பாகம் ஆறு
கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரி ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்தில் உளவுத்துறை றோவின் ஏற்பாட்டில் விடுதலைப் புலிகளி தலைவர் பிரபாகரனை சந்திக்க சென்றிருந்தார் என்று கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம். பூரி, பிரபாகரனை சந்தித்தபோது, இந்திய உளவுத்துறை றோ பற்றிச் சில நெகட்டிவ்வான கருத்துக்கள் பூரியிடம் பிரபாகரனால் கூறப்பட்டது.
“விடுதலைப் புலிகள் ராணுவ ரீதியாக வடமராட்சியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே, இந்திய உளவுத்துறை செய்த தவறான வழிகாட்டல்” என்று பிரபாகரனால் கூறப்பட்டது.
அத்துடன், இந்திய உளவுத்துறை டெலோ இயக்கத்தைக் கருவியாகக் கொண்டு தமது உயிருக்கு ஆபத்து விளைவிக்கத் திட்டமிட்ட காரணத்தாலேயே டெலோ இயக்கத்தையும், அதன் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் பிரபாகரன் கூறினார்.
“நீங்கள் புதுடில்லி வரமுடியுமா” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் பூரி.
இந்தக் கேள்விக்கு பிரபாகரன் முதலில் நேரடியாகப் பதில் கூறவில்லை.
“இவ்வளவு காலமும் எந்த அரசின் அனுமதியும் இல்லாமல் பாக்கு நீரிணையைக் கடந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போய் வந்திருக்கிறோம்” என்றவர், தொடர்ந்து “என்னை உங்களது அரசு முழுமையான கௌரவத்துடன் அழைக்குமென்றால், அது எனக்குக் கொடுக்கப்படும் கௌரவம் என்பதைவிட, தமிழர்களுக்குக் கொடுக்கப்படும் கௌரவம் என்ற விதத்தில்தான் நான் எடுத்துக் கொள்வேன்” என்றார்.
பூரி ஒரு நேரடியான பதிலை எதிர்பார்த்தார். (ஆம் அல்லது இல்லை) எனவே கேள்வியை மீண்டும் கேட்டார். “நீங்கள் டில்லி வருவதை இந்தியா விரும்புகிறது. வரமுடியுமா”
இதற்கு பிரபாகரன் ஏதும் கூறவில்லை. பதில் கூறியவர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைவராக இருந்த யோகி. “உங்களது பிரதமர் எங்களை வரவேற்றால் அதை ஏற்றுக்கொள்வோம்”
அதை, சாதகமான பதிலாக எடுத்துக்கொண்டு கொழும்பு திரும்பினார் பூரி…
இந்தச் சந்திப்பின் பின்னர்தான் பிரபாகரனை டில்லி அழைத்து செல்வதற்காக ஜுலை மாதம் 24-ம் தேதி பூரி யாழ்ப்பாணம் சென்றார்.
புதுடில்லிக்குச் செல்வது குறித்து பிரபாகரன் விதித்திருந்த சில நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக் கொண்டிருந்தது.
அந்த நிபந்தனைகள்.
1) பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களும் வருவதற்கு அனுமதிக்க வேண்டும்.
2) புலிகளின் அரசியல் துறையைச் சேர்ந்த யோகி, மற்றும் திலீபனும் கூட வருவார்கள்.
3) புதுடில்லி செல்லுமுன் சென்னையில் வைத்து புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.
4) புதுடில்லி செல்லுமுன் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து ஆலோசனை செய்யவேண்டும்.
5) பிரபாகரனின் மனைவியும், இரு பிள்ளைகளும், இந்திய விமானத்தில் சென்னைவரை அழைத்துச் செல்லப்பட வேண்டும். சென்னையில் அவர்கள் இறங்கிக் கொள்வார்கள்.
இந்த நிபந்தனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதன்பின், இந்திய விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்குவதற்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனேவின் அனுமதியை தீட்சித் பெற்றுக் கொடுத்தார். ஹெலிகாப்டர்களை அனுப்புமாறு இறுதி உத்தரவு பிரதமர் ராஜிவ்காந்தி அலுவலகத்தில் இருந்து, விமானப்படை தலைமையகத்துக்கு போனது.
இந்திய விமானப்படையின் ஹின்டொன் விமானத் தளத்திலிருந்து பங்களூரு சென்று, அங்கிருந்து கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சூலூர் விமானப்படைத் தளத்தில், ஆறு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் ரெடியாக இருந்தன.
24-ம் தேதி காலை, டெல்லியில் இருந்து உத்தரவு வந்து சேர்ந்தது….
அப்போதுதான் ஹெலிகாப்டர் விமானிக்கே, தாம் யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனை அழைத்து வரவேண்டும் என்ற விபரம் தெரியவந்தது.
முதலில் 6 ஹெலிகாப்டர்களும் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டாலும், பின்னர் வந்திருந்த உத்தரவுப்படி இரண்டு ஹெலிகாப்டர்கள் சென்றால் போதும் என்றிருந்தது.
ஹெலிகாப்டர்கள் புறப்படும் நேரத்துக்கு 10 நிமிடங்கள் முதல் வரை அவை யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி ராணுவ முகாமில்தான் தரையிறங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 10 நிமிடங்கள் இருக்கும் நேரத்தில் சுதுமலை என்ற இடத்தில் தரையிறங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
சுதுமலை அம்மன் கோவிலை ஒட்டிய வெட்டவெளி பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்க உகந்த இடம் உள்ளது என்று கூறப்பட்டு, அதை அடைவதற்கான வரைபடமும், பிளைட் பிளானும், டில்லி விமானப்படை தலைமையகத்தில் இருந்து வந்தது.
சூலூரில் இருந்து புறப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்களில் ஒன்றை அலுவாலியா செலுத்தினார். சுமார் ஒன்றரை மணிநேரப் பறத்தலின் பின் அவரது ஹெலிகாப்டர் முதலில் சுதுமலையில் தரையைத் தொட்டது. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இலங்கை மண்ணில் தரையிறங்கியது அதுவே முதற்தடவை.
ஹெலிகாப்டர் தரையிறங்க பதிந்த போது பிரபாகரனும் மற்றயவர்களும் தரையில் காத்திருப்பதை ஆலுவாலியாவால் பார்க்கக் கூடியதாக இருந்தது.
ஹெலிகாப்டர் அதிகநேரம் தரையில் தாமதிக்கவில்லை. விரைவில் ஆட்களை ஏற்றிக் கொண்டது.
ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சங்கர், பூரியை நெருங்கி “நீங்கள் எமது தேசியச் சொத்தை அழைத்துச் செல்கிறீர்கள் என்பது ஞாபகமிருக்கட்டும்” என்றார் தணிந்த குரலில்.
அதற்குப் பூரியிடம் இருந்து வந்த பதில் – “டில்லியில் என்ன நடைபெற்றாலும், என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் பரவாயில்லை. உங்களது தலைவரை இதே இடத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. நான் வார்த்தை தவறமாட்டேன். இதை என்னுடைய வாக்குறுதியாக நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்”
ஹெலிகாப்டர்கள் சுதுமலையில் இருந்து புறப்பட்டன – தொடரப்போகும் முக்கிய சம்பவங்களை நோக்கி!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக