, மறுபக்கமாக சென்னையில் இருந்த மற்றய இயக்கங்களின் தலைவர்களையும், தமிழர் விடுதலை கூட்டணி கட்சி தலைவர்களையும் டில்லிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பிரபாகரனுக்கு டெல்லியில் அசோகா ஹோட்டலில் ரூம் முன்பதிவு செய்யப்பட்டிருக்க, மற்றய இயக்கங்களின் தலைவர்களுக்கு சாம்ராட் ஹோட்டலில் அறைகள் பதிவாகியிருந்தன.

விறுவிறுப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல