பாகம் ஒன்று
தமிழத்தில் ஈழம் தொடர்பான அரசியல் சூடுபிடிக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி பழைய கதைகள் பலவற்றை பேசத் துவங்கியுள்ளார். வை.கோ. நெடுமாறன் மற்றும் சிலரும் வாய் திறக்ககூடும்.
ஆனால், இவர்கள் எல்லோருமே, மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான டீல்கள் பற்றிதான் பேசுவார்கள். அதுபற்றித்தான் அவர்களால் பேச முடியும். காரணம், கருணாநிதி முதல் பலரும் டீல் பண்ணியது அந்த அளவில்தான். எம்.ஜி.ஆர். அதைவிட சற்று அதிகமாக இன்வால்வ் ஆனார். ஆனால், முக்கிய தருணத்தில் நோய்வாய்ப்பட்டார். அதன்பின் அவரால் ஆக்டிவ்வாக ஏதும் செய்ய முடியவில்லை.
நிஜமான டீலிங், மத்திய அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில்தான் இருந்தது.
வெளியே தெரியாத பல விஷயங்கள் இதில் உள்ளன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சிக்கு காரணம் புதுடில்லிதான். வீழ்ச்சிக்கு காரணம் புதுடில்லிதான். முழுமையாக அழிக்கப்பட்டதற்கும் காரணம் புதுடில்லிதான்.
இந்த இரு தரப்பும் விளையாடியது ஆளையாள் வெட்டி வீழ்த்த முயன்ற ஒரு விளையாட்டு. ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு தரப்பின் கை ஓங்கியது. இறுதியில், டில்லி ஜெயித்தது. அதுதான், ஈழப் போராட்டத்தின் யுத்தமாக துவங்கி, முடிந்தது.
மத்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இருந்த நிஜமான டீல் என்ன? எந்த புள்ளியில் நெருங்கி வந்தார்கள்? எந்தப் புள்ளியில் முரண்பட்டார்கள்? எந்தப் புள்ளியில் சண்டை போட்டுக் கொண்டார்கள்? எந்தப் புள்ளியில் ஆளையாள் பழிவாங்கப் பார்த்தார்கள்?
தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? ‘உள்ளே நடந்த கதை’ உங்களை ஆச்சரியப்படுத்தும். தினம் ஒரு பாகமாக தருகிறோம். படித்துப் பாருங்கள்.
ஜுலை மாதம் 19ம் தேதி 1987-ம் ஆண்டு. புதுடில்லி.
அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அவசரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, மத்திய உளவுத்துறை றோ ஆகியவற்றின் உயரதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடன் மத்திய அமைச்சர் நட்வர் சிங்கும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த யாருமே அழைக்கப்பட்டிருக்கவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பை எப்படித் தங்களது வழிக்குக் கொண்டுவருவது என்பதற்கான ஆலோசனை அது.
இந்திய உளவுத்துறை றோவின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரி ஆனந்த் வர்மா.
ஆனந்த் வர்மா, “விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மூலமாக அழுத்தம் கொடுத்து இணங்க வைக்கலாம்” என்றார்.
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி காலியா அரோரா என்பவரால் அந்த சிக்கல் சுட்டிக் காட்டப்பட்டது.
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இப்போது தமிழகத்தில் இல்லை. இலங்கையின் வடபகுதியில் (யாழ்ப்பாணத்தில்) இருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் இருந்து அங்கே தகவல் போய், யாழ்ப்பாணத்தில் இருந்து பதில் பெறுவது எல்லாம் காலதாமதம் எடுக்கும் திட்டம்”
இதைக் கேட்டதும், ஒரு விநாடி யோசித்த ராஜிவ் காந்தி கேட்ட கேள்வி, அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. “அப்படியானால் பிரபாகரனை இங்கே அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யமுடியுமா” கேட்டார் ராஜீவ் காந்தி.
யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி அது, மத்திய உளவுப் பிரிவு றோவை தவிர!
ஆனந்த் வர்மா, “எங்களால் (றேவால்) பிரபாகரனை டில்லிக்கு அழைத்துவர முடியும். ஆனால்…
இது வெளிநாடு ஒன்றுடன் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் வெளியுறவு அமைச்சின் மூலமாக ஏற்பாடு செய்வது பொருத்தமாக இருக்கும்” என்றார் .
ராஜிவ்காந்தி வெளியுறவு அமைச்சின் அதிகாரியைப் பார்த்தார். (கூட்டத்தில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரி யார் என்ற விபரம் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் அதிமுக்கியத்துவம் உள்ள அதிகாரியாக இல்லாது இருந்திருக்கலாம்)
“அதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன். விடுதலைப் புலிகளின் தலைவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முழுப் பொறுப்பையும் இந்திய அரசே ஏற்றுக்கொண்டால்” என்றார்.
“அதாவது இதில் இலங்கை அரசின் சம்மதம் தேவையில்லை என்கிறீர்கள். அப்படித்தானே” கேட்டார் ராஜிவ் காந்தி.
“சம்மதம் தேவையில்லை என்பதைவிட, இந்த விஷயம் இலங்கை அரசுக்கே தெரியக்கூடாது என்கிறேன். இலங்கை அரசின் சம்மந்தம் இதில் இருந்தால் எங்களால் பிரபாகரனை இங்கே அழைத்துவர முடியாது”
“ஆனால் இந்த விபரம் இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டுமே. அவரை அழைத்து வருவதென்றால், விமானம் மூலமாகத்தான் அழைத்துவர வேண்டும். விமானம் இலங்கையில் தரையிறங்குவதற்கு இலங்கை அரசின் அனுமதி தேவை”
“யாழ்ப்பாணத்திலுள்ள விமான நிலையத்தில் இந்திய விமானம் தரையிறங்க வேண்டியிருக்குமா? பலாலி விமான நிலையம், இலங்கை ராணுவ முகாமுக்குள் இருக்கிறதே”
“அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறதுதான். பிரபாகரனை இலங்கை ராணுவ முகாம் ஒன்றின் ஊடாக அழைத்து வருவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படலாம். எதற்கும் முதலில் பிரபாகரனிடம் இது பற்றி பேசுவோம். பின்னர் பார்க்கலாம் அதை எப்படிச் செயற்படுத்துவது என்று”
இத்துடன் அன்றைய கூட்டம் முடிவடைகிறது.
அன்று இரவே டெல்லியில் இருந்து சென்னையிலுள்ள றோ உயரதிகாரி ஒருவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர் சென்னையில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரைச் சந்தித்தார். “பிரபாகரனை இந்தியப் பிரதமர் உடனடியாகச் சந்திக்க விரும்புகிறார்” என்ற தகவலைத் தெரிவித்தார்.
முன்பு சென்னையில் இருந்து இயங்கிய இந்த தொடர்பாளர், தற்போது ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கிறார் என்பதால், பெயர் வேண்டாம்.
றோவின் அதிகாரி இந்த தகவலைத் தெரிவித்து சில நிமிட நேரத்தில், சென்னையில் இருந்த புலிகளின் தொடர்பாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அழைத்தவர், தமிழகத்தின் அன்றைய அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன். (தற்போது விஜயகாந்தின் தே.மு.தி.க.-வில் உள்ளார்)
“டில்லியில் இருந்து உங்களைத் தொடர்பு கொண்டார்களா? பிரபாகரனை பிரதமர் சந்திக்க விரும்புவது பற்றிச் சொன்னார்களா” என்று கேட்டார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
“டெல்லியில் இருந்து தொடர்பு கொள்ளவில்லை. சென்னை றோ அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசினார்கள்.”
“அதேதான். டில்லியில் இருந்து பெரியவருடன் பேசினார்கள். பிரபாகரன் பிரதமரைச் சந்திப்பது நல்லது என்று தெரிவிக்கும்படி பெரியவர் சொன்னார்” என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அவர் பெரியவர் என்று குறிப்பிட்டது அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக